vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

நாம் இயேசுவின் சீடர்கள்

யோவான் 4 : 1-3                              14 ஜனவரி 2026, புதன்

“சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் முதல் முதல் அந்தியோகியாவிலே வழங்கலாயிற்று.” – அப்போஸ்தலர் 11 : 26

ஒரு வெயில் கால மத்தியானம். வீட்டிற்கு மளிகைச் சாமான்கள் ஆர்டர் போட்டிருந்தேன். வேகாத வெயிலில் வேர்க்க விறுவிறுக்க ஒரு இளைஞன் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு குடிக்க ஒரு டம்ளர் மோர் கொடுத்தேன். அவன் முகம் மலர்ந்தது. வாங்கிக் கொண்டு நீங்கள் கிறிஸ்டியனா என்று கேட்டான்.

இயேசுவின் சீடர்கள்முதல் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் வரையில் அவர்களுக்கான அடையாளப் பெயர் கிறிஸ்தவர்கள் என்பதுதான். அந்தியோகியா என்பது அந்த காலத்தில் ஒரு பெரு நகரம். கலாச்சார வளம் கொண்டது. இங்குதான் பவுல் அடிகளார் தனது ஊழியத்தை துவங்கினார். பவுலும் பர்னபாவும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் இங்கே தங்கி தங்கள் ஊழியத்தை செய்தனர். இந்த ஊரில்தான் முதன்முதலாக கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்கத் துவங்கினர்.

நாம் வாழ்கிற சமூகம் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் இடையே வாழுகிற நமக்கு இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுதல் மிகவும் சவாலான விஷயமே. என்றாலும் கிறிஸ்தவ அன்பில் நாம் வளருவோமானால் இது சாத்தியம். அந்தியோகியாவில் கிடைத்த கிறிஸ்தவர்கள் என்ற பெயரை நாம் தக்க வைத்துக்கொள்ள ஆண்டவரின் அன்பை நாம் செயல்கள் வழியாக வெளிப்படுத்துவோம். வெறும் வார்த்தைகளில், ஆலயம் செல்லுதலில், வேதம் வாசிப்பதில் மட்டும் நாம் கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது. உலகில் நம்முடைய அன்பின் செயல்களே நம்மை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்தும்.

இயேசுவோடு நமக்குள்ள உறவு இன்னும் உறுதிப்பட தொடர்ந்து திருவசனங்களில் நிலைத்திருப்போம். வசனம் நம்மை இன்னும் மேம்பட்ட கிறிஸ்தவர்களாக வாழ வழி காட்டும். நம்முடைய கிறிஸ்தவ விசுவாசமும் கிறிஸ்தவ அடையாளமும் பிறருக்கு சாட்சியாக விளங்குவதற்கு ஆண்டவர் நம்மை அழைக்கிறார். உடன்படுவோம், செயல்படுவோம்.

கர்த்தாவே! நாங்கள் உமது பிள்ளைகள் என்பதை வாழ்வில், எங்கள் செயல்பாடுகளில் காண்பிப்பதற்கு தேவையான ஞானத்தை கொடுத்தருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

நாம் இயேசுவின் சீடர்கள்2026-01-12T11:15:41+00:00

வார்த்தையில் நிலைத்திரு

மத்தேயு 14 : 25-27                                 13 ஜனவரி 2026, செவ்வாய்

“என் வார்த்தையில் நிலைகொண்டிருந்தால்மெய்யாகவே நீங்கள் என் சீஷர்.” – யோவான் 8 : 31

திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்லும் மகளுக்கு தாய் சில புத்திமதிகளை கூறினார். ‘நான் சொன்னதை எல்லாம் மறக்காதே. பத்திரமா மனசுல வச்சுக்கோ… அதை நடைமுறைப்படுத்து. புகுந்த வீட்டில் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என்று சொல்லி அனுப்பினார். அது அனுபவத்தினால் வந்த அறிவுரை.

இன்றைய தியான வசனத்தைப் பாருங்கள். என் வார்த்தையில் நீங்கள் நிலைகொண்டிருந்தால்… என்று இயேசு கூறுகிறார். யூதர்கள் ஏற்கனவே மேசியா வருவதற்காக காத்திருக்கிறவர்கள். வேதாகமத்தை கரைத்துக் குடித்தவர்கள். மேசியாவை பற்றியும் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் பலருக்கு இயேசுதான் மேசியா என்று ஏற்றுக்கொள்ள மனமில்லை. அவரது வார்த்தைகளை கேட்கவும் கைகொள்ளவும் விரும்பவில்லை. இயேசு பல நேரங்களில் எருசலேம் மக்களோடு உரையாடினார். குறிப்பாக ஆச்சாரமான சடங்கு நம்பிக்கைகள் நிறைந்த யூதர்களோடும் விவாதித்தார். அதில் ஒரு நிகழ்வு தான் இன்றைய தியான வசனம். “நீங்கள் என்னுடைய வார்த்தைகளில் நிலைத்திருந்தால் எனது சீஷர்கள் என்று பொருள்” என்கிறார் இயேசு.

