யோவான் 3 : 1-15                                                 23 செப்டம்பர் 2025, செவ்வாய்

“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் கடவுள் ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கமுடியாதென்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.” – யோவான் 3 : 5

தியானபாகத்தில், ஆன்மீக வாழ்வில் மறுவாழ்வு எவ்விதம் கிடைக்கும் என்பதற்கானத் தெளிவு குறிப்பிடப்பட்டுள்ளது. நிக்கொதேமு என்ற பரிசேயன் ஓர் இரவு இயேசுவைச் சந்திக்க வருகிறார். இயேசுவானவர் கடவுளிடத்தில் இருந்து வந்தவர் என்பதை அறிக்கை செய்கிறார்.

ஆண்டவர் அவருக்கு கடவுள் இராஜ்யத்தின் மறுப்பிறப்பைக் குறித்து விளக்கமளிக்கிறார். ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பதே மறு வாழ்வு-கடவுள் இராஜ்யத்தில் பிரவேசிக்கக்கூடிய வழியாகும். என் தாய் என்னை பாவத்தில் பிறப்பித்தாள் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறபடி ஒருவன் பிறக்கும்போது பாவத்தில் பிறக்கிறான். பாவத்தின் சம்பளம் மரணம். எனவே கடவுள் இராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது.

இயேசுவை விசுவாசித்து திருமுழுக்கு பெற்றுக்கொள்ளும்போது கடவுள் இராஜ்யத்தில் இணைக்கப்படுகிறோம். தண்ணீரினால் திருமுழுக்குப் பெறும்பொழுது ஆவியானவர் அருளப்படுகிறார். இயேசுவில் மறுபிறப்பை பெற்றுக்கொள்ளுகிறார். நாமும் இயேசுவில் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவை தரித்துக்கொண்டுள்ளோம். கடவுள் நம்மை அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டுள்ளார். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதிய சிருஷ்டியாய் இருக்கிறான் என்று பவுல் குறிப்பிடுகிறார்.

நாம் மறுவாழ்வு – புதிய வாழ்வு பெற்றவர்கள். பரிசுத்தமான வாழ்வு பெற்றவர்கள். கடவுள் இராஜ்யத்தின் அடையாளம் பரிசுத்தமான வாழ்வாகும். பரிசுத்த வாழ்வு என்பது ஏதோ தியான நேரம், ஆராதனை நேரம் மட்டுமல்ல, நம் வாழ்க்கையின் எல்லா நிலையிலும் வெளிப்படுத்துவது. நம் செயல், சிந்தனை, சொல் எல்லாவற்றிலும் பரிசுத்தத் தன்மை வெளிப்படுதல் அவசியம். அதெற்கென்றே அழைக்கப்பட்டுள்ளோம். நாம் பணிசெய்கின்ற இடத்திலும் கடவுள் இராஜ்யத்தின் பிள்ளைகளாய் வாழ வேண்டும். ஆவியில் பிறந்தவர்களாக வாழ கடவுள் விரும்புகிறார். ஜலத்திலானாலும் ஆவியினாலும் பிறந்தவர்களாக வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, உமது கிருபையினால் இயேசுவில் எங்களை மறுபடியும் பிறக்கச் செய்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய பிள்ளைகளாய் வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.