vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 617 blog entries.

பரம பாதை

சங்கீதம் 24 : 1-5          18 ஏப்ரல் 2021, ஞாயிறு

“அதன் நுனி வானத்தை எட்டியிருந்தது, …தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய்…” – ஆதியாகமம் 28 : 12

உறக்கத்தில், கனவில் அதிசயமான காட்சிகளைச் சிலர் காண்பர்.  இவை அர்த்தமுள்ளதாகவும் சமகாலப் பொருத்தம் உள்ளதாகவும் இருக்கக் கூடும்.  இது போன்ற காட்சிகள் வழியே கடவுள் தங்களோடு பேசினதாக நினைப்பர்.  இவற்றைத் ‘தரிசனம்’ என்றும் கூறுவர்.  யாக்கோபு என்பவர் தனது உடன்பிறப்பாம் ஏசாவை ஏமாற்றினார்.  ஆகவே உடன்பிறந்தவருக்கு அஞ்சினார் யாக்கோபு.  தந்தையின் அனுமதியுடன் வேறு ஊருக்கு ஓட்டம் பிடித்தார் யாக்கோபு.  அங்கே யாக்கோபு இரவில் படுத்திருந்த இடத்தில் கண்ட கனவுக் காட்சிதான் இன்றைய தியானப் பகுதி.  யாக்கோபு தவறு செய்தார்.  இருந்தாலும்  தேவதூதர் பரலோகத்திற்கு ஏறுகிறதையும் இறங்குகிறதையும் கண்டார். இறைவனின் அன்பும் கருணையும், தனது ஏமாற்று வேலையை மன்னித்துவிட்டது என்று நம்பினார் யாக்கோபு. மோட்சம் பரலோகம் என்ற சொற்களால் கடவுளின் இராஜ்யம் நம்மை விட்டு வெகு தொலைவில் இருப்பதாக நம்புகின்றோம்.  யாக்கோபுவின் சாட்சி, கடவுளின் ஆட்சி நமக்கு அருகில் இருப்பதைக் காட்டுகிறது. பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் தொடர்பு இருக்கின்றது என்பதை இக்காட்சி உறுதிசெய்கிறது.  இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு பரலோக ஏற்றம் அத்தனையும் மனிதராகிய நாம் விண்ணகத்திற்கு வெகு அருகில் இருக்கின்றோம் என்று நினைவுபடுத்துகின்றது.

இயேசுவால் பரலோகம் நம்மை நோக்கி இறங்கியது.  இயேசுவின் உயிர்ப்பும் விண்ணக ஏற்றமும் நம்மை விண்ணகத் தொடர்புள்ளவர் களாக்கியிருக்கின்றது.  இறையவர் கருணையால் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.  நமது மனமும் வாழ்வும் திருத்தம் பெறுகின்றன. விண்ணகப் பிரஜைகளாகத்தான் நாம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தியான வரியில் இந்த உண்மை ஊர்ஜிதம் ஆகின்றது.

விண்ணக உரிமையாளரே!  மண்ணில் பிறந்து பாவத்தில் உழலுகின்ற எம்மை மன்னிக்கின்றீர். விண்ணகக் குடியுரிமை எமக்கு உம்மால் வழங்கப்படுகின்றது. நன்றி. விண் ஏறிய இயேசு வழியே ஆமேன்.

பரம பாதை2021-04-16T09:57:06+00:00

சந்தோஷ சந்திப்பு

3 யோவான் 13-15        17 ஏப்ரல் 2021, சனி

“நமது சந்தோஷம் நிறைவாகும்படி உங்களிடம் வந்து முகமுகமாய்ப் பேசலாமென்று…” – 2 யோவான் 12

தொலைபேசி, கைபேசி போன்றவை பழக்கத்திற்கு வந்த பின்பு, செய்திகள் மிக விரைவில் சென்றடைகின்றன.  ஆனால் மனிதர் ஒருவரை ஒருவர் முகமுகமாய்ப் பார்த்துப் பேசும் வாய்ப்பு குறைந்துவிட்டது.  உறவுகளிடையே இருந்த நெருக்கம், பரஸ்பர அன்பு, நம்பிக்கை போன்ற மனிதப் பண்புகள் குறைந்துகொண்டேபோகின்றன.  கடிதம் என்று நமது காலத்தில் சொன்னால், மூன்று முதல் ஐந்து நாட்களில் சென்றடையும். ‘கூரியர்’ என்றால் மறுநாளே கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பவுல், யோவான் காலத்தில் கடிதங்கள் போய்ச் சேர வாரக்கணக்கானது என்பது நமது நினைவில் வருவது அவசியம்.

