மாற்கு 4 : 31-35 12 ஜனவரி 2026, திங்கள்
“இது அவர்களுக்கு (சீடர்களுக்கு) மறை பொருளாக இருந்தது; … அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.” – லூக்கா 18 : 34
ஒரு குடும்பத்தில் தகப்பனார் மரண தருவாயில் இருந்தார். அவர் தன்னுடைய மூத்த மகனை அழைத்து நான் சீக்கிரம் ஆண்டவனிடம் போய்ச் சேர்ந்து விடுவேன். இனி குடும்பம் உன்னுடைய பொறுப்பு. இதுவரையில் நீ விளையாட்டுதனமாக இருந்தது போல இனியும் இருக்க கூடாது என்று கூறினார். பிறகு இறந்து போனார். முதலில் சாதாரணமாக தோன்றினாலும் அடுத்த சில மாதங்களில் மகன் குடும்பத்தை நிர்வாகம் பண்ண மிகவும் சிரமப்பட்டான். அப்பா சொன்ன வார்த்தைகளின் பொருள் அப்போதுதான் அவனுக்கு புரிந்தது.
இன்றைய தியான வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இயேசு தன்னுடைய சீடர்களிடம் தனக்கு என்னென்ன நடக்கப்போகிறது என்பதை கூறுகிறார். எருசலேம் போகப் போகிறோம். அங்கே தனக்கு கொடுமைகளும், அவமானங்களும், சிலுவை மரணமும் காத்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஆனால் இயேசுவின் சீடர்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் சீடர்களின் பார்வையில் இயேசு உலகின் அரசராக இருந்தார். இயேசுவை உலகத்தின் அரசராக அவர்கள் பார்த்தார்கள். எனவே இயேசுவின் அரசு விரைவில் உலகத்தில் நிறுவப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆகையினால் இயேசு சொன்ன வார்த்தைகளின் ஆழ்ந்த பொருளை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
பல நேரங்களில் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் திருவசனத்தை, அதன் ஆழ்ந்த பொருளை நாம் விளங்கிக்கொள்ள தவறிப்போகிறோம். வசனம் நமக்கு சொல்லும் செய்திகளைவிட நாம் விரும்புகிற செய்திகளையே அர்த்தமாக புரிந்து கொள்கிறோம். பிறகு நாம் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்கிறோம். நம்முடைய விசுவாசம் ஆட்டம் காணுகிறது. இதன் இணை வசனத்தில் இயேசு மக்களுடன் பேசும்போது எல்லாவற்றையும் உவமைகள் வழியாக சொல்லுகிறார். சீடர்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னார் என்றும் பார்க்கிறோம்.
நமது வாழ்க்கையிலும் பலநேரங்களில் ஆண்டவர் நமக்கு என்ன சொல்லுகிறார் என்று தெரியாமல், விளங்காமல் திகைத்து நிற்கிற சூழல் வரும். ஜெபத்தில் ஆண்டவரோடு பேசுவோம். வேதவசனங்களை திரும்பத் திரும்ப வாசிப்போம். தேவையெனில் மற்றவரின் உதவியையும் நாடுவோம். ஆண்டவரின் வார்த்தைகள் ஆழமான பொருள் கொண்டவை. அது ஒருபோதும் நமக்கு தீமை செய்யாது. வேத வசனங்களை சரியாக புரிந்து கொள்ளவும் விசுவாசத்தில் வளரவும் ஆவியானவர் துணையை நாடுவோம். விசுவாசத்தில் வளர்வோம்.
அன்பின் கடவுளே! ஒவ்வொரு நாளும் நாங்கள் வாசிக்கிற, தியானிக்கிற திருவசனங்களுக்குரிய பொருளை நாங்கள் விளங்கிக் கொள்ள எங்களுக்கு தேவையான ஞானத்தையும் வழி காட்டுதலையும் தந்தருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
