vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

நிறைவான பாதுகாப்பு

நீதிமொழிகள் 3 : 21-26                            20 பிப்ரவரி 2026, வெள்ளி

“அவர்களுக்குப் பயப்படவேண்டாம், உன்னைக் காப்பதற்கு நானே உன்னோடிருக்கிறேன்.” – எரேமியா 1 : 8

இவ்வுலகில் மனிதர்கள் தங்கள் சுய பாதுகாப்புகளுக்காக பல முயற்சிகள் செய்கிறார்கள். தற்காப்பு கலைகள் கற்கிறார்கள், மெய்காப்பாளர்களை நியமிக்கிறார்கள். ஆனால், இவை எதுவும் நமக்கு முழுமையான பாதுகாப்பை தருவதில்லை. நமக்கு முழு பாதுகாப்பை அருளுபவர் கடவுளே.

எரேமியா தீர்க்கனை இறைப் பணிக்கு கடவுள் அழைத்தார். ஆனால் அவரோ அப்பணியை ஏற்றுக்கொள்ள தயங்கினார். ‘நான் பேச அறியேன், நான் இளைஞன்’ என்றார். கடவுள் எரேமியாவிடம், ‘நீ அவர்களுக்கு பயப்பட வேண்டாம், உன்னை காப்பதற்கு நானே உன்னோடிருக்கிறேன்’ என்றார்.

இவ்வுலக வாழ்வில் நாம் நமது கடமைகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறோம். அவற்றை நிறைவேற்ற நம்மால் இயலுமா என சந்தேகம் கொள்ளுகிறோம். கடவுள் நமக்கு தருகிற ஞானமும், அவருடைய திருவார்த்தைகளும், நல் ஆலோசனைகளும் அச்சமின்றி வாழ்வதற்கு உதவி செய்யும். நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும். கடவுள் நமக்கு பக்க துணையாக இருப்பார். நம்முடைய முயற்சிகள் வெற்றிபெற உதவிசெய்வார். நமது கால் கண்ணியில் சிக்காதபடி பாதுகாப்பார்.

நமதாண்டவர் இயேசுகிறிஸ்து பரத்துக்கேறுவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதி: ‘இதோ, யுக முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்பதாகும். கடவுள் நம்மோடு தங்குபவர். அவர் நம்மை பாதுகாப்பார். ஆகவே நாம் அச்சமடையாமல் கடவுளிடம் நம்பிக்கை கொள்வோம். அவர் அளிக்கும் ஆற்றலை பெற்று விசுவாச வாழ்வில் முன்னேறிச் செல்ல கடவுள் நமக்கு துணைபுரியட்டும்.

நிறைவான பாதுகாப்பு அருளுகிற எங்கள் கடவுளே! நீர் எங்களுக்கு தருகின்ற நிறைவான பாதுகாப்பை பெற்று வாழ அருள் புரிந்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

நிறைவான பாதுகாப்பு2026-02-19T10:38:26+00:00

சிறப்பு வாய்ந்தவர்கள்

ஏசாயா 10 : 22-25                                    19 பிப்ரவரி 2026, வியாழன்

“அஞ்ச வேண்டாம்….. குருவிகளிலும் நீங்கள் விசேஷமானவர்கள்.” – மத்தேயு 10 : 31

சிட்டுக்குருவிகள் உருவத்தில் சிறியவை, பலவீனமானவை. ஆனால் அந்த சிட்டுக்குருவிகளையும் கடவுள் சிறப்பாக பராமரித்து உணவளிக்கிறார்.

மனிதர்கள், காணப்படுகிற அனைத்து படைப்புகளிலும் சிறப்பு வாய்ந்தவர்கள். ஏனெனில் நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவரே நம்மை அனுதினமும் நிறைவாக பராமரித்து வருகிறார். ஆனால் பலநேரங்களில் அச்சம் நம் உள்ளங்களில் குடி கொள்ளுகிறது. நாம் பல்வேறு அச்சத்தின் பிடியில் வாழ்கிறோம். நம்மை விசேஷித்தவர்களாக படைத்த கடவுள் நம்மை பராமரிப்பது நிச்சயம். ஆகவே அஞ்ச வேண்டாம் என நமது ஆண்டவர் கூறினார்.