என்றாலும் யோவான் மூன்று கடிதங்கள் எழுதினார். ஆனால் யோவான் மனதில் இருந்ததை தியான வரி சுட்டிக் காட்டுகிறது.  மக்களோடு நேரில் பேச விரும்பினார் யோவான்.  முகம் பார்த்துப் பேசுவதால், நேரடிச் சந்திப்பால் சந்தோஷம் நிறைவாகும் என்று எழுதினார்.  ‘அடேயப்பா …அவனா?  …அவன் பேசவே காசு கேட்பான்’;  ‘உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு’; ‘நேரிலே வரணும் வரணும்ன்னு நெனச்சேன், இப்போத்தான் முடிஞ்சுது’ இதுபோல நாம் பேசியிருப்போம். முகமுகமாய்ப் பேசுவதின் மகிழ்ச்சி பற்றி நமக்கும் தெரியும்.  ஏனென்றால் நேரில் பேசும்போது சத்தம் மட்டும் கேட்பதில்லை, நமது ஐம்புலன்களும் பேசும்போது பயன்படுகிறது.  ஆகவே சந்தோஷம் பல மடங்காகிறது. கடவுள் ஆதாம் ஏவாளுடன் பேசினார்.  மோசேயுடன் பேசினார். தீர்க்கர்களிடம் பேசினார்.  நிறைவாக இயேசு வழியே நம்மிடம் முகமுகமாய்ப் பேசினார்.  பேசுகிறார்.  கடவுள் நம்மைச் சந்தித்தார். இரட்சிப்பை, மீட்பை, பாவமன்னிப்பை நேரில் நமக்கு வழங்குகிறார்.

இயேசுவின் சந்திப்பைப் பற்றி நாம் இன்னொருவருக்கு முகமுகமாய் அறிவிப்போம்.  நமது மகிழ்ச்சி பல மடங்கு ஆகட்டும்.

எம்மோடு பேசுகிற இறைவா! நன்றி.  நாங்களும் பிரார்த்தனையில் உம்முடன் பேசுகிறோம்.  இந்தப் பேச்சு வார்த்தை தொடர, வளர இதனால் சந்தோஷம் பெருகிட அருள் தாரும். இயேசு வழியே ஆமேன்.     

சந்தோஷ சந்திப்பு2021-04-16T09:55:45+00:00

சிறுமையில் மகிழ்வு

பிலிப்பியர் 2 : 28-30           12 ஏப்ரல் 2021, திங்கள் 

“என்னுடைய இந்தச் சந்தோஷம் சம்பூரணமாயிற்று. அவர் பெருக வேண்டும்;நானோ சிறுகவேண்டும்.” – யோவான் 3 : 29

தியானவரி, முழுக்கு முனிவர் என்று பெயர் பெற்ற யோவான் கூறியது.  யோவான் இயேசுவையே அவர் என்று குறிப்பிடுகிறார்.  இயேசு யோவானை விட இளமையானவர்.  யோவானுடைய பிரசங்கத்திற்கும் ‘சுத்திகரிப்பின்’ ஞானஸ்நானத்திற்கும் பெரிய கூட்டம் கூடிற்று.  இயேசு யோவானால் திருமுழுக்குப் பெற்றவர்.  இந்த நிலையில், இயnசு திருமுழுக்குக் கொடுக்கத் துவங்கினார்.  இதை அறிந்தவர்கள் யோவானிடம், நேற்று வந்தவன் திருமுழுக்குக் கொடுக்கிறான் …என்று பொறாமையில் பேசினர். தொழில் போட்டி நமது காலத்தில் சகஜம்.  இப்போட்டியில் ஒருவரை ஒருவர் அழிக்கவும் தயங்குவதில்லை.  சபைப் பணியிலும் தொழில் போட்டி இருக்கிறது.  ஒரு சபையில் இருப்பவரை, இன்னொரு சுவிசேஷகர், பிரசங்கியார் ஆவிக்குரிய தங்கள் சபைக்குக் கடத்தி விடுகின்றனர்.  இது ஒரு வகை ஆன்மீகத் திருட்டு எனலாம்.  ஒரு ஊரில் ஐந்து சபைகள் இருக்கின்றன.  ‘ஆதிகாலத்துச்’ சபை என்ற பாரம்பரியச் சபைகள் இரண்டு இதில் அடங்கும்.  மீதி மூன்று சபைகளும் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குள் உருவானவை.  இவற்றின் உறுப்பினர் எல்லாருமே பாரம்பரியச் சபைகளிலிருந்து வந்தவர்கள்.  இந்த மூன்று சபைக்கும் கல்லறை சொந்தமாக இல்லை.  ஆகவே பிற சபைக்குக் குடிபெயர்ந்தவர்கள், செத்த பின்பு கல்லறையில் வைக்கப்படுவதற்காக, ஆதிச் சபையின் ‘காணிக்கை உறுப்பினராகவும்’ (ழுசயஎந லுயசன ஊhசளைவயைn) இருக்கின்றனர்.

