vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

எச்சரிக்கையாயிருப்போம்

லூக்கா 21 : 5-8                              03 பிப்ரவரி 2026, செவ்வாய்

“சர்ப்பமானது தன் தந்திரத்தினால் ஏவாளை வஞ்சித்தது போல ….. கிறிஸ்துவின் மேலுள்ள கபடற்ற பக்தியையும்… விட்டு விலகி …..” – 2 கொரிந்தியர் 11 : 3

இயேசு இந்த வருடம், இந்த நாளில், இந்த இடத்தில் வருவார் என கூறப்பட்ட வதந்திகளை நம்பி காத்திருந்து ஏமாந்த மக்கள் அனேகர். பல காலக்கட்டங்களில் இப்படிப்பட்ட ஏமாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 2000ஆம் வருடம் நெருங்கின நாட்களில் இயேசு கிறிஸ்து வரப்போகிறார் எனக் கூறி வந்தனர். அனேக மக்கள் ஏமாற்றப்பட்டனர். இன்றும் கிறிஸ்துவின் வல்லமை இங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது என்று கூறி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஏமாற்றுச் செயல்களால் மக்கள் கடவுள் மீதுள்ள விசுவாசத்தை இழந்து விடுகிறார்கள்.

ஏதேன் தோட்டத்தில் பிசாசு பாம்பின் வடிவில் வந்து தோட்டத்தின் நடுவில் நிற்கிற மரத்தின் கனியை புசித்தால் உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் கடவுளைப்போல நன்மை தீமையை அறிவீர்கள் எனக் கூறினான். இப்படி கூறி ஏவாளை ஏமாற்றினான். இதனால் அதாம், ஏவாள் கடவுளின் தண்டனையைப் பெற்றார்கள். இதுவே முழு மனுக்குலமும் பாவத்தில் விழவும், பாவத்திற்கான தண்டனை பெறவும் காரணமாயிற்று.

இன்று நம்மையும் வஞ்சிக்க பிசாசு முயற்சி செய்வான். வாழ்வில் எளிதில் ஆசிர்வாதங்கள் பெறுவீர்கள் என பொய் போதனைகள் கூறி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். குணமாக்கும் வல்லமைகள், தீர்க்கதரிசன வார்த்தைகள் என தந்திர வார்த்தைகளால் மக்கள் இழுத்து செல்லப்படுகின்றனர். முடிவில் கடவுள்மேல் நம்பிக்கையற்று நிற்கிறார்கள். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகின் கடைசி நாட்களை குறித்து கூறினபோது ‘அந்த நாட்களில் நீங்கள் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாக இருங்கள்’ என்று கூறினார். மேலும் நானே அவர் என்று என் நாமத்தைக் கொண்டு அநேகர் வருவார்கள், அவர்களுக்கு பின் செல்லாதீர்கள் என்று எச்சரித்தார்.

ஆகவே பிசாசு நம்மை ஏமாற்றிவிடாதபடி எச்சரிக்கையாக இருப்போம். இறைபக்தியை விட்டு நம்மை விலகச் செய்கிற பிசாசின் தந்திரங்களை வெற்றிகொள்ள நாம் ஆயத்தமாக இருப்போம். இறை உறவில் எப்போதும் நாம் நிலைத்திருப்போம்.

அன்பின் கடவுளே! பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கவும், அவற்றை வெற்றி கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

எச்சரிக்கையாயிருப்போம்2026-01-23T10:45:14+00:00

பாவத்தின் தொடக்கம்

தீத்து 3 : 3-5                                                   02 பிப்ரவரி 2026, திங்கள்

“ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயே மோசம்போனாள்.” – 1 தீமோத்தேயு 2 : 14

குற்றம் சாட்டுதல் மனிதர்களிடம் இருக்கும் தீய சுபாவங்களில் ஒன்று. சண்டைபோடும் சிறு பிள்ளைகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை பார்த்திருப்போம். ஆதாமும் ஏவாளும் கடவுளின் பேச்சுக்கு கீழ்படியாமல் பாவம் செய்தனர். ஆதாம் ஏவாளை குற்றஞ்சாட்டினார். ஏவாள் பாம்பை குற்றஞ்சாட்டினாள்.

குற்றம் சாட்டுவதனால் பிறருடைய தவறுகள் மட்டுமே நமது கண்களுக்கு தெரிகின்றன. நம்முடைய குற்றங்களை உணர வாய்ப்பு கிடைப்பதில்லை. பிறர் மீது பழி சுமத்தாமல் அவரவர் தவறுகளை உணர வேண்டும் என நமதாண்டவர் இயேசுகிறிஸ்து போதித்தார். அவர் தமது மலைப் பிரசங்கத்தில் ‘உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை கவனிக்காமல் உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன’ என்று கேட்டார்.

கடவுள் தமது அன்பினால் நம்மை ஏற்றுக்கொண்டார். நமது பாவங்கள் மன்னிக்கப்பட தம்மையே நமக்காக கொடுத்தார். நாம் நமது பாவங்களை உணர்ந்து அவற்றுக்காக மனந்திரும்பி அவற்றை கடவுளிடம் அறிக்கையிட வேண்டும். அதுவே நமக்கு பாவ மன்னிப்பாகிய மீட்பைக் கொண்டுவரும். இன்றைய வாசிப்புப் பகுதியில் முற்காலத்தில் மனிதர்கள் புத்தியீனராகவும், கீழ்ப்படியாதவர்களாகவும், வழி தப்பி நடந்தவர்களாகவும், பலவித இச்சைகளுக்கும், இன்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்த காலத்தை பவுலடிகளார் நினைவுபடுத்துகிறார். அப்படிப்பட்ட மனிதர்களாகிய நம்மை நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தயாளம், அன்பு இவற்றின் காரணமாக தம்முடைய மிகுந்த இரக்கத்தின்படியே இரட்சித்தார் என்று வாசிக்கிறோம்.

