தரிசனம் 20 : 1-3                                        03 அக்டோபர் 2025, வெள்ளி

“இதோ என்றென்றைக்கும் ஜீவனுள்ளவராயிருக்கிறேன்.” – தரிசனம் 1 : 18

கடந்த ஆண்டு கேரளாவில் வயநாடு பகுதியில் பெரிய நிலச் சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மரித்து போனார்கள். அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாதிப்புகள் மிக கடுமையாக இருந்தது. இந்த சம்பவம் இன்றுவரை அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. மரணமடைந்த தங்கள் உறவுகளின் உடலைகளை தேடி கண்ணீரோடு மக்கள் அலைந்தனர். இது கல் நெஞ்சையும் கரைப்பதாக அமைந்தது.

மரணம் நம்மை பயமுறுத்தும், கலங்க செய்யும். எனவே மரணத்திற்கு அஞ்சாதவர்களே இல்லை. ஏனென்றால் மரணம் மனித வாழ்வின் முடிவாக அமைகிறது. இன்றைய தியானப் பகுதி, ‘மரித்தேன் இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன்’ என்று துவங்குகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார். ஆனால் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இன்றைக்கும் அவர் உயிரோடிருக்கிறார், என்றைக்கும் அவர் உயிரோடிருப்பார். அதைத்தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது. இது எப்படி சாத்தியம் என்றால், மரணத்தின் திறவு கோல் அவரிடத்தில்தான் இருக்கிறது. திறவு கோல் என்றால் சாவி என்று பொருள். அப்படியானால் ஒருவர் மரணமடைவதை தடுக்கவோ அல்லது அனுமதிக்கவோ அவரிடம் அதிகாரமுள்ளது.

இந்த வசனத்தின் வழியாக கிறிஸ்து நமக்கு தருகிற செய்தி மரணத்தைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. இதையே பவுல், “கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்” என்றார். மரணம் எப்படி ஆதாயமாகிறதென்றால், ‘என்னில் விசுவாசம் வைக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்’ என்று இயேசு கூறுகிறார். கிறிஸ்துவை நம்பி வாழ்வோருக்கு மரணம் முடிவல்ல. கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கிற புதிய வாழ்வின் துவக்கம்.

மரணத்தைப்பற்றிய கலக்கம் இருக்குமானால் கலங்காதீர்கள். மரணத்தை கண்டு அஞ்சாதீர்கள். மரணத்தின் மீது அதிகாரம் கொண்ட இயேசு கிறிஸ்து உங்களோடிருக்கிறார். உங்களைக் காப்பார். உங்களை வழி நடத்துவார். நீங்கள் நேசித்த ஒருவரை இழந்து அவர்கள் நினைவால் வேதனைப்படுவீர்களானால் இப்போதே உங்கள் கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள். மரணம் அவருக்கு முடிவல்ல. மரணத்தின் மீது அதிகாரம் கொண்ட கிறிஸ்து நித்திய வாழ்வின் வாசல்களை திறப்பார்.

அன்பின் கடவுளே, எங்களுக்கு எதிராக நேரிடும் தீங்கிலிருந்து கிறிஸ்துவின் வழியாய் எங்களை பாதுகாத்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.