யோவான் காலத்தில், இந்தச் சபை பாகுபாடு தோன்றியது எனலாம்.  ஆனால் யோவான், இயேசு ஞான ஸ்நானம் கொடுத்ததில் ‘என் சந்தோஷம் நிறைவாயிற்று’ என்றார்.  ஏனெனில் யோவானின் கூட்டத்தார் எவருக்கும் இயேசு திருமுழுக்கு செய்ததாகத் தெரியவில்லை. இயேசு வெளிப்படையாகத் திருப்பணி செய்ததில் யோவான் நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்.  ‘நான் சிறுக வேண்டும், அவர் பெருக வேண்டும்!’ என்றார்.  நமது ஊழியத்தில், ஆண்டவரின் பெயர் விளங்கட்டும்.  நமது செயல்களால் இறையவர் போற்றப்படட்டும்.  நான், நாம் சிறுமையடையலாம்! ஆண்டவர் பெருமைப்படட்டும்.  இதற்கு ஆண்டவர் தாமே நமது மனங்களைப் பக்குவப்படுத்தட்டும்.

உலகை நேசிக்கிற கடவுளே! உலகத்தை இரட்சிக்க உமது குமாரனை அனுப்பினீர்.  எமது ஊழியங்களால் இயேசு பெருமைப்படட்டும்.  ஆமேன்.

சிறுமையில் மகிழ்வு2021-04-09T10:48:26+00:00

தொடர் ஆசி

1 யோவான் 4 : 16-19          11 ஏப்ரல் 2021, ஞாயிறு 

“உன் கடவுளாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்கு …மனப்பூர்வகாணிக்கையைச் செலுத்தி, …” – உபாகமம் 16 : 10

சங்கப் பணம், சந்தா, வரி போன்ற சொற்கள் இறையவருக்குக் கொடுக்கிற காணிக்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றது.  இது தவறாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  மேற்ச் சொல்லப்பட்ட சொற்களில் ‘ஒரு கட்டாயம்’ சேர்ந்திருக்கிறது.  ஆதாரப்பகுதி, மனப்பூர்வமாக ‘காணிக்கை செலுத்தி’ என்று விளக்குகிறது.  மனம் நிறைந்து, தாராளமாக வழங்கப்படுவது காணிக்கை.  இது மட்டுமல்ல. கடவுளின் ஆசீர்வாதத்தின் தொடர்ச்சி, கடவுளுக்கே கொடுக்கப்படுகிற காணிக்கை என்பதும் விளங்குகிறது.  ‘தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், திராணிக்கு மிஞ்சியும் சுயேச்சையாய்க் கொடுத்தார்கள்’ என்று பவுலடிகள் மக்கதோனியா சபை பற்றி எழுதினார்.  காணிக்கை கடவுளுக்குச் செலுத்துவதன் சரியான விளக்கம் இதுதான்.  திருப்பணி நடைபெற, தருமம் செய்தல் தொடர காணிக்கை தேவைதான்.

தாவீது அரசன் எருசலேம் ஆலயம் கட்டத் தேவையான பொருள் வசதியைச் சேர்த்திருந்தார்.  ‘குவித்திருக்கிற இந்தப் பொருட்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்ததே.  எல்லாம் உம்முடையதே’ என்று தாவீது கூறி காணிக்கைகளைப் படைத்தார்.  காணிக்கை என்பது ‘தொடர் ஆசி’!

ஆம்! காணிக்கை ‘நாம்’ கொடுக்கிறோம் என்று நாம் நினைக்கிறோம்.  பொருள் கர்த்தருக்கு உரியது.  கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தார்.  பொருளைக் கொடுத்தார்.  அவரிடம் வாங்கின நீ அவருக்குக் கொஞ்சம் நன்றி செலுத்தும் முகமாகக் கொடுக்கிறாய்.  ஆம்! காணிக்கை என்பது ஆசியின் தொடர்ச்சி!  காணிக்கையை நாம் குறைத்தால், கடவுளின் ஆசிக்கும் நாமே தடையாக இருப்போம்.  மனப்பூர்வமாகக் காணிக்கை படைப்போம்.

