மந்தை குணம்
மாற்கு 15 : 6-11 06 ஏப்ரல் 2022, புதன்
“பரபாசை… விடுதலை செய்ய… ஜனங்களை ஏவிவிட்டார்கள்.” – மாற்கு 15 : 11
ரோமர்களின் வழக்கப்படி அவர்கள் தெய்வங்களின் பண்டிகைகளில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். பஸ்கா பண்டிகையில் சிறையிலிருக்கும் பரபாஸ், மக்கள் கொண்டு வந்த இயேசு, இருவரில் இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து தீர்மானித்தான்.
பரபாஸ் குறித்த முழு விவரமும் தெரியவில்லை. பரபாஸ் போன்ற ஆட்சி எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் அநேகர் இருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. இவன் ஒரு கலகக்காரன். கொள்ளைக்காரன். அத்துடன் கலகத்தை உண்டு பண்ணினவன், கலகத்தில் பங்கு பெற்றவன். அதனால் மரண தண்டனை பெற்று சிறையில் இருந்தான் என்று அறிய முடிகிறது.
பிலாத்து, இயேசு கிளர்ச்சியாளர் அல்ல என்பதை உணருகிறான். பிரதான ஆசாரியரும் மக்களும் சதி செய்து இயேசுவை கொல்ல முயலுவதாக அறிந்தான். இயேசுவை சிறையில் அடைக்க முயற்சித்தான்.
சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பதும், அமைதி காப்பதும் இவன் பணி. யூதர்களிடமிருந்து வரிப்பணம் சரியாக வருவதை கண்காணிப்பதும் இவன் பணியாகும். இதற்கு பாதகம் ஏற்படாமல் இருக்க மக்களின் கூக்குரலுக்கு உடன்படுகிறான்.
பிலாத்து இயேசுவை விசாரணை செய்து குற்றமற்றவர் என்று கண்டான். ஆனால் இயேசுவை விடுவிக்க பிலாத்துவுக்கு துணிவுவரவில்லை. இயேசுவை விடுதலை செய்தால் தன்னை பேரரசருக்கு விரோதி என்று மக்கள் வதந்தி கிளப்பி விடுவார்கள். இதனால் தன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நீதியை கொலை செய்தான். பிலாத்துவின் சுயநலமும் கோழைத்தனமும் நீதியை குழிதோண்டி புதைத்து விட்டன. நீதி கோழைத்தனத்தால் கொல்லப்பட்டது.
மக்களுக்குப் பயந்து இயேசுவை அடிப்பித்தான். ஆனாலும் மக்களின் கொடூர மனதை மாற்ற முடியவில்லை. இவனுடைய கோழைத்தனத்தை மக்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள்.
பரபாசை விடுதலை செய்ய கேட்கும்படி அதிகாரவர்க்கம் மக்களை தூண்டி விட்டது. கொள்ளைக்காரனும், கொலைகாரனும் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறான். நல்லவர்கள் மக்கள் மனதில் இடம் பெறாமல் போவது இன்றும் இயற்கைதான்.
குற்றஞ் செய்தவன் தண்டிக்கப்படாமல் போகலாம். ஆனால், குற்றஞ் செய்யாதவன் தண்டிக்கப்படவே கூடாது. நீதிதுறையின் தலையாய விதி. இயேசுவின் வாழ்வில் இந்த விதி காற்றில் பறக்கவிடப்பட்டது.
உண்மையான பரம தகப்பனின் மகன் இயேசு. இயேசுவின் கீழ்ப்படதலினால் பரபாஸ் விடுதலையாக்கப்படுகிறான். பரபாசை மட்டுமல்ல முழு உலக மக்களையும் விடுதலை செய்ய இயேசு சிலுவையில் உயிர் துறந்தார். இயேசுவின் சிலுவை மரணம் நம்மை கடவுளின் உண்மையான மக்களாக மாற்றியிருக்கிறது. கடவுளின் மக்களாக வாழ்வோம்.
அன்பின் பரலோக பிதாவே, இயேசுவில் நாங்கள் உமது பிள்ளைகள் இந்த உறவில் என்றும் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.