vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 617 blog entries.

கீழ்ப்படிவோம்

யாத்திராகமம் 4 : 10-17                       09 ஜூலை 2025, புதன்

“கர்த்தருக்கு மோசேயின் மேல் கோபம் மூண்டது.” – யாத்திராகமம் 4 : 14

இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த காலம் அது. எகிப்திய அரசனும் மக்களும் இஸ்ரவேலரை கொடுமையாக நடத்தினார்கள். தங்கள் வாழ்வு கசந்துபோன நிலையில் கடவுளிடம் மன்றாடினார்கள். கடவுள் வரலாற்றுக்குள் வந்தார். மோசேயை பயிற்றுவித்துப் பக்குவப்படுத்தினார். தன் இனத்தான் ஒருவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்ட மோசே அதற்குக் காரணமான எகிப்தியனை கொலை செய்தான். இந்த செய்தியை அரசனும் மற்றவர்களும் அறிந்ததால் மோசே எகிப்தைவிட்டுத் தன் மாமன் வீட்டிற்கு ஓடினார்.

மோசே வனாந்தரத்தில் தன் மாமனின் ஆடுகளை மேய்ந்து வந்தார். ஒரு நாள் கடவுள் பற்றி எரிந்த முட்செடியிலிருந்து மோசேயை அழைத்தார். எகிப்தில் அடிமைகளாயிருக்கிற என் மக்களை அழைத்துக்கொண்டு நான் சுதந்தரமாக கொடுத்த நாட்டிற்கு செல் என்றார்.

இதைக்கேட்ட மோசே நான் திக்குவாயும் மந்தநாவும் உடையவன் என்றார். கடவுள் அவரிடம் மனிதருக்கு பேசும் திறனை கொடுப்பவரும் கேட்கும் திறனை கொடுக்கிறவரும் கடவுள் என்றார். உன் நாவிலிருந்து நான் பேசுவேன் என்று வாக்களித்தார். இதைக் கேட்ட மோசே கடவுளே! என்னை விடுத்து நீர் வேறு ஒருவரை அனுப்பும் என்றார். கடவுள் மோசேயை சந்தித்தது முதல் நான்காவது முறை மோசே எதிர்ப்பு தெரிவித்தார். இன்னும் மோசே கடவுளிடம் அழைப்பை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. கடவுளுக்கு மோசே மீது கோபம் வந்தது.

கடவுள் மோசேவிற்கு பார்வோன் அரண்மனையில் பயிற்சி கொடுத்தார். இதை மோசே இன்னும் அறிந்து கொள்ளவில்லை. கடவுள் மோசேயிடம் உன் சகோதரன் ஆரோன் நன்றாக பேசக்கூடியவன். நான் உன் நாவிலும் அவன் நாவிலும் இருந்து பேசுவேன். நீ இந்தக் கோலைப் பிடித்துக் கொண்டு போ என்றார்.

கடவுள் நமக்கு வரங்களையும், திறமைகளையும் அருளுகிறார். அவர் படைப்பாளர். அவரது எண்ணங்களை நம்மால் அறிந்து கொள்ள இயலாது. நம் ஒவ்வொருவரையும் தெரிந்தெடுத்து ஒவ்வொரு பணிக்காக பயிற்றுவிக்கிறார். வரங்களும் திறமைகளும் இல்லாத மக்கள் யாருமில்லை.

கடவுள் அருளிய வரங்களையும், திறமைகளையும் ஆராய்ந்து அறிவோம். எந்தப் பணிக்காக நம்மை கடவுள் பயிற்றுவிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுவோம். அவர் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து அவர் அழைப்பை ஏற்று வாழ்வோம்.

கடவுள் நமக்கு அருளும் பணிகளை உண்மையுடனும், கடவுள் பயத்துடனும் செய்வோம். அவர் வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் நிறைவேறாமல் போகாது. கடவுள் எந்தப் பணிக்காக அழைக்கிறாறோ அந்த பணியை மன நிறைவோடு செய்வோம்.