இந்த வசனத்தை நமக்கு பொருத்திப் பார்ப்போம். நாம் வேதாகமத்தை தினசரி வாசிக்கிறோம். ஒழுங்காக ஆலயம் செல்லுகிறோம். பல தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். கடவுளின் வார்த்தைகளில் நாம் நிலைத்திருக்கிறோமா?
ஜென்ம பாவத்தில் பிறந்து வாழ்க்கை முழுவதும் பாவங்களிலேயே வாழ்ந்து வருகிற நமக்கு இயேசு ஆண்டவரின் சிலுவை மரணத்தின் வழியாக மீட்பு இலவசமாக கிடைத்திருக்கிறது. நம்முடைய வாழ்க்கையின் ஒரே பொக்கிஷம் இதுதான். இது நம்மை இறை வீட்டில் ஆண்டவரோடு கொண்டு சேர்க்கும். இதைவிட வேறு என்ன பெரிய சிலாக்கியம் நமக்கு வாழ்க்கையில் வேண்டி இருக்கிறது? இப்படி இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுமைக்கும் தேவையான பாதுகாப்பை பெற்றுக் கொண்டிருக்கிற நாம் நம்பிக்கையோடு அவரது வார்த்தைகளில் நிலைத்திருப்போம்.

கடவுளின் வார்த்தைகளில் நிலைத்திருப்பது என்பது மிகப் பெரிய சவால்தான். ஆண்டவரின் மீது நாம் உறுதியான விசுவாசம் அன்பும் கொண்டிருக்கும் போது மட்டுமே இது நமக்கு எளிதாகக் கைகூடும். நாம் இயேசுவில் கடவுளின் பிள்ளைகள். அவரது வார்த்தைகளை வாசிப்போம். அவற்றை மனதில் நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சிப்போம். அதன் வழியாக நாம் அவருடைய பிள்ளைகளாக உலகில் வாழுவோம்.

கர்த்தாவே! நீர் எங்களுக்காக உமது மகனை இவ்வுலகத்திற்கு அனுப்பினீர் அவரில் நம்பிக்கை வைக்கவும் அவர் வார்த்தைகளில் நாங்கள் நிலைத்திருக்கவும் எங்களுக்கு உதவி அருளும் இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

வார்த்தையில் நிலைத்திரு2026-01-12T11:12:40+00:00

புரிந்து கொள்ளவில்லை

மாற்கு 4 : 31-35                                    12 ஜனவரி 2026, திங்கள்

“இது அவர்களுக்கு (சீடர்களுக்கு) மறை பொருளாக இருந்தது; … அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.” – லூக்கா 18 : 34

ஒரு குடும்பத்தில் தகப்பனார் மரண தருவாயில் இருந்தார். அவர் தன்னுடைய மூத்த மகனை அழைத்து நான் சீக்கிரம் ஆண்டவனிடம் போய்ச் சேர்ந்து விடுவேன். இனி குடும்பம் உன்னுடைய பொறுப்பு. இதுவரையில் நீ விளையாட்டுதனமாக இருந்தது போல இனியும் இருக்க கூடாது என்று கூறினார். பிறகு இறந்து போனார். முதலில் சாதாரணமாக தோன்றினாலும் அடுத்த சில மாதங்களில் மகன் குடும்பத்தை நிர்வாகம் பண்ண மிகவும் சிரமப்பட்டான். அப்பா சொன்ன வார்த்தைகளின் பொருள் அப்போதுதான் அவனுக்கு புரிந்தது.

இன்றைய தியான வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இயேசு தன்னுடைய சீடர்களிடம் தனக்கு என்னென்ன நடக்கப்போகிறது என்பதை கூறுகிறார். எருசலேம் போகப் போகிறோம். அங்கே தனக்கு கொடுமைகளும், அவமானங்களும், சிலுவை மரணமும் காத்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஆனால் இயேசுவின் சீடர்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் சீடர்களின் பார்வையில் இயேசு உலகின் அரசராக இருந்தார். இயேசுவை உலகத்தின் அரசராக அவர்கள் பார்த்தார்கள். எனவே இயேசுவின் அரசு விரைவில் உலகத்தில் நிறுவப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆகையினால் இயேசு சொன்ன வார்த்தைகளின் ஆழ்ந்த பொருளை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.

பல நேரங்களில் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் திருவசனத்தை, அதன் ஆழ்ந்த பொருளை நாம் விளங்கிக்கொள்ள தவறிப்போகிறோம். வசனம் நமக்கு சொல்லும் செய்திகளைவிட நாம் விரும்புகிற செய்திகளையே அர்த்தமாக புரிந்து கொள்கிறோம். பிறகு நாம் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்கிறோம். நம்முடைய விசுவாசம் ஆட்டம் காணுகிறது. இதன் இணை வசனத்தில் இயேசு மக்களுடன் பேசும்போது எல்லாவற்றையும் உவமைகள் வழியாக சொல்லுகிறார். சீடர்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னார் என்றும் பார்க்கிறோம்.

நமது வாழ்க்கையிலும் பலநேரங்களில் ஆண்டவர் நமக்கு என்ன சொல்லுகிறார் என்று தெரியாமல், விளங்காமல் திகைத்து நிற்கிற சூழல் வரும். ஜெபத்தில் ஆண்டவரோடு பேசுவோம். வேதவசனங்களை திரும்பத் திரும்ப வாசிப்போம். தேவையெனில் மற்றவரின் உதவியையும் நாடுவோம். ஆண்டவரின் வார்த்தைகள் ஆழமான பொருள் கொண்டவை. அது ஒருபோதும் நமக்கு தீமை செய்யாது. வேத வசனங்களை சரியாக புரிந்து கொள்ளவும் விசுவாசத்தில் வளரவும் ஆவியானவர் துணையை நாடுவோம். விசுவாசத்தில் வளர்வோம்.