கர்த்தாவே, காணிக்கை என்பது எங்கள் செயல் அல்ல! அது உமது ஆசியின் தொடர்ச்சி என்று நாங்கள் புரிந்து கொள்ள உமது அருளைத் தாரும்.  ஆமேன்

தொடர் ஆசி2021-04-09T10:47:07+00:00

சம்பூரணம்

யோவான் 20 : 24-25           10 ஏப்ரல் 2021, சனி 

“அவிசுவாசமுள்ளவனாயிராமல் விசுவாசமுள்ளவனாயிரு.” – யோவான் 20 : 27

இம்மியளவும் சந்தேகம் இல்லாத நம்பிக்கைதான் சம்பூரண நம்பிக்கை.  நன்நம்பிக்கை என்பது இதுதான்.  இயேசு உயிர்த்தார் என்ற சத்தியத்தைச் சம்பூரணமாய் நம்புகிறீர்களா?  தனது தாய் தனக்குச் சொன்னால்தான், தனது தந்தை யார் என்பது எவருக்கும் தெரிய வரும்.  தாய் சொல்லை நம்புகிறோம்.  ஆண்டவர் சொல்வதை நம்பாமல் இருக்கலாமா?  தியானவரியை உயிர்த்தெழுந்த ஆண்டவர் திதிமு என்ற தோமாவிடம் சொன்னார்.  அவிசுவாசியாகவும், சந்தேகப் பிராணியுமாயிருந்த தோமா தான் பிற்காலத்தில் தீவிர விசுவாசியாக இந்தியாவிற்கு வந்து, சுவிசேஷத்தை முதல் முதல் அறிவித்த இயேசுவின் நேரடிச் சீடர்.  நாமும் தோமாவைப் போல அவிசுவாசியாக பலவீன விசுவாசியாக இருக்கலாம்.  இயேசுவின் வார்த்தைகள் நம்மை சம்பூரண விசுவாசி ஆக்கி விடுகிற வல்லமையுள்ளதாகும்.

எத்தனையோ காரியங்களை கொஞ்சம் விசுவாசிக்கிறோம்.  அதிகம் ‘அவிசுவாசிக்கிறோம்!’  கிறிஸ்து இயேசுவின் பாடுகளும் மரணமும் நம்மை இரட்சிக்கிறது என்று நமக்குத் தெரியும்.  சம்பூரணமாக இதை விசுவாசிக்கிறோமா?  இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  ஏன் தெரியுமா?  இன்னொரு கிறிஸ்தவர் ‘நீ மறுபடியும் பிறந்தவனா?’ என்று கேட்டால் ‘ஆம்!’ என்று சொல்ல முடியவில்லையே பலரால்.  இந்த நிலை அவிசுவாசம்தானே?  கிறிஸ்து எனது மீட்பர் என்று விசுவாசிக்கிறேன்.  ஆனால் நான் குழந்தையாக இருந்த போது திருமுழுக்கு பெற்றவன்.  இந்தச் சூழலில் நீ முழுகித்தான் ஸ்நானம் பெற வேண்டும் என்று ஒருவர் சொன்னால், நமது விசுவாசம் ஆட்டம் காணுகிறதா?

இது போன்ற சூழ்நிலையில் வாழுகிற நமக்கும் ‘அவிசுவாசம் உள்ளவனாயிராமல் விசுவாசம் உள்ளவனாயிரு’ என்று இயேசு சொல்கிறார்.  நீங்கள் விசுவாசிக்கிறபடியே உங்களுக்கு ஆகும்!  நீங்கள் விசுவாசத்தில் பூரணப்பட ஆவியானவர் துணையிருப்பாராக.

குறையாத ஆற்றல் தருகிற வல்லவரே! கிறிஸ்துவை விசுவாசிப்பதில் தளராதிருக்க அருள் பாலிப்பீராக.  இயேசு வழியே ஆமேன்.

சம்பூரணம்2021-04-09T10:43:35+00:00

தொட்டறிவு

லூக்கா 24 : 25-28              09 ஏப்ரல் 2021, வெள்ளி

“ஏன் கலங்குகிறீர்கள்? … சந்தேகம் பிறப்பதென்ன? … என்னைத் தொட்டுப் பாருங்கள்;” – லூக்கா 24 : 39

பொருட்களைத் தொட்டுப் பார்த்து, தெரிவு செய்வதில் நமக்கு மனதில் ஒரு திருப்தி தோன்றுகிறது. குறிப்பாக, பெண்கள் ஒரு சேலை எடுக்க வேண்டுமென்றாலும் சேலையின் துணியை, அதன் கீழ் மேல்புற கரைகளை, முந்தானைப் பகுதியை தொட்டு தடவிப் பார்ப்பார்கள். அனேக காரியங்களில் தொட்டறிவு என்பது பட்டறிவு என்றாகிறது.

