About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

தவறான கணிப்பு

மாற்கு 8 : 31-33                              25 ஆகஸ்ட் 2022, வியாழன்

“ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; …..உமக்கு ….மோசேக்கு…..எலியாவுக்கு…. மூன்று கூடாரங்களைப் போடுவேன்.” – மத்தேயு 17 : 4

தீரு, சீதோன் எல்லைகளுக்குச் சென்றார் ஆண்டவர் இயேசு. பின்பு தம் சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவானுடன் தாபோர் மலைக்குச் சென்றார். அங்கு மறுரூபமானார். அப்போது பேதுரு கூறிய வார்த்தைகள்தான் தியானப்பகுதி.

இயேசுவின் மறுரூபமாகுதல் அவரை கடவுள் என அறிவித்தது. வானத்திலிருந்து வந்த சப்தம் இயேசுவை தேவகுமாரன் என சாட்சியிட்டது.

இச்சம்பவத்திற்கு முன் ஆண்டவர் இயேசு தம் சிலுவை மரணத்தை திட்டமாய் சீடரிடம் கூறியிருந்தார். சீடர் பேதுருவோ இங்கே தங்கியிருப்பது நல்லது என்றார். ஏனெனில் மோசேயும் எலியாவும் இயேசுவுடன் பேசினதைக் கண்ட போது பரலோகத்தில் தாம் இருப்பதாகவே எண்ணினார். இயேசுவுக்குப் பாடுகள் தேவையில்லை என்பது அவர் எண்ணம். அதனால் அங்கே தங்கியிருப்பது நல்லது என்றார்.

எலியாவும், மோசேயும் பழைய ஏற்பாட்டுப் பிரதிநிதிகள். எலியா கடவுளிடம் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்க்கர், மோசே கடவுளால் அடக்கம் செய்யப்பட்டவர். இவர்களை பேதுருவுக்கு இயேசுவே அடையாளம் காட்டியிருக்கலாம். இந்த இருவரும் எருசலேமில் இயேசு எதிர்கொள்ளப்போகும் சிலுவை மரணத்தைப் பற்றி பேசினார்கள். பயமிகுதியால் பேதுரு மனம் பதறி கூறினார்.

நற்செய்தியாளர் மாற்கு தனது நற்செய்தி நூலில் பேதுருவின் பேச்சினை மதியீனம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கூடாரங்களை அமைப்பது இயேசுவுக்கு மகிழ்ச்சி என தவறாக நினைத்தார் என்றும் கூறியுள்ளார்.

இயேசு, பேதுருவின் பேச்சுக்குப் பதில் கொடுக்கவில்லை. இயேசுவின் அமைதி பேதுருவை மறைமுகமாகக் கண்டித்தது.

இயேசு, எலியா, மோசே போன்றவர்கள் ஒரே அந்தஸ்தைப் பெற்றவர்கள் அல்லர். இயேசு மட்டுமே இரட்சகர். அந்த உண்மையும் பேதுருவுக்குப் புரியவில்லை.

‘சிலுவையில்லாமல் மேன்மை இல்லை’ என்பது புரியாமல் தூய பேதுரு தவித்தார். மறுரூபமான இயேசு எதிர்நோக்கப் போகும் பாடுகளைப் பேதுரு புரிந்து கொள்ளவில்லை.

இயேசுவின் மறுரூப காட்சியைக் கண்ட இயேசுவின் சீடர்கள், கிறிஸ்துவின் மகிமை சிலுவையில்தான் உள்ளது என்பதை பிற்காலத்தில் உணர்ந்தனர். மகிமையுள்ள கிறிஸ்துவுக்கு இம்மண்ணிலேயே சாட்சியாக வாழ்ந்தனர். நாமும் கிறிஸ்துவின் மகிமைக்குச் சாட்சியாக வாழ்வோம்.

கடவுளே! உமது மகிமையைத் தரிசித்து, உமது பிரசன்னத்தின் உதவியினால் சாட்சியுடன் வாழ்ந்திட அருள்செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

தவறான கணிப்பு2022-08-23T07:41:34+00:00

மன்னிப்பு

ஆதியாகமம் 45 : 3-8                         12 ஆகஸ்ட் 2022, வெள்ளி

“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னித்திருக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” – மத்தேயு 6 : 12

‘மன்னிப்பு’ எனும் சொல்லே, இன்றைய உலகில் மனித நேயத்தைக் கட்டி எழுப்பும் தாரக மந்திரம். எல்லாரையும் இணைக்கும் தெய்வீக குணம்.

தியானப்பகுதி, ஆண்டவர் இயேசு தம் சீடருக்குக் கற்றுக் கொடுத்த ஜெபத்தின் ஐந்தாம் மன்றாட்டைக் குறிப்பிடுகின்றது.

