நீதிமொழிகள் 15 : 1-5                              22 பிப்ரவரி 2026, ஞாயிறு

“கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்குமுன் உங்கள் சினம் ஆறுவதாக.” – எபேசியர் 4 : 26

கோபம் மனிதனில் இருக்கிற உணர்வுகளில் ஒன்று. கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. கட்டுப்படுத்தப்படாத கோபம் உறவுகளை உடைத்து போடும். நமது கோபம் பாவம்செய்யும்படி நம்மை தூண்டிவிடுகிறது. ஆகவே கோபம் கொண்டாலும் நம் சினம் ஆற வேண்டும் என்று திருமறை போதிக்கிறது.

இன்று கோபத்தின் விளைவாக பல விவாகரத்துகள், நீதிமன்ற வழக்குகள், சண்டைகள், கொலைகள் நிகழ்வதைக் காண்கிறோம். கோபத்தின் விளைவாக காயின் ஆபேலை கொலை செய்தான். சவுல் அரசன் தாவீதின்மேல் கொண்ட கோபத்தினால் அவனை விரட்டிச் சென்று கொலை செய்ய முயன்றான். மோசேயின் கோபத்தின் விளைவாக பாறையின்மேல் அடித்தார். அதுவே வாக்களிக்கப்பட்ட கானானுக்கு செல்ல அவருக்கு தடையை உருவாக்கியது. இவை அனைத்தும் கட்டுப்படுத்தப்படாத கோபத்தின் தீய விளைவைக் காட்டுகிறது.

கோபம்கொள்வது உடல் நலனையும் கெடுக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்களுக்கும் இது காரணமாகின்றது. ஆகவே கோபம் கட்டுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

நம்முடைய கோபம் ஒருபோதும் பிறருடைய அழிவுக்காக இருக்கக் கூடாது. சக மனிதர்களை பாவத்திலிருந்து சீர்திருத்தவும் அவர்களை இரட்சிப்புக்கு கொண்டு வருவதுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். வாழ்வில் நம்மை பாவம் செய்ய தூண்டிவிடுகிற கோபத்தை கட்டுப்படுத்துவோம். கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதபடிக்கு சினம் ஆற செய்வோம். கடவுள் நமக்கு சகாயர். அவருடைய உதவியை பெற்று கோபத்தின் தீய விளைவுகளை மேற்கொள்வோம்.

இரக்கமுள்ள கடவுளே! கோபத்தைக் களைந்து உமது தயவை பெற்று வாழ எங்களுக்கு உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.