யோவான் 4 : 1-3 14 ஜனவரி 2026, புதன்
“சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் முதல் முதல் அந்தியோகியாவிலே வழங்கலாயிற்று.” – அப்போஸ்தலர் 11 : 26
ஒரு வெயில் கால மத்தியானம். வீட்டிற்கு மளிகைச் சாமான்கள் ஆர்டர் போட்டிருந்தேன். வேகாத வெயிலில் வேர்க்க விறுவிறுக்க ஒரு இளைஞன் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு குடிக்க ஒரு டம்ளர் மோர் கொடுத்தேன். அவன் முகம் மலர்ந்தது. வாங்கிக் கொண்டு நீங்கள் கிறிஸ்டியனா என்று கேட்டான்.
இயேசுவின் சீடர்கள்முதல் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் வரையில் அவர்களுக்கான அடையாளப் பெயர் கிறிஸ்தவர்கள் என்பதுதான். அந்தியோகியா என்பது அந்த காலத்தில் ஒரு பெரு நகரம். கலாச்சார வளம் கொண்டது. இங்குதான் பவுல் அடிகளார் தனது ஊழியத்தை துவங்கினார். பவுலும் பர்னபாவும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் இங்கே தங்கி தங்கள் ஊழியத்தை செய்தனர். இந்த ஊரில்தான் முதன்முதலாக கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்கத் துவங்கினர்.
நாம் வாழ்கிற சமூகம் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் இடையே வாழுகிற நமக்கு இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுதல் மிகவும் சவாலான விஷயமே. என்றாலும் கிறிஸ்தவ அன்பில் நாம் வளருவோமானால் இது சாத்தியம். அந்தியோகியாவில் கிடைத்த கிறிஸ்தவர்கள் என்ற பெயரை நாம் தக்க வைத்துக்கொள்ள ஆண்டவரின் அன்பை நாம் செயல்கள் வழியாக வெளிப்படுத்துவோம். வெறும் வார்த்தைகளில், ஆலயம் செல்லுதலில், வேதம் வாசிப்பதில் மட்டும் நாம் கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது. உலகில் நம்முடைய அன்பின் செயல்களே நம்மை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்தும்.
இயேசுவோடு நமக்குள்ள உறவு இன்னும் உறுதிப்பட தொடர்ந்து திருவசனங்களில் நிலைத்திருப்போம். வசனம் நம்மை இன்னும் மேம்பட்ட கிறிஸ்தவர்களாக வாழ வழி காட்டும். நம்முடைய கிறிஸ்தவ விசுவாசமும் கிறிஸ்தவ அடையாளமும் பிறருக்கு சாட்சியாக விளங்குவதற்கு ஆண்டவர் நம்மை அழைக்கிறார். உடன்படுவோம், செயல்படுவோம்.
கர்த்தாவே! நாங்கள் உமது பிள்ளைகள் என்பதை வாழ்வில், எங்கள் செயல்பாடுகளில் காண்பிப்பதற்கு தேவையான ஞானத்தை கொடுத்தருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
