1 கொரிந்தியர் 4 : 1-4 10 செப்டம்பர் 2025, புதன்
“… அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான்.” – அப்போஸ்தலர் 16 : 3
1606-1656இல் மதுரையில் தூதுப்பணி ஆற்ற வந்தவர் இராபர்ட் நோபிலி என்கிற பாதிரியார். மற்ற மதத்தின் கலாசாரத்திற்கு உட்பட்டு நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்று விரும்பினார். மதுரையில் காவி உடை அணிந்த சந்நியாசிகள் மத்தியில் நற்செய்தியை அறிவிக்க தானும் காவி உடை அணிந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார். இந்திய திருச்சபை வரலாற்றில் ஒரு சிறப்பு மிகுந்த தூதுப்பணி காலம் என்று சொல்லப்படுகிறது .
தியானபாகத்தில் பவுல் தமது ஊழியத்தில் உதவியாக இருக்க தீமோத்தேயுவை அழைத்துக்கொண்டு போக விரும்பினார். தீமோத்தேயு பிறப்பால் ஒரு கிரேக்கர். ஏனென்றால் அவர் தாய் கிரேக்கம். தகப்பனார் யூதர். பவுல் யூதர்கள் மத்தியில் நற்செய்தி சொல்ல அவர்கள் நிமித்தம் பவுல் தீமோத்தேயுக்கு விருத்தசேதனம் செய்ய வைத்தார். யூதர்களை கிறிஸ்துவிற்குள் கொண்டுவர இவ்விதம் செய்தார். பவுல் கிறிஸ்துவுக்குள் எல்லாரையும் கொண்டுவர எல்லாருக்கும் எல்லாம் ஆனேன் என்று குறிப்பிடுகிறார்.
கடவுளின் அன்பு கிறிஸ்துவில் முழு மனுகுலத்திற்கும் கொடுக்கப்பட்டது. கிறிஸ்துவின் சிலுவை மரணம், ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவன் பெறவேண்டும் என்பதற்காகவே. அனைவருக்கும் நற்செய்தி போகவேண்டும் என்பதே இன்றைய திருச்சபையின் தாகமாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனின்மேல் விழுந்த கடமை, திருச்சபை அனைவருக்கும் உரியது என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். என்னுடைய தனிப்பட்ட கிறிஸ்துவ வாழ்வு மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்கவேண்டும். கிறிஸ்துவுக்காய் ஒருவரையாவது நமது வாழ்வில் ஆதாயப்படுத்துவதே நமது பணி என்பதை உணர்ந்து செயல்பட தூயாவியானவர் துணை செய்வார்.
அன்பின் கடவுளே, இயேசுவை நற்செய்தியாகக் கூறி அறிவிக்க எங்களுக்கு கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
