திரும்பு – விட்டுவிடு
மாற்கு 6 : 7-12 20 மே 2022, வெள்ளி
“அப்படியே அவர்கள் போய், மனந்திரும்ப வேண்டும் என்று பிரசங்கித்து…” – மாற்கு 6 : 12
விட்டுவிடுதல் – திரும்புதல் என்பது கடினமான வார்த்தைகள். அதாவது பழைய வாழ்வை விட்டு புதிய வாழ்வுக்கு திரும்புவது கடினம். கிறிஸ்துவ வாழ்வு எதிர்பார்ப்பது, ‘விட்டுவிடுதல் – திரும்புதல்’ ஆகும். இன்றைய கிறிஸ்துவத்தில் பல விடுதல்கள் அவசியமாக இருக்கிறது. கிறிஸ்துவ இல்லங்களில் இன்றும் நல்ல நேரம் பார்ப்பது போன்ற பல சடங்குகள். கேட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று சொல்லி சமாளித்துவிடுவது. நம்மை அழைத்து இச்சமுதாய வாழ்வில் அனுப்பியுள்ள இயேசுவானவர் என்ன நினைப்பார் என்று யோசிக்கத் தோன்றுவது இல்லை.
இஸ்ரவேல் மக்களை தமது சொந்த ஜனமாக கடவுள் அழைத்தார். அவர்களோ கடவுளின் வழிகளை விட்டு தங்களின் மனம்போன வாழ்க்கை , அந்நிய தெய்வங்களை வணங்குவது, அன்னியதெய்வ சடங்குகள் என்று வாழ்ந்தனர். கடவுள் அவர்களை தம்மிடம் சேர்த்துக்கொள்ள மனந்திரும்பி வரும்படி தீர்க்கர்கள் வழியாக அழைப்பு கொடுத்தார். அவர்களோ மனம் மாறவில்லை, என்றாலும் கடவுளுக்கு அவர்களை விட்டுவிட மனமில்லை . இறுதியாக தமது குமாரன் இயேசுவை இவ்வுலகில் மானிடராக அனுப்பினார். ‘மனம் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபம்’ என்று இயேசு பிரசங்கித்தார். தியான பாகத்தில் தம்முடைய சீடர்களை ‘மனம்திரும்புகள்’ என்ற செய்தியுடன் அனுப்பினார். ஆனாலும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார்கள். இயேசு மரித்தார் கடவுளோ அவரை உயிரோடு எழுப்பினார். பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்தவராக இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு பாவமன்னிப்பின் வாழ்வைத் தருகிறார். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதிய படைப்பு. பழையவை ஒழிந்து போயின, எல்லாம் புதியவை ஆயின என்று திருமறைச் சொல்லுகிறது.
அன்பானவர்களே! கிறிஸ்துவுக்குள் வாழ்வு என்பது புதிய வாழ்வு- மனம்திரும்பிய வாழ்வு. நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக அந்த வாழ்வை நாம் பெற்றுள்ளோம். புதிய வாழ்வைப் பெற்ற நாம் நம்மில் உள்ள பழைய சுபாவங்களை விட்டு மனம் திரும்பிய வாழ்வில் நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.
அன்பின் கடவுளே உமது குமாரன் வழியாக எங்களை புதிய சிருஷ்டியாக ஏற்றுக்கொண்டீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசுவில், பிதாவே, ஆமேன்.