எங்களைப் பெயர் சொல்லி அழைக்கிற நல்ல கடவுளே! உம் அழைப்பை உணர்ந்து, ஏற்று உம் நாமம் மகிமைப்பட அவற்றை நிறைவேற்ற உதவி செய்யும், இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கீழ்ப்படிவோம்2025-07-08T11:05:36+00:00

கர்த்தரின் சத்தம்

ஆமோஸ் 3 : 1-8                                   02 ஜூலை 2025, புதன்

“கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார்.” – ஆமோஸ் 3 : 8

கடவுளால் படைக்கப்பட்ட மனுக்குலம் அவர் வகுத்துக் கொடுத்த வழிகளை விட்டுவிட்டதால் கடவுளை விட்டுப் பிரிந்தது. அன்பு நிறைந்த கடவுள் மனுக்குலத்தை மீட்டு தன்னோடு சேர்த்துக்கொள்ள மீட்பின் திட்டத்தை வகுத்தார். ஒரு மேசியாவை வாக்களித்தார். மேசியா பிறக்க ஒரு நாடு, ஒரு சமூகம், ஒரு கோத்திரம், ஒரு குடும்பம், ஒர் ஊர் என எல்லாவற்றையும் செம்மையாய் செய்து முடித்தார்.

கடவுள் ஆபிரகாமில் ஒரு சமூகத்தையும் உருவாக்கினார். இவர்கள் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மட்டுமல்ல, இவர்கள் வழியாக முழு உலகமும் இரட்சிக்கப்பட கடவுள் தீர்மானித்தார். ஆனால் இந்த மக்கள் தங்கள் அழைப்பின் நோக்கத்தை மறந்து வாழ்ந்தார்கள். கடவுளின் திட்டத்தையும் நோக்கத்தையும் மறந்துபோன மக்களை ஆமோஸ் தீர்க்கர் கண்ணுற்றார். அவர் மக்களை எச்சரித்துச் சொன்ன வார்த்தைகளே நமது தியானப்பகுதி.

ஆமோஸ் காலத்தில் தீர்க்கதரிசனம் பாரம்பரியத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. ஆமோஸ் தீர்க்கதரிசியுமில்லை, தீர்க்கதரிசன சங்கத்தைச் சேர்ந்தவருமில்லை. இவர் அத்திமர தோப்பு காவல் காக்கிறவர். தமது அழைப்பின் நோக்கத்தை மறந்த மக்களுக்கு அதை நினைவுபடுத்தி அவரிடம் திருப்பி அழைக்க கடவுள் ஆமோஸை தெரிந்தெடுத்து அனுப்பினார்.

கடவுளுக்கும் இஸ்ரவேலருக்கும் தகப்பன் பிள்ளை உறவின் உண்மைத் தன்மையை விளக்குகிறார். கடவுளால் தெரிந்தெடுக்கப்படுதல் என்பது பாவம் செய்வதற்கான அனுமதிச் சீட்டு அல்ல. மாறாக கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுதற்குரிய பெரும் பொறுப்பாகும்.

கடவுள் பேசாமல் தீர்க்கர்கள் பேச முடியாது. கடவுள் பேசினால் தீர்க்கர்கள் பேசாதிருக்க முடியாது. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன வரலாற்றில் ஒரு புதிய யுகத்தினை இது எடுத்துக் காட்டுகிறது.

அன்பானவர்களே! கடவுள் இயேசுவில் நம்மை கிருபையாக தெரிந்தெடுத் திருக்கிறார். அவர் பிள்ளைகளாக வாழ்வித்து வருகிறார். நாம் நம் தெரிந்தெடுப்பின் நோக்கத்தை கண்டு கொள்ள வேண்டும். அதை வாழ்வில் செயல்படுத்த பாடுபட வேண்டும். தூய ஆவியானவர் நாம் செயல்பட உதவி செய்கிறார். அழைப்பின் நோக்கத்தை புரிந்து கொள்ளுவோம். அவருக்கென்று வாழுவோம்.

எங்களை கிருபையாய் அழைத்திருக்கிற கடவுளே! அழைப்பின் நோக்கத்தை அறிந்து வாழ அருள்புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கர்த்தரின் சத்தம்2025-07-01T10:27:28+00:00

கடவுள் அருள்கின்ற பரிசுத்த ஆவியானவர்

யோவான் 16 : 12-15                         27 ஜூன் 2025, வெள்ளி 

“கடவுள் தனக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி.” – அப்போஸ்தலர் 5 : 32

இவ்வுலகில் நான் அனாதை தனித்தவன் என்று கூறுகிறவர்களுக்கு திருமறை தருகின்ற பதில், இவ்வுலகில் யாரும்  தனித்தவர் அல்ல, யாவரையும் படைத்த கடவுள் துணையாய் இருக்கிறார். அவர் தேற்றரவாளனாய் தேற்றுகிறார். நான் உங்களை திக்கற்றவர்களாய் விடுவதில்லை என்று கூறுகிறார். பலர் இதை உணர்ந்து கொள்வதில்லை. சிலர் மட்டுமே இதை உணர்ந்து கொள்கிறார்கள். தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்.