இஸ்ரவேல் மக்கள் அவர்கள் பாவங்களால் தண்டனைக்குரியவர்களாக இருந்தார்கள். எதிரிகளான அசீரியர்களால் அழிக்கப்படும் சூழ்நிலையில் இருந்தார்கள். ஆனால் கடவுள் நிச்சயம் அவர்களது கையில் இருந்தும் விடுதலை அளிப்பேன் என வாக்குறுதி அளித்தார். கடவுள் இரக்கம் உள்ளவர். நாம் நமது பாவத்தால் மடிந்துபோகும் நிலையிலும் அவர் நம் பாவங்களை மன்னித்து சத்துருவின் கையிலிருந்தும் நமக்கு விடுதலை அளிப்பார்.

ஏனெனில், கிறிஸ்து தமது சிலுவைப் பாடுகளினாலும், குற்றமில்லாமல் சிந்தின இரத்தத்தினாலும் நம்மை மீட்டுக்கொண்டார். பாவம், மரணம், பிசாசு இவற்றின் ஆற்றலிலிருந்து நம்மை விடுதலையாக்கினார். ஆகவே தம்மையே நமக்காக பலியாக்கின கிறிஸ்து நம்மை பாதுகாப்பது உறுதி.

வானத்துப் பறவைகளையும் பராமரிக்கிற கடவுளுக்கு முன் நாம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை உணர்ந்துகொள்வோம். தமது சொந்த மகனையே நமக்காக ஈந்தளித்த கடவுளில் நன்னம்பிக்கையுடன் வாழ்வோம்.அவரது பராமரிப்பையும், பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வோம்.

அன்பின் கடவுளே! நாங்கள் உமக்கு சிறப்புமிக்கவர்கள் என்று உணர்ந்து உம்முடைய பராமரிப்புக்கு எங்களை அற்பணித்து வாழ உதவிசெய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

சிறப்பு வாய்ந்தவர்கள்2026-02-16T04:54:06+00:00

சிலுவையின் நிழலில்

லூக்கா 9 : 29-34                                18 பிப்ரவரி 2026, புதன்

“ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது,… பயந்தார்கள்.” – லூக்கா 9 : 34

மறுரூப மலையில் இயேசுவோடு இருந்த சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் இயேசு மறுரூபமானதைக் கண்டார்கள். இயேசுவின் முகத்தோற்றம் மாறியது. அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மாட்சியுடன் இருந்த இயேசுவை தரிசித்த பேதுரு, “ஆண்டவரே நாம் இங்கே இருப்பது நல்லது” என்று கூறினார். இதை கூறிய உடனே ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகம் அவர்களை சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

இன்று முதல் ஆரம்பிக்கிற தவக்காலத்தில் சிலுவை குறித்து தியானிக்கிறோம். சிலுவையில் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிமையை தரிசிக்கிறோம். சிலுவையைக் குறித்த உபதேசங்கள் கிறிஸ்துவின் பாடுகளையும் நமது பாவ நிலைமைகளையும் பாவத்தின் கொடூரத்தையும் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றின் வழியாக கிறிஸ்து நமக்காக சம்பாதித்த இரட்சிப்பைக் காண்கிறோம். சிலுவையின் நிழலில் நாம் இருக்கும்போது கிறிஸ்துவின் மகத்துவங்களை நாம் அறிந்து கொள்கிறோம்.

இன்று மனிதர்கள் தங்கள் பாவ நிலைமைகளை உணராதவர்களாக மேட்டிமையான எண்ணத்துடன் வாழுகிறார்கள். இதனால் தங்கள் நடக்கைகள் அனைத்தும் பிழையற்றது என்று எண்ணுகிறார்கள். தங்கள் பாவ நிலைமையையும் மனந்திரும்புதலின் அவசியத்தையும் உணருவதில்லை. தவக்காலம் நமது பாவங்களை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறு நம்மை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்துகிறது. இவ்வாண்டின் தவக்காலம் நமது பாவங்களை உணர்த்தட்டும். இறை உறவில் நிலைத்திருந்து சிலுவையை தியானித்து பாவத்தை குறித்த எச்சரிப்பு பெறுவோம். இறை சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.

