vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

கருணையின் கடவுள்

அப்போஸ்தலர் 8 : 1-3                                 04 மார்ச் 2026, புதன்

“முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; …அவிசுவாசத்தில் அப்படிச் செய்தபடியினால்…” – 1 திமோத்தேயு 1 : 13

அப்போஸ்தலன் பவுல் ‘தேவதூஷணம் செய்பவன்’ – கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராகப் பேசியவன். அவர் கிறிஸ்தவர்களை வேட்டையாடி, கைது செய்து, துன்புறுத்தி, மரணத்திற்குகூட ஒப்புகொடுத்த மனிதர். தனது கிறிஸ்துவ எதிர்ப்பில் திமிர்பிடித்தவர். பெருமை கொண்டவர் மற்றும் வன்முறையாளர்.

அப்படி இருந்தும் அவர் கடவுளிடம் “கருணையைப் பெற்றேன்” என்று அவர் கூறுகிறார். இதுதான் நற்செய்தியின் மையக்கரு. பவுலின் கடந்த காலம் சிறந்ததாக இருக்கவில்லை. அது வெளிப்படையான கலகம் மற்றும் வெறுப்பின் பாதையாக இருந்தது. அந்தக் கலகத்தின் நடுவே, கடவுளின் கருணை அவரைக் கண்டுபிடித்தது. கடவுள் அவருக்கு இரக்கம் காட்டினார்.

இந்த வசனம் இன்று நம் அனைவருக்கும் நம்பிக்கையான செய்தி. நீங்கள் என்ன செய்திருந்தாலும், நீங்கள் எவ்வளவு தூரம் வழிதவறிச் சென்றிருந்தாலும், கடவுள் இயேசுவின் வழியாய் கருணை காண்பிக்கிறார். அவரது கருணை மிகப் பெரியது.

நாம் அடிக்கடி நம்மையும், மற்றவர்களையும் நமது கடந்த கால செயல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறோம். ஆனால், கடவுள் இதயத்தைப் பார்க்கிறார். கருணையை வழங்குகிறார். பவுலின் அறியாமையையும், அவநம்பிக்கையையும் அவர் கண்டார். பின்பு சத்தியத்தை மட்டுமே நம்பி வைராக்கியத்துடன் அவருக்கு சேவை செய்பவராக கண்டார். கடவுளின் கிருபை நமக்கு மட்டுமல்ல, பவுலைப்போல, அறியாமையில், அவநம்பிக்கையில் செயல்படும் அனைவருக்கும் உள்ளது. அவரது கருணை மிகப்பெரியது.

கருணையின் கடவுளே! உமது கிருபையால் அடியேனை எல்லாவித தீய செயல்களுக்கும் உமது கருணையால் மன்னித்து ஏற்றுக்கொள்ளளும். இயேசுவின் வழியாய் பிதாவே, ஆமேன்.

கருணையின் கடவுள்2026-03-03T10:14:37+00:00

பயப்படாதிருங்கள்

2 இராஜாக்கள் 21 : 23                                03 மார்ச் 2026, செவ்வாய்

“அசீரியா ராஜாவின் ஊழியர் என்னைத் (எசேக்கியா ராஜாவை) தூஷித்துப் பேசின வார்த்தைகளைக் கேட்டு பயப்பட வேண்டாம்.”
– 2 இராஜாக்கள் 19 : 6

அசீரியப் படை எருசலேமை முற்றுகையிட்டுள்ளது. அவர்களின் ராஜாவான சனகெரிப், எசேக்கியா ராஜாவுக்கு ஒரு உறையவைக்கும் செய்தியை அனுப்புகிறார். அவர் அவர்களின் கடவுளான யாவேயை கேலி செய்கிறார். அவர் தனது படை வென்ற மற்ற நாடுகளின் தெய்வங்களைவிட யாவே வலிமையானவர் அல்ல என்று கூறுகிறார்.

விரக்தியின் இந்த தருணத்தில் எசேக்கியா கர்த்தரைத் தேடுகிறார். அவர் கோவிலுக்குச் செல்கிறார். துக்கம் மற்றும் பணிவின் செயலில் தனது ஆடைகளைக் கிழித்து, தீர்க்கதரிசி ஏசாயாவிடம் தூதர்களை அனுப்புகிறார். செய்தி எளிமையானது. ஆனால் அவமானகரமானது.

