About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

கடவுளின் வாரிசுகள்

ரோமர் 8 : 12-17                       21 டிசம்பர் 2024, சனி

“நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, கடவுளின் சுதந்திரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;….” – ரோமர் 8 : 17

பெற்றோர்களின் சொத்துக்களுக்கு வாரிசு, அவர்களின் பிள்ளைகள், வாரிசுகள், தகப்பனின் சொத்துக்களையும், பெருமையையும், மரியாதையையும் நிலைநாட்டுவார்கள், வளர்ப்பவர்கள்.

பவுலடிகளார் நம்மை, கடவுளின் வாரிசுகள் என அழைக்கிறார். இந்த வாரிசுத் தன்மையை, இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் நமக்கு தந்திருக்கிறார். ஆதார வசனப்படி நாம் `கிறிஸ்துவுக்கு இணையான உடன் வாரிசுகள்’ என்றும் அழைக்கப்படுகிறோம். விசுவாசிகளின் `பிறப்புரிமை’ என்பது, `கடவுளின் பிள்ளைகள்’ என்ற உயர்ந்த நிலைமை. நாம் அவரால் படைக்கப்பட்டவர்களாக இருப்பதினால், நாம் அவரின் வாரிசுகளா? நல்ல செயல்களை செய்வதால் நாம் கடவுளின் பிள்ளைகள் ஆக முடியுமா? கிறிஸ்தவ மதச் சடங்குகளை ஒழுங்காக பின்பற்றுவதினால் நாம் கிறிஸ்துவின் வாரிசுகளா? இல்லவே இல்லை! கடவுளின் கிருபையினால் நாம் கடவுளின் பிள்ளைகள், கிறிஸ்துவின் வாரிசுகள், கடவுள் நம்மைத் தத்து எடுத்திருக்கிறார். `நான் கடவுளின் வாரிசு இல்லை’ என யாரும் சொல்லவே முடியாது. உலகோர் ஒவ்வொருவரும் `தனது வாரிசு’ ஆகவேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இதற்காகவே இயேசு பாடுபட்டு, மரித்து, உயிர்த்தார்.

கிறிஸ்துவின் வாரிசுகளாக இருக்கிறவர்கள்; இரட்சிப்பு, விடுதலை நித்ய ஜீவன், பாவ மன்னிப்பு, சமாதானம், கிருபை ஆகிய அனைத்திற்கும் உரிமையாளர்களாகிறோம். அனாதைகள், வாழ்வு பறிக்கப்பட்டோர், சமூகத்தால் துரத்தப்பட்டோர், நலிவுற்றோர் போன்றவரும், `கடவுளின் வாரிசுகள்’ தான்! இந்த உயர்ந்த நிலையை இவர்களுக்கு உணர்த்துவது நமது பொறுப்பல்லவா? கிறிஸ்துவின் வாரிசுகளே நீங்கள் பெற்ற பெரும் பேறை பிறருக்கு அடையாளங்காட்டுங்கள்.

எங்கள் உயிர், உடல் ஆஸ்திகளுக்கு அதிபதியே, தகப்பனே! நீர் எங்களை உமது பிள்ளைகளாக்கி, இயேசுவின் மூலம் வாரிசுகளாக வைத்திருப்பதற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பாக்கியத்திற்குரியவர்களாக நாள்தோறும் வாழ எங்களை ஆண்டு கொள்வீராக. ஆமேன்.

கடவுளின் வாரிசுகள்2024-12-20T06:12:38+00:00

வெற்றி தரும் வல்லமை

1 பேதுரு 1 : 3-9                          05 டிசம்பர் 2024, வியாழன்

“கர்த்தர் தமது ஜனத்திற்கு வல்லமையளிப்பார்;” – சங்கீதம் 29 : 11

வாழ்க்கை ஒரு போர்க்களம். துன்பங்கள், சோதனைகள், இடையூறுகள் இவற்றைச் சந்திப்பதுதான் தினவாழ்வு. போராட்டங்களைச் சந்திக்கும் போது, பலர் சோர்ந்து விடுகிறார்கள். பலர் மனநிம்மதி இழந்து விடுகிறோம். போராட்டங்களைச் சமாளிக்க நமக்குப் போதிய பலமில்லையே. இறைக்கும் நீரின் அளவைவிட, சுரக்கும் நீரின் அளவு குறையும் போது, தண்ணீர் வற்றிப்போகும்! கிணறு வறண்டுவிடும்.

தியான வசனத்தைக் கவனியுங்கள். மனிதனுக்கு ஜீவ ஊற்றாக வற்றாத நீரோடையாகப் பாய்ந்து வருபவர் கடவுள். வல்லமையைக் கொடுத்து சமாதானம் தந்து ஆசீர்வதிப்பவர் கடவுள் என்பதை அனுபவித்து இச்சங்கீதத்தை எழுதினார் தாவீது. `கர்த்தர் என் மேய்ப்பர், எனக்கு ஒன்றும் குறைவில்லை’ என்று பாடும் மன நிறைவை தாவீதுக்குக் கொடுத்தவர் கடவுள். இந்த ஆசிகளையெல்லாம் தாவீது பெற தாவீதின் புனிதத் தன்மை காரணம் இல்லையே. முற்றிலும் கடவுளின் வல்லமையில் சார்ந்திருந்ததுதான்… தாவீதின் கெட்டிக்காரத்தனம். என்ன முயன்றாலும் பாவத்தை மேற்கொள்ள, பாவத் தண்டனையை மாற்றி அமைக்க மனிதனால் முடியுமா? முடியாதே!