மீட்பராகிய கடவுளே! இந்த தவக்காலத்தில் சிலுவையின் தியானத்தின் வழியாக நீர் எங்களுக்காக வைத்திருக்கிற இரட்சிப்புக்கு எங்களை ஆயத்தப்படுத்தியருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

சிலுவையின் நிழலில்2026-02-16T04:47:54+00:00

மேட்டிமை கொள்ளாதே

சங்கீதம் 56 : 9-13                                        17 பிப்ரவரி 2026, செவ்வாய்

“நீ விசுவாசத்தினால் நிற்கிறாய், மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.” – ரோமர் 11 : 20

‘அழிவுக்கு முன்னானது அகந்தை’ என்பார்கள். அகந்தை சாத்தானின் சுபாவம். கடவுளால் படைக்கப்பட்ட தூதனாகிய சாத்தான் கடவுளுக்கு எதிராக கலகம் செய்து இறை சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டான். நம்மிடம் இருக்கிற நன்மைகளை குறித்து அகந்தையுடன் நடந்து கொள்வதை கடவுள் விரும்புவதில்லை. இறை மக்களாகிய இஸ்ரவேலர் இருதயம் கடினப்பட்டவர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் கடவுளுக்கு பிரியமற்றும் வாழ்ந்தார்கள். ஆகவே, கடவுள் அவர்களை தள்ளிவிட்டு புற இனத்தாராகிய மக்களை தெரிந்து கொண்டார். இதற்கு காரணமாக இருந்தது அவர்களின் அகந்தை.

கடவுளின் பிள்ளைகளாகிய நாமும் இஸ்ரவேலரைப் போன்று கடவுளுக்கு எதிராக பெருமை கொள்ளாமல், தெய்வ பயத்துடன் வாழ வேண்டும். ஏனெனில் கடவுளின் கிருபையை பெற்ற நாமும் மேட்டிமையான இருதயம் கொண்டால் இஸ்ரவேலரைப் போன்று தள்ளிவிடப்படுகிற நிலைமைக்கு ஆளாக நேரிடும். ஆகவே விசுவாசத்தில் நிலை நின்று கடவுளுக்கு பயந்து வாழ அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு முன்மாதிரி ஆவார். பவுலடிகளார் கூறும்போது, ‘அவர் கடவுளின் ரூபமாயிருந்தும் நமது மீட்புக்காக தம்மை மனித ரூபமாக சிலுவையின் மரணபரியந்தம் தாழ்த்தினார்’ என கூறினார். கிறிஸ்து தன்னைத்தான் வெறுமையாக்கினார். இறை மக்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்துவிலிந்த சிந்தையுடன் வாழ வேண்டும்.

மற்றவர்களைக் காட்டிலும் நம்மை உயர்ந்தவர்களாகக் கருதும் மனப்பான்மை நம்மில் இருக்கிறதா என சிந்திக்க வேண்டும். கடவுளுக்கு முன்பாக தாழ்மைப்படுவது அவசியம். சக மனிதர்களோடு அன்பாக வாழ்ந்து கடவுளுக்கு பயந்து வாழ கடவுள் விரும்புகிறார். கடவுள் எதிர்பார்க்கும் சாட்சியுள்ள வாழ்வு வாழ கடவுள் அருள் புரிவாராக.

இரக்கமுள்ள கடவுளே! தாழ்மை தரித்தவராகிய கிறிஸ்துவின் பண்பை நாங்களும் பெற்று வாழ எங்களுக்கு அருள்புரிந்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

மேட்டிமை கொள்ளாதே2026-02-16T04:45:24+00:00

கடவுளை மறவாதே

உபாகமம் 20 : 1-3                                         16 பிப்ரவரி 2026, திங்கள்

“கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்.” – எபிரேயர் 13 : 6

நினைவில் வைத்திருக்க வேண்டியதை மறந்து விடுவதும் மறக்க வேண்டியதை நினைவில் வைத்திருப்பதும் மனித பலவீனம். கடந்த கால அனுபவங்களை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். கடவுளின் வாக்குத்தத்தங்களையும் அவர் நம்மை வழிநடத்தின விதங்களையும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஏனெனில் அவை நம்மை எல்லா சூழல்களிலும் மன உறுதியுடன் வாழ உதவி செய்யும்.