திருமறையில் பாவியான ஒருவர் கடனாளியாகவும், கடவுள் தமது பாவ மன்னிப்பினால் அந்த கடனைத் நீக்குபவராகவும் விளக்கப்படுகிறது.

இந்தக் கடனை நீக்குகிற செயல் முழுமையானது. சுத்திகரித்தல், கழுவுதல், ஏற்றுக் கொள்ளுதல் என்ற கருத்துக்கள் மன்னிப்புடன் இணைந்தே வருகின்றன. மன்னிக்கின்ற மனம் வேறுபட்ட இரு தரப்பாரையும் ஒன்றாக்குகிறது.

கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார். தவறிய மக்களுக்கு மறு வாழ்வுக்கான வாய்ப்பு கொடுத்து தம்மோடு இணைக்கிறார்.

மனுக்குலம் பாவம் செய்து தேவ மகிமையை இழந்தது. இயேசு எல்லாருக்காகவும் பாவ நிவாரண பலியாக மரித்தார். ஒரு பாவி தனது பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கை செய்து மன்றாடும்போது கடவுள் மன்னித்து அவனை அரவணைக்கிறார். நினிவே மக்கள் மனந்திரும்பிய போது கடவுள் தாம் முன்னுரைத்த தண்டனையை விலக்கினார். தம்மை ஏற்றுக் கொள்ளாத சமாரிய மக்களை இயேசு அழிக்கவில்லை. எவரும் அழிந்து போகாதபடி கடவுள் தமது குமாரன் இயேசுவை உலகில் அனுப்பினார்.
இம்மன்றாட்டை ஆராயும்போது, ‘மன்னித்திருக்கிறது போல’ என்ற வார்த்தை மன்னித்தால், மன்னித்திருக்கிற அளவின்படி, மன்னிக்கிற தன்மை என்ற பல கோணங்களைக் கொடுத்தாலும் கடவுள் அருளும் மன்னிப்பு மட்டுமே முதன்மை பெறுகிறது. நாம் மன்னித்தால்தான் இறைமன்னிப்புக் கிடைக்கும் என்பது பொருளல்ல.

இறைக் கிருபையினால் நாம் தினமும் மன்னிக்கப்படுகின்றோம். மன்னிக்க வேண்டும் என்று கற்பித்த இயேசு, சிலுவையில் தம்மை அறைந்தவர்களுக்காக மன்றாடினார். இறையடியார் ஸ்தேவானும் அம்மாதிரியை சாவிலும் பின்பற்றினார்.

பழிவாங்குதல், வன்மம் என்கிற பாவங்களுக்கு எதிரான நிலை மன்னிப்பே. ‘தீமையை நன்மையினாலே வெல்ல வேண்டும்’ இயேசுவில் இறைவனின் மன்னிப்பைப் பெற்றவர்கள் நாம். பிறரையும் மன்னித்து வாழ்வோம்.

இறைவா! உம்மால் மன்னிக்கப்பட்ட நாங்கள், பிறர் குற்றங்களையும் அன்பினால் மன்னித்து வாழ்ந்திட, எங்களைப் பெலப்படுத்தியருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

மன்னிப்பு2022-08-11T11:12:25+00:00

பாக்கியவான்கள்

1 கொரிந்தியர் 4 : 9-13                                10 ஆகஸ்ட் 2022, புதன்

“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, எல்லாவித தீயமொழிகளையும்….. சொல்வார்களானால் நீங்கள் பாக்கியவான்கள்.” – மத்தேயு 5 : 11

ஆண்டவர் இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில் நேரிடும் துன்பங்களை சீடர்களுக்கு முன்னறிவித்ததை கூறுகிறது தியானப்பகுதி.

பாக்கிய வசனங்களில் இதுவரை ‘அவர்கள்’ என்று படர்க்கையில் எதிர்காலச் சொல்லைப் பயன்படுத்தின இயேசு, இந்தப் பகுதியில் ‘நீங்கள்’என்று முன்னிலையையும் நிகழ்கால சொல்லையும் பயன்படுத்தினார். தம் சீடருக்கும் தம்மைப் போல் துன்பங்கள் உண்டு என்றார். உலகம் அவர்களைப் பகைக்கும் என்றார்.

அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி தங்கள் தொண்டர்களை கவருவார்கள். ஆனால் நமது வாழ்க்கை துன்பம் நிறைந்த தியாக வாழ்வு என்பதை இரட்சகர் இயேசு வெளிப்படையாகப் பேசினார். தம் சிலுவை மரணம் குறித்து பலமுறை சீடரிடம் தெளிவாக முன்னறிவித்தார்.

சீடர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் வரிசைப்படுத்திக் கூறினார். நிந்தனை, வன்முறைத் தாக்குதல், பொய்யாய் சுமத்தப்படும் தீய மொழிகள் என்பவற்றை சீடர்கள் எதிர்கொள்வார்கள் என்றார்.

