3 யோவான் 13-15 17 ஏப்ரல் 2021, சனி
“நமது சந்தோஷம் நிறைவாகும்படி உங்களிடம் வந்து முகமுகமாய்ப் பேசலாமென்று…” – 2 யோவான் 12
தொலைபேசி, கைபேசி போன்றவை பழக்கத்திற்கு வந்த பின்பு, செய்திகள் மிக விரைவில் சென்றடைகின்றன. ஆனால் மனிதர் ஒருவரை ஒருவர் முகமுகமாய்ப் பார்த்துப் பேசும் வாய்ப்பு குறைந்துவிட்டது. உறவுகளிடையே இருந்த நெருக்கம், பரஸ்பர அன்பு, நம்பிக்கை போன்ற மனிதப் பண்புகள் குறைந்துகொண்டேபோகின்றன. கடிதம் என்று நமது காலத்தில் சொன்னால், மூன்று முதல் ஐந்து நாட்களில் சென்றடையும். ‘கூரியர்’ என்றால் மறுநாளே கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பவுல், யோவான் காலத்தில் கடிதங்கள் போய்ச் சேர வாரக்கணக்கானது என்பது நமது நினைவில் வருவது அவசியம்.
என்றாலும் யோவான் மூன்று கடிதங்கள் எழுதினார். ஆனால் யோவான் மனதில் இருந்ததை தியான வரி சுட்டிக் காட்டுகிறது. மக்களோடு நேரில் பேச விரும்பினார் யோவான். முகம் பார்த்துப் பேசுவதால், நேரடிச் சந்திப்பால் சந்தோஷம் நிறைவாகும் என்று எழுதினார். ‘அடேயப்பா …அவனா? …அவன் பேசவே காசு கேட்பான்’; ‘உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு’; ‘நேரிலே வரணும் வரணும்ன்னு நெனச்சேன், இப்போத்தான் முடிஞ்சுது’ இதுபோல நாம் பேசியிருப்போம். முகமுகமாய்ப் பேசுவதின் மகிழ்ச்சி பற்றி நமக்கும் தெரியும். ஏனென்றால் நேரில் பேசும்போது சத்தம் மட்டும் கேட்பதில்லை, நமது ஐம்புலன்களும் பேசும்போது பயன்படுகிறது. ஆகவே சந்தோஷம் பல மடங்காகிறது. கடவுள் ஆதாம் ஏவாளுடன் பேசினார். மோசேயுடன் பேசினார். தீர்க்கர்களிடம் பேசினார். நிறைவாக இயேசு வழியே நம்மிடம் முகமுகமாய்ப் பேசினார். பேசுகிறார். கடவுள் நம்மைச் சந்தித்தார். இரட்சிப்பை, மீட்பை, பாவமன்னிப்பை நேரில் நமக்கு வழங்குகிறார்.
இயேசுவின் சந்திப்பைப் பற்றி நாம் இன்னொருவருக்கு முகமுகமாய் அறிவிப்போம். நமது மகிழ்ச்சி பல மடங்கு ஆகட்டும்.
எம்மோடு பேசுகிற இறைவா! நன்றி. நாங்களும் பிரார்த்தனையில் உம்முடன் பேசுகிறோம். இந்தப் பேச்சு வார்த்தை தொடர, வளர இதனால் சந்தோஷம் பெருகிட அருள் தாரும். இயேசு வழியே ஆமேன்.