குறிப்பாக வாழ்வில் துன்பங்கள் வரும்போது நாம் தடுமாறுகிறோம். கடவுள் இஸ்ரவேல் மக்களிடம் எதிரிகள் படையெடுத்து வந்தபோது அவர்களுக்கு பயப்படாதிருக்கும்படி கூறினார். மேலும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டுவந்த கடவுள் கூடவே இருக்கிறார் என்பதை மறவாதிருக்க அழைக்கிறார்.

இன்று நாம் வியாதி, கடன் பிரச்சினைகள், இயற்கை பேரிடர்கள் போன்றவை வரும்போது தடுமாறுகிறோம். கடவுள் நமக்கு துணையாக இருக்கும்போது எதிராக வரும் அனைத்து சத்துருக்களின் கைக்கும் அவர் நம்மை தப்புவிக்கிறார்.

பல வேளைகளில் நம்மோடு கூடவே இருக்கிற கடவுளின் பிரசன்னத்தை உணர மறந்து விடுகிறோம். இதனால் கடவுளை மறந்து மனிதர்களை நாடிச் செல்லுகிறோம். அச்சத்தினால் கடவுள் ‘அங்கே இருக்கிறார், இங்கே இருக்கிறார்’ எனக் கூறும் மக்களை நம்பி ஏமாந்து விடுகிறோம். அனைத்து வேளைகளிலும் நம்மோடிருக்கும் கடவுளை மறவாமல் அவரிடமே பற்றுதலாயிருப்போம். அவரே நமக்கு சகாயர் என்று உணர்வோம்.

சகாயராகிய கடவுளே! வாழ்வின் சூழ்நிலைகள் மாறினாலும் மாறாத உமது பிரசன்னத்தை உணர்ந்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுளை மறவாதே2026-02-16T04:41:41+00:00

பொறுப்புள்ள உக்கிராணக்காரர்

லேவியராகமம் 25 : 13-17                               13 பிப்ரவரி 2026, வெள்ளி

“பலனை அனுபவிக்கும் வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்க வேண்டும்.” – லேவியராகமம் 25 : 15

ஏழைகள் மீது இழைக்கப்படுகிற நியாயமற்ற, அநீதியான செயல்பாடுகளால் இன்றைய சமூகம் சீர்குலைந்து காணப்படுகிறது.

மோசேயின் வழியாக இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கட்டளைகளில் ஒன்று யூபிலி வருடம் ஆகும். யூபிலி வருடம் என்பது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். எல்லா இஸ்ரவேலர்களுக்கும் விடுதலை அளிக்கப்படுகிற வருடம். பிறருடைய அடிமைத்தனத்தில் இருப்பவர்களை விடுவித்து சுதந்திரம் அளிக்கும் வருடம். மிகப்பெரிய ஓய்வு வருடம். இந்த வருடத்தில் நிலத்திற்கான நியாயமான குத்தகை தொகையை உரிமையாளருக்கு கணக்கிட்டு கொடுக்க வேண்டும். குத்தகை பெறும் வருடத்திலிருந்து அடுத்த யூபிலி வரையிலான வருடத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.

நாம் இவ்வுலகில் பொறுப்புள்ள உக்கிராணக்காரர்களாக வாழ வேண்டியவர்கள். ஏனெனில் நமது வாழ்வில் நமக்கு கிடைத்துள்ள அனைத்து நன்மைகளும் கடவுளிடமிருந்து கிடைத்தவைகளே. அவற்றுக்குச் சொந்தக்காரர் கடவுள். அவை அனைவருக்கும் உரியவைகள். அவற்றை கையாளுவதில் பொறுப்புணர்வு மிகவும் அவசியம். நன்மைகள் ஏழைகள் மற்றும் அடிமைத்தனத்தில் இருப்போருக்கும் நியாயமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

கடவுள் உடன்படிக்கை செய்துகொண்ட தம் மக்கள் பொறுப்புடன் செயல்பட விரும்புகிறார். ஏழை பணக்காரர் என்னும் வேறுபாடுகளால் இன்றைய சமூகம் நிறைந்து காணப்படுகிறது. இறை மக்களாகிய நாம் அனைவரும் நமக்கு கடவுள் தந்திருக்கிற நன்மைகளை பிறர் நலனுக்காக பயன்படுத்த அழைக்கப்படுகிறோம். நல்ல உக்கிராணக்காரர்களாக வாழ்வோம். சுயநலம் களைந்து இரக்கமுடன் வாழ்வோம்.

