நெகேமியா 9 : 16-17 25 பிப்ரவரி 2026, புதன்
“மனுஷகோபம் தேவ நீதியை நடப்பிக்கிறதில்லையே.” – யாக்கோபு 1 : 20
‘சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது’ என்பது பொதுவான அறிவுரை. அதாவது, ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது. சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி நீதிமன்றத்தின் மூலம் நியாயம் தேட வேண்டும் என்பதே இதன் பொருள்.
மனிதன் தன் கோபத்தினால் பதிலுக்குப் பதில் செய்ய முயற்சிக்கிறான். ஆனால், மனிதனுடைய கோபமானது ஒருவேளை நியாயமான கோபமாக நமக்கு தோன்றினாலும் அது கடவுளின் நீதியை நிலைநிறுத்தவோ, ஊக்குவிக்கவோ முடியாது.
இன்றைய வாசிப்புப் பகுதியில் இஸ்ரவேல் மக்களின் பாவ அறிக்கையை பார்க்கிறோம். அவர்கள் பிதாக்கள் அகங்காரமுள்ளவர்களாகவும் வணங்காக் கழுத்துள்ளவர்களுமாக கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் போனார்கள். ஆகவே கடவுளின் தண்டனை பெற்றார்கள். ஆனால் கடவுள் தமது மிகுந்த கிருபையினால் அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கு தயவளித்தார் என அறிக்கை செய்தனர்.
கடவுளின் நீதி மனிதனின் நீதிக்கு அப்பாற்பட்டது. அவர் நித்திய நியாயாதிபதி. நாம் காட்டக்கூடிய எந்தவிதமான கோபத்தைவிட மென்மையையும், சாந்தத்தையும் கடவுள் வெளிப்படுத்துகிறார். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை அவமானப்படுத்தினவர்களையும், நிந்தித்தவர்களையும், சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்தார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக செய்யாதவர் என சங்கீத புத்தகத்தில் வாசிக்கிறோம்.
இவ்வுலகின் கடைசிநாளில் ஆண்டவர் அளிக்கும் நியாயத்தீர்ப்புக்காக நாம் ஆயத்தப்பட்டு காத்திருப்போம். சகமனிதர்கள் நமக்கு எதிராக செய்த தீமைகளுக்கு நாம் தீர்ப்பிடாமல் கடவுளின் சித்தத்திற்கு இடங்கொடுப்போம். இவ்வுலக வாழ்வில் ஆண்டவர் காண்பித்த தயவும் இரக்கமும் வெளிப்படுத்தி வாழ்வோம்.
அன்பின் வடிவமான கடவுளே! நீர் எங்களுக்கு அளித்த கிருபையை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டுவிட உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.