தவறுகள் செய்து துன்பங்கள் அனுபவித்தால் பலனில்லை. கிறிஸ்துவினிமித்தம் துன்பமடையும்போது பலன் உண்டு. கிறிஸ்துவில் மன்னிப்புச் செய்தியை அறிவித்த சீடர்கள், துன்பம் அனுபவித்தனர். ஆயினும் அத்தகைய பாடுகளுக்குப் பங்காளிகளானதற்காக மகிழ்ச்சி அடைந்தனர்.
இறையடியார் தானியேலையும், எஸ்தர் காலத்து யூதரையும் இயேசுவின் சீடரையும் துன்பம் சூழ்ந்தது. இருப்பினும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர். தூய பவுல் நற்செய்தியினிமித்தம் துன்பங்களையும் முடிவில் மரணத் தண்டனையும் அடைந்தார்.

பாடுகளை கிறிஸ்துவினிமித்தம் சகிக்கும் போது பரலோகத்தில் பலன் மிகுதியாயிருக்கும் என்கிறது திருமறை.

சிலுவை மற்றும் பாடுகளற்ற கிறிஸ்துவத்தை பலர் போதிக்கின்றனர். மக்களும் அதை எதிர்பார்க்கின்றனர். சிலுவையின் உபதேசத்தை விட செழிப்பு குறித்த உபதேசம் மக்களால் வரவேற்கப்படுகிறது என்பது கசப்பான உண்மை. ஆனால் இது திருமறை கூறும் செய்திக்கு எதிரானது.
“சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மை பற்றினேன்” எனும் பாடல்வரிகள் நம்மை சிந்திக்க வைக்க உதவட்டும்!

கடவுளே! கிறிஸ்துவின் நிமித்தமும், நற்செய்தியினிமித்தமும் நேரிடும் துன்பங்களை உமது பெலத்தால் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள எங்களுக்கு உதவியருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

பாக்கியவான்கள்2022-08-09T09:24:03+00:00

நல்லாலோசனை

சங்கீதம் 33 : 10-15                              29 ஜூலை 2022, வெள்ளி

“நீ செய்த ஆலோசனையினால் உன் வீட்டுக்கு அவமானம் வரும்.” – ஆபகூக் 2 : 10

சில நண்பர்கள் கூடி எளிதான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி என ஆலோசித்தனர். நேர்வழியில் சம்பாதிப்பதைவிட குறுக்கு வழியில் சம்பாதித்தால் சீக்கிரம் செல்வந்தர்களாகி விடலாம் என்று எண்ணி அதற்கான செயல்களில் இறங்கினர். திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டனர். முதலில் தப்பி வந்த அவர்கள் கடைசியில் காவல் துறையினரிடம் மாட்டிக் கொண்டனர். விளைவு இப்போது அவர்கள் சிறையில் இருக்கின்றனர். அவர்களுடைய பெற்றோர் ஊரில் தலைகாட்ட முடியவில்லை.

நல் ஆலோசனையினால் மனிதனுக்குப் புகழ்ச்சி வரலாம். ஆனால் தீய ஆலோசனைகளால் அவமானம் ஏற்படுகின்றன. பாபிலோன் தேசத்தாரின் தீய ஆலோசனைகளால் விளைந்த செயல்கள் அவர்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தும் என்பது தீர்க்கரின் கணிப்பு.

மதுபானம், கொள்ளை, ரத்தம் சிந்துதல், கொடுமை போன்ற செயல்களைச் செய்த பாபிலோனுக்கு அவமானமே ஏற்படும்; புகழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இல்லை. தீய ஆலோசனையினால் பாபிலோன் நாடு, யூதா நாட்டிற்குச் செய்த கொடுமைகள் ஏராளம். இதனால் பாபிலோன் நாட்டிற்கே அவமானம் ஏற்படும் என்று ஆபகூக் தீர்க்கத்தரிசனம் உரைத்தார். நம்முடைய ஆலோசனைகளும் செயல்களும் நம் வீட்டிற்கு, நாட்டிற்கு, எல்லா வற்றுக்கும் மேலாக இறைவனுக்குப் புகழ்ச்சியைத் தருகின்றனவா? அல்லது அவமானத்தை ஏற்படுத்துகின்றனவா? வீடு அவமானப் படுவதை விரும்பாத நாம், தீய ஆலோசனைகளை கேட்டு வீட்டை அவமானப் படுத்தாதிருப்போம். நல் ஆலோசனைகளைப் பெற நாம் இயேசுவிடம் வருவோம். ஏசாயா இவருடைய பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கும் போது, அவரை ‘ஆலோசனைக் கர்த்தர்’ எனக் குறிப்பிடுகின்றார்.

கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும் அவர் இருதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைக்கும், நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு போதித்து உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற வசனங்கள் இறை ஆலோசனையின் நன்மையை, வல்லமையை நமக்கு விளக்குகிறது. நமது வாழ்க்கையைக் கடவுளின் வசன வெளிச்சத்தில் நடத்துவோம். இறை ஆலோசனைகளைக் கேட்போம். வீட்டிற்கும் இறைவனுக்கும் பெருமை சேர்க்கும் நற்செயல்கள் செய்து கடவுளுக்கு மகிமையாக வாழ்வோம்.

ஆலோசனைக் கர்த்தரே! தமது நல் ஆலோசனை களை நாடி அதன்படி வாழ்ந்திட திருவருள் புரிந்தருள்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

 

நல்லாலோசனை2022-07-27T12:20:23+00:00

நியாயமான கோபம்

யாக்கோபு 1 : 19-22                     22 ஜூலை 2022, வெள்ளி

“அவருடைய உக்கிர கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய சினத்தைச் சகிப்பவன் யார்?” – நாகூம் 1 : 6

இயற்கையின் சீற்றத்தால் உருவாகும் சுனாமி, புயல், பெருமழை, பூமியதிர்ச்சி இவற்றைத் தடுக்க முடியுமா? சகிக்க முடியுமா? இவற்றால் நாடே நிலைகுலைந்து போகின்றது. அதுபோல சில மனிதருடைய கோபத்தினால் வீடே அல்லோலகல்லோலப்படும்.

எல்லாவற்றையும் படைத்து தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கடவுள் கோபப்பட்டால் என்ன நடக்கும்? யார்தான் அவர் முன்பாக நிற்க முடியும்? கடவுள் அப்படி உக்கிரமாகக் கோபப்படக் காரணம் நினிவே நகரத்தின் பாவமாகும். அசீரியா நாட்டின் தலைநகரான இந்த நினிவே நகரத்தின் பாவமும் தீமையும் இறைச் சமூகத்தை எட்டின. இது இரண்டாவது முறை. ஏற்கனவே யோனா தீர்க்கர் மூலம் எச்சரிக்கப்பட்டு அழிவினின்று தப்பிய நினிவே மக்கள் மீண்டும் பாவம் செய்து இறைவனின் கோபத்திற்கு ஆளாகி நின்றனர். அதுவரை பொறுமை காத்த இறைவன் பொறுமையிழந்தார்.

நம் இறைவன் அன்புள்ளவர்; இரக்கமுள்ளவர்; நீடிய பொறுமையுள்ளவர். அவருடைய கோபம் நம்முடைய வாழ்வுக்காகவே. நாம் தீமைகளினின்று விடுபட்டு சமாதானமாய் வாழ வேண்டுமென்பதே அவர் விருப்பம். எருசலேம் ஆலயத்தை வியாபார வீடாக மாற்றியிருந்த யூதர்களை இயேசு கண்டித்தார். இயேசுவின் மீட்பின் திட்டத்துக்கு எதிராகப் பேசிய பேதுருவே அதட்டப் பட்டார்.

நமது பாவத்தின் விளைவு, தேவ கோபம், நமக்குத் தண்டனை. ஆனால் பரம தந்தை கிறிஸ்து இயேசுவை நமக்காகப் பாவமாக்கினார். சிலுவையில் தேவ கோபத்தை நிறைவேற்றி நம்மை விடுதலை செய்திருக்கின்றார். தேவக் கோபத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் நாம். எனவே கோபம் தவிர்த்து சாந்தத்தைத் தரித்துக் கொள்வோம். கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள். உங்கள் கோபம் சூரியன் மறையுமுன் மறைவதாக என்பன திருமறை வார்த்தைகள். இறைக்கோபம் நம்மைத் திருத்த வல்லது. கோபம் கொண்டாலும் இறைவன் என்றென்றும் கோபம் கொண்டிரார். இறைமக்களான நாம் நமது கோபப் பொறியினால் வீட்டைக் கொழுத்தாதிருப்போம்.

நியாயமான கோபம் கொள்ளும் கடவுளே! உம் மைந்தன் இயேசுவை எனக்காகத் தண்டித்தீர் என்பதை உணர்ந்து, பிறருடன் நல்லுறவுடன் வாழ்ந்திட அருள்புரிவீராக. இயேசுவின் வழியே ஆமேன்.

நியாயமான கோபம்2022-07-21T12:21:00+00:00

இயற்கையின் கீழ்ப்படிதல்

2 தீமோத்தேயு 4 : 16-18                              06 ஜூலை 2022, புதன்

“கர்த்தர் மீனுக்குக் கட்டளையிடவே அது யோனாவைக் கரையிலே கக்கி விட்டது.” – யோனா 2 : 10

சர்க்கஸ் ஒன்று மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் சிறப்புக் காட்சியாக சிங்கத்தின் வாயில் ஒருவர் தலையை நுழைத்து எடுக்கும் காட்சி அமைந்திருந்தது. ஏராளமான பேர் அதைக் கண்டு களித்தனர். பல நாட்களாக நடைபெற்ற அந்நிகழ்ச்சி ஒரு நாள் சோகத்துடன் முடிந்தது. அன்று சிங்கம் தன் வாயினுள் தலையை நுழைத்தவரைக் கொன்றது. பல நாட்கள் கீழ்ப்படிந்த அச்சிங்கம், ஒரு நாள் கீழ்ப்படிய மறுத்து தன் இயல்பான குணத்தைக் காட்டி விட்டது.

