2 தீமோத்தேயு 4 : 14-18                         08 ஜனவரி 2026, வியாழன்

“ஆண்டவரோ எனக்குத் துணை நின்று… என்னைப் பலப்படுத்தினார்.” – 2 தீமோத்தேயு 4 : 17

என் அப்பா போதகராக இருந்த காலத்தில் ஒரு திருச்சபையில் ஒரு பிரச்சனையைப் பேசித் தீர்க்க அனுப்பப்பட்டார். அவர் போகும்போது, அந்தத் திருச்சபையார் ரொம்பவும் முரடர்கள். சட்டத்திற்கும் கடவுளுக்கும் பயப்படாதவர்கள். ஒருவேளை உங்களால் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை என்றால்கூட பிரவாயில்லை… பத்திரமாக திரும்பி வாருங்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டது.

அவர் போய் பிரச்சனையை சுமூகமாக முடித்துவிட்டு திரும்ப வந்தார். நான் அவரிடம் அங்கே போக உங்களுக்கு பயமாக இல்லையா? என்று கேட்டேன். இந்த வேலைக்காக என்னை அனுப்புகிறவர் ஆண்டவர். அவர் எனக்குத் துணையாக நின்று என்னை காப்பாற்றுவார் என்று நான் நம்பினேன் என்று கூறினார்.

இன்றைய தியான வசனம் பவுல் தீமோத்தேயுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் இருக்கிறது. தீமோத்தேயு பவுலுக்கு மிகப் பிரியமானவராக இருந்தார். நிருபத்தில் அடிக்கடி தீமோத்தேயுவை பிரியமான பிள்ளை என்று குறிப்பிடுவதை நாம் பார்க்க முடிகிறது. நமக்கு பிரியமான பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய எச்சரிப்பு தகவல்களை சொல்வது போலவே, பவுலும் இங்கே தீமோத்தேயுவுக்கு சொல்லுகிறார். ஆண்டவர் தனக்குக் கொடுத்திருக்கிற வேலைகளின் பொருட்டு அவர் எனக்கு துணை நின்று என்னை பலப்படுத்தினார் என்று பவுல் தெளிவாக குறிப்பிடுகிறார். வாசிப்புப் பகுதியை வாசித்துப் பார்த்தோமானால் பவுல் எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலை சந்தித்தார் என்பது புரியும்.

நம் எல்லோருடைய வாழ்விலும் நெருக்கடியான நேரங்கள் வருகின்றன. என்ன செய்வது என்று திகைக்கிற நேரங்கள் வருகிறது. எப்படி முன் செல்வது என்று குழம்புகிற நேரங்கள் வருகின்றன. ஒருவேளை இன்று நீங்கள்கூட இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று தவித்துக் கொண்டிருக்கலாம்.

இந்த வசனத்தை வாசித்துப் பாருங்கள். இது உங்களுக்காகவும், நமக்காகவும், சொல்லப்பட்டிருக்கிறது. ஆண்டவர் நமக்கு துணை நின்று நம்மை பலப்படுத்துவார் என்பதை விசுவாசிப்போம். நம்மை போன்ற சாமானிய மனிதர்களுக்காகத்தான் இயேசு ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்தார். இயேசுவின் அன்பினால் விளைந்த கிருபைதான் பாவிகளான நம்மை இன்றுவரை வாழச் செய்து கொண்டிருக்கிறது. நம் சிக்கலிலிருந்து நாம் வெளிவர ஆண்டவர் நம்மை பலப்படுத்துவார். அவரிடம் கேட்போம். ஆண்டவரால் பலப்படுவோம். வாழ்வை துணிவோடு எதிர் கொள்ளுவோம்.

அன்புள்ள கடவுளே! எங்களுக்கு நீர் திருவசனத்தின் வழியாக தந்திருக்கிற உறுதிமொழிகளுக்கு நன்றி செலுத்துகிறோம். எல்லா நேரத்திலும் நாங்கள் உமது வசனங்களிலிருந்து பலத்தை பெற்றுக்கொள்ள உதவி செய்யும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.