பிலேமோன் 9-12                                 29 செப்டம்பர் 2025, திங்கள்

“…. என்னைப் போலவே அவனை ஏற்றுக்கொள்.” – பிலேமோன் 17

சிறைச்சாலையிலிருந்து தண்டனை முடிந்துவரும் ஒரு கைதியை எளிதில் ஏற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினம். ஒருவேளை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டாலும், சமுதாயம் அவரை குற்றவாளியாகவே பார்க்கும். அவரின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியே. சில கிறிஸ்துவ தன்னார்வ நிறுவனங்கள் கைதிகளின் மறுவாழ்வுக்கான நன்மைகளை செய்துகொண்டு வருவதை நாம் அறிவோம்.

தியானபாகத்தில், பவுல் பிலேமோன் என்பவருக்கு சொல்லுகின்ற வார்த்தை. பவுலை மிகவும் அன்போடு ஏற்றுக்கொண்டார் பிலேமோன். பவுலின் வழியாக நற்செய்தியைக் கேட்டு இயேசுவுக்குள் வழிநடத்தப்பட்டார்.

சிறைச்சாலையில் பவுல் ஒநேசிமு என்பவரை சந்திக்கிறார். ஒநேசிமு பிலேமோன் வீட்டில் இருந்து தப்பிவந்த அடிமை என்பதை அறிந்துகொள்ளுகிறார். பவுல் அவருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறார். மனமாற்றத்திற்குள் வருகிறார். தன் தவறை உணர்ந்து மீண்டும் தன் எஜமான் பிலேமோன் வீட்டிற்கு போக விரும்பினார்.

பவுல் ஒரு சிபாரிசு கடிதமாக சிறைச்சாலையில் இருந்து எழுதுகிறார். பவுல் பிலேமோனிடம், ‘என்னை எவ்விதம் கடவுளின் பிள்ளையாய், இயேசுவில் மன்னிப்பு பெற்றவராக ஏற்றுக்கொண்டதுபோல ஒநேசிமுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கேட்கிறார். ‘முன்னே பிரயோஜனமற்றவன், இப்பொழுதோ பிரயோஜனமுள்ளவன் என்று கூறி உன் வீட்டு அடிமையானாலும், கிறிஸ்துவுக்குள் சகோதரனாக ஏற்றுக்கொள்’ என்று குறிப்பிடுகிறார்.

மரண தண்டனைக்குரியவர்களான நம்மையும் கடவுள் தமது கிருபையினால் இயேசு கிறிஸ்துவில் விடுதலையாக்கினார். நாம் மன்னிப்புப் பெற்றவர்கள். கடவுளின் அன்பைப் பெற்றவர்கள். நம்முடைய திருச்சபைகளில் எத்தனை பாகுபாடுகள். ஏழை-பணக்காரன், படித்தவன்- படிக்காதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்று பாகுபாடுகளை வைத்துக்கொண்டு கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறோம். கிறிஸ்துவின் வழியாக கடவுள் எந்த நிபந்தனையும் இல்லாமல் நம்மை ஏற்றுக்கொண்டாரோ, அவ்விதமே நாமும் எவ்வித வேற்றுமையும் இன்றி அனைவரையும் நேசித்து வாழ தூயாவியானவர் துணைசெய்வார்.

கிருபையும் இரக்கமுள்ள கடவுளே, நீர் உமது குமாரனில் எவ்வித நிபந்தனையும் இன்றி மன்னித்ததற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்களும் வேறுபாடின்றி அனைவரையும் நேசிக்க கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.