இன்றைய தியானப் பகுதியும் இதைத்தான் நமக்கு தெளிவுபடுத்துகிறது. கிறிஸ்து நமக்காய் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார். மனம் திரும்புதலும் பாவ மன்னிப்பும் அவரால் உண்டாகும்படி இரட்சகராய் உயர்த்தப்பட்டிருக்கிறார். இதற்கு பரிசுத்த ஆவியும் சாட்சி என்று கூறுகிறார். கர்த்தர் யாவருக்காகவும் உயர்த்தப்பட்டிருக்கிறார், யாவருக்கும் துணையாய் இருக்கிறார். தம்மை நம்புகிற யாவருக்கும் தூய ஆவியை தந்தருளுகிறார். அவரே நமது தேற்றரவாளன். பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார். விசுவாசத்தில் நிலை நிற்க உதவி செய்கிறார். வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். சத்தியத்தை போதித்து நம்மை வழிநடத்துவார். அறியாமை இருளில் இருக்கிற யாவருக்கும் இயேசுவில் மீட்பு அருளுவார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவனாய், பட்ட மரமாய், சபையில் நுழைய முடியாத அண்ணகனிடத்திலும் ஆண்டவர் தமது பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதை பார்க்கிறோம். வேதத்தை வாசித்தும் அதன் விளக்கங்களை அறியாதிருந்த அந்த மனிதனிடம் ஆண்டவர் பிலிப்புவை ஆவியானவரைக் கொண்டு அனுப்புகிறார். அவர் இறை வார்த்தையை ஏற்றுக் கொண்டு, மனம் திரும்பி திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். பரிசுத்த ஆவியானவர் யாவரையும் பரிசுத்தமாக்குகிறார், வசனத்தை கொண்டு விசுவாசத்தை உருவாக்குகிறார்.

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பலமடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி வரை எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். ஆண்டவர் பரிசுத்த ஆவியானவரை கொண்டு நம்மை பலப்படுத்தி தமக்கு உகந்த மக்களாய் வாழ வழி காட்டுகிறார். நாம் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதீர்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். நாம் ஆவியானவரால் நிறையப் பெற்று நித்திய வாழ்வின் நிச்சயத்தோடு வாழ்வோம்.

கடவுளே! தூய ஆவியானவரை எங்களுக்கு தந்து எங்களை தேற்றி வழிநடத்துகிறீர் நன்றி. தூய ஆவியைப் பெற்றுக்கொண்டு ஆவியின் கனிகளை கொடுத்து வாழ உதவி புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

கடவுள் அருள்கின்ற பரிசுத்த ஆவியானவர்2025-06-25T11:24:05+00:00

தேவ எக்காளத்தோடு கர்த்தர் வருவார்

தானியேல் 10 : 7-9 20            ஜூன் 2025, வெள்ளி

“பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் ஆண்டவர் தாமே வானத்திலிருந்து இறங்கி வருவார்.”
– 1 தெசலோனிக்கேயர் 4 : 16

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. அதாவது நித்திரை போன்றதே இறப்பு, நித்திரைக்கு பின்னர் விழிப்பது போன்றதாம் பிறப்பு என்கிறார் திருவள்ளுவர். மரணத்தை குறித்து யாவரும் பயப்படுகின்றோம். மரணம் ஒரு முடிவு அல்ல, மரணம் ஒரு நித்திரைக்கு ஒப்பானது. மரணத்துக்கு பின் உயிர்த்தெழுதல் ஒன்று உண்டு என்று திருமறை கூறுகிறது.

இன்றைய தியானப் பகுதியும் அந்த நம்பிக்கையை நமக்கு தருகின்றது. கடவுள் எக்காள சத்தத்தோடே வருவார். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களையும் அவர் தன்னோடுகூட கொண்டு வருவார். நித்திரை அடைந்தவர்களை குறித்து துக்கிக்க வேண்டாம். கல்லறைகளைக் கண்டு கண்ணீர் வடிக்க வேண்டாம். கல்லறைகள் பார்த்து பயப்பட வேண்டிய ஒன்று அல்ல. கல்லறைகள் நம்பிக்கையின் படுக்கைகள், இறந்தோர் இளைப்பாறும் இடம். இயேசுவின் கல்லறை நமக்கு நம்பிக்கை தருகிறது. அது திறக்கப்பட்ட கல்லறை. எந்த ஒரு முத்திரையும் எந்த ஒரு கல்லும் அதை அடைத்து வைக்க முடியவில்லை.

