தானியேல் 10 : 7-9 20 ஜூன் 2025, வெள்ளி
“பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் ஆண்டவர் தாமே வானத்திலிருந்து இறங்கி வருவார்.”
– 1 தெசலோனிக்கேயர் 4 : 16
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. அதாவது நித்திரை போன்றதே இறப்பு, நித்திரைக்கு பின்னர் விழிப்பது போன்றதாம் பிறப்பு என்கிறார் திருவள்ளுவர். மரணத்தை குறித்து யாவரும் பயப்படுகின்றோம். மரணம் ஒரு முடிவு அல்ல, மரணம் ஒரு நித்திரைக்கு ஒப்பானது. மரணத்துக்கு பின் உயிர்த்தெழுதல் ஒன்று உண்டு என்று திருமறை கூறுகிறது.
இன்றைய தியானப் பகுதியும் அந்த நம்பிக்கையை நமக்கு தருகின்றது. கடவுள் எக்காள சத்தத்தோடே வருவார். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களையும் அவர் தன்னோடுகூட கொண்டு வருவார். நித்திரை அடைந்தவர்களை குறித்து துக்கிக்க வேண்டாம். கல்லறைகளைக் கண்டு கண்ணீர் வடிக்க வேண்டாம். கல்லறைகள் பார்த்து பயப்பட வேண்டிய ஒன்று அல்ல. கல்லறைகள் நம்பிக்கையின் படுக்கைகள், இறந்தோர் இளைப்பாறும் இடம். இயேசுவின் கல்லறை நமக்கு நம்பிக்கை தருகிறது. அது திறக்கப்பட்ட கல்லறை. எந்த ஒரு முத்திரையும் எந்த ஒரு கல்லும் அதை அடைத்து வைக்க முடியவில்லை.
கல்லறையை திறந்து இயேசு உயிர்த்தெழுந்தார். கிறிஸ்துவின் வருகையின் வேளையில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் அவர் அவ்வாறு உயிர்த்தெழச் செய்வார். கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள் என்று சொல்கின்ற வண்ணமாக கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் யாவருக்கும் அழியா மறுவாழ்வு உண்டு. எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிலே கடவுள் எசேக்கியேல் தீர்க்கனை நிறுத்தி இந்த எலும்புகள் உயிர் பெற கூடுமோ என்று கேட்டார். கர்த்தாவே அது உமக்கே தெரியும் என்றார். ஆண்டவரின் வார்த்தையை கேட்ட அந்த எலும்புகள் உயிர்பெற்று பெரிய சேனையாய் நின்றது. அவ்வண்ணமாகவே கிறிஸ்து வருகையில் யாவரும் எழுந்திருப்போம். இந்த என் தோல் முதலானவைகள் அழுகிப்போன பின்பு என் கண்களால் அவரைக் காண்பேன் என்று யோபு சொல்கிறார்.
நம்முடைய வாழ்விலே மரணத்தைக் கண்டு பயப்படாதிருப்போம். இறந்து போனோரை எண்ணி துக்கித்து அடைபட்டு வாழாதிருப்போம். கல்லறையைக் கண்டு கண்ணீர் வடிக்காதிருப்போம். கர்த்தர் வருகையில் நமது துன்பம் ஜெயமாக மாறும்.
விண்ணுலகில் வாழ்கிற கடவுளே! உலகை நியாயம் தீர்க்க உமது நேச குமாரனை அனுப்புவீர் என்று அறிந்திருக்கிறோம். நித்திரைக்கு ஒத்திருக்கிற மரணத்தைக் கண்டு கலங்காமல் நாங்கள் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு உமது வருகைக்கு ஆவலாய் காத்திருக்க துணை செய்யும் இயேசுவில் பிதாவே ஆமேன்.
