சங்கீதம் 56 : 1-3                                     21 பிப்ரவரி 2026, சனி

“நான் பயப்படுகிற நாளில் உம்மில் நம்பிக்கை வைப்பேன்.” – சங்கீதம் 56 : 3

அச்சம் எல்லா மனிதர்கள் வாழ்விலும் வருகிறது. ஆனால் அச்சத்தை எப்படி கையாளுகிறோம்… எப்படி மேற்கொள்கிறோம்… என்பது முக்கியமாகும். தாவீதின் வாழ்வில் அச்சத்தை கடவுள்மேல் உள்ள விசுவாசத்தின் வழியாக மேற்கொண்டார். தனக்கு எதிராக கோலியாத்து நின்றபோதும் அவர் கடவுளையே நம்பி வெற்றிபெற்றார். பெலிஸ்தர் தன்னை பிடித்தபோதும், நான் பயப்படும் நாளில் கர்த்தரில் நம்பிக்கை வைப்பேன் என்கிறார்.

பொதுவாக பயம் நம்மை ஆக்கிரமிக்கும்போது எல்லாவற்றையும் மறந்து விடுவோம். கடவுள் நம்மோடிருக்கிறார் என்பதையும் மறந்து விடுவோம். கடவுளில் முழுமையான நம்பிக்கை வைக்கும்போது நமது மனதில் குடிகொண்டிருக்கும் அச்சம் அகன்று போகிறது. கடவுள் நம்முடைய வாழ்வில் செயலாற்றி வெற்றியை தருகிறார்.

இயேசுவோடு அவருடைய சீடர்கள் படகில் பயணம் செய்தனர். திடீரென புயல் வீசியது. சீடர்கள் பயந்தனர். ‘நாங்கள் மடிந்து போகிறது உமக்கு கவலையில்லையா’ என்று கேட்டனர். சீடர்களின் இந்த கேள்வி அவர்களது பயத்தையும், கடவுள்மேல் அவர்களது விசுவாசக்குறைவையும் காட்டியது. காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தின இயேசு, ‘அற்பவிசுவாசிகளே ஏன் சந்தேகப்பட்டீர்கள்’ என்று கேட்டார்.

நம்மை பயப்படுத்துகிற காரியங்கள் நடைபெறும்போது கடவுளை பற்றிப் பிடித்துக் கொள்வோம். அவர் நமது பயத்தை போக்கி நம்மை விடுதலை செய்வார். கடவுள் நம்மோடிருக்கிறார் என்ற உண்மையை மறவாதிருப்போம். ஆபத்து நேரத்தில் முற்றிலும் அவரில் சார்ந்திருப்போம். கடவுளின் துணையை பெற்றுக்கொள்வோம்.

எங்கள் பயத்தை போக்குகிற கடவுளே! உம்மிலுள்ள விசுவாசத்தில் நிலைத்திருந்து பயமின்றி வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.