கல்லறையை திறந்து இயேசு உயிர்த்தெழுந்தார். கிறிஸ்துவின் வருகையின் வேளையில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் அவர் அவ்வாறு உயிர்த்தெழச் செய்வார். கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள் என்று சொல்கின்ற வண்ணமாக கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் யாவருக்கும் அழியா மறுவாழ்வு உண்டு. எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிலே கடவுள் எசேக்கியேல் தீர்க்கனை நிறுத்தி இந்த எலும்புகள் உயிர் பெற கூடுமோ என்று கேட்டார். கர்த்தாவே அது உமக்கே தெரியும் என்றார். ஆண்டவரின் வார்த்தையை கேட்ட அந்த எலும்புகள் உயிர்பெற்று பெரிய சேனையாய் நின்றது. அவ்வண்ணமாகவே கிறிஸ்து வருகையில் யாவரும் எழுந்திருப்போம். இந்த என் தோல் முதலானவைகள் அழுகிப்போன பின்பு என் கண்களால் அவரைக் காண்பேன் என்று யோபு சொல்கிறார்.

நம்முடைய வாழ்விலே மரணத்தைக் கண்டு பயப்படாதிருப்போம். இறந்து போனோரை எண்ணி துக்கித்து அடைபட்டு வாழாதிருப்போம். கல்லறையைக் கண்டு கண்ணீர் வடிக்காதிருப்போம். கர்த்தர் வருகையில் நமது துன்பம் ஜெயமாக மாறும்.

விண்ணுலகில் வாழ்கிற கடவுளே! உலகை நியாயம் தீர்க்க உமது நேச குமாரனை அனுப்புவீர் என்று அறிந்திருக்கிறோம். நித்திரைக்கு ஒத்திருக்கிற மரணத்தைக் கண்டு கலங்காமல் நாங்கள் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு உமது வருகைக்கு ஆவலாய் காத்திருக்க துணை செய்யும் இயேசுவில் பிதாவே ஆமேன்.

தேவ எக்காளத்தோடு கர்த்தர் வருவார்2025-06-20T05:06:55+00:00

உண்மையைப் பின்பற்று

1 சாமுவேல் 22 : 13-15                               17 ஜூன் 2025, செவ்வாய்

“பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பு, உண்மையாய் நடப்பவர் அவருக்கு பிரியம்.” – நீதிமொழிகள் 12 : 22

‘வாய்மையே வெல்லும்’ என்று கூறுவார்கள். உண்மையை பொய்கள் மறைக்கலாம், ஆனால் அழிக்க முடியாது. உண்மை நிச்சயம் ஒரு நாள் வென்றே தீரும்.

இன்றைய தியானப் பகுதியும் உண்மையுள்ளவர்களாய் வாழும்படி நம்மை அழைக்கின்றது. பொய் பேசுகின்ற உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பு. உண்மையாய் நடப்பவர்கள் அவருக்குப் பிரியம். கேயாசி எலிசாவுக்கு முன்பாக பொய் உரைத்தான். நாகமானின் தொழுநோய் அவனையும் அவன் குடும்பத்தையும் பற்றி கொண்டது. அனனியா சப்பீராள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பொய் உரைத்தனர். அதே இடத்தில் மாண்டு போயினர். கபடு செய்கிறவன் அவரது வீட்டுக்குள் இருப்பதில்லை. பொய் சொல்லுகிறவன் அவர் கண் முன் நிலைப்பதில்லை. உண்மையாய் நடப்பது கர்த்தருக்குப் பிரியம். ஏனெனில் அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.

உண்மையுள்ள மனிதனுக்கு பரிபூரண ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். தாவீது ஆண்டவருக்கு முன்பாக உண்மையுள்ளவனாய் இருந்தார். ஆடு மேய்க்கிறவர் அரசன் ஆனார். உண்மை உள்ளவனை கர்த்தர் பாதுகாக்கிறார். தீமை அவனை அணுகுவதில்லை. தானியேல் ஆண்டவருக்கு முன்பாக உண்மை உள்ளவனாய் இருந்தார். சிங்கங்கள் அவரை சேதப்படுத்தாதபடிக்கு கர்த்தர் தமது தூதனை அனுப்பி அவரை பாதுகாத்தார். ஆண்டவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுது கொள்ள வேண்டும். பக்தியின் வேடம் தரித்து நடக்கிறவர்களை கடவுள் அருவருகிறார்.