மேலும் ஏசாயா வழியாக கடவுள் பதிலளிக்கிறார். இன்று நாம் கவனம் செலுத்தும் வசனமான 2 இராஜாக்கள் 19:6, அவர்களின் வேண்டுகோளுக்கு ஒரு சக்திவாய்ந்த மற்றும் நேரடியான பதிலாகும்: “அசீரிய ராஜாவின் ஊழியர்கள் என்னை நிந்தித்த வார்த்தைகளுக்கு பயப்படாதே.”

இந்த வசனம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட மக்களிடம் பேசப்பட்டிருந்தாலும், இன்று நமக்கு ஒரு காலத்தால் அழியாத உண்மையைப் பேசுகிறது. பயப்பட வேண்டாம் என்ற தெய்வீக கட்டளை இது.

“பயப்படாதே, ஏனென்றால் நான் உன் பிரச்சினைகளை உடனடியாக மறைந்து போகச் செய்யப் போகிறேன்” என்று அவர் சொல்லவில்லை. அவர் போராட்டமில்லாத வாழ்க்கையை வாக்குறுதி அளிக்கவில்லை. மாறாக, “நீ கேட்ட வார்த்தைகளுக்குப் பயப்படாதே” என்று அவர் கூறுகிறார். அவர் நம் பயத்தின் யதார்த்தத்தை ஒப்புக்கொள்கிறார். ஆனால் பிரச்சனையின் சக்தியில் அல்ல. நம்முடன் இருப்பவரின் சக்தியில் நம்பிக்கை வைக்க அவர் நம்மை அழைக்கிறார்.

அசீரியப் படையிலிருந்து எருசலேமை அற்புதமாக விடுவிக்க அவர் தனது தூதரை அனுப்பியதுபோல, அவர் நமக்காகவும் போராடுவார். நீங்கள் எதிர்பார்க்கும் விதத்திலோ அல்லது நாம் விரும்பும் நேரத்திலோ அவர் அதைச் செய்யாமல் இருக்கலாம், ஆனால் அவர் செயல்படுவார். அவர் நமது பாதுகாவலராகவும், அடைக்கலமாகவும், பலமாகவும் இருப்பார்.

எங்கள் பலமாகிய கடவுளே! நாங்கள் எந்த அச்சுறுத்தலையும் கண்டு பயப்படாமல் இருக்க இயேசுவின் வழியாய் துணை புரியும் நல்ல பிதாவே, ஆமேன்.

பயப்படாதிருங்கள்2026-03-02T10:20:41+00:00

கடவுளின் கோபம்

உபாகமம் 29 : 25-28                             28 பிப்ரவரி 2026, சனி

“கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும்… வேற்று நாட்டில் எறிந்து விட்டார்.” – உபாகமம் 29 : 28

பெற்றோர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் பிள்ளைகள் தவறு செய்யும் போது இயற்கையாகவே பெற்றோர் கோபப்படுகின்றனர், தண்டனை அளிக்கின்றனர். அதுபோலவே நம்மைப் படைத்து, பராமரித்து வருகிற கடவுள் நம்மீதும் நமது பாவங்கள் நிமித்தமாக கோபப்படுகிறார், தண்டனை அளிக்கிறார்.

இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து அழைத்து வந்த கடவுள் அவர்களோடு ‘நான் உங்கள் கடவுள், நீங்கள் என் மக்கள்’ என உடன்படிக்கை செய்தார். ஆனால் அவர்களோ அந்த உடன்படிக்கையை விட்டு விலகினார்கள். மேலும், அவர்கள் வேற்று தெய்வங்களை பின்பற்றி அவர்களுக்கு ஊழியம் செய்தார்கள். ஆகவே, கடவுள் அவர்கள்மேல் கடுங்கோபம் கொண்டு அவர்களுக்கு அவர் அளித்த இஸ்ரவேல் நாட்டிலிருந்தும் அகற்றி விட்டார்.

கடவுள் தம் மக்கள் தம்முடைய உடன்படிக்கைக்கு கீழ்படிந்து வாழ்வதையே விரும்புகிறார். கடவுள் அளிக்கும் தண்டனை அவர்கள் திருந்தி வருவதற்கே அன்றி அவர்களது அழிவிற்கு அல்ல.