அன்பின் கடவுளே! ஒவ்வொரு நாளும் நாங்கள் வாசிக்கிற, தியானிக்கிற திருவசனங்களுக்குரிய பொருளை நாங்கள் விளங்கிக் கொள்ள எங்களுக்கு தேவையான ஞானத்தையும் வழி காட்டுதலையும் தந்தருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

புரிந்து கொள்ளவில்லை2026-01-12T06:35:32+00:00

அனுப்புகிறவர் ஆண்டவர்

2 தீமோத்தேயு 4 : 14-18                         08 ஜனவரி 2026, வியாழன்

“ஆண்டவரோ எனக்குத் துணை நின்று… என்னைப் பலப்படுத்தினார்.” – 2 தீமோத்தேயு 4 : 17

என் அப்பா போதகராக இருந்த காலத்தில் ஒரு திருச்சபையில் ஒரு பிரச்சனையைப் பேசித் தீர்க்க அனுப்பப்பட்டார். அவர் போகும்போது, அந்தத் திருச்சபையார் ரொம்பவும் முரடர்கள். சட்டத்திற்கும் கடவுளுக்கும் பயப்படாதவர்கள். ஒருவேளை உங்களால் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை என்றால்கூட பிரவாயில்லை… பத்திரமாக திரும்பி வாருங்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டது.

அவர் போய் பிரச்சனையை சுமூகமாக முடித்துவிட்டு திரும்ப வந்தார். நான் அவரிடம் அங்கே போக உங்களுக்கு பயமாக இல்லையா? என்று கேட்டேன். இந்த வேலைக்காக என்னை அனுப்புகிறவர் ஆண்டவர். அவர் எனக்குத் துணையாக நின்று என்னை காப்பாற்றுவார் என்று நான் நம்பினேன் என்று கூறினார்.

இன்றைய தியான வசனம் பவுல் தீமோத்தேயுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் இருக்கிறது. தீமோத்தேயு பவுலுக்கு மிகப் பிரியமானவராக இருந்தார். நிருபத்தில் அடிக்கடி தீமோத்தேயுவை பிரியமான பிள்ளை என்று குறிப்பிடுவதை நாம் பார்க்க முடிகிறது. நமக்கு பிரியமான பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய எச்சரிப்பு தகவல்களை சொல்வது போலவே, பவுலும் இங்கே தீமோத்தேயுவுக்கு சொல்லுகிறார். ஆண்டவர் தனக்குக் கொடுத்திருக்கிற வேலைகளின் பொருட்டு அவர் எனக்கு துணை நின்று என்னை பலப்படுத்தினார் என்று பவுல் தெளிவாக குறிப்பிடுகிறார். வாசிப்புப் பகுதியை வாசித்துப் பார்த்தோமானால் பவுல் எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலை சந்தித்தார் என்பது புரியும்.

நம் எல்லோருடைய வாழ்விலும் நெருக்கடியான நேரங்கள் வருகின்றன. என்ன செய்வது என்று திகைக்கிற நேரங்கள் வருகிறது. எப்படி முன் செல்வது என்று குழம்புகிற நேரங்கள் வருகின்றன. ஒருவேளை இன்று நீங்கள்கூட இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று தவித்துக் கொண்டிருக்கலாம்.

இந்த வசனத்தை வாசித்துப் பாருங்கள். இது உங்களுக்காகவும், நமக்காகவும், சொல்லப்பட்டிருக்கிறது. ஆண்டவர் நமக்கு துணை நின்று நம்மை பலப்படுத்துவார் என்பதை விசுவாசிப்போம். நம்மை போன்ற சாமானிய மனிதர்களுக்காகத்தான் இயேசு ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்தார். இயேசுவின் அன்பினால் விளைந்த கிருபைதான் பாவிகளான நம்மை இன்றுவரை வாழச் செய்து கொண்டிருக்கிறது. நம் சிக்கலிலிருந்து நாம் வெளிவர ஆண்டவர் நம்மை பலப்படுத்துவார். அவரிடம் கேட்போம். ஆண்டவரால் பலப்படுவோம். வாழ்வை துணிவோடு எதிர் கொள்ளுவோம்.

அன்புள்ள கடவுளே! எங்களுக்கு நீர் திருவசனத்தின் வழியாக தந்திருக்கிற உறுதிமொழிகளுக்கு நன்றி செலுத்துகிறோம். எல்லா நேரத்திலும் நாங்கள் உமது வசனங்களிலிருந்து பலத்தை பெற்றுக்கொள்ள உதவி செய்யும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

அனுப்புகிறவர் ஆண்டவர்2026-01-06T11:09:56+00:00

துன்பங்களில் துணை இருப்பவர்

கலாத்தியர் 2 : 19-21                       07 ஜனவரி 2026, புதன்

“துன்புறுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை.” – 2 கொரிந்தியர் 4 : 9

ஒரு ஆசிரியர் புதிதாக பள்ளி ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். ஏற்கனவே சில பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணி செய்த அனுபவம் அவருக்கு இருந்தது. இந்தப் பள்ளியில் நிறைய பணித்தள அரசியல் இருந்தது. அமைதியான இந்த ஆசிரியர், அந்த அரசியலில் சிக்கிக்கொண்டு படாத பாடுபட்டார். ஒரு மூத்த ஆசிரியர் அவரை சந்தித்தபோது இதுபற்றி விசாரித்தார். அதற்கு புதிய ஆசிரியர், இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை. இயேசு ஆண்டவர் சந்திக்காத சவால்களையா நான் சந்தித்துவிட்டேன் என்று சாதாரணமாக சொல்லிவிட்டார்.