கடவுளின் அன்பை பெற்ற நாம் நமது பாவங்களை உணருகிறோமா? நமது குற்றங்களை உணராமல் பிறர் குற்றங்களை மாத்திரம் பார்க்கிறோமா? ஒருவரையொருவர் மன்னிக்கும் பண்பு நம்மிடம் இருக்கிறதா என சிந்திப்போம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒருவருக்கொருவர் மன்னிக்கிறவர்களாகவும் உதவி செய்கிறவர்களாகவும் வாழ்வோம்.

பாவங்களை மன்னிக்கிற எங்கள் கடவுளே! எங்கள் பாவங்களை நாங்கள் உணர்ந்து அறிக்கை செய்யவும், பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ளவும் அருள் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

பாவத்தின் தொடக்கம்2026-01-23T10:43:07+00:00

கடவுளின் விசுவாசத்தில் நிலைத்திருப்போம்

தரிசனம் 3 : 7-8                                30 ஜனவரி 2026, வெள்ளி

“இயேசுவானவர் கிறிஸ்து அல்லவென்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறு யார் பொய்யன்?” – 1 யோவான் 2 : 22

ஒரு குழந்தைக்கு அதன் தகப்பன் நாளைக்கு நான் உனக்கு சைக்கிள் வாங்கி தருகிறேன் என்று சொன்னார். மகனுக்கு தகப்பனின் மீது நம்பிக்கை வரவில்லை அம்மாவிடம் போய் நிஜமாகவே அப்பா சொன்னது உண்மைதானா… வாங்கித் தருவாரா… என்று கேட்டுக் கொண்டே இருந்தான். அண்ணனிடம் போய் அப்பா சும்மா சொல்லுவாரு… வாங்கி தர மாட்டாரு என்று சொன்னான். அப்பாவின் மீது மகனுக்கு இருந்த நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது.

இன்றைய தியான வசனத்தில் இயேசுவே கிறிஸ்து என்று ஏற்றுக் கொள்ளாதவர்கள் பொய்யர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசு கடவுளின் குமாரனாக இந்த உலகத்திற்கு வந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளாத பல வாதங்கள் துவக்க கால திருச்சபைகளில் நிலவி வந்தது. இவர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அக்கால திருச்சபைகளை காப்பாற்றவும் சபையாரின் விசுவாச வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் யோவான் இப்படி பேசினார். கிறிஸ்துவுக்கு எதிரான பொய் போதகங்கள் அக்காலத்தில் நிறைய இருந்தன.

இன்றைய திருச்சபையிலும் தவறான போதகங்கள் நிறைய உண்டு. வேத வசனங்களை அவர் அவர் வசதிக்கு ஏற்ப மாற்றி பொருள் கொள்வதும் பிரசங்கிப்பதும் இருக்கிறது, நடந்து வருகிறது இதில் திருச்சபையார் விழிப்புடன் இருக்க வேண்டும். இயேசுவில் விசுவாசம் வைக்க முடியாதவர்கள் இயேசுவை இரட்சகராக ஆண்டவராக விசுவாசிக்காதவர்கள் பிதாவிலும் நிலைத்து இருக்க முடியாது.

நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு தேவைப்படுகிற மிக மிக முக்கியமான கிறிஸ்து ஒருவரே நம்முடைய வாழ்வின் ஆதாரமாக இருக்க முடியும். அவரில் நாம் வைக்கிற விசுவாசம் மட்டுமே நம்முடைய வாழ்வை பிறருக்கு சாட்சி உள்ள வாழ்வாக மாற்றுகிறது. நாம் நமது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதை மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டுகிறது. நம்முடைய விசுவாசம் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க நம்முடைய மனங்களை பக்குவப்படுத்துவோம்.

அன்பின் கடவுளே! இன்றைய தியானத்தில் நாங்கள் கற்றுக் கொண்டபடி எங்கள் விசுவாசம் உம்மீது மட்டுமே நிலைத்திருக்க எங்களுக்கு பலம் தாரும். தவறான போதனைகளை நாங்கள் விலக்கி வைக்க ஞானத்தை கொடுத்தருளும். இயேசுவின் வழியே பிதாவே ஆமேன்

கடவுளின் விசுவாசத்தில் நிலைத்திருப்போம்2026-01-23T10:30:07+00:00

இயேசுவை பின்பற்று

1 தீமோத்தேயு 5 : 6-8                                    29 ஜனவரி 2026, வியாழன்

“தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக் கடவன்.” – மார்க்கு 8 : 34

வயதான பெண்மணி ஒருவர் தனது ஓய்வு காலத்தில் ஆண்டவரின் ஊழியத்தை செய்து கொண்டிருந்தார். அதிகம் வீட்டை விட்டு வெளியே போவதில்லை தள்ளாமை காரணமாக. தன்னைத் தேடி வருகிறவர்களிடம் மட்டும் நற்செய்தியை சொல்லுவார். அப்படி வந்த ஒருவர், ‘வசதியா வாழனும்னு நினைச்சு எக்கச்சக்கமா கடன் வாங்கிட்டேன். இப்ப என்னால அடைக்க முடியல. நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இந்த கடனை எல்லாம் கடவுள் அடைச்சிருவாரா’ என்று கேட்டார். அந்தப் பெண்மணி கடனை நீ வாங்கினாய்… நீதான் கட்ட வேண்டும். கடவுள் அதற்கு உனக்கு துணையாக இருப்பார் என்று சொன்னார். கிறிஸ்தவ வாழ்வு சிலுவைதான் என்பது அவருக்கு உணர்த்தப்பட்டது.