யோனா சம்பவத்தில் மீன் கடவுளின் கட்டளையைச் சரியாக நிறைவேற்றியதைப் பார்க்கிறோம். கடலில் தத்தளித்து உயிருக்குப் போராடிய யோனாவை மீன் காப்பாற்றி கரையில் சேர்த்தது. இது கடவுளின் கட்டளைப்படியே நடைபெற்றது. கடவுளின் கட்டளையை நிறைவேற்ற இயற்கையும், உயிரினங்களும் தவறுவதில்லை. மனிதர்கள் தான் பல பொழுதுகளில் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்ற விரும்புவதில்லை.

கடலில் இயேசுவும் சீடர்களும் சென்ற போது பயங்கர புயல் வீசியது. சீடர்கள் பயத்தினால் அலறியபோது இயேசு எழுந்து இரையாதே, அமைதலாயிரு என்றார். காற்றும் புயலும் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அமைதலாயின. கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பது தீமையில் போய் முடியும் என்பதை யோனா இறுதியாக அறிந்து கொண்டார். இயற்கையே கடவுளுக்குக் கீழ்ப்படியும் போது கடவுளின் ஊழியக் காரராகிய தான் கீழ்ப்படிய மறுப்பது சரியாயிருக்குமோ என்று உணர ஆரம்பித்திருந்தார். எனவே தான் இரண்டாவது முறை கர்த்தர் அவருக்குக் கட்டளையிட்ட போது வேறு வழியின்றி அவருக்குக் கீழ்ப்படிந்தார்.

நமது வாழ்விலும் இறைவனின் கட்டளையை மறந்து அல்லது கவனிக்காமல் சுய முடிவுகளின் படி ஓடிக் கொண்டிருப்போம். தொடர்ந்து ஓட இயலாத நிலை வரும் போது தான் இறைவனிடம் திரும்ப முயல்வோம். இது மனித பலவீனம். இதை மேற்கொள்ள இறைத்துணை நாடுவோம். இறைச்சித்தம் செய்யும் நம்மை இன்றைக்குத் துன்பத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் இறைவன், நம் வழியாகப் பிறரையும் காப்பாற்ற விரும்புகிறார். அழிவிற்கு தயாராக இருக்கும் மக்களை, வாழ வழியின்றித் தவிக்கும் எளியோரை இரட்சிப்பின் பாதைக்குள் கொண்டு வர நம்மை அனுப்புகிறார். யோனாவைப் போல் சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம். இறையுத்தரவுக்குக் கீழ்ப்படிவோம். கீழ்படிந்து கர்த்தரின் நாமம் மகிமைப்பட அவருக்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.

இரக்கமுள்ள கடவுளே! உமக்குக் கீழ்படிந்து உமது சித்தப்படியே இறைப்பணியைச் செய்யும் உணர்வைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

இயற்கையின் கீழ்ப்படிதல்2022-07-05T09:15:41+00:00

பயப்படாதிருங்கள்

ஏசாயா 44 : 6-8                                14 ஜுன் 2022, செவ்வாய்

“நீங்கள் திகைக்கவும் பயப்படவும் வேண்டாம்,” – ஏசாயா 44 : 8

நீங்கள் வீட்டில் தனிமையாயிருக்கும் போது கதவு தானாக திறந்தால் என்ன செய்வீர்கள். பயந்து போவோமல்லவா? அதே சமயம் உங்கள் கணவரோ அல்லது மனைவியோ வந்து நான்தான் பயப்பட வேண்டாம் என்று கூறினால் சற்று அமைதி அடைவோம் அல்லவா?

கடவுளும் இதே போல் தான் பயப்படாதே என்கிறார். என்னைப் போன்ற வேறு தெய்வம் உண்டோ என்றும் என்னைப் போன்ற கன்மலை எங்கும் உண்டோ என்கிறார் இவரே நம்முடைய ஒரே கடவுளாக இருக்கிறபடியால் வேறு எதற்கும் நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை.

விநோதமான சப்தங்கள் நம்மை பயமுறுத்தினாலும் ஒரே கடவுள் நம்மோடு இருக்கிறபடியால் நாம் எதற்கும் பயப்படோம்.