இன்றைய தியான வசனம் பவுல் அடிகளார் கொரிந்து சபையாருக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் இடம் பெற்றிருக்கிறது. இளமை காலத்தில் ஆண்டவர் இயேசுவை எதிர்த்து நின்றவர் பவுல் அடிகளார். பிறகு ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டு மனம்மாறி திருந்தி இயேசுவின் ஊழிய பணியை செய்யத் துவங்கினார் பவுல் அடிகளார். தனது ஊழியப் பயணத்தில் நிறைய சவால்களை சந்தித்தார். ஆரோக்கிய குறைவுகள் இருந்தது, என்றாலும் அவர் தமது ஊழியத்தில் எந்த குறையும் வைக்கவில்லை. தனக்கு நேர்ந்த எல்லா பிரச்சனைகளையும் துணிவோடு எதிர்கொண்டார். தான் விசுவாசிக்கிற – உபதேசிக்கிற நற்செய்தியின் நாயகர், இயேசு ஆண்டவர் தன்னை எப்போதும் காத்துக் கொள்வார் என்று உறுதியாக நம்பினார். அதைத்தான் அவர் தியான வசனத்திலும் நாங்கள் எவ்வளவோ துன்புறுத்தப்பட்டோம். ஆனாலும் ஆண்டவர் எங்களை கைவிடவில்லை என்று குறிப்பிட்டார்.
கைவிடப்பட்ட நிலை என்பது மனித வாழ்வில் சர்வ சாதாரணமாக வருவது. நாம் எதிர்பார்த்த உறவுகள், நம்மோடு இருக்கிற உறவுகள் யாருமே நம்முடைய துயரத்தில் கை கொடுக்கவில்லை என்பது நமக்குத் தெரிய வரும்போது வாழ்க்கையின் மீதான பிடிப்பு நமக்கு விட்டுப் போகும். இதுபோன்ற சூழல்களை நாம் அடிக்கடி சந்தித்து இருப்போம்.

இந்த நேரங்களிலெல்லாம் நமக்கு நினைவுக்கு வரவேண்டியது பவுல் அடிகளாரின் இந்த வார்த்தைகள்தான். துன்பங்கள் நமக்கு உண்டு, துயரங்கள் உண்டு, சோதனைகள் உண்டு. ஆனாலும் ஆண்டவர் நம்மை கைவிடமாட்டார். ஏனென்றால் இயேசு ஆண்டவர் நம்மை நேசிக்கிறார். நம்மை பாவங்களில் இருந்து விடுவிக்கவே இந்த உலகத்திற்கு கடவுளால் அனுப்பப்பட்டார். நம்முடைய பாவங்களுக்கு பதிலாளாக சிலுவை மரணத்தை ஏற்று நமக்கு மீட்பை இலவசமாக சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட உன்னதமான பரிசை கிருபையாக பெற்றுக்கொண்ட நாம் ஆண்டவரின் பிள்ளையாக வாழ்வதில் சந்திக்கிற சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லா காலத்திலும் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். நம்மை கைவிடமாட்டார். இந்த உறுதியோடு நம்முடைய வாழ்வின் சவால்களை நாம் எதிர்கொள்வோம். ஆண்டவரின் கிருபையின் கரம் நம்மோடு எப்போதும் இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழுவோம்.

அன்பின் கடவுளே! இந்த வாழ்க்கையில் எங்களுக்கு சோதனைகள், பிரச்சனைகள், துயரங்கள் உண்டு. ஆனாலும் நாங்களும் உமது பிள்ளைகளாக அவற்றை தாண்டி வர உம்முடைய கிருபை எங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்தி வாழ உதவியருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.

துன்பங்களில் துணை இருப்பவர்2026-01-06T11:05:54+00:00

நம்பிக்கையுடன் வாழுங்கள்

லூக்கா 21 : 20-28                                20 டிசம்பர் 2025, சனி

“இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபித்ததென்று நீங்கள் நிமிர்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.” – லூக்கா 21 : 28

பிதாவாகிய கடவுள் மனுகுலத்தை மீட்டு தம்மோடு வாழவைக்க மேசியாவான இயேசுவை அனுப்பினார். அவர் சிலுவை பாடுகள் வழியாக பரிசுத்த இரத்தத்தை சிந்தி மீட்பின் பணியை நிறைவு செய்தார். இயேசு விண்ணுலகம் சென்றார். தாம் சம்பாதித்த மீட்பின் செய்தி உலமமெங்கும் சென்றடையவேண்டும். அதன்பின்பு தாம் உலகை நியாயம் தீர்க்க மீண்டும் வருவேன் என்று வாக்களித்தார். இதைக்குறித்து பேசும்போது வருகைக்கு சில அடையாளங்களை அவர்களுக்குச் சொன்னார்.

