யோனா 4 : 1-4                                                  07 அக்டோபர் 2025, செவ்வாய்

“தகப்பனோ வெளியே வந்து,  அவனை வருந்தியழைத்தான்.” – லூக்கா 15 : 28

இந்த நாளுக்குரிய தியானப் பகுதியில் இயேசு அழகான உவமையை கூறினார். ஒரு பெரிய செல்வந்தரான தகப்பனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் பொறுப்புள்ளவன். தன் தந்தைக்கு கீழ்படிந்து வந்தான். இளையவனோ தகப்பனிடம் வந்து எனது சொத்தை பிரித்துக் கொடுங்கள் என்று சண்டையிட்டான். தகப்பனும் அவனுக்கு சேர வேண்டியதை பிரித்துக் கொடுத்தான். அவனோ வெளியூருக்கு சென்று ஊதாரித்தனமாக அனைத்தையும் செலவிட்டான். நிற்கதியாக நின்றான். எங்கே போவது என்று அவனுக்கு தெரியவில்லை. பன்றி மேய்க்கும் வேலைதான் கிடைத்தது. சரியான கூலி இல்லாமல், வேளைக்கு உணவில்லாமல் தவித்தான். பன்றிக்கு வைக்கும் தவிடை சாப்பிட்டு பசியாற விரும்பினான். அதைக்கூட அவனுக்கு யாரும் கொடுக்கவில்லை.

ஒருநாள் அமைதியாக அமர்ந்து தன் தகப்பனைப்பற்றி சிந்தித்தான். அவனது துன்பம் அவன் செய்த தவறை உணர்த்தியது, மனம் வருந்தினான். தன் தகப்பனிடம் போக முடிவெடுத்தான். தகப்பன் ஏற்றுக் கொள்வாரா என்ற அச்சம் அவனுக்குள் இருந்தது. எனவே தன் தகப்பனிடம் சென்று தான் செய்த தவறை அறிக்கை செய்து அவரிடத்தில் வேலை கேட்க முடிவெடுத்தான். தன் சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரனாக வாழ்ந்தாலே போதும் என்று தீர்க்கமாக தீர்மானித்தான். தன் தகப்பன் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டின் அருகில் வரும்போதே தகப்பன் அவனைக் கண்டு ஓடி வந்து கட்டி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தான். மகன் தகப்பனிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். தகப்பனோ தன் வேலைக்காரர்களை நோக்கி இவனுக்கு விலையுயர்ந்த ஆடை கொடுங்கள். இவன் கைக்கு மோதிரம் கொடுங்கள். விருந்து உண்டு பண்ணுங்கள் என்று வீட்டையே திருவிழாவாக்கினான்.

மூத்தவன் வயலில் தன் வேலைகளை முடித்து வீடு திரும்பினான். வீட்டில் இசை, நடன சத்தத்தை கேட்டான். வேலைக்காரன் ஒருவனை அழைத்து நடந்ததை அறிந்தான். கோபமடைந்து வெளியே நின்றான். தகப்பன் வந்து வருந்தி அழைத்தான். மூத்தவனோ, “இத்தனை வருஷமும் உமக்கு கீழ்படிந்து வாழ்ந்தேன். எனக்காக ஒரு ஆட்டைகூட அடித்ததில்லையே. வேசித்தனம் செய்து தன் ஆஸ்திகளை அழித்துப் போட்ட இவனுக்காக நீர் விருந்தை ஆயத்தம் செய்தீரே” என்றான். தகப்பனோ, “நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். என்னிடத்தில் உள்ளவையெல்லாம் உனக்குதான். இவன் மரித்தான், திரும்பவும் மனம் திரும்பி வந்திருக்கிறான். அதற்காக நாம் மகிழ வேண்டும்” என்றார்.

இதுவே பெற்றோரின் அன்பும் கடவுளின் அன்பும்கூட. அவர் அனைவரையும் நேசிக்கிறார். உங்களையும் நேசிக்கிறார். மனந்திரும்பி வருகிற யாரையும் தள்ளமாட்டார். தன் சொந்த மகனாக-மகளாக ஏற்றுக் கொள்வார். யார் வெறுத்தாலும் இயேசு வெறுக்கமாட்டார்.

அன்பின் தந்தையே, உமது அன்பில் நாங்கள் எப்போதும் வாழ எங்களை வழி நடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.