மத்தேயு 14 : 25-27                                 13 ஜனவரி 2026, செவ்வாய்

“என் வார்த்தையில் நிலைகொண்டிருந்தால்மெய்யாகவே நீங்கள் என் சீஷர்.” – யோவான் 8 : 31

திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்லும் மகளுக்கு தாய் சில புத்திமதிகளை கூறினார். ‘நான் சொன்னதை எல்லாம் மறக்காதே. பத்திரமா மனசுல வச்சுக்கோ… அதை நடைமுறைப்படுத்து. புகுந்த வீட்டில் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என்று சொல்லி அனுப்பினார். அது அனுபவத்தினால் வந்த அறிவுரை.

இன்றைய தியான வசனத்தைப் பாருங்கள். என் வார்த்தையில் நீங்கள் நிலைகொண்டிருந்தால்… என்று இயேசு கூறுகிறார். யூதர்கள் ஏற்கனவே மேசியா வருவதற்காக காத்திருக்கிறவர்கள். வேதாகமத்தை கரைத்துக் குடித்தவர்கள். மேசியாவை பற்றியும் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் பலருக்கு இயேசுதான் மேசியா என்று ஏற்றுக்கொள்ள மனமில்லை. அவரது வார்த்தைகளை கேட்கவும் கைகொள்ளவும் விரும்பவில்லை. இயேசு பல நேரங்களில் எருசலேம் மக்களோடு உரையாடினார். குறிப்பாக ஆச்சாரமான சடங்கு நம்பிக்கைகள் நிறைந்த யூதர்களோடும் விவாதித்தார். அதில் ஒரு நிகழ்வு தான் இன்றைய தியான வசனம். “நீங்கள் என்னுடைய வார்த்தைகளில் நிலைத்திருந்தால் எனது சீஷர்கள் என்று பொருள்” என்கிறார் இயேசு.

இந்த வசனத்தை நமக்கு பொருத்திப் பார்ப்போம். நாம் வேதாகமத்தை தினசரி வாசிக்கிறோம். ஒழுங்காக ஆலயம் செல்லுகிறோம். பல தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். கடவுளின் வார்த்தைகளில் நாம் நிலைத்திருக்கிறோமா?
ஜென்ம பாவத்தில் பிறந்து வாழ்க்கை முழுவதும் பாவங்களிலேயே வாழ்ந்து வருகிற நமக்கு இயேசு ஆண்டவரின் சிலுவை மரணத்தின் வழியாக மீட்பு இலவசமாக கிடைத்திருக்கிறது. நம்முடைய வாழ்க்கையின் ஒரே பொக்கிஷம் இதுதான். இது நம்மை இறை வீட்டில் ஆண்டவரோடு கொண்டு சேர்க்கும். இதைவிட வேறு என்ன பெரிய சிலாக்கியம் நமக்கு வாழ்க்கையில் வேண்டி இருக்கிறது? இப்படி இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுமைக்கும் தேவையான பாதுகாப்பை பெற்றுக் கொண்டிருக்கிற நாம் நம்பிக்கையோடு அவரது வார்த்தைகளில் நிலைத்திருப்போம்.

கடவுளின் வார்த்தைகளில் நிலைத்திருப்பது என்பது மிகப் பெரிய சவால்தான். ஆண்டவரின் மீது நாம் உறுதியான விசுவாசம் அன்பும் கொண்டிருக்கும் போது மட்டுமே இது நமக்கு எளிதாகக் கைகூடும். நாம் இயேசுவில் கடவுளின் பிள்ளைகள். அவரது வார்த்தைகளை வாசிப்போம். அவற்றை மனதில் நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சிப்போம். அதன் வழியாக நாம் அவருடைய பிள்ளைகளாக உலகில் வாழுவோம்.

கர்த்தாவே! நீர் எங்களுக்காக உமது மகனை இவ்வுலகத்திற்கு அனுப்பினீர் அவரில் நம்பிக்கை வைக்கவும் அவர் வார்த்தைகளில் நாங்கள் நிலைத்திருக்கவும் எங்களுக்கு உதவி அருளும் இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.