ஆனால் நாம் எதிர்காலத்தை பாழாக்கி கொண்டிருக்கிறோம். மனுக்குல வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் தெய்வங்களை மனிதன் பயமுறுத்தும் சக்திகளாகவே எண்ணி வந்தான் என்று அறியலாம். அவ்வாறு பயப்படவில்லையெனில் அந்த தெய்வங்கள் குடும்பத்தை அழித்துவிடும் என்றும் நோய்களை தரும் என்று பண்ணைகளை இல்லாமலாக்கும் என்றும் நம்பினர்.

நாம் இப்படிபட்ட எண்ணத்தை விட்டு வெகுதூரம் வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தெய்வங்களை வழிபடாமல் இருக்கலாம். ஆனால் பணம், புகழ், அதிகாரம் போன்றவற்றின் வழியாக அத்தெய்வங்கள் வெளிப்படுகின்றன. இவைகள் பழைய பயமுறுத்தும் தெய்வங்களைப்போன்றே இருக்கின்றன. இவைகள் தங்கள் வல்லமையை பயன்படுத்தி நம்மை பாடுபடுத்தி, பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவைகள் பாதுகாப்பான கடவுள்கள் அல்ல ஆபத்தான சக்திகள்.

கடவுள் முதலும் இறுதியுமானவர் அவரையல்லாமல் வேறு கடவுள்கள் இல்லை என்று நம்புகிற நாம் இத்தகைய வல்லமைகளுக்கு ஏன் பயப்பட வேண்டும். ஆனால் இவைகளுக்கு தான் பெரிய வல்லமை என்று எண்ணக்கூடாது. நம்முடைய கடவுளே கன்மலையானவர் வல்லமை மிகுந்தவர், சர்வ வல்லவர்.

நமது ஆண்டவர் பாதுகாப்பானவர். நம்மை கைவிடாத அடைக்கலமுமானவர். அவர் பாறையை போன்று உறுதியாக நின்று நமக்கு எதிராக வருபவைகளை தூள் தூளாக்குவார். நாம் அவருடையவர்கள், எனவே நாம் சங்கீதம் 46-ஐ பாடலாக பாடுகிறோம். “கர்த்தர் தான் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே” என்று. இவ்வுலகம் பயமுறுத்தினாலும் நாம் கலங்கோம் மலைகள் விலகினாலும் நாம் பயப்படோம்.

பிதாவே! நாங்கள் உம்மில் உறுதியான நம்பிக்கைக் கொள்ள உதவும். நீர் ஒருவரே எங்களுக்குப் பாதுகாப்பை முழுமையாக அருள வல்லவர் என்பதை உணர உதவி செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

பயப்படாதிருங்கள்2022-06-13T10:16:34+00:00

திருப்தி

சங்கீதம் 65 : 2-4                                        06 ஜுன் 2022, திங்கள்

“உமது பரிசுத்த ஆலயமாகிய வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.”  – சங்கீதம் 65 : 4(b)

தவறு செய்தல் இயல்பான ஒன்று. தவறுகள் எங்கேயிருந்தாலும் அதை ஆராயும் மனோபாவம் நமக்குண்டு. நாம் தவறு செய்திருந்தாலும் அதை அறியும் போது வெட்கப்படுகிறோம். நமது குற்றம் பெரிதென்றும் மன்னிக்கப்பட முடியாதென்றும் உணருகிறோம். பாவ சுமையையும் குற்ற பாரத்தையும் விட முயற்சிக்கிறோம். குறைந்தது அதை மறைக்க பிரயாசை படுகிறோம்.

இதற்காக சில சமயங்களில் மதுவையும் போதை பொருட்களையும் நாடுகிறோம். இது பாவத்தின் மேல் பாவத்தை கூட்டுகிறது. ஒரு முறை பயன்படுத்திய பின் மேலும் அதை நாடத் தூண்டும். அதை ஊக்குவிப்பதற்கே சில தவறான வழிகாட்டிகள் நமக்கு வந்து விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் “சமாதானம் சமாதானம் என்பர் ஆனால் சமாதானம் இருப்பதில்லை.” (எரேமியா 6:14)

உண்மையான சமாதானம் பாவ மன்னிப்பில் தான் உள்ளது. உண்மையான உதவி என்பது, பாவம் நம்மை ஆட்கொள்ளும் போது நமது ஜெபத்தை கேட்கும் ஒருவராலே ஆகும். நமது மீறுதல்களுக்கான பரிகாரம் செய்தவர் கிறிஸ்து.

பாவத்திற்கு இன்னொரு பெயர் ‘மீறுதல்’ ஆகும். எல்லை மீறுதல் என்பது வரையறுக்கப்பட்ட கோட்டை தாண்டுவது ஆகும். மானிடர்க்காக தாம் வழங்கிய பத்துக் கற்பனைகளை கொண்டு கடவுள் மனிதரின் மனதில் ஒரு கோடு வரைந்துள்ளார். ஆனால் நாம் அதை தாண்டுகிறோம். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் அவர்களிடமிருந்து பெற்ற முரட்டாட்டத்தால் இதை செய்கிறோம்.