இன்றைய தியான வசனத்தின் சூழலைப் பாருங்கள். இயேசு கலிலேயா கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சீடர்களோடு பேசுகிறார். அருகே உள்ள பிலிப்பு சிரியா பட்டணத்து மக்கள் அங்கே கூடியிருந்திருக்க வாய்ப்பு உண்டு. இயேசுவை தங்கள் அரசராக எண்ணிய மக்களுக்கும் சீடர்களுக்கும் இயேசு சொன்ன வார்த்தைகளே இன்றைய தியானப் பகுதி. என்னை பின்பற்றுகிறவர்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இதன் பொருள். அக்காலத்தில் சிலுவை என்பது மரணம் என்பதன் அடையாளமாகவும் இருந்தது.

இன்றைக்கான தியான வசனம் இன்றைய சமூகத்திற்கு திரும்பத் திரும்ப அழுத்தமாக சொல்லப்பட வேண்டிய ஒரு வசனம் ஆகும். ஏனென்றால் இயேசு ஆண்டவரை விசுவாசித்தால் வாழ்க்கையில் கஷ்டங்கள் வராது, துன்பங்கள் வராது, சோதனைகள் வராது என்று நம்புகிறவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். கிறிஸ்தவ வாழ்வு என்பது சிலுவை சுமப்பதுதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய பாரங்களை சுமக்க ஆண்டவரின் கரம் நமக்குத் துணை இருக்கும். அது போலவே இயேசுவை விசுவாசிக்கிறோம் என்ற காரணத்தினாலேயே நமக்கு வந்து சேருகிற சிலுவைகளின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்தும்.

நம்முடைய பாவங்களுக்காக சிலுவை மரணத்தை ஏற்ற இயேசு ஆண்டவர் நமக்கு பாவத்திலிருந்து மீட்பை கொடுத்திருக்கிறார். மீட்கப்பட்ட நாம் கிறிஸ்தவ வாழ்வின் சவால்களை ஏற்றுக் கொள்வதற்கு தயங்கக் கூடாது. இந்த விசுவாச உறுதி நம் அனைவருக்குள்ளேயும் எப்போதும் இருக்க வேண்டும். சலனங்கள் வரலாம், சஞ்சலங்கள் வரலாம். ஆனால் அவற்றிலிருந்து நாம் மீண்டு திரும்பவும் இயேசுவிடம் வந்து சேர வேண்டும். அதுவே கிறிஸ்தவனின் விசுவாச அடையாளம். நம்முடைய வாழ்வு சிலுவைப் பயணமாகட்டும். இதில் வருத்தப்பட ஏதுமில்லை. ஏனென்றால் நம்மோடுகூட நம்முடைய சிலுவையை சுமக்கிறவர் இயேசு. இந்த நிச்சயத்தோடு வாழுவோம்.

என்றென்றும் எங்களோடு இருக்கிறவரே! உமது மகனால் நாங்கள் மீட்கப்பட்டு இருக்கிறோம். உமது பிள்ளைகளாக வாழ்ந்திருக்க நாங்கள் சிலுவையை சுமக்கவும் துன்பங்களை சகிக்கவும் எங்களை பலப்படுத்தும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

இயேசுவை பின்பற்று2026-01-23T10:28:12+00:00

அறியவில்லை

மத்தேயு 26 : 69-74                         28 ஜனவரி 2026, புதன்

“நீ என்னை அறியவில்லையென்று மூன்று தரம் மறுதலிப்பாய்.” – லூக்கா 22 : 34

ஒரு போதகரின் மகன், இளைஞன். பைக்கில் நீண்ட பயணங்கள் செல்லுவது அவனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஆயிரம் கிலோ மீட்டர் செல்லுகிற ஒரு பயணத்தை அவன் திட்டமிட்டான். அப்பா எச்சரித்தார். மிக நீண்ட பயணம், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தனியே செல்வதும் நல்லதல்ல என்று சொன்னார். அவன் கேட்கவில்லை. பைக் ஒட்டுவதில் நான் கில்லாடி. நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். பாதி வழியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் மாட்டி மருத்துவமனையில் யாரென்று அடையாளம் காணப்பட முடியாமல் கிடந்தான். மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அப்பாவுக்கு செய்தி தெரிந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து மகனை மீட்டெடுத்தார். மனிதர்கள் திறமைக்குறைவுள்ளவர்கள், பலவீனமானவர்கள். ஆனால் தன்னால் எல்லாம் முடியும் என்று அதீதமாக நம்புகிறவர்கள்.

