1 சாமுவேல் 22 : 13-15                               17 ஜூன் 2025, செவ்வாய்

“பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பு, உண்மையாய் நடப்பவர் அவருக்கு பிரியம்.” – நீதிமொழிகள் 12 : 22

‘வாய்மையே வெல்லும்’ என்று கூறுவார்கள். உண்மையை பொய்கள் மறைக்கலாம், ஆனால் அழிக்க முடியாது. உண்மை நிச்சயம் ஒரு நாள் வென்றே தீரும்.

இன்றைய தியானப் பகுதியும் உண்மையுள்ளவர்களாய் வாழும்படி நம்மை அழைக்கின்றது. பொய் பேசுகின்ற உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பு. உண்மையாய் நடப்பவர்கள் அவருக்குப் பிரியம். கேயாசி எலிசாவுக்கு முன்பாக பொய் உரைத்தான். நாகமானின் தொழுநோய் அவனையும் அவன் குடும்பத்தையும் பற்றி கொண்டது. அனனியா சப்பீராள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பொய் உரைத்தனர். அதே இடத்தில் மாண்டு போயினர். கபடு செய்கிறவன் அவரது வீட்டுக்குள் இருப்பதில்லை. பொய் சொல்லுகிறவன் அவர் கண் முன் நிலைப்பதில்லை. உண்மையாய் நடப்பது கர்த்தருக்குப் பிரியம். ஏனெனில் அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.

உண்மையுள்ள மனிதனுக்கு பரிபூரண ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். தாவீது ஆண்டவருக்கு முன்பாக உண்மையுள்ளவனாய் இருந்தார். ஆடு மேய்க்கிறவர் அரசன் ஆனார். உண்மை உள்ளவனை கர்த்தர் பாதுகாக்கிறார். தீமை அவனை அணுகுவதில்லை. தானியேல் ஆண்டவருக்கு முன்பாக உண்மை உள்ளவனாய் இருந்தார். சிங்கங்கள் அவரை சேதப்படுத்தாதபடிக்கு கர்த்தர் தமது தூதனை அனுப்பி அவரை பாதுகாத்தார். ஆண்டவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுது கொள்ள வேண்டும். பக்தியின் வேடம் தரித்து நடக்கிறவர்களை கடவுள் அருவருகிறார்.

நாம் நம்முடைய வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். வாழ்வும் மரணமும் நாவின் அதிகாரத்தில் உள்ளது. நாவு சிறிய உறுப்பாய் இருந்தாலும் அது நெருப்பு. ஆயுள் சக்கரத்தையே கொளுத்தி விடும் ஆற்றல் கொண்டது. நமது வாழ்வை கவனமாய் வாழ்வோம், பொய் உதடுகளைக் களைந்து உண்மையைப் பற்றிக்கொள்வோம். ஆண்டவருக்கு உண்மையுள்ள சாட்சியாய் வாழ்வோம்.

உண்மையுள்ளவராய் இருக்கிற எங்கள் அன்புள்ள கடவுளே! நீர் உண்மையில் பிரியப்படுகிறவர், உம்மைப் போற்றுகின்றோம். நாங்கள் உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அருவருப்பாகிய பொய்யை களைந்து உமக்கு பிரியமுள்ள மக்களாய் உண்மை உள்ளவர்களாய் வாழ துணை புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.