இயேசு உயிர்த்தெழுந்தார்! சிலர் பார்த்தார்கள்! தேவ தூதர் சொன்னார்கள்! பெண்கள் சொன்னார்கள். ஆனாலும் சீடர்கள் இயேசு உயிர்த்தார் என்று நம்பவில்லை. இயேசு தண்ணீர் மேல் நடந்து வந்த பொழுது ‘ஆவேசம்’ (ஆவி-பேய்) என்று பயந்தவர்கள் சீடர்கள். அவர்கள் நடுவில் இயேசு வந்து நின்று ‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார். சீடருக்குச் சந்தோஷம் வரவில்லை, சந்தேகம்தான் வந்தது. இயேசு மாதிரி ஏதோ ஒன்று வந்து நிற்கிறதோ என்று நினைத்தனர். ஆகவே இயேசு, ‘கலங்க வேண்டாம். நான்தான், என்னைத் தொடுங்கள். என் கை காலைப் பாருங்கள்’ …என்று சொன்னார். அப்படியும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆகவே, அவர்கள் கொடுத்த சமைத்த மீன் துண்டைச் சாப்பிட்டார். இயேசுவின் பிறப்பு, வாழ்வு, பாடு, மரணம், உயிர்ப்பு எல்லாமே மீட்பின், உலக இரட்சண்யத்திற்குத் தேவையான நிகழ்வுகள். இயேசு பிறப்பதற்கு முன்பே இவை முன் குறிக்கப்பட்டன. சீடர்கள் இதை நம்பவில்லை. இயேசுவும் தனது மரணம் உயிர்ப்பு பற்றிக் கூறினார். இதையும் சீடர்கள் நம்பவில்லை. இப்பொழுது இயேசுவே அவர்கள் முன் வந்து நின்று தொட்டறியுங்கள் என்றார். சீஷர் இதைக் கூட நம்பத் தயங்கினர். இயேசுவை முகமுகமாய்க் கண்ட பின்பும் சீடரால் நம்ப முடியவில்லை! நாம் இயேசுவை நேரில் காணாமலே நம்புகிறோமே! நாம்தான் பேறு பெற்றவர்கள்! பாக்கியசாலிகள்.

விசுவாசக் காரணரே! பலவீன விசுவாசிகளாகிய எமது விசுவாசத்தைப் பலப்படுத்தியருளும். உயிர்த்த எமது மீட்பர் இயேசுவின் வழியே ஆமேன்.

தொட்டறிவு2021-04-08T12:09:13+00:00

மத்தேயு 28 : 5-7                05 ஏப்ரல் 2021, திங்கள்

“கலிலேயாவுக்குப் போகும்படி …சொல்லுங்கள்;  அங்கே என்னைக் காண்பார்கள் என்றார்.” – மத்தேயு 28 : 10

இயேசு தமது சீடரை, ‘சகோதரர்’ என்று உரிமையுடன் அழைத்தார். நட்பின் – உறவின் நெருக்கத்தை, சகோதரர் என்ற சொல் வெளிப்படுத்துகிறது. துவக்க காலத்தில் கிறிஸ்தவர்களுக்குக் கூட ‘சகோதரர்கள்’ என்ற பெயர்தான் வழங்கப்பட்டது. பெரிய கூட்டத்தில் மக்களிடையே பேசும்போது ‘சீமான்களே, சீமாட்டியரே’ என்று துவங்குவது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வழக்கமாகி இருந்ததாம், மேற்கு நாடுகளில். இந்தியாவிலிருந்து மேற்கு நாடு சென்றிருந்தார் விவேகானந்தார். இவர்தான் முதன்முதல் பெரியதொரு கூட்டத்தினரை ‘சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்துத் தனது பேச்சைத் துவக்கினாராம்.

உயிர்த்தெழுந்த இயேசு ‘என் சகோதரரை கலிலேயாவுக்குப் போகும்படிச் சொல்லுங்கள்’ என்று சில பெண்களிடம் தூது சொல்லியிருந்தார். பெண்கள் இச்செய்தியை சீடருக்குக் கூறியதுடன் ‘அங்கே என்னைக் காண்பார்கள்’ என்று இயேசு சொன்ன செய்தியையும் சேர்த்துக் கூறினர். இயேசு எருசலேமில் மட்டும் தம்மை வெளிப்படுத்தவில்லை. கல்லறைக்கு அருகில் மட்டும் சிலர் பார்வைக்குப் பட்டு மறைந்துவிடவில்லை. வேறு சிலரையும் குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொன்னார். இவர்கள் வருகைக்காக இயேசு கலிலேயாவில் காத்திருந்தார்.