நமது கோபம் எப்படிப்பட்டது என சிந்தித்து பார்க்க வேண்டும். நமது கோபம் ஒருவரை மீட்டுக் கொள்வதற்காக இருக்க வேண்டுமே அன்றி அவர்களை தள்ளிவிடுவதற்காக இருக்கக் கூடாது. நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக செய்யாமல் நம்மீது தயவு காண்பித்த கடவுள் மன்னிக்கும் பண்புடையவர்களாக வாழ நம்மை அழைக்கிறார்.

சொந்த சகோதரர்களிடம் கோபப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாத திரளான மக்களை நாம் காண்கிறோம். நமக்கு அடுத்திருப்பவர்களின் தவறுகளை நாம் மன்னிக்கிறோமா என சிந்திப்போம். அவர்களும் திருந்தி வாழ்வதற்கு இடமளிப்போம்.

தயவுள்ள கடவுளே! எங்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்பவும் மன்னிக்கும் குணம் உடையவர்களாக வாழவும் உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுளின் கோபம்2026-02-23T06:28:48+00:00

எப்போதும் கோபம் கொள்ளாதவர்

எண்ணாகமம் 14 : 18-19                                  27 பிப்ரவரி 2026, வெள்ளி

“அவர் (கர்த்தர்) எப்பொழுதும் வழக்காடார்; என்றைக்கும் கோபம் கொண்டிரார்.” – சங்கீதம் 103 : 9

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிக்கும் மனிதர்கள் உண்டு. இப்படிப்பட்ட மனிதர்களால் சக மனிதர்களில் இருக்கும் நன்மையை காணவோ அவர்களை பாராட்டவோ இயலாது. அவர்கள் எந்த காரியத்திலும் குறையை கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில், மனிதர்களாகிய நாம் யாரும் எந்த குறைவும் இன்றி பூரணமானவர்களாக இருந்துவிட முடியாது.

நம்மைப் படைத்து ஆளுகை செய்யும் கடவுள், நம்முடைய பலவீனங்களையும் குறைவுகளையும் நன்கு அறிகிறார். நாம் செய்யும் எந்த பாவங்களும் அவருடைய கண்களுக்கு மறைவானவைகள் அல்ல. ஆனால் மிகுந்த இரக்கமுள்ள கடவுள் எப்பொழுதும் வழக்காடுபவர் அல்ல. அவர் என்றைக்கும் கோபம் கொள்வதுமில்லை.

ஏனெனில் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக அவர் நம்மை கையாண்டால் நம்மில் ஒருவர்கூட தப்பிக்க முடியாது. எல்லாரும் தண்டனைக்கு உரியவர்களாக இருப்போம். இன்றைய வாசிப்புப் பகுதியில் வனாந்தர பயணத்தில் இஸ்ரவேல் மக்களின் பாவங்களை மன்னித்து இரக்கம் காண்பித்த கடவுளை காண்கிறோம். அவர்கள் முரட்டாட்டமுள்ள மக்களாக இருந்தும் கடவுள் அவர்களை கைவிடாமல் அவர்களை வாக்களித்த தேசத்தில் கூட்டி சேர்த்தார்.

‘எல்லாரும் வழிவிலகி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்’ என்கிற வசனத்தின்படி நாம் அனைவரும் பாவத்தால் கறைபட்டவர்களே. கடவுள் தன் மகனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு கொடுத்ததினால் கடவுள் நம் மேல் வைத்த அன்பையும் அவரது இரக்கத்தையும் விளங்கப்பண்ணினார். கடவுளிடமிருந்து இரக்கத்தை பெற்றுக் கொண்ட நாமும் ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடிக்க முயற்சியாமல் குறைகளை மன்னிக்கிறவர்களாக வாழ வேண்டும். பிறரது குறைகளை சீர் செய்ய உதவ வேண்டும். வாழ்வில் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தி வாழ்வோம்.