இன்றைய தியான வசனத்தின் சூழலை பாருங்கள். எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர் அந்த விடுதலையை கொண்டாடுகிற பஸ்கா பண்டிகை. இயேசு இந்த பண்டிகையின் விருந்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறார். அங்கு பரிமாறப்பட்ட அப்பமும் திராட்சை ரசமும் இயேசுவின் புதிய உடன்படிக்கைக்கு அடையாளமானது. சீடர்களோடு பந்தியிருக்கும் இயேசு சீடர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்பதையும் அவர்களது பலவீனங்களையும் சுட்டிக்காட்டுகிறார். இவை இயேசுவின் சீடர்களின் விசுவாசத்தை சோதிக்கும் நிகழ்வுகள். வரும் சில நாட்களில் நடக்கப் போகிற ஆன்மீகப் போரின் துவக்கம் இது. இந்த வசனம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் நன்கு அறிந்த ஒன்றாகும்.

நமக்கு எப்போதுமே நம்முடைய திறமைகளின் மீது அசாத்திய நம்பிக்கை இருக்கும். மனிதர்கள் சாதாரணமானவர்கள். கடவுளின் கரம் கோர்த்தால் மட்டுமே வாழ்க்கையை வெற்றிகொள்ள முடியும் என்பது அடிக்கடி நமக்கு மறந்து போகும். என்னால் இது முடியும். நான் இதைச் செய்வேன். எனக்கு இது தெரியும். இப்படி எத்தனையோ விஷயங்களை நாம் பட்டியலிடுவோம்.

இதில் நான் என்கிற நீங்களும் நானும் கடவுளின் பிள்ளைகள். ஆனால் மனிதர்களின் திறமைகள் குறைவுள்ளவை. அவை கடவுளின் உறவில் நிலைத்திருக்கும் போதுதான் நிறைவடைகிறது அல்லது பூரணப்படுகிறது. நாம் சுயத்தை நம்பி வாழ்க்கையில் தோற்று இருக்கிறோமா? கடவுளை தேடுவோம். நமது திறமை தோற்றுவிட்டதற்காக வருந்துகிறோம். அப்படியானால் கடவுளை விட்டு விலகி இருக்கிறோம் என்று பொருள். ஏன் இந்த தோல்வி என்று கேள்விகளோடு இருக்கிறோமா? நாம் மட்டும் போராடி இருக்கிறோம் என்று அர்த்தம். நமக்காக காத்திருந்த கடவுளை ஏன் நாம் துணைக்கு அழைக்கவில்லை?

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு நமக்காகத்தான் வந்தார். நம்மை பாவங்களில் இருந்து மீட்டெடுத்து கடவுளின் பிள்ளைகளாக மாற்றுவதற்காகவே சிலுவை மரணத்தை மேற்கொண்டார். அவரது உயிர்ப்பில் நம்முடைய வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவரோடு இணைந்து இருப்போம். நம்முடைய பலவீனங்களை பலமாக மாற்றும் அவரில் நிலைத்திருப்போம்.

எல்லா காலங்களிலும் எங்களுக்கு அரணானவரே! இந்த உலகத்தின் வாழ்க்கையில் நாங்கள் தடுமாறி போகிறோம், உம்மை மறந்து போகிறோம், தோல்விகளை சந்திக்கிறோம். எங்களை மன்னியும். உமது கிருபையால் எங்களை பலப்படுத்தும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

அறியவில்லை2026-01-23T10:26:51+00:00

பேசுவது ஒன்று செய்வது ஒன்று

லூக்கா 9 : 23-26                              27 ஜனவரி 2026, செவ்வாய்

“அவர்கள் சொல்லுகிறார்கள்; செய்கைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.” – தீத்து 1 : 16

அது ஒரு அலுவலகம். உயர் அதிகாரியின் பி.ஏவாக செயல்படுபவர்.ஊழியர்களுக்கு பல வேலைகளை சொல்லிக் கொண்டிருப்பார். ஊழியர்கள் செய்ய மறுத்தால் ஐயா சொல்ல சொன்னாரு… நான் சொல்றேன். நானா எதுவும் சொல்லல என்று சொல்லுவார். இது அவரது நிரந்தர வாசகம். பல வேளைகளில் ஊழியர்களுக்கு பிஏ வின் பேச்சில் சந்தேகம் இருந்தாலும் பேசாமல் இருந்தார்கள். ஒரு முறை கருத்து கேட்பு கூட்டத்தில் பி.ஏ வின் குட்டு வெளிப்பட்டது. ஐயா சொல்லாத பலவற்றையும் பி.ஏ சுயநலமாக ஊழியர்களை செய்ய வைத்து இருக்கிறார். ஊழியர்களை ஏமாற்றி இருக்கிறார் என்ற உண்மை வெளிப்பட்டது

இன்றைய தியான வசனம் கிரேத்தா தீவில் உள்ள திருச்சபை மற்றும் சபையாருக்கு சொல்லப்பட்டது.

கிரேத்தா தீவில் உள்ள திருச்சபைகள் கிறிஸ்துவை அறிந்த விசுவாசிகள். ஆனால் அவர்களில் பலர் தங்கள் விசுவாசத்தில் இருந்து வழுவி கள்ள தீர்க்கதரிசனங்களை சொல்லுகிறவர்களாக மாறி இருந்தார்கள். இது அவர்களது சுயநல எண்ணங்களால் வந்தது. இந்த திருச்சபைகளை சீர்செய்ய பவுல் தீத்துவை நியமித்தார். அவருக்கு எழுதிய நிருபங்களிலே தன்னுடைய ஆலோசனைகளை கொடுக்கிறார். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு உள்ள சபையாரை, தீர்க்கதரிசிகளை கையாளும் விதத்தை விவரிக்கிறார்.