எதை செய்யக் கூடாதோ அதை செய்கிறோம். கடவுள் கட்டளையிட்ட நன்மையானதை செய்ய தவறுகிறோம். கடவுளின் சந்நிதியை விட்டு ஓடிப்போன ஆதாம் ஏவாளைப் போல நாமும் கடவுளை விட்டு தூர விலகுகிறோhம். உங்கள் அக்கிரமங்களே, கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே பிரிவினை உண்டாக்குகிறது.(ஏசாயா 59:2)

நமது மீறுதல்களுக்கான பரிகாரமாக வந்தவர் இயேசு. கடவுளோடு ஒப்புரவாகவும், கடவுளோடு ஒன்றுபட்டு நிற்கவும் செய்ய அவர் வந்தார். நமது இரட்சகர் ஒருபோதும் மீறுதல்களை செய்தவரல்ல. கடவுளின் கற்பனைகளின் எல்லைகளை தாண்டியதில்லை. தீமையறியாத கடவுளின் குமாரன் நமது மீறுதல்களின் பாரத்தை சுமந்தார். அவைகளை சிலுவையில் சுமந்தார். மரண தீர்ப்பை நமக்காக ஏற்றார். கிறிஸ்துவின் வழியாக கடவுள் நம்மோடு ஒப்புரவானார். அவருடைய இரத்தத்தினால் நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணினார் (கொலோ 1:20)

தெரிந்தெடுக்கப்பட்டு அருகே கொண்டு வரப்பட்டவர் பாக்கியவான். நற்செய்தி வழியாக பரிசுத்த ஆவியானவரால் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த நற்செய்தி கடவுள் நமக்காக செய்தவையாகும். பாவபாரம் அவரால் நீக்கப்படுகிறது. நாம் பாவத்தை சிலுவையின் அருகே விட்டுவிட்டு மனந்திரும்பியிருக்கிறோம். நமது குற்றங்கள் என்றென்றும் விழுங்கப்பட்டதால் வெறுமையான கல்லறை போல் நாம் திருப்தியடைகிறோம்.

ஆண்டவராகிய கடவுளே, நீர் எங்கள் விண்ணப்பங்களை கேட்டு எங்கள் பாவங்களை மன்னித்திருக்கிறீர். உமது செயல்களால் எங்களை திருப்தியாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.

திருப்தி2022-06-06T06:07:12+00:00

கர்த்தரின் செய்கைகள்

சங்கீதம் 145 : 1-6                                       29 மே 2022, ஞாயிறு

“ஒரு தலைமுறை வருந்தலைமுறைக்கு உமது செய்கைகளின் புகழைச் சொல்லும்.” – சங்கீதம் 145 : 4

ஒரு காந்தியவாதி இவ்விதம் வேதனையோடு குறிப்பிட்டதை, வாசிக்க நேர்ந்தது. ‘வரும் தலைமுறைக்கு பணத்தாளில் தான் காந்தியைக் காண்பித்து, அவர்தான் தேசப்பிதா என்று சொல்லித் தரவேண்டிய சூழல் வரும். அதுவும் இல்லாமல் போனால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,’ என்று குறிப்பிட்டு இருந்தார். கடந்தகால வரலாறை மறந்து போவது இயல்பானதாக இருக்கிறது. நமது குடும்பத்தைப் பற்றிப் பேசுவதற்குக்கூட நமக்கு இப்பொழுது நேரம் இல்லை. தாத்தா பாட்டிகளும் கூட இல்லை. ஏனெனில் அவர்கள் இருப்பது முதியோர் இல்லத்தில். ‘அந்தக்காலத்தில் நாங்கள்’ என்ற சொற்றொடரை சொல்லுவது கூட குறைந்துக்கொண்டு வருவது நிதர்சனமான உண்மை.

தியான பகுதியில் சங்கீதக்காரன் கடவுளின் செயல்களை ஒரு தலைமுறை வருந்தலைமுறைக்கு அறிவிக்கும் என்று குறிப்பிடுகிறார். கடவுள் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தபிறகு , அந்த விடுதலையை நினைத்து பஸ்கா பண்டிகையை ஆசாரிக்க கூறினார். பண்டிகை ஆசாரிக்கும் போது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கடவுள் எவ்விதம் விடுதலைத் தந்தார் என்பதை சொல்வர்கள். என் தகப்பன் சிரியா தேசத்தான். அலைந்து திரிந்தவன். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது கடவுள் தமது புய பலத்தினாலும் வல்லமையினாலும், விடுவித்தார் என்பதை தங்களின் விசுவாச அறிக்கையாகக் கொண்டு தலைமுறை தலைமுறைக்கும் சொல்லித்தர கடவுள் கட்டளையிட்டார். இவ்விதமாக கடவுளின் செயல்களை இஸ்ரவேல் மக்கள் சொல்லி வந்தனர்.