நிச்சயமற்ற மற்றும் எழுச்சிக்கு மத்தியில் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்தியை வழங்குகிறது. உலகில் பெரும் துன்பம் மற்றும் எழுச்சி உட்பட, இறுதி காலத்திற்கு முந்திய அடையாளங்களை விவரிக்கும் போது இயேசு இந்த வார்த்தைகளை தம் சீடர்களிடம் கூறுகிறார். விவரிக்கப்பட்ட சவாலான நிலைமைகள் இருந்தபோதிலும், இந்த நிகழ்வுகள் பயம் அல்லது விரக்தியுடன் சந்திக்கப்பட வேண்டியவை அல்ல ஆனால் இவற்றை நம்பிக்கையுடனும் சந்திக்க வேண்டியவை என்கிறார். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு துணிவோடு வாழவேண்டும் என்று சொல்லுகிறார்.

“எழுந்து நில்லுங்கள் மற்றும் உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்ற அறிவுறுத்தல் நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியின் அணுகுமுறையைப் பேணுவதற்கான அழைப்பு. உலகில் சோதனைகளை எதிர்கொள்ளும் போது அல்லது தொந்தரவான அறிகுறிகளைக் காணும்போது, அதிகமாக அல்லது ஊக்கமளிப்பது எளிது. இருப்பினும், தோல்வியைக் கண்டு துவண்டுபோவதைக் காட்டிலும் எதிர்பார்ப்புடன் இருக்கும்படி இயேசு நம்மை ஊக்குவிக்கிறார்.

இந்த நம்பிக்கையான வாழ்வுக்கு காரணம், “உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது” என்ற வாக்குறுதியே. இது கிறிஸ்துவின் வருகையின் உறுதியையும், படைப்பை மீட்டெடுப்பதற்கான கடவுளின் வாக்குறுதியின் நிறைவேற்றத்தையும் உறுதி செய்கிறது. இங்கே மீட்பு என்பது இயேசு கொண்டுவரும் முழுமையான மற்றும் இறுதி விடுதலையைக் குறிக்கிறது, எல்லாவற்றையும் மீட்டெடுத்து அவருடைய அரசை இறுதியில் நிறுவுவார் என்று உறுதி செய்கிறார்.

உலகளாவிய மற்றும் தனிப்பட்ட நெருக்கடிகளை சந்திப்போம். கடவுளின் திட்டத்தின் இறுதி யதார்த்தத்தை நம்பி வாழ அழைக்கப்படுகிறோம். மீட்பின் வாக்குத்தத்தம் நமது போராட்டங்கள் தற்காலிகமானவை என்பதையும், கடவுளின் இறுதி வெற்றி நிச்சயம் என்பதையும் நினைவூட்டுகிறது. நமது மீட்பு நெருங்கிவிட்டது, கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதை அறிந்து, சமாதானத்தோடும், நிச்சயத்தோடும் உறுதி உணர்வுடன் சவால்களை வழியே நாம் வாழ கடவுள் அழைக்கிறார்.

கடவுளின் வாக்குறுதிகளையும் அவருடைய மீட்பு நிறைவேற போகிறது என்ற உறுதியுடன் வாழ்வோம். வருகிற நியாயதிபதி இயேசுவை துணிவோடு சந்திப்போம். அவரோடு வாழ்வோம்.

உலகை இயேசுவில் மீட்டுக்கொண்ட கடவுளே! நாங்கள் இயேசுவில் மீட்பைப் பெற்று உம்மில் நிலைத்து வாழ கிருபை செய்யும். வருகிற இயேசுவை துணிவோடும் மகிழ்ச்சியோடும் எதிர்நோக்கி வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நம்பிக்கையுடன் வாழுங்கள்2025-12-15T05:47:30+00:00

கர்த்தரின் ராஜ்யம்

மத்தேயு 6 : 5-13                          19 டிசம்பர் 2025, வெள்ளி

“உம்முடைய ராஜ்யம் வருவதாக.” – மத்தேயு 6 : 10

அறிவர் மார்டீன் லுத்தர் கத்தேகிஸ்மு புத்தகத்தில் உம்முடைய ராஜ்யம் (அரசு) வருவதாக என்ற இரண்டாம் மன்றாட்டுக்கு பொருள் சொல்லும்போது நமது மன்றாட்டு இல்லாமலேயே கடவுள் அரசு வரும், அது நம்மிடத்திலேயும் வரவேண்டும் என்று இதில் நாம் விண்ணப்பிக்கிறோம். நாம் அவருடைய கிருபையினாலே அவருடைய பரிசுத்த வசனத்தை விசுவாசித்து இம்மையிலும் மறுமையிலும் கடவுளின் சாயலாக பிழைத்து வாழ தந்தை தமது பரிசுத்த ஆவியை நமக்குக் கொடுத்தால் அவருடைய அரசு நம்மிடத்தில் வரும் என்கிறார்.

இந்த வசனம் கர்த்தருடைய ஜெபத்தின் ஒரு பகுதியாகும். இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்.

“உம்முடைய அரசு வருக” என்று நாம் ஜெபிக்கும்போது, கடவுளுடைய ஆட்சியும் அதிகாரமும் பூமியில் வெளிப்படும்படி நாம் கேட்கிறோம். கடவுளின் அரசு நீதி, அமைதி, அன்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது, மேலும் அதன் வருகைக்காக ஜெபிப்பது அந்த மதிப்புகளை நம் உலகத்தில் அமைவதற்கான ஒரு விண்ணப்பமாகும். கிறிஸ்து திரும்பி வந்து தனது ராஜ்யத்தை முழுமையாக நிறுவி, எல்லாவற்றையும் புதியதாக மாற்றும் நாளுக்கான எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும் இதில் அடங்கியிருக்கிறது.