நமது சொல்லும் செயலும் ஒன்றிணைந்து செல்லும் போதுதான் நம் மீது எல்லாருக்கும் நம்பிக்கை வரும். ஆனால் இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் ஆன நாம் வாய் நிறைய வேத வசனங்களை வைத்துக்கொண்டு மனம் நிறைய துவேசத்தையும், சுயநலத்தையும், பொறாமையையும் மற்றும் எல்லா மோசமான குணங்களையும் வைத்திருக்கிறோம். அப்படியானால் நம்முடைய சொல்லும் செயலும் எப்படி ஒன்றிணையும்? உண்மையில் நாம் கடவுளை ஏமாற்றுகிறோம் என்பதுதானே பொருள். இன்றைய தியான வசனம் நம்மை ஆராய்ந்து பார்க்கத் தூண்டுகிறது. சீர்திருத்திக்கொள்ள அழைக்கிறது. ஆண்டவரின் வார்த்தைகளே நம்முடைய வார்த்தைகளாக இருக்க வேண்டும். ஆண்டவரின் வார்த்தைகளே நம்முடைய செயல்பாடுகளாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

அன்பு என்பது சுயநலமாக மொழிபெயர்க்கப்படக்கூடாது. கருணை என்பது பொறாமையாக மொழிபெயர்க்கப்படக்கூடாது. இதை ஆண்டவர் விரும்பவில்லை. நாம் கடவுளின் அன்பை அன்பாகவே ருசித்து இருக்கிறோம். கடவுளின் கிருபையை கிருபையாகவே ருசித்து இருக்கிறோம். மீட்பை மீட்பாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் நாம் பிறருக்கு பகிர்ந்து அளிக்கும்போது மட்டும் ஆவியின் கனிகள் நிறம் மாறி சுயநலத்தின் கனிகளாக போவது தவறு. இதை ஆண்டவர் வெறுக்கிறார். இயேசுவின் பிள்ளைகளாக அவருடைய வார்த்தைகளை பேசுகிறவர்களாக மட்டுமல்லாமல் செயலிலும் அதையே காட்டுகிறவர்களாக நாம் வாழ்வோம்.

அன்பின் கடவுளே! நீர் அன்பானவராகவே இருக்கிறீர். உமது மகனின் வழியே எங்களுக்கு வாழ்க்கையின் தேவையான அன்பையும் நம்பிக்கையும் கிருபையும் கொடுத்திருக்கிறீர். இதை அனுபவிக்கிற நாங்கள் இவற்றையே மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

பேசுவது ஒன்று செய்வது ஒன்று2026-01-23T10:23:45+00:00

கடவுளிடம் திரும்புவோம்

உபாகமம் 4 : 32-34                          23 ஜனவரி 2026, வெள்ளி

“இவைகள் எல்லாம் உனக்குச் சம்பவிப்பதால் நீ வியாகுலப்படுகையில்… கர்த்தரிடம் திரும்பி… செவிகொடுப்பாய்.”

– உபாகமம் 4 : 30

ஒரு ஆசிரியர் மிகவும் அன்பானவர். மாணவர்களை அடித்ததே கிடையாது. மாணவர்கள் லேட்டாக வந்தாலும் சரி, சண்டை போட்டுக் கொண்டாலும் சரி, வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்தாலும் சரி, பரிட்சையை ஒழுங்காக எழுதவில்லை என்றாலும் சரி யாரையும் எதற்கும் அடிக்க மாட்டார். சிரித்துக்கொண்டே திரும்பத் திரும்ப சொல்லுவார். சரி இந்த தடவை விட்டுவிடு. இனிமேல் ஒழுங்கா இரு என்று சொல்லுவார். மற்ற ஆசிரியர்கள் இதை பார்த்து கிண்டல் செய்வார்கள். அதற்கு அவர் பெரியவர்களான நாமே தப்பை உணர்வதில்லை, மனம் திருந்துவதும் இல்லை. சின்ன பிள்ளைகள்… அறியாத வயசு… அவர்களை எப்படி தண்டிப்பது என்று கேட்பார்.