நாம் நம்முடைய வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். வாழ்வும் மரணமும் நாவின் அதிகாரத்தில் உள்ளது. நாவு சிறிய உறுப்பாய் இருந்தாலும் அது நெருப்பு. ஆயுள் சக்கரத்தையே கொளுத்தி விடும் ஆற்றல் கொண்டது. நமது வாழ்வை கவனமாய் வாழ்வோம், பொய் உதடுகளைக் களைந்து உண்மையைப் பற்றிக்கொள்வோம். ஆண்டவருக்கு உண்மையுள்ள சாட்சியாய் வாழ்வோம்.

உண்மையுள்ளவராய் இருக்கிற எங்கள் அன்புள்ள கடவுளே! நீர் உண்மையில் பிரியப்படுகிறவர், உம்மைப் போற்றுகின்றோம். நாங்கள் உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அருவருப்பாகிய பொய்யை களைந்து உமக்கு பிரியமுள்ள மக்களாய் உண்மை உள்ளவர்களாய் வாழ துணை புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

உண்மையைப் பின்பற்று2025-06-16T08:54:02+00:00

உதவி செய்கின்ற ஆண்டவர்

உபாகமம் 26 : 1-3                             13 ஜூன் 2025, வெள்ளி

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தை செலுத்துவேன்?” – சங்கீதம் 116 : 12

தேவையில் இருப்பவருக்கு உதவி செய்வது என்பது ஒரு இறைப் பண்பு. ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான். அவன் மனமுவந்து கொடுக்கிறதை அவர் திரும்ப கொடுப்பார்.

இன்றைய தியானப் பகுதியும் நமக்கு ஆண்டவர் உபகாரம் செய்கிறவர் என்று குறிப்பிடுகிறது. வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் நமக்கு உதவி செய்கிறார். தமது சிங்காசனத்தை விட்டு இறங்கி நமக்கு இரங்குகின்றார். அவர் தம்மை தாமே தாழ்த்தி மனித சாயலானார் என்று திருமறை கூறுகிறது. நாம் மீட்கப்படும்படியாக கடவுள் தம் குமாரன் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். நிந்தைக்கும், துப்புதலுக்கும், அடிக்கும், தமது முகத்தை மறைக்காது இருந்தார். அவருடைய தழும்புகளால் நம்மை குணமாக்குகிறார். கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கும் உணவு கொடுக்கின்றவர். தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார். நம்முடைய இயலாமைகள் பலவீனங்கள் யாவையும் அவர் அறிவார். நம்மை பலப்படுத்துவார், பலம் உள்ளவனுக்காகிலும் பலம்மற்றவனுக்காகிலும் உதவி செய்வது ஆண்டவருக்கு லேசான காரியம்.

சங்கீதக்காரர், ‘கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காயும் அவருக்கு என்னத்தை செலுத்துவேன், இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்வேன்’ என்று சொல்லுகிறார். நாமும் கடவுள் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றி உள்ளவர்களாய் வாழ்வோம். கடவுள் இஸ்ரவேலுக்கு கொடுத்த கட்டளை, உனக்கு கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிக்கும் போது நிலத்தின் கனிகளின் முதற்பலனாகிய யாவற்றையும் கொண்டு வந்து உங்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் என்பதாகும்.

இயேசு கிறிஸ்துவும் சுகமளித்த குஷ்டரோகிகளிடம் நன்றியை எதிர்பார்ப்பதை காண்கின்றோம். சுகம் பெற்றவர் 10 பேர் அல்லவா! மீதம் ஒன்பது பேர் எங்கே? என்று கேட்டார். நமது வாழ்விலே கடவுள் நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். அவர் நமக்கு அருளிய சகல ஈவுகளையும் எண்ணி அவருக்கு நன்றி உள்ளவர்களாய் வாழ்வோம்.

சகல ஈவுகளையும் அருளுகிற கடவுளே! நீர் எங்களுடைய வாழ்விலே அருளின சொல்லி முடியாத ஈவுகளுக்காக உம்மைப் போற்றுகின்றோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் உமக்கு நன்றி உள்ளவர்களாக வாழ உதவி செய்யும், இயேசுவில் பிதாவே ஆமேன்.

உதவி செய்கின்ற ஆண்டவர்2025-06-12T09:41:47+00:00

அதிகாலையில் கர்த்தரை தேடுங்கள்

யாத்திராகமம் 34 : 2-4                      11 ஜூன் 2025, புதன்

“கர்த்தாவே அதிகாலையில் என் சத்தத்தைக் கேட்பீர், அதிகாலையிலே உமக்கென்று ஆயத்தமாய்க் காத்திருப்பேன்.”