கிருபாசம்பனரான கடவுளே! உமது கிருபையை பெற்று வாழவும் உமது குணாதிசயங்களை தரித்து வாழவும் உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

எப்போதும் கோபம் கொள்ளாதவர்2026-02-23T06:26:33+00:00

கோபத்தைத் தூண்டாதே

சங்கீதம் 90 : 4-8                                  26 பிப்ரவரி 2026, வியாழன்

“கோபத்தைக் கிண்டினால் சண்டை பிறக்கும்.” – நீதிமொழிகள் 30 : 33

ஒரு வாலிபன் தன் தந்தையை ஆத்திரத்தில் மரியாதை குறைவாக பேசி விட்டான். தந்தையோ கடுங்கோபங்கொண்டு தனது மகனை தனது ஆத்திரம் தீர அடித்து உதைத்தார். மகன் நேராக சென்று தற்கொலை செய்து விட்டான். இது ஒரு உண்மை நிகழ்வு. இந்நிகழ்வில் வருகிற தந்தை, மகன் இருவரின் கட்டுப்படுத்தப்படாத கோபம் மிகப் பெரிய ஆபத்தில் முடிந்ததை காண்கிறோம்.

பரபரப்பான உலகில் வாழ்கிறோம். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருகிற தந்தை, அலுவலகம் சென்று பணி முடித்து வரும் தாய், பள்ளிக்கூடம் சென்று வந்த பிள்ளைகள் என அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அன்றாட வாழ்வில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது மிகவும் அவசியம். ஒருவரையொருவர் குறை கூறும் வார்த்தைகளும், பரியாசங்களும் கோபத்தையே உருவாக்கும்.

கோபம் சண்டையை பிறப்பிக்கும். கீழ்படியாத மனிதர்கள்மேல், கடவுள் மேல் கொண்ட கோபத்தின் விளைவே மரணம் ஆகும். கடவுளின் கோபத்தினால் நாம் அனைவரும் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அடைந்திருக்கிறோம். ஆனால் கடவுள் தயவுள்ளவர். ‘அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய கருணையோ ஆயுள் காலம்’ என்று தாவீது சங்கீதத்தில் பாடுகிறார். கடவுள் தம்முடைய மைந்தனாகிய கிறிஸ்துவை நமக்காக தந்து நம்முடைய பாவங்களை மன்னித்தார். தம்முடைய இரட்சிப்புக்கு நம்மை தகுதிப்படுத்தினார்.

கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்ற நாமும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழவே அழைக்கப்படுகிறோம். குடும்ப உறவுகளுக்குள்ளாக ஏற்படுகிற கருத்து வேறுபாடுகளில் கோபத்தை தூண்டி விடாமல் சமாதானம் ஏற்படுத்துவது அவசியம். இது உறவுகள் மேம்பட உதவி செய்யும்.

அன்புள்ள கடவுளே! உம்முடைய மன்னிப்பைப் பெற்ற நாங்களும் ஒருவருக்கொருவர் மன்னிப்பளித்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கோபத்தைத் தூண்டாதே2026-02-23T06:24:07+00:00

மனித கோபம்

நெகேமியா 9 : 16-17                              25 பிப்ரவரி 2026, புதன்

“மனுஷகோபம் தேவ நீதியை நடப்பிக்கிறதில்லையே.” – யாக்கோபு 1 : 20

‘சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது’ என்பது பொதுவான அறிவுரை. அதாவது, ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது. சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி நீதிமன்றத்தின் மூலம் நியாயம் தேட வேண்டும் என்பதே இதன் பொருள்.

மனிதன் தன் கோபத்தினால் பதிலுக்குப் பதில் செய்ய முயற்சிக்கிறான். ஆனால், மனிதனுடைய கோபமானது ஒருவேளை நியாயமான கோபமாக நமக்கு தோன்றினாலும் அது கடவுளின் நீதியை நிலைநிறுத்தவோ, ஊக்குவிக்கவோ முடியாது.

இன்றைய வாசிப்புப் பகுதியில் இஸ்ரவேல் மக்களின் பாவ அறிக்கையை பார்க்கிறோம். அவர்கள் பிதாக்கள் அகங்காரமுள்ளவர்களாகவும் வணங்காக் கழுத்துள்ளவர்களுமாக கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் போனார்கள். ஆகவே கடவுளின் தண்டனை பெற்றார்கள். ஆனால் கடவுள் தமது மிகுந்த கிருபையினால் அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கு தயவளித்தார் என அறிக்கை செய்தனர்.

