யாக்கோபு 3 : 3-16 09 அக்டோபர் 2025, வியாழன்
“அப்படியே, நாவும் சிறிய அவயவமாயிருந்தும்… சிறிய நெருப்பு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது.” – யாக்கோபு 3 : 5
2024ம் ஆண்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் குமண்டி என்ற ரயில் நிலையம் அருகே ராஞ்சி சச்சரம் விரைவு ரெயிலில் தீ பிடித்ததாக பரவிய வதந்தியால் ரெயிலில் இருந்து பலர் தண்டவாளத்தில் குதித்துள்ளனர். அவர்கள் குதித்த சமயம் அவ்வழியே வந்த சரக்கு ரெயிலில் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு வதந்தி பெரும் விபத்தை ஏற்படுத்திவிட்டது. உண்மையா பொய்யா என்று தெரியாமல் சிலர் பரப்பிய செய்தி எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விட்டது. யாகாவாராயினும் நா காக்க என்று வள்ளுவர் கூறுகிறார். இதன் பொருள் யாராய் இருந்தாலும் தன் நாவை காக்க வேண்டும் என்பதே. ஏனெனில் வார்த்தைகள்தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது. இந்த நாளுக்குரிய தியானப் பகுதியும் நாவின் ஆபத்தைக் குறித்து விளக்குகிறது.
நாவு நம் உடலில் ஒரு சிறிய அவயவம்தான். ஆனால் அது இரண்டு பெரிய தீமைகளை விளைவிக்கும். ஒன்று பெருமையானவைகளை பேசும். சிலரோடு நாம் பேசவே அச்சப்படுவோம். ஏனெனில் தங்கள் பெருமையையே நாளெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். நாவின் இரண்டாவது தீமை ஒரு சிறிய நெருப்பு பெரிய காட்டையே கொளுத்தி விடுவதுபோல பெரும் தீமையை நிகழ்த்திவிடும். இயேசு கிறிஸ்து தன் வார்த்தைகளை மிகுந்த கவனத்தோடு கையாண்டார். ஒரு இடத்திலும் தன்னை பற்றி அவர் பெருமையாக பேசினதில்லை. அவரை எல்லாரும் தேவ குமாரன் என்று அழைத்தார்கள். இயேசுவோ தன்னை மனுஷ குமாரன் என்றே அழைத்தார். நன்மையானவைகளை மட்டுமே பேசினார்.
அவரது வார்த்தைகள் இன்றுவரை உலகத்தில் நன்மையானவைகளை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக இந்த சிறியரில் ஒருவருக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்றார். இந்த வார்த்தையை அடிப்படையாகக் கொண்டே கிறிஸ்தவ சேவை நிறுவனங்கள் துவங்கப்பட்டன. அன்னை தெரசா தொழு நோயாளிகளைப் பராமரித்தார். இலவச விடுதிகள், இலவச கல்வி நிலையங்கள், இலவச மருத்துவமனைகள் என கிறிஸ்தவம் எளிய மக்களுக்கான பல்வேறு நற்பணிகளை உலகம் முழுவதும் செய்து வருகிறது. இதுவே வார்த்தையின் ஆற்றல்.
எனவே நாமும் நம்முடைய வார்த்தைகளைக் கவனமாய் கையாள வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. நாம் பேசும் வார்த்தைகள் நன்மை விளைவிக்குமா தீமை விளைவிக்குமா என்று ஒருமுறை யோசிக்க வேண்டும். தீமை விளைவிக்கும் என்று உணர்வோமானால் அதை உடனே நிறுத்திவிட வேண்டும். வாழ்வு தரும் வார்த்தைகளை பேசுவோம்.
அன்புள்ள பிதாவே, நாங்கள் மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும்படி பேசாமலிருக்க எங்கள் நாவை காக்க கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
