யாத்திராகமம் 34 : 6-7                                      24 பிப்ரவரி 2026, செவ்வாய்

“புத்தியீனன் தன் கோபத்தையெல்லாம் வெளியிடுவான், ஞானி… அடக்கி வைப்பான்.” – நீதிமொழிகள் 29 : 11

ஒருவர் தன்னையே கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்று. குறிப்பாக, தன் மனதை கட்டுப்படுத்துவது இன்னும் கடினம் ‘ஒரு நகரத்தை பிடிப்பதைவிடவும் தன் மனதை அடக்குகிறவன் மேலானவன்’ என்கிறது நீதிமொழிகள் புத்தகம். புத்தியீனன் தன் கோபத்தை அடக்குவதில்லை. ஆனால் ஞானமுள்ளவர் பொறுமையுடன் இருப்பதால் அவரது சினம் ஆறும் என்கிறது திருமறை.

சுயக் கட்டுப்பாடு அனைவருக்கும் அவசியம். குறிப்பாக கோபம் என்னும் உணர்வை கட்டுப்படுத்துவதில் அது மிகவும் தேவை. இன்று குடும்பங்களிலும், சபைகளிலும் சமூகத்திலும் நடைபெறுகிற பல சண்டை, சச்சரவுகளுக்கு காரணம் கட்டுப்படுத்தாத கோபமே. அவசரப்பட்டு கோபத்தை வெளிப்படுத்துவதன் விளைவாக பல எதிர்மறை விளைவுகள் நடைபெறுகின்றன. பழிவாங்கும் எண்ணம் மேலோங்குகிறது. ஆகவே கோபம் அடக்கப்பட வேண்டும்.

இன்றைய வாசிப்புப் பகுதியில் கடவுளின் குணாதிசயங்களை காண்கிறோம். கடவுள் இரக்கமும் தயவும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ளவர். குற்றவாளியை நீதியாய் நியாயந்தீர்ப்பவர். நமது குற்றத்தைக்கண்டு கோபப்படுபவர். ஆனால் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குபவர். அதுபோலவே பாவங்களை மன்னிப்பவர். தம்மிடத்தில் நம்பிக்கையோடு வருகிற அனைவருக்கும் தயவோடு இரங்குகிறார்.

இறை மக்களாகிய நாம் கோபத்தை கட்டுப்படுத்தி இறை பண்புகளை தரித்துக்கொள்ள அழைக்கப்படுகிறோம். புத்தியீனர்களாக கோபத்தை வெளிப்படுத்தாமல் ஞானமுள்ளவர்களாக நாம் நடப்பதையே கடவுள் விரும்புகிறார். நாம் நமது சக மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ளுகிறோம் என சிந்திப்போம். யாக்கோபு அப்போஸ்தலன் தமது நிருபத்தில் குறிப்பிட்டபடி ‘கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு தாமதமாயும், கோபிக்கிறதற்கு தாமதமாயும்’ இருந்து சொல்லிலும் செயலிலும் கடவுளை மகிமைப்படுத்தி வாழ்வோம்.

பரிசுத்தமுள்ள கடவுளே! கோபத்தை அடக்கவும் நற்பண்புகளை வெளிப்படுத்தி வாழவும் எங்களுக்கு கிருபையருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.