நமது சொந்த விருப்பங்களையும் திட்டங்களையும் கடவுளின் மகத்தான நோக்கத்திற்காக ஒப்படைப்பதாகும். கடவுளின் வழிகள் நம்முடையதைவிட உயர்ந்தவை, அவருடைய திட்டங்கள் எப்பொழுதும் நல்லவை என்பதை ஒப்புக்கொள்வதாகும். கடவுளின் சித்தம் “பரலோகத்தில் உள்ளதுபோல் பூமியிலும்” செய்யப்பட வேண்டும் என்று ஜெபிப்பது என்பது அவருடைய பரிபூரண சித்தம் பரலோகத்தில் எவ்வாறு பிழையின்றி நிறைவேற்றப்படுகிறதோ, அதுபோல நம் வாழ்விலும், நமது சமூகங்களிலும், உலகம் முழுவதிலும் நிறைவேற்றப்படுவதைக் காண விரும்புகிறோம் என்பதை பறைசாற்றுகிறது.

இந்த ஜெபம் இங்கேயும் இப்போதும் கடவுளுடைய அரசை பிரதிபலிக்கும் வகையில் வாழ நம்மை ஏவுகிறது. நியாயமாக செயல்படவும், இரக்கத்தை நேசிக்கவும், கடவுளுடன் அவர் அரசில் வாழவும் நம்மை அழைக்கிறது. அவருடைய விருப்பத்தை நம் செயல்களிலும் அமைத்துக்கொள்ள அழைக்கிறது. இந்த வார்த்தைகளை நாம் ஜெபிக்கும்போது, கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது அவருடைய சித்தத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கையை சீரமைப்பதாகும். கடவுளுடைய அரசை பூமிக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக பங்கேற்பதைக் குறிக்கிறது.

“உம்முடைய ராஜ்யம் வரும், உமது சித்தம் நிறைவேறும்“ என்று நாம் ஜெபிக்கும்போது, கடவுள் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறிவிக்கிறது. அவருடைய ராஜ்யத்தை இப்போதும் எதிர்காலத்திலும் நிஜத்திற்குக் கொண்டுவரும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு நிறைந்த இதயத்துடன் அவ்வாறு செய்வோம்.

கடவுளே! உமது கிருபையின் அரசு வரவும், அது உலகமெங்கும் பரவவும் கிருபை செய்யும். உமது அன்பு மற்றும் நீதியைப் பிரதிபலிக்கும் வகையில் வாழவும் எனக்கு உதவும். ராஜ்யத்தின் பணிக்கான பாத்திரமாக நாங்கள் இருக்க எங்களை அர்பணிக்கின்றோம். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கர்த்தரின் ராஜ்யம்2025-12-15T05:45:21+00:00

நீரே என் செல்வம்

சங்கீதம் 16 : 1-9                                       18 டிசம்பர் 2025, வியாழன்

“தேவரீரே என் ஆண்டவர், உம்மையன்றி எனக்கு வேறே செல்வமில்லை.” – சங்கீதம் 16 : 2

நமது தியான வாக்கியப் பகுதியில் தாவீது கடவுளுடனான தனது உறவைப்பற்றிய ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறார். கடவுள், தான் வழிபடுகிறவர் மட்டுமல்ல, அவருடைய வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் அருளுகிறவர் என்பதை அறிக்கை செய்கிறார். இந்த வசனம் கடவுளுக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிக்க ஏவுகிறது. அவரைத் தவிர, உண்மையிலேயே நல்லதும் அல்லது நீடித்ததும் எதுவுமில்லை என்பதை அங்கீகரிக்கிறது.

தாவீது, “நீரே என் ஆண்டவர்” என்று கூறுவது அவருடைய முழுமையான சமர்ப்பணத்தையும் கடவுள் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. கடவுளை “இறைவன்” என்று அழைப்பது என்பது நம் வாழ்வின் மீது அவருடைய ஆளுகையையும், இறையாண்மையையும் அங்கீகரிப்பதாகும். கடவுள் நம்மை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதையும், வழிகாட்டி, பாதுகாத்து எல்லாம் செய்கிற அவரை நாம் சார்ந்து இருக்கிறோம் என்பதையும் இது தெரிவிக்கிறது.

கடவுளே, “உம்மைத் தவிர எனக்கு எந்த செல்வமும் இல்லை” என்பது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து நன்மைகளும் கடவுளின் கையிலிருந்து வருகின்றது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அது குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் அன்பாக இருந்தாலும், படைப்பின் அழகாக இருந்தாலும், அல்லது அவரை அறிந்து கொள்வதால் கிடைக்கும் சமாதானமாகவும் இருக்கலாம். ஒவ்வொரு ஆசீர்வாதமும் கடவுளிடம் இருந்துதான் வருகிறது. இந்த விழிப்புணர்வும், நன்றியுணர்வும் பணிவு வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. ஏனெனில், நாம் தன்னிறைவு பெற்றவர்கள் அல்ல என்பதை அறிவோம். நாம் கடவுளின் நற்குணத்தால் நிரப்பபட்டு அதில், அவர் நம்மை நிலைத்திருக்க செய்கிறார்.

