எதைக் கொடுப்போம், இயேசுவுக்கு
ரோமர் 12 : 1-2 01 நவம்பர் 2022, செவ்வாய்
“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்?” – சங்கீதம் 116 : 12
அன்பானவர்களே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை சுற்றி நடக்கிற சம்பவங்கள் நமக்கு சவாலாக உள்ளது. ஒவ்வொருவரும் முந்திக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். இதில் நாம் யாருக்கு என்னத்தை கொடுக்கிறோம். நம் உடல் உழைப்பையும், நம் அறிவையும், திறமையும் நாம் அநேக கம்பெனிகளிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சற்று நிதானித்து பாருங்கள், இந்த உலகத்தில் நம்மை உருவாக்கி நமக்கு அனைத்தையும் கொடுத்து இன்று வரை பாதுகாத்து வருகிற கடவுளுக்கு நாம் என்னத்தை கொடுக்கிறோம். வாசிக்கிற தியானபகுதியில் சங்கீதக்காரன் தாவீது இதையே கூறுகிறார்.
“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தை செலுத்துவேன்.”
நாமும் நம்முடைய வாழ்க்கையில் பெற்றுள்ள கடவுளின் நன்மைகள், ஆன்மீக ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்ப்போம். கிறிஸ்து இயேசுவில் நமக்கு அருளப்பட்டுள்ள விசுவாசம், நம்பிக்கை, பாவமன்னிப்பு, நித்திய வாழ்வு இவற்றை நினைத்து கிறிஸ்து இயேசுவுக்கு நன்றி பலிகளைச் செலுத்த வேண்டும்.
பிறருக்கும், திருச்சபைக்கும் நாம் செய்ய வேண்டிய சேவைகள் அநேகம் நம் முன்னே இருக்கின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், துன்பத்தில் இருக்கும் ஒருவரின் தேவையைக் கேட்டு நாம் ஜெபிக்கலாம், துக்கப்படும் ஒருவரைத் தேற்ற நாம் கூறும் ஆறுதல் வார்த்தைகள், நம்பிக்கை இழந்த ஒருவருக்கு நம்பிக்கையூட்டும் கடவுளின் வார்த்தையை கூறுவது. இவை வலிமையான ஒரு இணைப்பை உண்டு பண்ணும். இன்னும் சொல்லப்போனால், ஆண்டவர் இயேசு நமக்குச் செய்துள்ள அன்பின் சேவை இவை தான்.
ஆண்டவரில் நாம் அன்பு கூருவது என்பதை நாம் அறிவதற்கு முன்பே, அவர் நம்மில் அன்பு கூர்ந்தபடியால் கிறிஸ்து நமக்குச் செய்தவை என்ன என்பதைப் பாருங்கள்.
பிறருடைய சேவையை அனுபவிப்பதற்கல்ல, பிறருக்காய் சேவை செய்யவே இயேசு இவ்வுலகில் வந்தார்; பிறரிடமிருந்து வாங்க அல்ல, பிறருக்குத் தன்னையே கொடுக்க வந்தார். இயேசுவில் நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்படி, அவர் தமது ஜீவனை பலியாகத் தந்தார். சிந்தித்துப் பாருங்கள்! நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பாகவே, கடவுள் தாமே நமது நித்திய இரட்சிப்புக்காக பாடுநிறைந்த மரணத்தை ஏற்றுக் கொண்டு சிலுவையில் மரித்தார்.
இவையெல்லாம் நமக்காக செய்த இயேசுவுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம், அவருக்காக நம்மையே அற்பணித்து அவருக்கு பிரியமான பிறர் மீது அன்பு வைத்து வாழ்வோம்.
அன்பின் பரலோகப் பிதாவே, எங்கள் அயலாரிடம் நாங்கள் அன்பு கூருவதன் வழியே உம்மேல் நாங்கள் வைத்துள்ள பக்தியும், உமக்கு நாங்கள் காட்டுகிற நன்றியுணர்வும் எங்களில் பிரதிபலிக்க உதவி செய்யும் இயேசுவின் வழியே. ஆமேன்.