உபாகமம் நூலின் ஒரு பகுதி முழுவதும் கடவுளுக்கும் கடவுளின் மக்களான இஸ்ரவேலருக்கும் இடையே உருவான உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறது. தமது மக்களான இஸ்ரவேலர் தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்த்தார். ஆனால் இஸ்ரவேலர் தொடர்ந்து கீழ்ப்படியாமையில் நிலைத்து இருந்தார்கள். இது கடவுளை கோபப்படுத்திற்று. தன் மக்களை மறுசீரமைக்க திரும்பி தன்னிடம் கொண்டு வர அவர் தண்டனையை பிரயோகிக்க தயங்கவில்லை. இங்கே தண்டனையும் அன்பின் ஒரு பகுதி ஆக்கப்பட்டிருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நம்முடைய வாழ்விலும் ஞானஸ்நானத்தின் வழியே கடவுளின் பிள்ளையாக உறுதி செய்யப்படுகிறோம். தொடர்ந்து திருவிருந்து நம்மை சுத்திகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அல்லது திருவிருந்து பெரும் போதெல்லாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக புதிய படைப்புகளாக நாம் வெளிவருகிறோம். ஆனாலும் சிலுவையில் இருந்து நமக்கு கிடைத்த மீட்பிற்கு நாம் தகுதியானவர்களாக வாழ்வதில்லை. கடவுளுக்கு எதிரான எல்லா பாவங்களையும் செய்கிறோம். அதன் வழியே கடவுளுக்கு கோபத்தை வருவிக்கிறோம். கடவுள் நம்மை மன்னிக்கிறவராக மட்டுமல்லாமல் சில சமயங்களில் கண்டிக்கிறவராகவும் தண்டிக்கிறவர் ஆகவும் இருக்கிறார். இந்த மூன்று செயல்பாட்டின் காரணமும் கடவுள் நம்மீது கொண்ட அன்பு மட்டுமே. நாம் மனம் திரும்பி மன்னிப்பை பெற்றவர்களாக கடவுளிடம் சேருவதற்கு திரும்பத் திரும்ப நமக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றன. நம்முடைய வாழ்க்கைச் சூழல் பாவம் செய்வதை ஊக்குவிப்பதாக இருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது நாம் கடவுளின் மக்கள். பாவ வாழ்வை அவர் வெறுக்கிறார். பாவத்திலிருந்து விலகி வாழ நம்மை அவர் அழைக்கிறார். பாவம் செய்ய சோதனை வரும்போதெல்லாம் கடவுளின் பாதங்களை பிடிப்போம். அவர் நம்மை காப்பார்.

அன்பின் கடவுளே! நாங்கள் பாவிகள். பாவத்தை விட்டு விலகி இருக்க எண்ணினாலும் அது எங்களால் முடியாமல் போகிறது. எங்களை இயேசுவில் மன்னியும். எங்களை புதிய படைப்பாக்கி உம்மிடம் சேர்த்துக் கொள்ளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

கடவுளிடம் திரும்புவோம்2026-01-23T08:01:20+00:00

கண்டிக்கும் கடவுள்

சங்கீதம் 38 : 18-22                          22 ஜனவரி 2026, வியாழன்

“அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கண்டித்து சிட்சிக்கையில்…. எந்த மனுஷனும் மாயையே.” – சங்கீதம் 39 : 11

அவர் ஒரு மூத்த போதகர். எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு நலம் பெற்று வீடு திரும்பினார். சொந்தங்கள் அவரிடம் நீங்கள் எவ்வளவு உண்மையான நேர்மையான மனிதர். கடவுள் ஏன் உங்களை இப்படி தண்டித்தார் என்று கேட்டார்கள். அதற்கு அந்த போதகர் எல்லா மனிதரைப் போலவும் நானும் பாவிதான். என்னை தண்டிக்கவும் திருத்தவும் என் தகப்பனாகிய கடவுளுக்கு முழு உரிமையும் உண்டு என்று சொன்னார்.

இன்றைய தியான வசனம் தாவீதால் சொல்லப்பட்டது. அவர் தனது பாவ நிலையை உணர்ந்து ஜெபத்தின் வழியே கடவுளிடம் புலம்புகிறார். இதில் கடவுளின் பரிசுத்தமான தன்மையும் அவரது பிள்ளைகளான மனிதரின் பாவ நிலையும் பேசப்படுகிறது. தாவீது தன் வார்த்தைகள் வழியே மனிதர்கள் நிலையற்றவர்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். கடவுளுக்கு எதிராக பாவம் செய்த தாவீது தன்னை கண்டிக்க கடவுளுக்கு உரிமை இருக்கிறது. இந்த கண்டிப்பு மற்றும் தண்டனை தான் மனம் திருந்துவதற்காக கடவுளால் நிகழ்த்தப்படுவது என்றும் அவர் விளக்குகிறார். அவர் தனது மரணத்திற்குகூட தயாராகி விட்டார் என்றும் சொல்லலாம்.
நமது வாழ்க்கையில் பல நேரங்களில் பாவம் செய்வதை தினசரி வேலையாக செய்து கொண்டிருக்கிறோம். நாம் கடவுளுக்கு எதிராக கடவுளின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுகிறோம் என்று மனம் உணர்த்தினாலும் நம் அறிவு நம்மை ஆட்கொள்ளுகிறது. கடவுளை விட்டு விலகி இருக்கச் செய்கிறது. பாவத்தினால் கிடைக்கும் செழிப்பான கவர்ச்சியான பலன்களிலே நாம் ஈர்க்கப்பட்டு விடுகிறோம். ஆனால் கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அன்பிற்கு பாத்திரரான பிள்ளைகளான நாம் வழி தவறிச் செல்லுவதை அவர் விரும்பவில்லை. எனவே சிறு தண்டனைகள், கண்டிப்புகள் வழியே அவர் நம்மை மனம் திரும்ப அழைக்கிறார். கண்டிப்பு சில நேரங்களில் நமக்கு பிரியமானவற்றை நம்மிடமிருந்து எடுத்து விடுவதாகவும் நடக்கிறது.