நீதிபரராகிய கடவுளே! உம்முடைய நல் ஆலோசனைகளின்படி நடந்து எங்கள் வாழ்வில் நீதி நிறைவேற்றி வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

பொறுப்புள்ள உக்கிராணக்காரர்2026-02-11T10:59:06+00:00

பொறுப்புள்ள சகோதரன்

எசேக்கியேல் 18 : 27-29                                         12 பிப்ரவரி 2026, வியாழன்

“அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.” – எசேக்கியேல் 33 : 8

மனிதன் ஒரு ‘சமூக விலங்கு’ என்றார் கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில். மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழுபவர்கள். இந்தக் கூற்றின்படி மனிதர்களுக்கு சக மனிதர்கள் குறித்த பொறுப்புணர்வு உண்டு என்பதை நினைவுகூருகிறோம்.
கடவுள் தீமையில் வாழும் மனிதர்களின் மனந்திரும்புதலை விரும்புகிறார் என்பதை எசேக்கியேல் தீர்க்கன் வழியாக உரைத்தார். ஒரு தீர்க்கனாக துன்மார்க்கமாய் வாழ்வோருக்கு இறை எச்சரிப்பின் வார்த்தை அறிவிப்பது அவரது கடமை. அப்படி அறிவிக்காமல் இருக்கும்போது அவனது அழிவை குறித்த இரத்தப்பழி அதை அறிவியாதவர்மேல் வந்துவிடுகிறது.

நாம் அனைவரும் நம்முடைய சக மனிதர்கள் குறித்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். யார் எப்படி போனால் எனக்கு என்ன… என வாழும் அநேக மனிதர்களை இன்றைய சமுகத்தில் காண்கிறோம். தன் சகோதரனை கொன்ற காயீனிடம் கடவுள் உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என கேட்டார். அதற்கு காயீன் ‘நான் என் சகோதரனுக்கு காவலாளியோ’ எனக் கேட்டான். சகோதரன் குறித்த பொறுப்புணர்வு காயீனுக்கு உண்டு என்பதையே கடவுளின் கேள்வி நமக்கு உணர்த்துகிறது.

நம்மைச்சுற்றி வாழும் மனிதர்களை அழிவிலிருந்து காப்பாற்றும் பொறுப்புணர்வு நமக்கு வேண்டும். ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவதும் நமது கடமையே. ஆபத்தை உணராமல் போதைகளுக்கு அடிமைப்பட்டிருப்போருக்கு, போதையின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மேலும், நவீன மோசடிகள் குறித்து உணர்த்தப்பட வேண்டும்.

சக மனிதர்கள் குறித்த பொறுப்புணர்வு நமக்கு உண்டு என உணர்வோம். ஆபத்துகளிருந்து மக்களை தப்புவிக்க பிறருக்குமுன் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம்.

இரக்கமுள்ள கடவுளே! எங்கள் சக மனிதர்கள் குறித்த பொறுப்புடன் வாழ்ந்து அவர்கள் சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் நேரிடுகிற ஆபத்துகளிலிருந்து அவர்களை தப்புவிக்க பண்ண எங்களுக்கு உதவி செய்தருளும், ஆமேன்.

பொறுப்புள்ள சகோதரன்2026-02-10T05:36:23+00:00

பொறுப்புள்ள பணியாள்

தானியேல் 6 : 1-3                                          11 பிப்ரவரி 2026, புதன்

“நஷ்டம் வராதபடி அந்த தேசாதிபதிகள் இவர்களுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.” – தானியேல் 6 : 2

பொறுப்புள்ள பணியாட்கள் சிறந்த நிர்வாகத்திற்கு மிகவும் தேவை. பொறுப்பற்ற பணியாளர்களால் பேரிழப்பு ஏற்பட நேரிடும். பணியாட்களின் கவனக்குறைவுகளால் ஏற்படுகிற விபத்துகளும் உயிர்சேதங்களும் அநேகம்.

