லூக்கா 18 : 9-14 02 அக்டோபர் 2025, வியாழன்
“தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.” – லூக்கா 18 : 14
இன்றைய தியானப் பகுதி இயேசுவின் ஓர் உவமையாகும். இரண்டு மனிதர்கள் ஜெபம் பண்ணுவதற்காக தேவாலயத்திற்கு போனார்கள். ஒருவர் பரிசேயர். அவர்கள் அக்காலத்தில் மிகவும் படித்தவர்கள். திருமறையை தங்கள் வாழ்வில் கைக்கொண்டவர்கள். மிகுந்த பக்தியாய் வாழ்ந்தவர்கள். இதனால் மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர்கள். இன்னொருவர் ஆயக்காரர். அவர்கள் வரி வசூலிப்பவர்கள். பொதுவாக வரி வசூலிப்பவர்கள் வாங்க வேண்டிய வரியைவிட கூடுதலாக வசூலிப்பார்கள். இதனால் மக்கள் மத்தியில் இவர்கள் தங்கள் நன்மதிப்பை இழந்தவர்கள்.
இப்போது இந்த இருவரும் ஜெபிக்க ஆலயத்திற்கு வந்துள்ளனர். பரிசேயர் ஆலயத்திற்குள் வந்து நின்று, ‘கடவுளே நான் அநியாயக்காரர், விபசாரக்காரர், போன்றவர்களை போலல்ல. இந்த ஆயக்காரனைப்போலவும் இல்லை. அதற்காக உமக்கு நன்றி. வாரத்தில் இரண்டு முறை உபவாசமிருக்கிறேன். என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்துகிறேன்’ என்று தனக்குள்ளே வேண்டுதல் செய்தார்.
ஆனால் வரி வசூலிப்பவரோ, தூரத்தில் நின்று, தன் கடவுளை நேராக பார்க்கவும் துணிவில்லாமல், தன் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்’ என்றார். இந்த இருவரில் வரிவசூலிப்பவரே நீதிமானாகத் தீர்க்கப்பட்டார் என்று இயேசு கூறுகிறார்.
இந்த எளிய உவமையில் பெரிய உபதேசத்தை வைத்திருக்கிறார். அதென்னவெனில் தன்னை உயர்வாக நினைத்ததால் இன்னொருவனை தாழ்வாக எண்ணுகிறான். உண்மையில் அவன் செய்தவை அவனது கடமைகள். கடமைகளைச் செய்வதில் என்ன பெருமை உண்டு. இப்படி தன்னைதானே உயர்வாக எண்ணுதல் பிறரை இழிவாக எண்ணும் எண்ணத்திற்கு இட்டுச் செல்கிறது. ஏழைகளை, பிற மதத்தவரை, பிற இன மொழி மக்களை இழிவாக நினைக்கும் சிந்தை இந்த தற்பெருமையிலிருந்தே வருகிறது. தாழ்மையை தரிப்பதே கிறிஸ்துவின் குணம், கிறிஸ்தவத்தின் குணம்.
பிதாவே, நாங்கள் பிறரை இழிவாக எண்ணாமல் தாழ்மையை தரித்துக்கொள்ள வழி நடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
