எல்லையற்ற ஆட்சி
தரிசனம் 11 : 15-17 18 டிசம்பர் 2021, சனி
“அவர் யாக்கோபின் வம்சத்தை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” – லூக்கா 1 : 33
இந்த வாரம் முழுவதும் சகரியாவின் பாடல் வரிகளை தியானிக்கப் போகிறோமென வாக்குக் கொடுத்தோம் என்றாலும் உன்னதத்திலிருந்து வருகிற உதய ஒளி பற்றிச் சிந்திக்கும்போது தாவீதின் சிம்ம ஆசனத்தையும், முடிவற்ற அவருடைய அரசாட்சியையும் குறிப்பிடாதிருக்க முடியவில்லை! ஆகவே நேற்றும் இன்றும் மரியாளுக்குத் தூதர் கொடுத்த செய்தியின் இரண்டு வரிகளைச் சிந்திக்கிறோம்.
நியூமராலஜி படி அனேகர் தங்கள் பெயர்களில் சிறிய மாற்றம் செய்கின்றனர். ஏஐசூஊநுசூகூ என்ற பெயரை ஏஐசூசூஊநுசூகூ என்று மாற்றலாமாம். இதனால் அவருடைய வாழ்க்கை வளப்பமாகுமாம். பெயரின் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால், மாற்றப்படுவதால் வாழ்க்கை வளமாகும் என்றால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இந்தியாவில் இருக்கிற 80 சதவீதம் மக்களின் பெயரையும் மாற்றி விடலாமே.
யாக்கோபின் வம்சம் என்றென்றும் முடிவில்லாமல் கர்த்தரின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட இயேசு உலகில் பிறந்தார். இத்தியான வரிகளில் இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு ஒரு புதிய பெயர் சூடப்படுகிறது. தாவீதின் வம்சத்தார்! ஆம்! நாம் புதிய இஸ்ரவேலர் என்று அழைக்கப்படுகிறோம். இந்த ஆட்சிக்கு முடிவில்லை என்பதை இரண்டு அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளலாம். உலகத்தின் முடிவிற்குப் பின்பும் இஸ்ரவேலின், தாவீதின், யாக்கோபின் ஆட்சி தொடரும்! உண்மைதான். தாவீதின் ஆட்சி கிறிஸ்தவர்களோடு நின்றுவிடப் போவதில்லை. கிறிஸ்தவரல்லாதவரையும் தனது மந்தையின் ஆடுகளாக்கும் இந்த ஆட்சியின் எல்லைக்கு முடிவு, அளவு இல்லை. இந்த ஆட்சி எல்லாருக்கும் எப்படிப் பரவும்? இந்த தெய்வீக அரசரின் படைகள் யார்? விசுவாசிகளான நாம்தான். ஆன்மீக சர்வ ஆயுதம் தரித்த நாம்தான் இறை அரசை விரிவுபடுத்துகிறவர்கள்.
நீங்கள் அங்கம் வகிக்கும் சபையில் கடந்த வருடம் இருந்தவர்கள் எத்தனை பேர். இந்த கிறிஸ்துமஸ் தினத்தை ஆவியிலும் உண்மையிலும் தொழுது கொள்ளப் புதியதாகச் சேர்ந்த விசுவாசிகளின் எண்ணிக்கை தெரியுமா? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் கோவில் புதுப்பிக்கப்பட்டது, அல்லது விரிவாக்கப்பட்டது. இதில் உங்கள் பங்கு என்ன? யாக்கோபின் வம்சத்தாரே, தாவீதின் பிள்ளைகளே. எல்லைகளை விரிவடையச் செய்யுங்கள். இறையரசு பரவிட நீங்கள் உண்மையான, உத்தமமான விசுவாசிகளாகிட கர்த்தர் அருள் தரட்டும்.
உலகாளும் வேந்தே! உமது அரசில் பாவிகளும் நீசருமாகிய எமக்கு இடம் கொடுத்தமைக்கு நன்றி. உம்முடைய அரசு பெருகி வளர, பெருகிட நானும், நீங்களும் தேவ அரசு விரிவாக்கப்பணியில் ஈடுபட எம்மைப் பக்குவப்படுத்தும். ஆமேன்.