ஆனால், இறைவனால் இதுவும் முடிந்தது. இயேசு கிறிஸ்து, சிலுவையில் உலகத்தவரின் பாவத்தையும், அதன் தண்டனையான மரணத்தையும் வென்றார். அவரில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு இந்த வெற்றியில் இலவசமாகப் பங்கும் தருகிறார். நம்மில் பலமில்லை! நம் ரட்சகரில் பலம் கொட்டிக் கிடக்கிறது. இரட்சகரை ஏற்றுக் கொள்ளுவோம், சார்ந்திருப்போம்! அவரது பலத்தை அனுபவிப்போம், நாம் பலசாலிகளாவோம்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் சமாதான உறவை சம்பாதித்துத் தந்த கர்த்தாவே, உமது பலத்தை மட்டும் சார்ந்திருக்கும் சிந்தையை அடியார்களுக்குத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

வெற்றி தரும் வல்லமை2024-12-03T10:16:53+00:00

மாம்சத்தில் வெளிப்பட்ட ஆண்டவர்

1 பேதுரு 3 : 13-18                                  19 நவம்பர் 2024, செவ்வாய்

“தேவபக்திக்குரிய இரகசியம் மகா மேன்மையுள்ளது அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார்.” – 1 தீமோத்தேயு 3 : 16

அரசர் ஒருவர் தமக்கு கொடுக்கப்பட்ட தேசத்தை செழுமையும் நன்மையுமாய் கட்டி எழுப்பினார். மக்களுக்கு அனேக நலன்களை அருளினார். ஒருநாள் தன் தேசத்தை சுற்றிப் பார்க்க விரும்பி மக்களின் உண்மை நிலை அறிய வேண்டி ஏழையைப் போன்று மாறுவேடம் தரித்து பார்க்க சென்றார். அவர் சென்று பார்த்தபோதுதான் தனது தேசத்தின் அவல நிலைகளை அறிய முடிந்தது. தேசம் பாழ்பட்டும், ஏழைகள் ஒடுக்கப்பட்டும் இருந்தனர். உடனே அரசவை சென்று தன்நிலை உணர்ந்து தேசத்தில் இருந்த சீர்கேடுகளையும் அநியாயக்காரரையும் கண்டித்து உணர்த்தினார்.

ஆவியோ உற்சாகம் உள்ளது மாம்சமோ பலவீனமானது என்பார்கள். மனிதர்கள் ஆவி ஆத்மா சரீரத்தால் ஆனவர்கள். இன்றைய தியானப் பகுதியில் பார்க்கும்போது பலவீனராகிய மனிதர்களை மீட்க கடவுள் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று கூறுகிறார்.

இந்த இரகசியம் மகா மேன்மையுள்ளது. நம்மால் செய்ய முடியாததை மாம்சத்தில் வெளிப்பட்ட கிறிஸ்து நமக்காக செய்து முடித்தார். விண்ணின் மகிமை துறந்து மனு உருவானார். மனுகுலத்தை பாவத்திலிருந்து மீட்க அவர் மாம்சத்தில் கொல்லப்பட்டார். ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அநீதி உள்ள நம்மை நீதிமான்களாக மாற்றி கடவுளிடம் சேர்க்க இப்படி செய்தார்.

அவருடைய இரத்தமும் மாம்சமும் நம்மை விடுவிக்கிறது. அவர் தமது சரீரத்திலே தீமையை நன்மையால் வென்றார். நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். நம்முடைய வாழ்விலே பலவீன சரீரத்தை கொண்டு தீமையை நன்மையால் வெற்றிக்கொள்ள அழைப்பு தருகிறார்.

மனிதனாக இவ்வுலகிற்கு வந்த ஆண்டவர் துணை செய்கிறார். கிறிஸ்துவை உடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து இருக்கிறார்கள். நமது பலவீன வாழ்வு பலமிக்கதாய் மாற அவர் துணை செய்கிறார்.

நாம் வாழ்கின்ற வாழ்விலே சமூகத்திலே அநேகர் சரீர அளவிலே போராடிக் கொண்டிருக்கலாம், துன்பப்பட்டு கொண்டிருக்கலாம், பாவ வாழ்வை விடமுடியாமல் போராடலாம். அவர்களுக்கு உதவி செய்வோம். மாம்சத்தின் பலவீனங்களை வென்ற இயேசுவை துணையாக்கிக் கொள்வோம். நமது வாழ்வு பலப்பட ஆண்டவர் துணை செய்வார்.