வெற்றியாக இருந்தாலும் சரி, செல்வமாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் சரி, மற்ற விஷயங்களில் நிறைவைத் தேட நாம் தூண்டப்படுகிறோம். கடவுள் மட்டுமே உண்மையான நன்மையின் ஆதாரம் என்ற உண்மையை அறிந்துகொள்ள இந்த வசனம் நம்மை அழைக்கிறது. நாம் அவரை நம் வாழ்வின் மையமாக வைக்கும்போது, நம் தேவைகள் அனைத்தும் கடவுள் பூர்த்தி செய்கிறார் என்பதை கண்டுக்கொள்ள முடியும்.

நம் வாழ்க்கையில் உள்ள நல்ல காரியங்களை பற்றி சிந்தித்து, அவை கடவுளிடமிருந்து வந்தவை என்பதை அறிந்து கொள்ளுவோம். இந்த விழிப்புணர்வு நம் இதயம் நன்றியுடனும் கடவுளை புகழ்ந்து வாழ்வதிலும் நாம் வெளிப்படுத்துவோம்.

கடவுளே! உம்மைத் தவிர எங்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. எங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் உமது நற்குணத்தை கண்டுகொள்ளவும், நன்மையான அனைத்திற்கும் ஆதாரமாக உம்மை நம்பவும், உம்மில் மட்டுமே நிறைவைத் தேடவும், எங்களுக்குக் கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நீரே என் செல்வம்2025-12-15T05:43:08+00:00

கடவுள் நீதி

ஏசாயா 56 : 1-5                             17 டிசம்பர் 2025, புதன்

“நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு நீதியை அனுசரியுங்கள்; சீக்கிரத்தில் என் இரட்சிப்பு வரும், என் நீதி வெளிப்படும்.”
– ஏசாயா 56 : 1

ஏசாயா தீர்க்கன் பழைய ஏற்பாட்டின் நற்செய்தியாளர் என்று அழைக்கப்படுகிறார். இன்றைய வாசிப்புப் பகுதியின் முந்தைய அதிகாரத்தை வாசிக்கும்போது, பாபிலோன் அடிமைத்தனத்தில் வாழ்கிற இஸ்ரவேலரை வாருங்கள் உணவு ஆயத்தமாயிருக்கிறது என்கிறார். அத்துடன் வந்து உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள அழைக்கிறார். தாவீதுக்கு அருளிய கிருபை வரங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று கடவுள் சொல்லுவதைப் பார்க்கிறோம். இதன் வழியாக மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள அழைக்கிறார்.

இதைத் தொடர்ந்து அனைத்துலக ஜெபவீட்டில் தூய கடவுள் வழிபாட்டிற்கு நான்கு கருத்துக்களை முன்வைக்கிறார். 1. நியாயத்தைக் கைக்கொள்ள வேண்டும்; 2. இதற்கு அடிப்படை இரட்சிப்பு; 3. இதனால் கிடைக்கும் பலன் பாக்கியவான்கள் ஆக்கப்படுவீர்கள் என்றும்; 4. இவற்றின் பலன் ஓய்வுநாள் ஆசரிப்பு என்றும் சொல்லுகிறார்.

தீமையை விட்டுவிடுவதற்கு மீட்பின் அனுபவமே அடிப்படை. நீதி நியாயம், நல்லொழுக்கம் கடவுள் வழிபாடு சார்ந்த கட்டளைகளை குறிக்கும். இந்தப் பகுதியில் ஓய்வு நாள் ஆசரிப்பு மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

படைப்பின் வரலாற்றை நாம் வாசிக்கும்போது, ஆற்றல் மிகுந்த கடவுள் ஆற்றல் மிகுந்த வார்த்தையால் ஒன்றும் இல்லாமையிலிருந்து அழகிய மண்ணுலகைப் படைத்தார். ஆறு நாட்களில் படைப்பின் பணியை முடித்தப் பின்பு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஓய்ந்திருந்தபடியினால் கடவுள் அந்த நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தப்படுத்தினார் (ஆதி.2:2-3) என்று வாசிக்கிறோம்.

ஓய்வுநாள் உலகைப் படைத்த கடவுளால் ஏற்படுத்தப்பட்டது. எனவே அனைத்துலகத்துக்கும் உரிய ஓர் ஒழுங்கு மோசே காலம் முதல் அனுசரிக்கப்பட்டது. கடவுள் சீனாய் மலையில் மோசேயை இணைப்பாளராகக் கொண்டு இஸ்ரவேலரோடு உடன்படிக்கை செய்தார். (யாத்.34:27-28) நான் உங்கள் கடவுள், நீங்கள் என் மக்கள் என்பதே உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையின் உறவில் வாழ பத்து கற்பனைகளை கொடுத்தார். அதில் ஒரு கற்பனை ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிப்பதாகும்.

நியாயம், நீதி ஆகிய சொற்கள் நல்லொழுக்கமும், கடவுள் வழிபாடு சார்ந்த கட்டளைகளையே குறிக்கிறது. அத்துடன் கீழ்படிதலையும் வலியுறுத்துகிறது. பாக்கியவான்கள் என்னும் சொல் மகிழ்ச்சியுடையோரை குறிப்பாய் கீழ்படிவோரின் மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் விளக்குகிறது.