பாபிலோனின் அரசனாகிய தரியு தன் நாடு முழுவதும் வரி வசூலிக்க 120 தண்டல்காரர்களை நியமித்தார். இவர்களை கண்காணிக்க மூன்று மேற்பார்வையாளர்களை ஏற்படுத்தினார். இம்முவரில் தானியேலும் ஒருவர். அரசனுக்கு எவ்வித இழப்பும் நேரிடாவண்ணம் இம்மூவரிடமும் அந்த தண்டல்கார்கள் கணக்கு கொடுக்க வேண்டும். இப்பணியில் தானியேல் மிகவும் பொறுப்புடன் பணியாற்றினார்.

கடவுள் நம்மை பொறுப்புள்ளவர்களாக பணியாற்றவே அழைத்திருக்கிறார். தொடக்கத்தில் மனிதர்களை படைத்த கடவுள் ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும் அதை பாதுகாக்கவும் அவர்களை ஏற்படுத்தினார். ஆனால் கீழ்ப்படியாமையினால் மனிதர்கள் இறை உறவை இழந்தார்கள்.

நாம் வாழும் சமுகத்திலும் பணிபுரியும் இடங்களிலும் பொறுப்புள்ளவர்களாக வாழ்வது அவசியம். பொறுப்பற்ற பணியாட்களால் பணிபுரியும் நிறுவனங்கள் இழப்பை சந்திக்கின்றன. கடமை தவறுபவர்களால் பணியில் அமர்த்தியவர்கள் வேதனை அடைகிறார்கள்.

நாம் பொறுப்புடன் பயன்படுத்துவதற்காக கடவுள் நமக்கு திறமைகளையும் தாலந்துகளையும் அளிக்கிறார். நாம் அவற்றை பொறுப்போடு பயன்படுத்தும்போது நம்மை படைத்த கடவுளின் திருப்பெயருக்கு புகழ்ச்சி உண்டாகும். சக மனிதர்களுக்கு பயன் உண்டாகும். நமது வீடு, திருச்சபை, சமுதாயம், பணியிடங்கள் என கடவுள் நம்மை வைத்திருக்கிற இடங்களில் நமது வாழ்வு சாட்சியாக அமையும். நல்ல பொறுப்பாளர்களாக வாழ கடவுள் நமக்கு உதவி செய்யட்டும்.

அன்பின் கடவுளே! நீர் எங்களுக்கு அளித்திருக்கிற அனைத்து பணிகளையும் பொறுப்புடன் நிறைவேற்ற உதவி செய்தருளும், ஆமேன்.

பொறுப்புள்ள பணியாள்2026-02-10T05:34:28+00:00

பொறுப்புடன் பேசுவோம்

நீதிமொழிகள் 10 : 10-14                                         10 பிப்ரவரி 2026, செவ்வாய்

“பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்குக் கொடுக்க வேண்டும்.” – மத்தேயு 12 : 36

பேச்சு மனிதர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. சிந்தனைகளை வெளிப்படுத்தவும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் பேச்சு அவசியம்.

பொறுப்பற்ற பேச்சு பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். சமுக ஊடகங்களில் பரவுகின்ற பொறுப்பற்ற பேச்சுகள் பல கலவரங்களுக்கு வழிவகுக்கின்றன. நாம் பொறுப்போடு பேச வேண்டியதன் அவசியத்தை நமதாண்டவர் வலியுறுத்துகிறார். நாம் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைகளுக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை அவர் நினைவுபடுத்துகிறார்.

பொறுப்புள்ள பேச்சுக்கள் வாழ்வளிக்கும் ஊற்றாக விளங்குகின்றன. துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையற்று வாழுபவர்களுக்கு நம்பிக்கையும் அளிக்கின்றன. ஞானமுள்ள பேச்சு அனைவருக்கும் நல் வழியைக் காட்டுகிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் அவருடைய பேச்சைக் கேட்க திரளான மக்கள் கூடினார்கள். இயேசுவின் வார்த்தைகள் மக்களுக்கு வாழ்வளிக்கும் ஊற்றாக இருந்தன. அனேகரை இரட்சிப்புக்கு அழைத்து வந்தன.

