பசிப்பிணி நீக்குகிறவர்
ஏசாயா 58 : 11 11 பிப்ரவரி 2023, சனி
“எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்…மிஞ்சின துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டன.” – லூக்கா 9 : 17
மனிதனுக்கு இருக்கும் தவறான குணங்களில் ஒன்று திருப்தி அடையாத மனம். திருமணம், சடங்கு, புதுமனை புகுதல் போன்ற சிறப்பு வைபவங்களில் விருந்து உபசரணை கட்டாயம் இருக்கும். உணவு வகைகள் எவ்வளவுதான் சுவையாக செய்திருந்தாலும் திருப்தி அடையாதவர்களிடமிருந்து விதவிதமான விமர்சனங்கள் வரும். இன்றைய தியானப்பகுதியில் ஆண்டவர் அளித்த உணவை உண்டவர்கள் எல்லோரும் திருப்தி அடைந்தார்கள். மீதமும் 12 கூடை நிறைய எடுத்தார்கள் என்ற செய்தி நமக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் அதே வேளையில் மனநிறைவையும் தருகிறது.
பல நாட்கள் ஆகாரம் கிடைக்காமல் பட்டினி கிடந்த ஒருவருக்கு நமது வீட்டில் உள்ள பழைய சாதத்தைக் கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியோடு சாப்பிடுவார். மன நிறைவோடு வாழ்த்திவிட்டுப் போவார். ஏனெனில் அவர்களால்தான் பசியின் கொடுமையையும், ஆகாரத்தின் அருமையையும் தெரிந்துகொள்ள முடியும்.
கடவுளின் வசனத்தைக் கேட்க வந்த ஜனங்கள் பசியால் முகம் வாடிய நிலையில் இருப்பதை ஆண்டவர் அறிந்தார். அவர்களது பசியைத் தீர்க்க விரும்பிய ஆண்டவர் கூட்டத்தில் ஒருவர் வைத்திருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீனையும் ஆசீர்வதித்து அவர்களுக்கு உணவாக வழங்கினார். ஜனங்களின் பசி நீங்கியது. முகம் மலர்ந்தது. உடல் ஆரோக்கியம் பெற்றது. மனமும் நிறைவடைந்தது. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க அவர்கள் மீண்டும் தயாராயினர்.
கர்த்தர் நித்தமும் நம்மை நடத்துகிறவர், திருப்தியாக்குகிறவர். இந்த வரிகள் நமக்கு மட்டுமல்ல அன்றாட தேவைகளை நிறைவேற்ற வழியற்றுத் தவிக்கும் யாருக்கும் அதிக நம்பிக்கையை ஊட்டுகிறது. கடவுளின் வார்த்தையை நம்புவோம். ஏற்ற வேளையில் நமக்கு ஆகாரம் மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங் களையும் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். வழிநடத்துவார்.
ஏற்ற வேளையில் ஆகாரம் தந்து ஆசீர்வதிக்கிற அன்பின் ஆண்டவரே, நாங்களும் மன நிறைவோடு வாழ எங்களுக்கு அருள்புரியும். இறைமகன் இயேசுவின் வழியே வேண்டுகிறோம் பிதாவே. ஆமேன்.