1 கொரிந்தியர் 6 : 19-20 06 அக்டோபர் 2025, திங்கள்
“ஐயோ என் ஆண்டவரே அது இரவல் கோடாரியாயிற்றே என்று கூவினான்.” – 2 இராஜாக்கள் 6: 5
இரவல் பெறுவது என்பது காலம் காலமாக நம் வாழ்வில் நடைமுறையில் இருக்கிற வழக்கம். ஒரு பொருளை இரவலாக பெற்றால் உரியவரிடம் சரியாக திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையேல் அது தன்மானத்திற்கு இழுக்காக மாறும். ஒருமுறை பக்கத்து வீட்டிலிருந்து ஒரு குடும்பம் ஏணியை வாங்கியது. அதை உபயோகப்படுத்தும்போது தவறுதலாக அதன் ஒரு கட்டை உடைந்து விட்டது. உடனடியாக ஏணி சரி செய்கிற ஒருவரை அழைத்து சரிசெய்த பின்னரே திருப்பி கொடுத்தார்கள். இரவலாக பெற்றதை சரியாக திருப்பி கொடுப்பது நற்பண்பு. இந்த நாளுக்குரிய தியானப் பகுதியும் அதைப்பற்றிதான் பேசுகிறது.
எலிசா தீர்க்கதரிசியின் சீடர்கள் தாங்கள் குடியிருக்கும் இடம் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தனர். எனவே வேறொரு இடத்தில் குடியேற விரும்பினர். அதற்காக ஓர் இடத்தை தெரிந்தெடுத்து அந்த இடத்தில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கூடாரம் அமைக்க சில மரங்களை வெட்டும்போது ஒருவருடைய கையில் இருந்த கோடாரி தவறி யோர்தான் நதியில் விழுந்தது. உடனே அவர், ‘ஐயோ ஆண்டவரே அது இரவலாக வாங்கப்பட்டதே’ என்று சத்தமிட்டார். ஆம் இரவலாக பெற்றதை உரியவரிடம் சரியாக ஒப்படைக்க வேண்டும். நாமும் அந்த கவனத்தோடும் அக்கறையோடும்தான் இந்த உலகத்தில் வாழ்கிறோம். ஆனால் ஒன்றை மறந்து போகிறோம். நம்முடைய உடலும் உயிரும்கூட இரவலாக பெறப்பட்டதுதான். அதை நாம் எவ்வளவு கவனாமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த உடல், உயிர், அதன் இயக்கம் நாம் உண்டாக்கியவை அல்லவே. கடவுளல்லவா தமது கிருபையால் நமக்கு தந்திருக்கிறார். இதை பவுல் நமக்கு இன்றைய வாசிப்புப் பகுதியில் நியாபகப்படுத்துகிறார்.
இரவலாகப் பெறப்பட்ட இந்த உடலை கிறிஸ்துவின் மன்னிப்பினால் பெற்றுக் கொண்டதுதான் இந்த புதிய வாழ்வு. இச்சைகளால் இருதயத்தை நிரப்பி நம் வாழ்வை கெடுத்துக் கொள்வது எவ்வளவு பெரிய தவறு. அளவான ஆரோக்கியமான உணவு அருந்த வேண்டும். சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த உடலை தூய்மையாகப் பேணி காக்க வேண்டும். இது நம்முடையதல்ல. அதேபோல் தவறாமல் ஆலயத்திற்குச் சென்று இந்த ஆத்துமாவை காத்துக் கொள்ள வேண்டும். நாம் கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள். இதை உணர்ந்து நம் உடலையும் வாழ்வையும் கவனமாய் காத்துக் கொள்வோம்.
அன்பின் பிதாவே, நீர் தந்த உடலையும், கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்ட இந்த புது வாழ்வையும் கவனமாக காத்துக் கொள்ள கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