இன்று நம்முடைய வார்த்தைகள் உறவுகளை மேம்படுத்த உதவுகின்றனவா என எண்ணிப் பார்ப்போம். கிறிஸ்தவ வாழ்வில் பேச்சுகளின் முக்கியத்துவத்தை பவுலடிகளார் எபேசு சபைக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வரலாகாது’ என்று குறிப்பிட்டார். பக்திவிருத்திக்கேதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே பேசும்படி வலியுறுத்தினார்.

நம்முடைய பேச்சு பொறுப்புள்ளதாக அமையட்டும். பிறருக்கு பயன் தருகிறதாக அமையட்டும். வீண் பேச்சுக்களையும் பிறர் மனதை காயப்படுத்தும் பேச்சுக்களையும் அகற்றுவோம். நாம் பேசும் வார்த்தைகள் கடவுளுக்கு மகிமையாகவும் சக மனிதர்களுக்கு நன்மையாகவும் அமையட்டும்.

வார்த்தையினால் உலகை படைத்த கடவுளே! எங்கள் வார்த்தைகள் பிறருக்கு நன்மை தருவதாக அமைய எங்களுக்கு உதவி செய்தருளும், ஆமேன்.

பொறுப்புடன் பேசுவோம்2026-02-10T05:48:09+00:00

விழிப்போடிருப்போம்

மத்தேயு 24 : 23-27                                   05 பிப்ரவரி 2026, வியாழன்

“ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.” – மத்தேயு 24 : 4

தொலைபேசிகளில் அழைத்து உங்களுக்கு வங்கி கடன் தேவையா? குறைந்தவட்டியில் உங்களுக்கு கடன் தருகிறோம் என்றும், தொழில் தொடங்க உதவி செய்கிறோம் என்றும் இந்நாட்களில் பல அழைப்புகள் வருகின்றன. விழிப்புணர்வுகள் பல இருந்தாலும் ஏமாற்றப்படும் மக்கள் அநேகர்.

நமதாண்டவர் இயேசுகிறிஸ்து இவ்வுலகின் கடைசி நாட்களைக் குறித்தும், கடைசி நாட்களில் ஏமாற்றப்படாமல் எச்சரிக்கையாக வாழ வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும் கூறினார். குறிப்பாக மனிதரில் சிறந்தவர்கள் கூட எப்படி ஏமாற்றப்படலாம் என்பதை ஆண்டவர் குறிப்பிட்டார். ஏமாற்றப்படும் நிலையிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

கிறிஸ்தவ வாழ்விலும் நாம் எளிதாக ஏமாற்றப்பட முடியும் என்பதை பவுலடிகளார் ‘தன்னை நிற்கிறதாக எண்ணுகிறவன் விழாதபடி ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்’ என கொரிந்து சபைக்கு எழுதின தமது நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இவ்வுலகில் நாம் அநேக சோதனைகளை நேரிடுகிறோம். அவற்றை வெற்றிகொள்ள கடவுளின் ஆற்றல் நமக்கு தேவை. நமது சுய புத்தியை சாராமல் கடவுளில் நம்பிக்கை வைத்து நிலைத்திருக்கும்போது கடவுள் நம்மை ஆற்றல்படுத்துகிறார்.
நாம் நம்முடைய கிரியைகளை வசனத்தின் வெளிச்சத்திலே சோதித்து, நம்முடைய குறைவுகளை உணர்ந்து அறிக்கை செய்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ளவும் கடவுளோடுள்ள உறவிலே எப்போதும் விழிப்போடு வாழவும் வேண்டியது அவசியம்.

இயேசு ஆண்டவர் கூறிய பத்து மணப்பெண் தோழிகள் உவமையில் மணவாளன் வரும்போது விழிப்போடு இருந்தவர்களே மணவாளனை வரவேற்க சென்றார்கள். நாம் விழிப்போடு வாழுகிறோமா? மனிதர்கள் கூறும் தவறான ஆலோசனைகளைக் கேட்டு ஏமாற்றப்படுகிறோமா என சிந்திப்போம்.

கிருபையுள்ள கடவுளே! உமது திருவசனங்களில் நிலைத்து உமது வருகைக்காக விழிப்போடிருக்க உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

விழிப்போடிருப்போம்2026-02-04T11:15:59+00:00
Go to Top