ஏசாயா 26 : 1-4 16 டிசம்பர் 2025, செவ்வாய்
“உறுதிகொண்ட மனதுள்ளவன் உம்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறதால் அவனுக்கு மாறாத சமாதானமருளிக் காக்கிறீர்.”
– ஏசாயா 26 : 3
கடவுள் நல்ல, நிறைவான, குறையில்லா உலகைப் படைத்தார். அதில் தம் சாயலாக மனிதனையும் படைத்து எல்லாவற்றையும் ஆளும்படி கட்டளையிட்டார். அவன் வாழும் விதிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார். இந்த உலகில் கடவுளுக்கும் மனிதனுக்கும் சமாதானமும், ஒப்புரவும் இருந்தது. மனிதன் கடவுள் கட்டளையை மீறினான் இதனால் பாவம் வந்தது. மனிதன் கடவுளோடுள்ள சமாதானத்தையும் ஒப்புரவையும் இழந்தான்.
மனுக்குலத்தை மீட்கவும், இதன் வழியாக இருதரத்தாரும் நல்லுறவையும், ஒப்புரவையும் மேம்படுத்தி, மீட்பரை பிறக்கச்செய்ய இஸ்ரவேலர் என்ற சமூகத்தை கடவுள் தெரிந்தெடுத்தார். அவர்கள் வாழ கானான் என்ற நாட்டையும் கொடுத்தார். சுற்றியிருந்த பல மக்கள் இவர்களுக்கு தொல்லைகொடுத்தனர். குறிப்பாக மோவாபிய மக்களிடமிருந்து இவர்களை கடவுள் விடுதலை செய்தார். இதை கொண்டாடும் வெற்றிப்பாடலே நாம் வாசிக்கும் திருமறைப்பகுதி.
கடவுள் மரணம், நிந்தை ஆகியவைகளிலிருந்து இஸ்ரவேலரைக் காத்தார் என்பதை ருசித்த, அனுபவித்த மக்கள் வெற்றி பவனியாக உள்ளே வர வாசல்களைத் திறக்க கர்த்தர் அழைப்பு விடுக்கிறார். கடவுள் உறுதிக்கும், பாதுகாவலுக்கும், உயரத்திற்கும் காரணமான நித்திய கன்மலை என்பது தீர்க்கர் வர்ணிக்கிறார். அவரில் மட்டுமே நம்பிக்கை வையுங்கள் என்றும் அழைக்கிறார்.
இன்றைய தியானப்பகுதி கடவுளின் செயல்பாடுகளை வாழ்வில் கண்டு அதன் வழியாக உறுதியான நம்பிக்கை வைப்பவர்களுக்கு மாறாத சமாதானம் இருக்கும் என்கிறது.
கடவுள் எங்கோ இருந்துகொண்டு மக்களை இயக்குபவர் அல்ல. அவர் இயேசுவில் மனுக்குலத்தோடு சமாதானத்தில் வாழ்ந்தவர். மனுகுலம் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்தவர். பாவத்தால் எல்லா நிலையிலும் சமாதானத்தை இழந்த மக்களுக்கு சமாதான பிரபுவாக வந்தவர்.
சமாதானமின்மைக்கு அடிதளம் பாவம். மனுகுலம் சமாதானத்தை பெறவேண்டுமெனில் பாவத்திற்கு முடிவு கட்ட வேண்டும். கடவுள் இயேசுவை பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியாக அனுப்பினார். நமது பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களுக்கும் கிருபாதாரபலி அவரே என்று யோவான் தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார்.
இயேசு என் பாவங்களை சுமந்து மரித்தார் என்று விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் அவர் பாவமன்னிப்பருளுகிறார். பாவ மன்னிப்பின் நிச்சயம் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ அங்கே சமாதானம் இருக்கும். எந்த உள்ளத்தில் சமாதானம் இருக்கிறதோ அந்த முகத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
இயேசு அருளும் பாவமன்னிப்பைப் பெறுவோம். மகிழ்ச்சியோடு வாழுவோம்.
வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! உமது நேசகுமாரனில் பாவமன்னிப்பை அருளியதற்காக நன்றி. இந்த நிச்சயத்தில் மகிழ்ச்சியோடு வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