இந்த உலகத்தில் பிறந்த யாரும் மரணத்திற்குப் பிறகு எதையும் தன்னோடு கொண்டு போக முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ளுவது நல்லது. ஆண்டவரின் பிள்ளைகளாக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம், நாம் அவரால் தெரிவு செய்யப்பட்டு அவருடைய மீட்பை பெற்றுக் கொண்டிருக்கிறோம். அப்படியெனில் கடவுளின் பிள்ளையாகவே வாழ்ந்திருந்து திரும்பச் செல்வதுதானே சரியான பாதையாய் இருக்கும். பாவம் செய்ய சோதிக்கப்படும் போதெல்லாம் ஆண்டவரை பற்றிக் கொள்ளுவோம். ஒருவேளை மனித பலவீனத்தினால் பாவத்தை செய்து விட்டாலும் அவரிடம் மனம் வருந்தி மன்னிப்பை கேட்போம். மனம் திரும்புவோம். புது வாழ்வு வாழுவோம்.

கர்த்தாவே! எங்கள் வாழ்நாள் குறுகியது. அந்த நாட்களில் இயேசுவில் நாங்கள் உமது பிள்ளைகளாக வாழ்ந்து இருக்கவும் உமது தண்டனையை, கண்டிப்பை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளவும் எங்களுக்கு அறிவை தாரும். அதன் வழியே நாங்கள் மனம் திரும்ப ஆவியானவர் எங்களுக்கு உதவ கெஞ்சி மன்றாடுகிறோம். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

கண்டிக்கும் கடவுள்2026-01-21T11:01:48+00:00

மட்டாக தண்டிப்பேன்

சங்கீதம் 31 : 11-12                               20 ஜனவரி 2026, செவ்வாய்

“உன்னையோ சர்வ சங்காரஞ்செய்யேன், மட்டாய்த் தண்டிப்பேன் … தண்டியாமல் விடேன்.” – எரேமியா 46 : 28

அது ஒரு பெரிய அலுவலகம். அதில் நாலு பேர் சேர்ந்து ஒரு குற்றத்தை செய்து விட்டார்கள். அலுவலகம் விசாரணை நடத்தியது. குற்றம் பெரியது என்பதால் சஸ்பென்ஷன் அல்லது டிஸ்மிஸ் என்று தண்டனை உறுதியாயிற்று. நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் கவனத்திற்கு இது கொண்டு போகப்பட்டது. அவர் அந்த நான்கு பேரில் ஒருவருக்கு மட்டும் தண்டனையை குறைத்தார். ரொம்ப ஏழை, பிள்ளை குட்டிகளை வைத்திருக்கிறான் என்று காரணம் சொன்னார்.

இன்றைய தியான வசனத்தை பாருங்கள். இஸ்ரவேலர் கடவுளின் மக்கள். அவர்கள் திரும்பத் திரும்ப கடவுளுக்கு எதிரான பாவங்களை செய்து கொண்டு இருந்தாலும் கடவுள் அவர்களை முற்றிலுமாக கைவிடவில்லை. சின்ன சின்ன தண்டனைகள், எச்சரிப்புகள் வழியே அவர்களை திரும்ப தம்மிடம் சேர்த்துக் கொள்ளவே முயற்சி செய்தார். இஸ்ரவேலுக்கு சோதனைகளை கஷ்டங்களை கொண்டு வந்த தேசங்களை கடவுள் கண்டித்தார். இஸ்ரவேலரை அவர்களிடம் இருந்து விடுவித்தார்.

இந்த வாக்குறுதியே இந்த தியான வசனத்தில் தொனிக்கிறது. இஸ்ரவேலரை எதிர்த்தவர்களை தண்டிப்பேன் என்று மட்டும் சொல்லாமல் நீங்களும் தவறு செய்து இருக்கிறீர்கள் உங்களையும் தண்டிப்பேன் என்று கூறுகிறார். மட்டாக தண்டிப்பேன் என்று சொல்லுவதன் வழியே தண்டனையின் அளவு குறைகிறது என்பது நமக்குப் புரிகிறது. கடவுள் தம் மக்களை தண்டித்து தன்னுடைய வல்லமையை காட்ட முயலாமல் அன்பின் வழியே அவர்களது மனம் திரும்புதலையே, திரும்ப கட்டப்படுதலையே விரும்புகிறார் என்பதையே இந்த வசனம் நமக்கு உணர்த்துகிறது.

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பாவங்களை செய்கிறோம். பல நேரங்களில் நம்முடைய மனதிற்கு நாம் பாவம் செய்கிறோம் என்பது தெரிந்தே செய்கிறோம். அப்படி இருக்கும்போது நாம் குற்றமற்றவர்களாக கடவுளின்முன் நிற்க முடியாது. நம்முடைய பாவங்களுக்கு பதிலாளாகத்தான் இயேசு சிலுவையில் தொங்கினார். அவரது மரணத்தின் வழியாக நமக்கு நம்முடைய பாவங்களில் இருந்து விடுதலை கிடைத்தது. இதை இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் நன்றாக அறிவோம். ஆனாலும் நாம் தொடர்ந்து பாவத்தையே செய்து வருகிறோம்.

இன்றைய தியான வசனத்தின் எச்சரிப்பு நம் காதுகளில் எப்போதும் ஒலிக்கட்டும். நாம் கடவுளின் பிள்ளைகள்தான். ஆனாலும் நாம் தெரிந்தே செய்கிற பாவங்களுக்கு கடவுளின் தண்டனையும் நமக்கு வரத்தான் செய்யும். எச்சரிக்கையாய் இருப்போம். பாவத்திலிருந்து நாம் விலகி நடக்க நமக்குத் தேவையான மனத் துணிவை இறைவசனங்கள் வழியே தூய ஆவியானவர் நமக்குத் தந்தருள தொடர்ந்து வசனத்தில் நிலைத்திருப்போம்.