இயேசுவின் பிறப்புச் செய்தியை ஏழை மேய்ப்பர்கள் முதலில் அறிந்தனர். இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை, அந்தக் காலத்தில் ‘இரண்டாந்தரக் குடிமக்களாக’ இருந்த பெண்கள் அறிந்தனர், தரிசித்தனர். இது ஆண்டவர் பெண்களுக்குக் கொடுத்த கௌரவம். பெண்கள் சீடருக்குச் சொன்னார்கள். இயேசு உயிர்த்தார் என்ற செய்தியை எல்லாரும் அறிந்திருத்தல் தேவைதானே! போய்ச் சொல்லுங்கள். உரக்கச் சொல்லுங்கள். உற்சாகத்தோடு சொல்லுங்கள். உலகம் முழுவதும் சொல்லுங்கள். உலகுக்குக் காண்பியுங்கள்.

உலகில் அன்பு கொண்டுள்ள கடவுளே! எங்கள் பாவங்கள் உமது திருமகனை சிலுவையில் அறைந்திடக் காரணமாயின. நீர் உமது குமாரனை உயிர்ப்பித்தீர். தோத்திரம்.

2021-03-29T12:25:30+00:00

லூக்கா 24 : 1-5               04 ஏப்ரல் 2021, ஞாயிறு

“அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார்.” – லூக்கா 24 : 6

உலகில் நாம் பிறக்கும் போது மரணத்தோடு பிறக்கிறோம். வாழும்போது மரணத்தை எதிர்நோக்கி வாழ்கிறோம். மரணம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. மரணத்திற்கு சாதியோ, நிறமோ, குலமோ எதுவும் கிடையாது.

இயேசு மரித்தார். அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். மரித்த இயேசுவை கடவுள் எழுப்பினார், கிறிஸ்தவத்தின் மையமும், மூலமும் ஆணிவேரும் இந்த உயிர்ப்புதான். கிறிஸ்தவ வழிபாடு என்பது உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துகின்ற செயலாகும். இயேசுவை கிறிஸ்து, வாக்களிக்கப்பட்ட மேசியா என்று அறிக்கையிட்டால் உயிர்ப்பை நம்பவேண்டும். உயிர்ப்பை நம்பினால் சாவைக்கண்டு பயப்படக்கூடாது.

ஒவ்வொரு ஞாயிறு தொழுகையும் உயிர்ப்பின் தொடர்ச்சியாகவே அமைகிறது. ஆலயத்தில் அடிக்கிற மணி இயேசுவின் உயிர்ப்பை அறிவிக்கிறது. மரணத்தால் இயேசுவை தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. ஆதாம் செய்த பாவத்தின் வழியாக நம்மிடம் வந்தடைந்த மரணத்தை இயேசு கிறிஸ்து தம் மரணத்தில் வென்றெடுத்தார். துன்பம் நிரந்தரமானதல்ல. அது கடந்து போகும். மரணமும் நிரந்தரமானதல்ல. கல்லறையும் முடிவல்ல. இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருச்சபைக்கு வாழ்வில்லை. கிறிஸ்தவத்திற்கு வேலை இல்லை. இயேசுவின் உயிர்த்தெழுதலில் தான் நம் விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது. திருச்சபை பிறந்திருக்கிறது. கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. இதுவரை வரலாற்றில் நாசரேத்து ஊர் இயேசுவாக அறியப்பட்டவர் உயிர்த்தெழுதலுக்குப் பின் கிறிஸ்துவாக நிலைநிறுத்தப்பட்டார்.

இயேசுவின் கல்லறை கருவறையாகிறது. இயேசுவின் மரணம் நம் மறுவாழ்வின் தொடக்கமாகிறது. அவரது மீட்பு நம்மை கடவுளோடு நெருங்கி வரச் செய்கின்றது. உயிர்த்தெழுதலில் உயிர் பெற்ற புது சமூகம் மலருகின்றது.
இயேசு எப்படி தம் மரணத்தை முன் அறிவித்தாரோ அதுபோலவே தம் உயிர்த்தெழுதலையும் பலமுறை முன்னறிவித்தார்.
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு வெறுமையான கல்லறை சாட்சியாயிற்று. உயிர்த்தெழுந்த இயேசுவை கண்ட பெண்கள் சாட்சிகள். இயேசு மரித்தபோது தங்களுக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று எண்ணி எருசலேம் மேல் வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள் சீடர்கள். மரித்த நிலையில் நடைபிணங்களாக இருந்த சீடர்களுக்கு உயிர்த்த இயேசு தரிசனமானார். எந்த சீடர்கள் பயந்து ஒளிந்து வாழ்ந்தார்களோ அவர்கள் தைரியமாய் வெளியே வந்து பகிரங்கமாக சாட்சியிட்டார்கள். இயேசுவின் உயிர்பிற்கு இது மிகப்பெரிய சாட்சி. இயேசுவை விசுவாசித்தவர்கள் அவர் மரணமடைந்தபோது சந்தேகமடைந்தார்கள். இயேசுவை விசுவாசிக்காத சந்தேகப் பேர்வழிகள் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிகளாகிறார்கள். கல்லறையின் வாயில்கள் அடைக்கப்பட்ட பொழுது சீடர்களின் நம்பிக்கை புதையுண்டு போயிற்று.

சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இயேசுவின் உயிர்ப்பிற்கு நாம் சாட்சிகளாவோம். உயிர்த்தெழுதல் உண்டு என்று விசுவாசித்து வாழ்வோம்.

கர்த்தாவே, இயேசுவின் உயிர்த்தெழுதல் வழியே எங்களுக்கு புது நம்பிக்கையைத் தந்திருக்கிறீர். நன்றி. உயிர்த்தெழுதல் எங்களுக்கு புது வாழ்வைக் கொண்டு வருகிறது. இவற்றை நினைவில் நிறுத்தி புது சமூகமாக நாங்கள் வாழ வழிநடத்தும். இயேசுவின் வழியே, ஆமேன்.

 

2021-03-29T12:26:33+00:00

கடவுளின் ஆட்டுக்குட்டி

யோவான் 1 : 29-34                     31 மார்ச் 2021, புதன்

“இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”– யோவான் 1 : 29

கடவுள் அழகிய மண்ணுலகைப் படைத்தார். அதில் பரிபூரணம் பரிசுத்தம் பாக்கியம் என்ற தம் சாயலில் மனிதர்களைப் படைத்தார். சாத்தான்ஆதிப்பெற்றோரான ஆதாம் ஏவாளுக்கு பாவ வலை விரித்தான். அதில் அவர்கள் அகப்பட்டார்கள். பாவத்தால் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒப்புரவும் பாக்கியமும் இல்லாமல் போயிற்று. ஆதாமுக்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் காயின், ஆபேல். இருவரும் வளர்ந்து கடவுளுக்கு பலிபீடம் கட்டி தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் ஆபேல் தன் மந்தையின் முதன்மையான ஆட்டை பலியிட்டார். இதிலிருந்து கடவுளுக்கு கொடுக்கிற பலியில் ஆடு முக்கிய இடத்தைப் பிடித்தது. மோசேயின் காலத்தில் இது சட்டமாயிற்று.

லேவியராகமத்தில் இஸ்ரவேலரின்பாவங்களையும் மீறுதல்களையும் போக்குவதற்கு கடவுள் வழிசொல்லுகிறார். ஆசாரியனான ஆரோன் வெள்ளாட்டு குட்டியில் பழுதில்லாததை தெரிந்தெடுக்க வேண்டும். அதை தரிசன கூடார வாசலுக்கு கொண்டு வர வேண்டும். இஸ்ரவேலரின் சகல அக்கிரமங்களையும் அறிக்கை செய்ய வேண்டும். பாவத்தை ஆட்டின் மீது சுமத்திய பின் அந்த ஆட்டை ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்திற்கு அனுப்பி விட வேண்டும். இது இஸ்ரவேல் மக்களின் பாவங்களைச் சுமந்து திரியும். இதற்கு போக்காடு என்று பெயர்.

ஏசாயா தீர்க்கர் மேசியாவை பாடுபடும் தாசனாக, அடிக்கப்படும் ஆடாக சித்தரிக்கிறார். இதிலிருந்து கடவுளுடைய ஆட்டுக்குட்டி இயேசுதான் என்பது தெளிவாகிறது. மனுக்குல மீட்புக்காக இயேசு இரத்தம் சிந்தி மரிப்பதை குறிப்பதற்கு இவ்வுருவகம் சொல்லப்பட்டிருக்கிறது.

கடவுளால் அனுப்பப்பட்ட யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்தவர். இயேசுவை அறிவித்தவர். இவர் இயேசுவை பழைய ஏற்பாட்டு பலிகளோடு ஒப்பிடுகிறார். ஆட்டின் சாந்த குணம், ஆட்டின் பழுதற்ற தன்மை வலியுறுத்தப்படுவதையும் காண்கிறோம். இயேசு பாவத்தை சுமந்து திரிகிற ஆட்டுக்குட்டியாகவும், பலி ஆடாகவும் யோவான் பார்த்தார். இயேசு பாவத்தையும், பாவத்தால் உண்டாகும் தண்டனையையும் சுமந்து அகற்றுகிறார் என்பதை இது விளக்குகிறது.

பழைய ஏற்பாட்டு நோக்கம் இயேசுவில் நிறைவேறிற்று. இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பில்லை. இதற்காக பழுதற்ற, பாவம் இல்லாத ஆட்டுக்குட்டியாக இயேசுவை கடவுள் தெரிவு செய்தார். அவரை மனுக்குலத்தின் பாவங்களை போக்கும்படி கல்வாரி சிலுவையில் பலியிட்டு பலிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இயேசுவில் கடவுள் சம்பாதித்த பாவமன்னிப்பை இயேசுவில் வைக்கிற விசுவாசத்தால் நாம் பெறுவோம்.

