கலாத்தியர் 2 : 19-21 07 ஜனவரி 2026, புதன்
“துன்புறுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை.” – 2 கொரிந்தியர் 4 : 9
ஒரு ஆசிரியர் புதிதாக பள்ளி ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். ஏற்கனவே சில பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணி செய்த அனுபவம் அவருக்கு இருந்தது. இந்தப் பள்ளியில் நிறைய பணித்தள அரசியல் இருந்தது. அமைதியான இந்த ஆசிரியர், அந்த அரசியலில் சிக்கிக்கொண்டு படாத பாடுபட்டார். ஒரு மூத்த ஆசிரியர் அவரை சந்தித்தபோது இதுபற்றி விசாரித்தார். அதற்கு புதிய ஆசிரியர், இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை. இயேசு ஆண்டவர் சந்திக்காத சவால்களையா நான் சந்தித்துவிட்டேன் என்று சாதாரணமாக சொல்லிவிட்டார்.
இன்றைய தியான வசனம் பவுல் அடிகளார் கொரிந்து சபையாருக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் இடம் பெற்றிருக்கிறது. இளமை காலத்தில் ஆண்டவர் இயேசுவை எதிர்த்து நின்றவர் பவுல் அடிகளார். பிறகு ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டு மனம்மாறி திருந்தி இயேசுவின் ஊழிய பணியை செய்யத் துவங்கினார் பவுல் அடிகளார். தனது ஊழியப் பயணத்தில் நிறைய சவால்களை சந்தித்தார். ஆரோக்கிய குறைவுகள் இருந்தது, என்றாலும் அவர் தமது ஊழியத்தில் எந்த குறையும் வைக்கவில்லை. தனக்கு நேர்ந்த எல்லா பிரச்சனைகளையும் துணிவோடு எதிர்கொண்டார். தான் விசுவாசிக்கிற – உபதேசிக்கிற நற்செய்தியின் நாயகர், இயேசு ஆண்டவர் தன்னை எப்போதும் காத்துக் கொள்வார் என்று உறுதியாக நம்பினார். அதைத்தான் அவர் தியான வசனத்திலும் நாங்கள் எவ்வளவோ துன்புறுத்தப்பட்டோம். ஆனாலும் ஆண்டவர் எங்களை கைவிடவில்லை என்று குறிப்பிட்டார்.
கைவிடப்பட்ட நிலை என்பது மனித வாழ்வில் சர்வ சாதாரணமாக வருவது. நாம் எதிர்பார்த்த உறவுகள், நம்மோடு இருக்கிற உறவுகள் யாருமே நம்முடைய துயரத்தில் கை கொடுக்கவில்லை என்பது நமக்குத் தெரிய வரும்போது வாழ்க்கையின் மீதான பிடிப்பு நமக்கு விட்டுப் போகும். இதுபோன்ற சூழல்களை நாம் அடிக்கடி சந்தித்து இருப்போம்.
இந்த நேரங்களிலெல்லாம் நமக்கு நினைவுக்கு வரவேண்டியது பவுல் அடிகளாரின் இந்த வார்த்தைகள்தான். துன்பங்கள் நமக்கு உண்டு, துயரங்கள் உண்டு, சோதனைகள் உண்டு. ஆனாலும் ஆண்டவர் நம்மை கைவிடமாட்டார். ஏனென்றால் இயேசு ஆண்டவர் நம்மை நேசிக்கிறார். நம்மை பாவங்களில் இருந்து விடுவிக்கவே இந்த உலகத்திற்கு கடவுளால் அனுப்பப்பட்டார். நம்முடைய பாவங்களுக்கு பதிலாளாக சிலுவை மரணத்தை ஏற்று நமக்கு மீட்பை இலவசமாக சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறார்.
இப்படிப்பட்ட உன்னதமான பரிசை கிருபையாக பெற்றுக்கொண்ட நாம் ஆண்டவரின் பிள்ளையாக வாழ்வதில் சந்திக்கிற சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லா காலத்திலும் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். நம்மை கைவிடமாட்டார். இந்த உறுதியோடு நம்முடைய வாழ்வின் சவால்களை நாம் எதிர்கொள்வோம். ஆண்டவரின் கிருபையின் கரம் நம்மோடு எப்போதும் இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழுவோம்.
அன்பின் கடவுளே! இந்த வாழ்க்கையில் எங்களுக்கு சோதனைகள், பிரச்சனைகள், துயரங்கள் உண்டு. ஆனாலும் நாங்களும் உமது பிள்ளைகளாக அவற்றை தாண்டி வர உம்முடைய கிருபை எங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்தி வாழ உதவியருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