கடவுளின் நீதி மனிதனின் நீதிக்கு அப்பாற்பட்டது. அவர் நித்திய நியாயாதிபதி. நாம் காட்டக்கூடிய எந்தவிதமான கோபத்தைவிட மென்மையையும், சாந்தத்தையும் கடவுள் வெளிப்படுத்துகிறார். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை அவமானப்படுத்தினவர்களையும், நிந்தித்தவர்களையும், சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்தார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக செய்யாதவர் என சங்கீத புத்தகத்தில் வாசிக்கிறோம்.

இவ்வுலகின் கடைசிநாளில் ஆண்டவர் அளிக்கும் நியாயத்தீர்ப்புக்காக நாம் ஆயத்தப்பட்டு காத்திருப்போம். சகமனிதர்கள் நமக்கு எதிராக செய்த தீமைகளுக்கு நாம் தீர்ப்பிடாமல் கடவுளின் சித்தத்திற்கு இடங்கொடுப்போம். இவ்வுலக வாழ்வில் ஆண்டவர் காண்பித்த தயவும் இரக்கமும் வெளிப்படுத்தி வாழ்வோம்.

அன்பின் வடிவமான கடவுளே! நீர் எங்களுக்கு அளித்த கிருபையை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டுவிட உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

மனித கோபம்2026-02-23T06:22:16+00:00

புத்தியீனனின் கோபம்

யாத்திராகமம் 34 : 6-7                                      24 பிப்ரவரி 2026, செவ்வாய்

“புத்தியீனன் தன் கோபத்தையெல்லாம் வெளியிடுவான், ஞானி… அடக்கி வைப்பான்.” – நீதிமொழிகள் 29 : 11

ஒருவர் தன்னையே கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்று. குறிப்பாக, தன் மனதை கட்டுப்படுத்துவது இன்னும் கடினம் ‘ஒரு நகரத்தை பிடிப்பதைவிடவும் தன் மனதை அடக்குகிறவன் மேலானவன்’ என்கிறது நீதிமொழிகள் புத்தகம். புத்தியீனன் தன் கோபத்தை அடக்குவதில்லை. ஆனால் ஞானமுள்ளவர் பொறுமையுடன் இருப்பதால் அவரது சினம் ஆறும் என்கிறது திருமறை.

சுயக் கட்டுப்பாடு அனைவருக்கும் அவசியம். குறிப்பாக கோபம் என்னும் உணர்வை கட்டுப்படுத்துவதில் அது மிகவும் தேவை. இன்று குடும்பங்களிலும், சபைகளிலும் சமூகத்திலும் நடைபெறுகிற பல சண்டை, சச்சரவுகளுக்கு காரணம் கட்டுப்படுத்தாத கோபமே. அவசரப்பட்டு கோபத்தை வெளிப்படுத்துவதன் விளைவாக பல எதிர்மறை விளைவுகள் நடைபெறுகின்றன. பழிவாங்கும் எண்ணம் மேலோங்குகிறது. ஆகவே கோபம் அடக்கப்பட வேண்டும்.

இன்றைய வாசிப்புப் பகுதியில் கடவுளின் குணாதிசயங்களை காண்கிறோம். கடவுள் இரக்கமும் தயவும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ளவர். குற்றவாளியை நீதியாய் நியாயந்தீர்ப்பவர். நமது குற்றத்தைக்கண்டு கோபப்படுபவர். ஆனால் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குபவர். அதுபோலவே பாவங்களை மன்னிப்பவர். தம்மிடத்தில் நம்பிக்கையோடு வருகிற அனைவருக்கும் தயவோடு இரங்குகிறார்.

இறை மக்களாகிய நாம் கோபத்தை கட்டுப்படுத்தி இறை பண்புகளை தரித்துக்கொள்ள அழைக்கப்படுகிறோம். புத்தியீனர்களாக கோபத்தை வெளிப்படுத்தாமல் ஞானமுள்ளவர்களாக நாம் நடப்பதையே கடவுள் விரும்புகிறார். நாம் நமது சக மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ளுகிறோம் என சிந்திப்போம். யாக்கோபு அப்போஸ்தலன் தமது நிருபத்தில் குறிப்பிட்டபடி ‘கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு தாமதமாயும், கோபிக்கிறதற்கு தாமதமாயும்’ இருந்து சொல்லிலும் செயலிலும் கடவுளை மகிமைப்படுத்தி வாழ்வோம்.