அன்பின் ஆண்டவரே, மனுக்குலம் பாவமன்னிப்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு உம் நேச குமாரனை பாவத்தை சுமந்து தீர்க்க வழி வகுத்தீர். நன்றி. பாவ மன்னிப்பை பெற்று உம்மோடுள்ள உறவில் வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுளின் ஆட்டுக்குட்டி2021-03-29T12:20:06+00:00

அன்பின் அழைப்பு

மத்தேயு 26 : 47-50              30 மார்ச் 2021, செவ்வாய்

“சிநேகிதனே, எதற்காக வந்திருக்கிறாய்…” – மத்தேயு 26 : 50

சிநேகிதனே அல்லது நண்பனே என்று சிநேகிதர்கள் அல்லது நண்பர்கள் அழைப்பது வழக்கம். இந்த வார்த்தையினால் அழைக்கிறவரின் உறவும் வெளிப்படும். இயேசு கெத்சமனே தோட்டத்தில் மெய்யான மனிதனாக மரண வேதனையில் இருந்தார். இதற்காக வியர்வை இரத்தப் பெருந்துளிகளாய் தரையில் விழும் அளவுக்குப் போராடி ஜெபித்தார். இயேசுவின் கைவிடப்பட்ட நிலையை பிதாவாகிய கடவுள் அறிந்தார். தம் தூதனை அனுப்பி அவரைத் தேற்றினார். இயேசு ஜெபிக்கச் செல்லும் முன் சீடர்களிடம் தமக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் வந்து பார்த்த போது அவர்கள் தூங்கியிருந்தனர்.

இயேசு இறுதியாக சீடர்களிடம் வந்தார். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படும் வேளை வந்தது. எழுந்திருங்கள். போவோம். என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் வந்துவிட்டான் என்றார். யூதாஸ் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு வழக்கமாக வந்து போகிற இடங்களை யூதாஸ் அறிந்திருந்தான். மக்கள் கூட்டத்தில் இயேசுவைப் பிடித்தால் குழப்பம் வரும் என்று தலைவர்கள் அறிந்து இயேசு தனிமையில் இருக்கும்போது பிடிக்க திட்டமிட்டார்கள்.  இயேசுவும் சீடர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். இச்சமயம் யூதாஸ் வந்தான். அவனோடு பிரதான ஆசாரியரும் மூப்பர்களும் அனுப்பிய திரளான மக்களும் வந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்களும் தடிகளும் இருந்தன. இயேசுவை ரபீ நீர் வாழ்க என்று வாழ்த்தி முத்தமிட்டான். இயேசு யூதாசைப் பார்த்து, சிநேகிதனே, எதற்காக வந்திருக்கிறாய்? என்றார். இதுவே இயேசுவின் மிக அருமையான அன்பான நற்செய்தி அழைப்பு. யூதாஸ் மற்ற சீடர்களைப் போல இயேசுவால் அழைக்கப்பட்டவர் இயேசுவின் உபதேசங்களைக் கேட்டவர். இயேசு செய்த அற்புதங்களைக் கண்டவர். இயேசுவின் சீடனாக இருந்து கொண்டே இயேசுவுக்கு துரோகம் செய்தார். அன்பே உருவான இயேசு இந்தத் துரோகியைப் பார்த்து சிநேகிதனே என்று அழைத்தார்.

அன்பானவர்களே! இயேசுவின் இந்த அழைப்பு நமக்கு எப்போதும் சொந்தமானது. நாம் மனந்திரும்பி மன்னிப்பைத் தேடுவோம். இயேசு நம்மை மன்னித்து சிநேகிதனே என்று அழைத்து ஏற்றுக் கொள்வார். இயேசு நம்மை நன்கு அறிந்தவர் நம் துரோகச் செயல்களை அறிந்தவர் நம்மை ஏமாற்ற மாட்டார். நம் பாவங்களை உணருவோம். நாம் பெரும் பாவி, துரோகி என்று நம்மை தள்ள மாட்டார். இயேசுவின் அழைப்பை ஏற்போம். புது உறவில் வாழ்வோம்.

பாவிகளை நேசிக்கிற கடவுளே! எங்கள் மீது அன்பு கொண்டு இயேசுவை எங்கள் சிநேகிதராக தந்ததற்கு நன்றி. இயேசுவின் அழைப்பை ஏற்று சிநேகிதனாக வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

அன்பின் அழைப்பு2021-03-29T12:18:32+00:00
Go to Top