சங்கீதம் 96 : 1-9 08 அக்டோபர் 2025, புதன்
“… அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.” – அப்போஸ்தலர் 10 : 25
காலில் விழுந்து வணங்கும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் காலம் காலமாக இருந்து வருகிறது. திருமண நிகழ்வில் மணமக்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் தங்கள் தலைவரின் காலில் விழுந்து தங்கள் மரியாதையை செலுத்துவார்கள். ஆனால் காலில் விழும் முறை சரியானதா என்ற விவாதம் உண்டு, பொதுவாக கிறிஸ்தவர்கள் இம்முறையை பின்பற்றுவதில்லை. ஆனால் இந்த நாளுக்குரிய தியானப் பகுதியில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் பாதத்தில் விழுந்ததை குறிப்பிடுகிறது. அதைக் குறித்து விளக்கமாகக் காண்போம்.
கொர்நேலியு என்பவர் இராணுவத்தில் நூறு பேருக்குத் தலைவராக பணி செய்தவர். அவர் பேதுருவை தன் வீட்டிற்கு அழைத்தார். பேதுரு வீட்டிற்கு வந்தவுடன் கொர்நேலியு பேதுருவின் பாதத்தில் விழுந்து வணங்கினார். ஆனால் பேதுருவோ அவரை தூக்கியெடுத்தார். “எழுந்திரு நானும் ஒரு மனிதன்தான்” என்றார். இதன்மூலம் ஒரு செய்தியை பேதுரு இந்த உலகத்துக்கு அறிவிக்கிறார். அது என்னவெனில் ஒரு மனிதன் கடவுளின் பாதத்தில்தான் விழ வேண்டுமேதவிர, மனிதனின் பாதத்தில் அல்ல.
இந்த நாளுக்குரிய வாசிப்புப் பகுதியில் சங்கீதக்காரர் ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும், வல்லமையையும் செலுத்துங்கள். கர்த்தருக்கே அதை செலுத்துங்கள் என்று குறிப்பிடுகிறார். அதாவது கடவுள் மட்டுமே மகிமைக்குரியவர் என்று வலியுறுத்துகிறார். எனவேதான் கிறிஸ்தவர்களாகிய நாம் யாருடைய காலிலும் விழுவதை ஊக்கப்படுத்துவதில்லை.
நம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள பல மனிதர்களை மதிக்கிறோம். வாழ்த்துகிறோம், புகழுகிறோம். குறிப்பாக நாம் வேலை செய்யும் இடங்களில் உள்ள மேலதிகாரிகளை பெரிதும் மதிக்கிறோம். அதேபோல் எல்லாருக்கும் மேலானவரும் நம்மைப் படைத்து பாதுகாத்து வருகிறவருமான, சர்வவல்ல கடவுளுக்குரிய மகிமையை, கனத்தை செலுத்த வேண்டியது அதிக அவசியம்.
பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தருகிறோம். கடவுளை எப்படி கனப்படுத்த வேண்டும் என்பதையும் நாம் கற்றுதர வேண்டும். ஆலயத்தில் அமரும்முறை, ஜெபிக்கும் முறை, திருவிருந்து ஆராதனையில் நடந்துகொள்ளவேண்டிய விதம் அனைத்தையும் கற்றுத்தர வேண்டும்.
அன்பின் தந்தையே, உம்மை மதித்து வாழ எங்களுக்குக் கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