பரிசுத்தமுள்ள கடவுளே! கோபத்தை அடக்கவும் நற்பண்புகளை வெளிப்படுத்தி வாழவும் எங்களுக்கு கிருபையருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

புத்தியீனனின் கோபம்2026-02-23T06:19:53+00:00

நியாயமற்ற கோபம்

சங்கீதம் 90 : 11-14                           23 பிப்ரவரி 2026, திங்கள்

“கர்த்தர் : நீ கோபம் கொள்வது நியாயமோ?” – யோனா 4 : 4

கோபத்தை நியாயமான கோபம் என்றும், நியாயமற்ற கோபம் என்றும் வகைப்படுத்தலாம். நம்மை சூழ்ந்திருக்கும் உலகில் நாம் காண்கிற அநீதிகள், அக்கிரமங்கள் நம்மை நியாயமாக கோபம் கொள்ள செய்கின்றன. அது தேவையான ஒன்று. ஆனால் நியாயமற்ற கோபம் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அது கடவுளோடுள்ள உறவையும் சக மனிதர்களோடுள்ள உறவையும் குலைக்கிறது.

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தில் நடந்த வியாபாரங்களையும், சீர்கேடுகளையும் கண்டு கோபம் கொண்டார். அங்கிருந்தவர்களை வெளியே துரத்தி விட்டார். யோனா ஊழியத்தின் போது கடவுள் தனது வார்த்தையின்படி நினிவேயை அழிக்கவில்லை என கண்டு கோபம் கொண்டார். அந்த கோபத்தை கடவுள் நியாயமற்றதெனக் குறிப்பிட்டார்.
கடவுள் நம்முடைய பாவங்களை கண்டு நியாயமாய் கோபங்கொள்கிறார். ஆனால் நாம் அவரை நாடிவந்து பாவங்களை அறிக்கையிடும்போது தமது மிகுந்த கிருபையினால் நமக்கு இரங்குகிறார். நமது பாவங்களை மன்னிக்கிறார். நினிவே மக்களின் பாவங்களைக் கண்டு கோபம் கொண்ட கடவுள் அவர்கள் மனந்திரும்பினபோது அவர்களை அழிக்காதபடிக்கு அவர்கள்மேல் இரக்கம் கொண்டார்.

அவ்வண்ணமாக நாமும் நியாயமற்ற முறையில் கோபங்கொள்வதை கடவுள் வெறுக்கிறார். எதற்கு கோபப்படுகிறோம் என்றே தெரியாமல் கோபம் கொள்ளுகிற அநேகரை காண்கிறோம். இதனால் அநேக உறவுகளை இழக்கிறோம். பலர் மனதை காயப்படுத்துகிறோம். நியாயமற்ற கோபத்தை தவிர்த்து மன்னிக்கும் பண்புடன் வாழ்வதேயே கடவுள் விரும்புகிறார்.

இரக்கமுள்ள கடவுளே! கோபத்தை களைந்து மன்னிக்கும் மனதுடன் வாழ எங்களுக்கு உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

நியாயமற்ற கோபம்2026-02-19T10:49:03+00:00

கட்டுப்படுத்தாத கோபம்

நீதிமொழிகள் 15 : 1-5                              22 பிப்ரவரி 2026, ஞாயிறு

“கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்குமுன் உங்கள் சினம் ஆறுவதாக.” – எபேசியர் 4 : 26

கோபம் மனிதனில் இருக்கிற உணர்வுகளில் ஒன்று. கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. கட்டுப்படுத்தப்படாத கோபம் உறவுகளை உடைத்து போடும். நமது கோபம் பாவம்செய்யும்படி நம்மை தூண்டிவிடுகிறது. ஆகவே கோபம் கொண்டாலும் நம் சினம் ஆற வேண்டும் என்று திருமறை போதிக்கிறது.

இன்று கோபத்தின் விளைவாக பல விவாகரத்துகள், நீதிமன்ற வழக்குகள், சண்டைகள், கொலைகள் நிகழ்வதைக் காண்கிறோம். கோபத்தின் விளைவாக காயின் ஆபேலை கொலை செய்தான். சவுல் அரசன் தாவீதின்மேல் கொண்ட கோபத்தினால் அவனை விரட்டிச் சென்று கொலை செய்ய முயன்றான். மோசேயின் கோபத்தின் விளைவாக பாறையின்மேல் அடித்தார். அதுவே வாக்களிக்கப்பட்ட கானானுக்கு செல்ல அவருக்கு தடையை உருவாக்கியது. இவை அனைத்தும் கட்டுப்படுத்தப்படாத கோபத்தின் தீய விளைவைக் காட்டுகிறது.

