நீதியரசர்
எரேமியா 11 : 18-20 22 பிப்ரவரி 2022, செவ்வாய்
“உன்னதமானவர் சந்நிதியில் ஒருவனது நியாயத்தைப் புரட்டுவதையும், ஒருவனுடைய வழக்கைக் கெடுப்பதையும், ஆண்டவர் பாராதிருப்பாரோ?” – புலம்பல் 3 : 35-36
கடவுள் நீதியரசர்களுக்கெல்லாம் நீதியரசர். உலக நீதியரசர்களையெல்லாம் நியாயம் தீர்ப்பவர் என்ற உண்மையை இப்பகுதி வெளிப்படுத்துகிறது. நீதியே உலகத்தின் அஸ்திபாரம். நீதி புரட்டப்படும்போதும், தடை செய்யப்படும்போதும் அஸ்திபாரங்கள் அசைக்கப்படுகின்றன. இன்றைய சமுதாயத்தில் ஏழை எளியவர்களின் நியாயங்கள் புரட்டப்படுகின்றன. பணத்தாலும், அதிகாரத்தாலும் நீதி மாற்றி எழுதப்படுகின்றன.
வட மாநிலத்தில் கைக்கூலி வாங்கி கொண்டு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே பிடிவாரண்ட் போட்ட சம்பவம் இந்தியாவையே உலகநாடுகளுக்கு முன்பாகத் தலைகுனிய வைத்தது. பணம் பெற்று கொண்டு, நியாயத்தை எடுத்துச் சொல்லி வாதாடாமல் இருட்டடிப்புச் செய்வதையும் நாம் அறிவோம்.
பாதிக்கப்பட்டோர் இறைவனை நோக்கி முறையிடுகின்ற போது, கடவுள் பாதிக்கப்பட்டோர் பக்கமாய் நின்று நியாயம் கிடைக்கச் செயல்படுகின்றார். சங்கீதக்காரன் கர்த்தர் ஜாதிகளை நியாயம் விசாரிப்பார் என்று கூறுகிறார்.
ஆண்டவர் தீமைக்கும் அநீதிக்கும் ஒரு போதும் கூட்டு நிற்பவரல்ல. அவர் மகா நீதிபரர். அவர் யாரையும் ஒடுக்கமாட்டார். அவர் நீதிக்கும் உண்மைக்கும் குரல் கொடுக்கும் ஆண்டவர்.
எல்சால்வதார் என்ற நாட்டின் ஏழை எளிய மக்களுடைய வாழ்வின் நிதிக்காகப் போராடி துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. இவர் ‘நீதி நிறைந்த அந்த நாள் நிச்சயம் வரும். அந்த நாளில் கடவுள் மனிதரின் தீய சக்திகளுக்கு எதிராகவும் மனித குலத்தைக் குலைக்கும் குறுக்கு எண்ணத்திற்கு எதிராகவும் உலகை வெற்றி கொள்வார். இன்று துயரங்களைச் சந்திக்கும் நீங்கள் சிறிதும் துவண்டுவிடக் கூடாது’ என்று கூறினார்.
நமக்கு அநீதி இழைக்கப்படுகின்ற வேளையில் நீதி செய்யும் இறைவன் நம்மோடிருக்கிறார் என்ற நம்பிக்கையின் ஒளியில் காத்திருப்போம்.
நியாயத்தை யார் உரைப்பார் என ஏங்குகிறாயோ?
நியாயாதிபதி வருவார் என்பதை மறந்தாயோ?
நீதியின் உறைவிடமே! நீதிக்காக ஏங்கும் மக்களை ஆதரிப்பீராக. உமது நீதிக்காக நாங்கள் பொறுமையோடு காத்திருக்கவும் அருள்புரியும். நீதி செய்யும் இயேசுவின் நாமத்தில் மன்றாடுகிறோம். ஆமேன்.