சங்கீதம் 90 : 4-8                                  26 பிப்ரவரி 2026, வியாழன்

“கோபத்தைக் கிண்டினால் சண்டை பிறக்கும்.” – நீதிமொழிகள் 30 : 33

ஒரு வாலிபன் தன் தந்தையை ஆத்திரத்தில் மரியாதை குறைவாக பேசி விட்டான். தந்தையோ கடுங்கோபங்கொண்டு தனது மகனை தனது ஆத்திரம் தீர அடித்து உதைத்தார். மகன் நேராக சென்று தற்கொலை செய்து விட்டான். இது ஒரு உண்மை நிகழ்வு. இந்நிகழ்வில் வருகிற தந்தை, மகன் இருவரின் கட்டுப்படுத்தப்படாத கோபம் மிகப் பெரிய ஆபத்தில் முடிந்ததை காண்கிறோம்.

பரபரப்பான உலகில் வாழ்கிறோம். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருகிற தந்தை, அலுவலகம் சென்று பணி முடித்து வரும் தாய், பள்ளிக்கூடம் சென்று வந்த பிள்ளைகள் என அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அன்றாட வாழ்வில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது மிகவும் அவசியம். ஒருவரையொருவர் குறை கூறும் வார்த்தைகளும், பரியாசங்களும் கோபத்தையே உருவாக்கும்.

கோபம் சண்டையை பிறப்பிக்கும். கீழ்படியாத மனிதர்கள்மேல், கடவுள் மேல் கொண்ட கோபத்தின் விளைவே மரணம் ஆகும். கடவுளின் கோபத்தினால் நாம் அனைவரும் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அடைந்திருக்கிறோம். ஆனால் கடவுள் தயவுள்ளவர். ‘அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய கருணையோ ஆயுள் காலம்’ என்று தாவீது சங்கீதத்தில் பாடுகிறார். கடவுள் தம்முடைய மைந்தனாகிய கிறிஸ்துவை நமக்காக தந்து நம்முடைய பாவங்களை மன்னித்தார். தம்முடைய இரட்சிப்புக்கு நம்மை தகுதிப்படுத்தினார்.

கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்ற நாமும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழவே அழைக்கப்படுகிறோம். குடும்ப உறவுகளுக்குள்ளாக ஏற்படுகிற கருத்து வேறுபாடுகளில் கோபத்தை தூண்டி விடாமல் சமாதானம் ஏற்படுத்துவது அவசியம். இது உறவுகள் மேம்பட உதவி செய்யும்.

அன்புள்ள கடவுளே! உம்முடைய மன்னிப்பைப் பெற்ற நாங்களும் ஒருவருக்கொருவர் மன்னிப்பளித்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.