அன்பின் கடவுளே! நீர் எங்களை இயேசுவில் அன்பாய் இருக்கிறீர், நேசிக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம். அந்த அன்பிற்கு பாத்திரராக நாங்கள் பாவத்திலிருந்து விலகி வாழ எங்களுக்கு மனபலத்தை கொடுத்தருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

மட்டாக தண்டிப்பேன்2026-01-19T09:38:08+00:00

கடவுளின் கோபம்

சங்கீதம் 94 : 8-12                           19 ஜனவரி 2026, திங்கள்

“உமது உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்… என்னைக் கண்டியாதேயும்.” – சங்கீதம் 38 : 1

ஒரு போதகரின் மகன் வீட்டுக்கு அடங்காமல் திரிந்தார். பரம்பரை சொத்தை ஊதாரியாக செலவு செய்து நண்பர்களோடு வெட்டியாய் வாழ்ந்தார். கடைசியில் கொலை கேசில் அகப்பட்டார். பிறகு வந்து அப்பா அம்மா காலை பிடித்து தெரியாமல் செய்து விட்டேன் என்னை எப்படியாவது இதிலிருந்து மீட்டு விடுங்கள் என்று அழுதார்.

இன்றைய தியான வசனம் 38 ஆம் சங்கீதத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. தாவீதின் இந்த சங்கீதத்தின் பின்னணி அனேகமாக நமக்கு தெரிந்திருக்கலாம். தாவீது பத்சேபாள் மீது மோகம் கொண்டு தவறிழைக்கிறார். இதை தெரிந்துகொண்ட பத்சேபாளின் கணவர் உரியாவை, ஆள் வைத்து திட்டமிட்டு கொலை செய்கிறார் தாவீது. இந்தப் பாவங்கள் கடவுளை கோபப்படுத்தியது.

தாவீது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தன்னால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இத்தகைய பாவத்தை செய்தது கடவுளுக்கு வேதனையை அதிருப்தியை கொண்டு வந்தது. இதை நாத்தான் வேல் தீர்க்கர் வழியாக தாவீதுக்கு தெரியப்படுத்தினார் கடவுள். கலங்கிப் போனார் தாவீது. கடவுளை நேசித்த, கடவுளை முழுவதுமாக அறிந்த தாவீது கடவுளின் கோபத்தையும் அறிந்திருந்தார். தனது தவறை உணர்ந்து அவர் சன்னதியில் விழுந்து கெஞ்சினார், புலம்பினார்.

பல நேரங்களில் நாம் செய்கிற தவறுகள் பிறருக்கு தெரியாது என்று தைரியமாக இருக்கிறோம். அந்த தைரியம் நாம் தொடர்ந்து தவறிலேயே நிலைத்திருக்கவும் நம்மை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் எல்லாவற்றையும் அறிந்த கடவுளுக்கு நாம் எதையாவது மறைக்க முடியுமா? நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிற கடவுள் நம்மை எச்சரிக்கிறார். நீ தவறு செய்கிறாய்… உன் தவறுகளை நான் அறிவேன். இந்த தவறுகளை விட்டு நீ விலகு …என்று நம்மை அழைக்கிறார். ஒருவேளை நம்மால் நம் தவறுகளை பொதுவில் பேசவும், ஏற்றுக் கொள்ளவும், விவாதிக்க முடியாமல் போனாலும் சுயபரிசோதனை நம் அனைவருக்கும் அவசியம். சுயபரிசோதனை நம்மை மனம் திரும்புதலுக்கு வழி நடத்தும்.

ஆண்டவரின் குரலை காது கொடுத்து கேட்போம். நமது பாவ வழிகளை விட்டு விலக அவரது உதவியை நாடுவோம். எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நம்மை மன்னிக்கவும் மீட்டெடுக்கவும் கடவுள் காத்திருக்கிறார். இயேசு நம்முடைய கதறல்களை கெஞ்சல்களை காது கொடுத்து கேட்பார். எத்தகைய பாவம் செய்திருந்தாலும் நம்முடைய குரலுக்கு மனம் திரும்புதலுக்கு அவரிடம் மதிப்பு உண்டு. ஆண்டவரிடம் திரும்பி வருவோம். சமாதானமான வாழ்க்கைக்கு உரியவர் ஆவோம். கடவுள் இயேசுவில் நம் பாவங்களை மன்னிக்கிறார். இந்த நிச்சயத்தில் கடவுளிடம் வருவோம். அவர் பிள்ளைகளாக வாழுவோம்.

அநாதி கடவுளே! நீர் எங்கள் பாவங்களை மன்னிப்பதற்காக உமது மகனையே சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தீர். நாங்கள் எங்கள் உலக வாழ்க்கையில் எண்ணற்ற பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். உமது கோபத்தில் எங்களை தண்டியாதிரும். நாங்கள் மனம் திரும்பி இயேசுவில் புது வாழ்வு வாழ கிருபை செய்யும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

கடவுளின் கோபம்2026-01-19T09:35:40+00:00
Go to Top