உபாகமம் 29 : 25-28                             28 பிப்ரவரி 2026, சனி

“கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும்… வேற்று நாட்டில் எறிந்து விட்டார்.” – உபாகமம் 29 : 28

பெற்றோர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் பிள்ளைகள் தவறு செய்யும் போது இயற்கையாகவே பெற்றோர் கோபப்படுகின்றனர், தண்டனை அளிக்கின்றனர். அதுபோலவே நம்மைப் படைத்து, பராமரித்து வருகிற கடவுள் நம்மீதும் நமது பாவங்கள் நிமித்தமாக கோபப்படுகிறார், தண்டனை அளிக்கிறார்.

இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து அழைத்து வந்த கடவுள் அவர்களோடு ‘நான் உங்கள் கடவுள், நீங்கள் என் மக்கள்’ என உடன்படிக்கை செய்தார். ஆனால் அவர்களோ அந்த உடன்படிக்கையை விட்டு விலகினார்கள். மேலும், அவர்கள் வேற்று தெய்வங்களை பின்பற்றி அவர்களுக்கு ஊழியம் செய்தார்கள். ஆகவே, கடவுள் அவர்கள்மேல் கடுங்கோபம் கொண்டு அவர்களுக்கு அவர் அளித்த இஸ்ரவேல் நாட்டிலிருந்தும் அகற்றி விட்டார்.

கடவுள் தம் மக்கள் தம்முடைய உடன்படிக்கைக்கு கீழ்படிந்து வாழ்வதையே விரும்புகிறார். கடவுள் அளிக்கும் தண்டனை அவர்கள் திருந்தி வருவதற்கே அன்றி அவர்களது அழிவிற்கு அல்ல.

நமது கோபம் எப்படிப்பட்டது என சிந்தித்து பார்க்க வேண்டும். நமது கோபம் ஒருவரை மீட்டுக் கொள்வதற்காக இருக்க வேண்டுமே அன்றி அவர்களை தள்ளிவிடுவதற்காக இருக்கக் கூடாது. நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக செய்யாமல் நம்மீது தயவு காண்பித்த கடவுள் மன்னிக்கும் பண்புடையவர்களாக வாழ நம்மை அழைக்கிறார்.

சொந்த சகோதரர்களிடம் கோபப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாத திரளான மக்களை நாம் காண்கிறோம். நமக்கு அடுத்திருப்பவர்களின் தவறுகளை நாம் மன்னிக்கிறோமா என சிந்திப்போம். அவர்களும் திருந்தி வாழ்வதற்கு இடமளிப்போம்.

தயவுள்ள கடவுளே! எங்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்பவும் மன்னிக்கும் குணம் உடையவர்களாக வாழவும் உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.