பயத்தைப் போக்கும் சிலுவை
லூக்கா 22 : 54-60 08 மார்ச் 2024, வெள்ளி
“மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.”
– லூக்கா 22 : 59
கொரோனா தடுப்பூசி போடப்பட்ட காலத்தில், ஊசி போட்டுக் கொண்டால் இரண்டு ஆண்டுகளில் இறந்து போவார்கள் என்று சிலர் வதந்தி கிளப்பினர். இதற்கு பயந்து அநேகர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பயந்தார்கள். இன்றுவரைகூட சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. பயம் நம்மை சிந்திக்கவிடாமல் செய்துவிடும். அதற்கான சிறந்த உதாரணம்தான் இன்றைக்குரிய தியானப்பகுதி.
இயேசு கிறிஸ்துவை யூதாஸ்காரியோத் காட்டிக்கொடுத்த பின், போர் சேவகர்கள் அவரை கைது செய்து விசாரணைக்காக பிரதான ஆசாரியனின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். சீடர்கள் பயத்தில் சிதறி ஓடிவிட்டனர். ஆனால் பேதுருவோ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என்ன நேரிடுகிறது என்பதை அறிந்துக் கொள்ள துணிவுடன் அவரை விசாரிக்கிற இடத்திற்கு வந்தார். மக்களோடு மக்களாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த சிலர் பேதுருவை அடையாளம் கண்டு கொண்டனர். நீயும் அவரோடிருந்தவன்தானே என்று கேட்க துவங்கினர். ஆனால் பேதுருவோ, நான் அவரை அறியேன் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மூன்றுதரம் மறுதலித்தார்.
காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றிவர ஆயத்தாமாயிருக்கிறேன் என்று பேதுரு இயேசுவிடம் ஏற்கெனவே கூறியிருந்தார். இன்றைக்கு சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்ற இயேசுவின் முன்னறிவிப்பையும் பேதுரு மறந்து மறுதலித்துவிட்டார். காரணம் மரண பயம். பயம் நம்மை புரட்டிப் போடும், கடவுளின் வார்த்தைகளை மறக்க செய்யும். ஆனால் இதே பேதுருதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கண்ணார கண்டபின் கொஞ்சமும் பயமின்றி திருப்பணி செய்தார். சிலுவையில் தம்மை தலை கீழாக அறையும்படி கேட்டுக் கொண்டு இரத்த சாட்சியாக இறந்தார் என்கிறது வரலாறு. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் சிலுவையைப் பற்றிய பயம் பேதுருவிடம் முற்றிலும் நீங்கி விட்டது.
இயேசுவின் சிலுவையை நாம் காணும் போதெல்லாம் கிறிஸ்துவின் வழியே நமக்கு கிடைத்த மீட்பு நினைவிற்கு வரவேண்டும். மரணம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும். இதை உணரவே ஆலயங்களில் சிலுவை உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. நம்மை அச்சுறுத்தும் எந்த தீங்கிற்கும் பயப்படாமல் தைரியமாக வாழ்வோம். இயேசுவின் சிலுவை நம் பயத்தை நீக்கும் மீட்பின் கருவி.
அன்பின் தந்தையே, எல்லா பயத்தினின்றும் எங்களை விடுவித்து காத்தருளும். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்.