நம்முடைய வாழ்வில் கடவுள் செய்த மிக பெரிய செயல் – நம்மை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தம்முடைய குமாரனை அனுப்பியது அவரை நமக்காக பதிலாளாக்கியது. நம்முடைய தண்டனையை அவர் மேல் சுமத்தியது. சிலுவை மரணத்தின் வழியாக பாவமன்னிப்பாகிய மீட்பை நமக்கு தந்தது.

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கில் மீட்பைப் பெற்றோம். திருவிருந்தில் பங்கேற்கும் போது ஆண்டவர் வருமளவும் அவரின் மரணத்தைப் பிரஸ்தாபப்படுத்துகிறோம். கர்த்தர் இயேசுவில் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புகழந்துப் பாடுவோம்.

அன்பின் இறைவா! நாங்கள் இயேசுவில் பெற்றுக்கொண்ட விடுதலையை தலைமுறை தலைமுறைக்கும் சொல்லி வாழ உதவி செய்தருளும் இயேசுவின் வழியே ஆமேன்.

கர்த்தரின் செய்கைகள்2022-05-27T08:38:18+00:00

கடவுளின் கைவேலை

எபேசியர் 2 : 8-10                                  26 மே 2022, வியாழன்

“நாம் கிறிஸ்து இயேசுவுக்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்களும், கடவுளின் கை வேலையுமாயிருக்கிறோம்.” – எபேசியர் 2 : 10

ஒரு சிறுவன் மரக்கப்பலைச் செய்ய விரும்பினான். தந்தையின் ஆலோசனையின்படி தண்ணீரில் மிதக்கும் ஒரு கப்பலை செய்ய ஆரம்பித்தான். மிக நேர்த்தியான வேலைப்பாடுடன் செய்தான். அழகான கப்பல் செய்து முடித்தான். மிக்க மகிழ்ச்சியோடு அக்கப்பலை தண்ணீரில் விடவும் அது எவ்விதம் செயல்படுகின்றது பார்க்க ஆசைப்பட்டான். ஆனால் ஆற்றில் வெள்ளம் அதிகம் என்பதால் கப்பல் விட சிறுவனின் அம்மா அனுமதிக்கவில்லை. சிறுவன் செயல்படாத கப்பலை நான் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று வினாவோடு இருந்தான்.

தியான பகுதியில், பவுல் அடிகளார் நாம் கடவுளின் கைவேலைப்பாடுகள் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் உருவாக்கப்பட்ட கைவேலைப்பாடுகள் என்றும் நற்செயல் செய்வதற்கென்று உருவாக்கப்பட்டோம் என்று குறிப்பிடுகிறார். கடவுள் மனிதனை தமது சாயலில் படைத்தார். ஆனால் மனிதனோ கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினால் கடவுளின் சாயலை இழந்துபோனான். கடவுளின் உறவை இழந்தான். கடவுளே தமது கிருபையினால் மனித உறவை சரிப்படுத்த தமது குமாரனை அனுப்பினார். குமாரனும் சிலுவை மரணத்தினால் மனிதனை பிதாவாகிய கடவுளுடன் ஒப்புரவாக்கிக்கொண்டார். ஒப்புரவாக்குதலின் பலன் மனிதன் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டியாக்கப்பட்டான். இந்த நிலையே கடவுளின் கைவேலை என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் கடவுளின் கைவேலையாக இருக்கின்ற நாம் நற்காரியங்களைச் செய்ய எதிர்பார்க்கிறார்.

அன்பானவர்களே ‘கிருபையினால் விசுவாசித்தினால் இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல. கடவுளின் ஈவு’, என்ற திரு வார்த்தையின் படி நாம் கிறிஸ்துவுக்குள் கடவுளின் கைவேலையாக இருக்கிறோம். நற்செயல்கள் நம்மில் வெளிப்பட கடவுள் எதிர்பார்க்கிறார். கடவுள் கிறிஸ்துவில் நம்மில் அன்பு கொண்டது போல் நாமும் அன்புகூரவேண்டும். அவர் நமது பாவங்களை மன்னித்தது போல நாமும் மன்னிக்கவேண்டும். அவர் நமது பாரங்களைச் சுமந்தது போல நாமும் அயலானின் பாரத்தை சுமக்க வேண்டும். கிறிஸ்துவை நம் வாழ்வில் காண்பிக்கவேண்டும். கடவுளின் கைவேலைப்பாடாக நற்செயல்களைச் செய்து வாழ கடவுள் அருள் செய்வாராக. ஆமென்.

கடவுளே, கிறிஸ்துவுக்குள் உமது கைவேலைப் பாடாக இருக்கின்ற நாங்கள் உமக்குச் சாட்சிகளாக வாழ கிருபை செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

கடவுளின் கைவேலை2022-05-25T07:20:54+00:00
Go to Top