கோபம்கொள்வது உடல் நலனையும் கெடுக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்களுக்கும் இது காரணமாகின்றது. ஆகவே கோபம் கட்டுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

நம்முடைய கோபம் ஒருபோதும் பிறருடைய அழிவுக்காக இருக்கக் கூடாது. சக மனிதர்களை பாவத்திலிருந்து சீர்திருத்தவும் அவர்களை இரட்சிப்புக்கு கொண்டு வருவதுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். வாழ்வில் நம்மை பாவம் செய்ய தூண்டிவிடுகிற கோபத்தை கட்டுப்படுத்துவோம். கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதபடிக்கு சினம் ஆற செய்வோம். கடவுள் நமக்கு சகாயர். அவருடைய உதவியை பெற்று கோபத்தின் தீய விளைவுகளை மேற்கொள்வோம்.

இரக்கமுள்ள கடவுளே! கோபத்தைக் களைந்து உமது தயவை பெற்று வாழ எங்களுக்கு உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

கட்டுப்படுத்தாத கோபம்2026-02-19T10:47:10+00:00

அச்சத்தை போக்குபவர்

சங்கீதம் 56 : 1-3                                     21 பிப்ரவரி 2026, சனி

“நான் பயப்படுகிற நாளில் உம்மில் நம்பிக்கை வைப்பேன்.” – சங்கீதம் 56 : 3

அச்சம் எல்லா மனிதர்கள் வாழ்விலும் வருகிறது. ஆனால் அச்சத்தை எப்படி கையாளுகிறோம்… எப்படி மேற்கொள்கிறோம்… என்பது முக்கியமாகும். தாவீதின் வாழ்வில் அச்சத்தை கடவுள்மேல் உள்ள விசுவாசத்தின் வழியாக மேற்கொண்டார். தனக்கு எதிராக கோலியாத்து நின்றபோதும் அவர் கடவுளையே நம்பி வெற்றிபெற்றார். பெலிஸ்தர் தன்னை பிடித்தபோதும், நான் பயப்படும் நாளில் கர்த்தரில் நம்பிக்கை வைப்பேன் என்கிறார்.

பொதுவாக பயம் நம்மை ஆக்கிரமிக்கும்போது எல்லாவற்றையும் மறந்து விடுவோம். கடவுள் நம்மோடிருக்கிறார் என்பதையும் மறந்து விடுவோம். கடவுளில் முழுமையான நம்பிக்கை வைக்கும்போது நமது மனதில் குடிகொண்டிருக்கும் அச்சம் அகன்று போகிறது. கடவுள் நம்முடைய வாழ்வில் செயலாற்றி வெற்றியை தருகிறார்.

இயேசுவோடு அவருடைய சீடர்கள் படகில் பயணம் செய்தனர். திடீரென புயல் வீசியது. சீடர்கள் பயந்தனர். ‘நாங்கள் மடிந்து போகிறது உமக்கு கவலையில்லையா’ என்று கேட்டனர். சீடர்களின் இந்த கேள்வி அவர்களது பயத்தையும், கடவுள்மேல் அவர்களது விசுவாசக்குறைவையும் காட்டியது. காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தின இயேசு, ‘அற்பவிசுவாசிகளே ஏன் சந்தேகப்பட்டீர்கள்’ என்று கேட்டார்.

நம்மை பயப்படுத்துகிற காரியங்கள் நடைபெறும்போது கடவுளை பற்றிப் பிடித்துக் கொள்வோம். அவர் நமது பயத்தை போக்கி நம்மை விடுதலை செய்வார். கடவுள் நம்மோடிருக்கிறார் என்ற உண்மையை மறவாதிருப்போம். ஆபத்து நேரத்தில் முற்றிலும் அவரில் சார்ந்திருப்போம். கடவுளின் துணையை பெற்றுக்கொள்வோம்.

எங்கள் பயத்தை போக்குகிற கடவுளே! உம்மிலுள்ள விசுவாசத்தில் நிலைத்திருந்து பயமின்றி வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

அச்சத்தை போக்குபவர்2026-02-19T10:44:58+00:00
Go to Top