– சங்கீதம் 5 : 3

அதிகாலையில் எழுந்திருப்பது என்பது சிறந்த நற்பண்புகளில் ஒன்று. அதிகாலை தியானம் என்பது அநேக நன்மைகளை கொண்டு வருகின்றது. ஆண்டவரோடு துவங்குகிற நாளில் அதைச் சந்திக்கும் பலம் அவரிடமிருந்தே கிடைக்கிறது.

இன்றைய தியானப் பகுதியிலும் கர்த்தரை அதிகாலையில் தேடும்படியாய் சங்கீதக்காரர் நம்மை அழைக்கிறார். அதிகாலையில் அவர் நமது சத்தத்தை கேட்கிறார். காலையில் தேடுவோர் என்னைக் கண்டடைவார்கள். காலைக்கு காலை நம்மை புது கிருபைகளால் நிரப்புகிறார் என்று திருமறை கூறுகிறது.

வாசிப்புப் பகுதியில் ஆண்டவர் மோசேயிடம் விடியற்காலத்திலே ஆயத்தமாகி சீனாய் மலை உச்சியில் அதிகாலமே காத்திருக்க அழைக்கிறார். மோசே அதிகாலையிலே ஆயத்தமாகி அங்கு காத்திருந்தார். அவர் இறைவனுடைய தரிசனத்தை கண்டு கொண்டார். கர்த்தர் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகாதயவும் சத்தியமும் உள்ள கடவுள் என்பதை உணர்ந்தார். மோசே இஸ்ரவேலை வழிநடத்தும் ஆற்றலை கடவுளிடம் பெற்றுக்கொண்டார்.

உலகத்தின் இரட்சகராக தம்மையே ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவும் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு வனாந்தரமான ஓரிடத்திற்கு போய் அங்கே ஜெபம் பண்ணினார். ஒவ்வொரு பட்டணங்களுக்கும் செல்வதற்கு முன்பாக அதிகாலையில் ஜெபம் செய்தார் என்று பார்க்கிறோம். அது கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ள காரணமாய் அமைந்தது.

நோய்களை குணமாக்க; பேய்களை துரத்த; துயரத்தில் இருப்பவருக்கு விடுதலை கொடுக்க; கண்ணீர் வடிப்போருக்கு ஆறுதல் கொடுக்க; அதிகாலை ஜெபத்தின் வழியாய் தம்மை ஆயத்தப்படுத்தினார். நம்முடைய வாழ்விலும் தீர்மானம் செய்து நம்முடைய வாழ்வும் குடும்பமும் பலப்பட நம்முடைய தேசம் மீட்பை கண்டடைய அதிகாலையில் கடவுளை தேடுவோம். கடவுள் நமக்கு பதில் தருவார். நம்முடைய வாழ்வும் அநேக மக்களுக்கு சாட்சியாய் மாறும்.

காலைதோறும் புதுப் புது கிருபைகளால் நிறைத்து வழிநடத்துகிற அன்பின் நல்ல கடவுளே! நாங்கள் அதிகாலையில் ஜெபத்தில் உம் ஆற்றலை பெற்று, அதன் வழியாய் நிலையான அமைதியைப் பெற்றுக் கொள்ளவும் துணை புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அதிகாலையில் கர்த்தரை தேடுங்கள்2025-06-11T05:58:43+00:00

அழுங்கள்

ஒசேயா 14 : 1-7                         09 ஜூன் 2025, திங்கள்

“வெளியே போய், மனங்கசந்து அழுதான்.” – மத்தேயு 26 : 75

இவ்வுலகில் எடைமிக்க பொருட்களில் ஒன்று கண்ணீர். கண்ணீருக்கு எடை அதிகம். அதிலும் மனம் கசந்து அழுகிறதினால் வரும் கண்ணீர் அதிகம் எடை உடையது. கண்ணீர் தோல்வியின் அடையாளம் அல்ல, அவமானத்தின் அடையாளம் அல்ல, கண்ணீர் சிந்துகிறவர் கோழையும் அல்ல. கண்ணீர் மகிழ்ச்சியின் அடையாளம்; மனம் திரும்புதலின் அடையாளம்; மன்னிப்பின் அடையாளம்; புலம்பலின் அடையாளம்; என்று பல வகைகளில் கூறலாம். கண்ணீர் சிந்துதல் அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளை கொண்டு வருகின்றது, ஆறுதல் கொடுக்கிறது, வலிகளை குறைக்கிறது, அன்பை கூட்டுகிறது. கண்ணீர் இத்தகைய ஆற்றல் கொண்டது.