கடவுள் இயேசுவில் நம்மோடு கல்வாரி மலையில் புது உடன்படிக்கை பண்ணியிருக்கிறார். பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திருக்கிறார். மீட்பின் அனுபவத்தை ருசித்த நாம் தீமையை விட்டு விலகி வாழ கடமைப்பட்டுள்ளோம். நாம் இறைவார்த்தையில் வாழும்படி பாவமன்னிப்பை உறுதிசெய்ய கிருபையின் எத்தனங்களான திருமுழுக்கு, திருவிருந்து ஆகியவற்றை பெற்றுக்கொள்ள திருச்சபைகளை கடவுள் நிறுவியிருக்கிறார்.

ஆலய வழிபாட்டில் கருத்துடன் ஒழுங்காக பங்கடைவோம். ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவோம்.

மனுக்குலம் வாழ்வு பெற திருச்சபைகளை நிறுவியிருக்கும் கடவுளே! இதில் ஒழுங்காக பங்குபெற்று உம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுள் நீதி2025-12-15T05:40:29+00:00

கடவுளின் சமாதானம்

ஏசாயா 26 : 1-4                                         16 டிசம்பர் 2025, செவ்வாய்

“உறுதிகொண்ட மனதுள்ளவன் உம்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறதால் அவனுக்கு மாறாத சமாதானமருளிக் காக்கிறீர்.”

– ஏசாயா 26 : 3

கடவுள் நல்ல, நிறைவான, குறையில்லா உலகைப் படைத்தார். அதில் தம் சாயலாக மனிதனையும் படைத்து எல்லாவற்றையும் ஆளும்படி கட்டளையிட்டார். அவன் வாழும் விதிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார். இந்த உலகில் கடவுளுக்கும் மனிதனுக்கும் சமாதானமும், ஒப்புரவும் இருந்தது. மனிதன் கடவுள் கட்டளையை மீறினான் இதனால் பாவம் வந்தது. மனிதன் கடவுளோடுள்ள சமாதானத்தையும் ஒப்புரவையும் இழந்தான்.

மனுக்குலத்தை மீட்கவும், இதன் வழியாக இருதரத்தாரும் நல்லுறவையும், ஒப்புரவையும் மேம்படுத்தி, மீட்பரை பிறக்கச்செய்ய இஸ்ரவேலர் என்ற சமூகத்தை கடவுள் தெரிந்தெடுத்தார். அவர்கள் வாழ கானான் என்ற நாட்டையும் கொடுத்தார். சுற்றியிருந்த பல மக்கள் இவர்களுக்கு தொல்லைகொடுத்தனர். குறிப்பாக மோவாபிய மக்களிடமிருந்து இவர்களை கடவுள் விடுதலை செய்தார். இதை கொண்டாடும் வெற்றிப்பாடலே நாம் வாசிக்கும் திருமறைப்பகுதி.

கடவுள் மரணம், நிந்தை ஆகியவைகளிலிருந்து இஸ்ரவேலரைக் காத்தார் என்பதை ருசித்த, அனுபவித்த மக்கள் வெற்றி பவனியாக உள்ளே வர வாசல்களைத் திறக்க கர்த்தர் அழைப்பு விடுக்கிறார். கடவுள் உறுதிக்கும், பாதுகாவலுக்கும், உயரத்திற்கும் காரணமான நித்திய கன்மலை என்பது தீர்க்கர் வர்ணிக்கிறார். அவரில் மட்டுமே நம்பிக்கை வையுங்கள் என்றும் அழைக்கிறார்.
இன்றைய தியானப்பகுதி கடவுளின் செயல்பாடுகளை வாழ்வில் கண்டு அதன் வழியாக உறுதியான நம்பிக்கை வைப்பவர்களுக்கு மாறாத சமாதானம் இருக்கும் என்கிறது.

கடவுள் எங்கோ இருந்துகொண்டு மக்களை இயக்குபவர் அல்ல. அவர் இயேசுவில் மனுக்குலத்தோடு சமாதானத்தில் வாழ்ந்தவர். மனுகுலம் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்தவர். பாவத்தால் எல்லா நிலையிலும் சமாதானத்தை இழந்த மக்களுக்கு சமாதான பிரபுவாக வந்தவர்.

சமாதானமின்மைக்கு அடிதளம் பாவம். மனுகுலம் சமாதானத்தை பெறவேண்டுமெனில் பாவத்திற்கு முடிவு கட்ட வேண்டும். கடவுள் இயேசுவை பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியாக அனுப்பினார். நமது பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களுக்கும் கிருபாதாரபலி அவரே என்று யோவான் தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார்.

இயேசு என் பாவங்களை சுமந்து மரித்தார் என்று விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் அவர் பாவமன்னிப்பருளுகிறார். பாவ மன்னிப்பின் நிச்சயம் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ அங்கே சமாதானம் இருக்கும். எந்த உள்ளத்தில் சமாதானம் இருக்கிறதோ அந்த முகத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

இயேசு அருளும் பாவமன்னிப்பைப் பெறுவோம். மகிழ்ச்சியோடு வாழுவோம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! உமது நேசகுமாரனில் பாவமன்னிப்பை அருளியதற்காக நன்றி. இந்த நிச்சயத்தில் மகிழ்ச்சியோடு வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுளின் சமாதானம்2025-12-15T05:37:12+00:00
Go to Top