இன்றைய தியானப் பகுதியில், பேதுரு மனம் கசந்து அழுதான் என்று பார்க்கிறோம். தனது வாழ்வில் தோற்றுப்போனதை எண்ணி தனது இரட்சகரை, மறுதலித்ததை எண்ணி தனது இரட்சகர் தன்னை ஏக்கத்தோடு பார்க்கின்றபோது மனம் கசந்து அழுதான். பேதுருவின் அழுகை அவனை விசுவாசத்தில் பலப்படுத்தியது. தான் பாவி என்பதை உணர்ந்து அழுதான். தான் தன் வாழ்வில் செய்த தீமைக்காய் மனம் வருந்தி அழுதான். தான் வீழ்ந்து போனதை எண்ணி அழுது ஆண்டவரை நோக்கிப் பார்த்தான். ஆண்டவர் அவனை பயன்படுத்தினார். ஆண்டவருக்காய் உழைக்கும் பாக்கியம் பெற்றான்.

யூதாஸ் ஆண்டவரை காட்டிக் கொடுத்தான். ஆனால் தன் தவறை உணர்வதற்கோ, தன்னை அரவணைக்கிற, தன் பாவத்தை மன்னிக்கிற ஆண்டவரை நோக்கி பார்ப்பதற்கோ மனமற்று இருந்தான். தன் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து மரித்தான் என்று பார்க்கின்றோம். உள்ளத்தின் கவலைகளும் ஏமாற்றங்களும் அவனை அழுத்தி பயத்தால் தன்னையே மாய்த்துக் கொண்டான். பேதுருவோ ஆண்டவரிடம் வந்தான். தன் பிழை உணர்ந்து அழுதான், வாழ்வைப் பெற்றுக் கொண்டான்.

அழுகை வெற்றியைத் தரும். அன்னாள் ஆலயத்தில் அழுதாள், சாமுவேல் பிறந்தார். எசேக்கியா அறை வீட்டில் அழுதார், 15 வருட ஆயுளை நீடித்து பெற்றார். பாவியாகிய பெண் இயேசுவின் பாதத்தில் அழுதார், பாவமன்னிப்பை பெற்றார். நம் கண்ணீரை அவரது துருத்தியில் வைத்திருக்கிறார், நிச்சயம் அதற்கு பதில் தருவார் என்று வசனம் கூறுகிறது. இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள், இனி நகைப்பீர்கள் என்று திருமறை கூறுகிறது.

நம்முடைய வாழ்வின் புலம்பல்களை, நமது பாரங்களை, நமது அக்கிரமங்களை, அழுகையோடு ஆண்டவரிடம் அறிக்கை செய்வோம். நம்மைப்போன்று துன்பத்தில் இருப்பவருக்கு, மனம் கசந்து அழுகிறவர்களுக்கு அழாதீர்கள் என்று சொல்லி கண்ணீரைத் துடைத்து ஆண்டவர் தேற்றினதுபோல, ஆறுதலாய் இருப்போம். நம்முடைய வாழ்வினூடாய் பிறர் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாகாதிருப்போம்.

எங்கள் விண்ணப்பத்தை கேட்கிறவரே! கண்ணீரை காண்கிறவரே பாவங்களையும் இயலாமையையும் எண்ணி மனம் கசந்து அழுகின்ற யாவருக்கும் ஆறுதல் சொல்லவும் பிறர் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாகாது வாழவும் துணை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

அழுங்கள்2025-06-09T05:45:52+00:00

குற்றஞ்சாட்டாதிருப்போம்

ரோமர் 8 : 32-37                              04 ஜூன் 2025, புதன்

“உன் மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே?” – யோவான் 8 : 10

ஆதியிலிருந்தே மனிதன் தான் நற்பெயர் பெற்றவராய் இருக்க வேண்டும் என்பதற்காய் பிறர் மீது குற்றம் சாட்டுகிறவர்களாய் இருப்பதை காண்கிறோம். கடவுள் ஆதாமிடம் புசிக்க கூடாது என்று விலக்கின பழத்தை ஏன் உண்டாய் என்று கேட்டபோது நீர் எனக்கு தந்த பெண்ணானவள் எனக்குத் தந்தாள், நான் புசித்தேன் என்று குற்றம் சாட்டுகிறான். பெண்ணோ பாம்பு என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். ஒருவரும் தன் சுய தவறுகளை உணர்வதில்லை. தான் வாழ பிறரை குற்றம் சாட்டுகின்றனர்.

வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவை சோதிக்கும்படி அவர் மீது குற்றஞ்சாட்ட, விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்மணியை அவரிடம் கல்லெறிந்து கொல்லும்படியாய் கொண்டு வந்தனர். ஆனால் அவளோடுகூட பாவம் செய்தவர்களில் ஒருவனையும் கொண்டுவரவில்லை. இயேசு, ‘உங்களில் பாவம் இல்லாதவர்கள் இவள் மீது முதலாவது கல்லெறியக்கடவன்’ என்றார். எல்லாரும் இருதயங்களில் குத்தப்பட்டவர்களாய் கலைந்து சென்றார்கள். இயேசுவும் அவளை ஆக்கினைக்கு தீர்க்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்றார்.

ஆண்டவர் அநியாயமாய் ஒருவர் மீதும் குற்றம் சாட்டுகிறவர் அல்ல. நாமும் நம்முடைய வாழ்விலே அநியாயமாய் பிறரை குற்றம் சாட்டாதிருப்போம். நாம் அளக்கின்ற அளவின்படியே நமக்கும் அளக்கப்படும். நாம் பிறர் குற்றங்களை மன்னிக்கும்போதுதான் நம்முடைய குற்றங்களும் மன்னிக்கப்படும். முதலாவது நாம் நமது கண்ணில் இருக்கிற உத்திரத்தை பார்க்க வேண்டும் அதைத் தொடர்ந்து பிறர் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கலாம். நாம் வாழ்கின்ற வாழ்விலே அநியாயமாய் பிறரை குற்றப் படுத்தாமலும் பிறருடைய மனங்களை காயப்படுத்தாமலும் இருப்போம். புழிக்குப் பழி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் ஒருபோதும் நமக்குள் இருக்க வேண்டாம். இயேசு பாவியான பெண்ணை மன்னித்தார். நாமும் பிறர் குற்றங்களை மன்னிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

கடவுளே! இயேசுவில் எங்கள் பாவங்களை மன்னித்து புது வாழ்வு அருளியிருக்கிறீர் நன்றி. மன்னிப்பை பெற்ற நாங்கள் அதை பகிர்ந்தளிக்க கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

குற்றஞ்சாட்டாதிருப்போம்2025-06-03T11:24:04+00:00

கடவுளின் பராமரிப்பு

யோசுவா 24 : 1-13                   13 மே 2025, செவ்வாய்

“நீங்கள் நடந்துவந்த வழிகளிலெல்லாம் உங்கள் கடவுளாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததை நீங்கள் காணவில்லையோ?”   – உபாகமம் 1 : 31

‘வரலாற்றை மறந்தவன் தன்னை மறந்தவன்’ என்பார்கள். வாழ்வில் உயர்வு வரும் போது கடந்த காலங்களை மறந்து விடுகிறவர்கள் உண்டு. இஸ்ரவேல் மக்களின் வாழ்வில் கடவுளின் வழிநடத்துதல் அற்புதமானது. அவர்களின் முற்பிதாவாகிய ஆபிரகாமை அழைத்த காலம் முதல் ஒவ்வொரு நிலையிலும் கர்த்தர் அவர்களோடு இருந்தார். இஸ்ரவேல் மக்களின் வனாந்திர பயணத்திலும் கடவுள் அவர்களோடு இருந்து அவர்களை வாக்களித்த தேசத்திலே கொண்டு சேர்த்தார்.

கடவுளின் பராமரிப்பை பெற்ற மக்கள் தமது வழிநடத்துதலை உணர்ந்து வாழும்படி அழைக்கிறார். கடவுளையும், அவருடைய வார்த்தைகளையும் நினைவில் வைத்து வாழ அழைக்கிறார்

அனேக மக்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளை மறந்து விடுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கடவுள் பரிசாகத் தந்த பெற்றோர் வாயிலாக, நமது குடும்பத்தினர் வாயிலாக, நண்பர்கள் வாயிலாக நாம் பெற்ற நன்மைகளை நினைவில் கொண்டு வாழ வேண்டும். நம்முடைய திருச்சபையின் அருளுரைகள் வழியாக நாம் பெற்ற நன்மைகளை நினைவில் வைத்திருப்போம். இந்த உலகத்தில் நமது வாழ்வில் கடவுள் தந்திருக்கிற நன்மைகளை நினைவில் கொள்ளுவோம். எண்ணிப் பார்ப்போம். கடவுள் நம் வாழ்வில் நடப்பித்த செயல்களை மறவாதிருப்போம். நம்மை மறவாத கடவுளை மறவாமல் வாழ்வோம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! நீர் எங்கள் வாழ்வில் தந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. நாங்கள் எங்கள் வாழ்வில் பெற்ற நன்மைகளை மறவாமல் உம்மையே நம்பி வாழ எங்களுக்கு அருள்புரியும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

கடவுளின் பராமரிப்பு2025-05-12T10:57:12+00:00
Go to Top