எங்களை மீட்கும்படியாக மனிதனாக வந்த எங்கள் ஆண்டவரே! எங்களை உயிர்ப்பிப்பவரே உம்மை போற்றுகின்றோம். நாங்கள் உமக்கு சாட்சிகளாய் வாழ தீமையை நன்மையினால் வெல்ல உமக்காய் நன்மை செய்து பாடு அனுபவிக்க கிருபை செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

மாம்சத்தில் வெளிப்பட்ட ஆண்டவர்2024-11-18T08:03:08+00:00

இறையரசு

தானியேல் 10 : 16-17                                 07 அக்டோபர் 2024, திங்கள்

“ஆண்டவனுடைய அடியேனாகிய நான் என் ஆண்டவனோடு பேசுவதெப்படி?” – தானியேல் 10 : 17

பாரசீக அரசனான கோரேஸ் அரசாண்ட காலத்தில் தானியேலுக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தப்பட்டது. அந்த காரியத்தை அறிந்துகொள்ள தானியேல் மூன்று வாரங்கள் ருசியான ஆகாரத்தை தவிர்த்து திராட்ச ரசத்தை வெறுத்து இருந்தார். இது முடிந்து `திக்ரீசு’ ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார்.

இங்கு தானியேல் மாபெரும் காட்சி ஒன்றைக் கண்டார். அதில் மெல்லிய பட்டாடை உடுத்தி இடையில் தங்க கச்சை கட்டிய ஒருவர் நின்றிருந்தார். முகம் மின்னல் போல் ஒளியாய் இருந்தது. பேச்சு மக்கள் கூட்ட இரச்சல் போல் இருந்தது.

தானியேலுடன் இருந்தவர்கள் இதைக் கண்டு ஓடிவிட்டார்கள். தானியேல் மயக்கத்தில் கீழே விழுந்தார். ஒரு கை அவரைத் தொட்டு கைகளையும் கால்களையும் ஊன்றி எழுந்து நிற்கும்படி செய்தது.

அப்போது தானியேல் என் தலைவருடைய ஊழியக்காரனாகிய நான் என் தலைவராகிய உம்மோடு பேசுவது எப்படி? என்ன காரணம்? நான் பலம் இழந்து விட்டேன். என் மூச்சும் அடைத்துக் கொண்டது என்றார்.

இந்த தரிசனத்தின் வழியாக கடவுள் தாமே நிறுவப்போகிற விண்க அரசை, இறையரசை குறித்துச் சொல்லுகிறார். இதிலிருந்து கிறிஸ்து மனித குமாரன் என்ற பிரியமான பட்டத்தை தமக்கென்று தெரிந்து கொண்டார். தானியேல் தன்னைத் தாழ்த்தினார். கடவுள் தம் மகிமையைக் காண்பித்தார்.
தானியேல் ஆகமத்தில் காணப்படும் உருவகங்களில் கடவுளின் கோபம் அவரை எதிர்ப்பவர்கள் மீது வருகிறது. கடைசி நாளில் கடவுளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அழிக்கப்படுவார்கள் என்கிற செய்திகளை கூறுகிறது. பாவங்களால் ஏற்படும் துயரங்கள் என்றென்றும் நீடித்து நிலைக்கும். இறையரசு மலரும்போது அவை மறைந்துவிடும்.

கடவுளை காணவேண்டும் என்கிற ஆதங்கம் நம் மனதில் எழும்போது கடவுள் காட்சி தருகிறார். திருமறை எழுத்துகளில் கடவுளை காண்போம். இறையரசை பெறவேண்டும் என்கிற வைராக்கியத்தில் வாழ்வோம்.

கடவுளே! திருமறை எழுத்துக்களில் உம்மை காணவும், நித்திய வாழ்வின் நிச்சயத்தோடு வாழ்ந்து இறையரசில் இணைய உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

இறையரசு2024-10-04T10:44:55+00:00

கருணைக் கடல்

சங்கீதம் 102 : 20-28                             06 செப்டெம்பர் 2024, வெள்ளி

“நாசகரமான குழியிலும், உளையான சேற்றிலுமிருந்து அவர் என்னைத் தூக்கியெடுத்தார்… கால்களை உறுதிப்படுத்தினார்.” – சங்கீதம் 40 : 2

நமது தேவைக்காகப் பலரை அணுகுகிறோம். காரியம் முடிந்ததும், அவர்களை மறந்துவிடுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுளை மறந்து போவதில் ஆச்சரியமில்லை.

தாவீதின் பாடலாகத் தியான வசனம் வருகிறது. தாவீது ஆடுகள் மேய்த்து வந்தவன். பல ஆபத்துக்களில், உளை சேற்றில், படுகுழியில் அழிந்துவிடாமல் அவனைக் காப்பாற்றியவர் கடவுள் என்று நம்பினான். சிங்கத்தை வெல்லும் வீரமும், கோலியாத் எனும் அரக்கனை வீழ்த்தும் சமயோசிதமும், ஆண்டவன் அவனுக்குத் தந்த அருட்கொடைகள் என்பதை நினைத்துப் பார்க்கிறான். தன்னுடைய பாவ நிலையையும் தாவீது மறக்கவில்லை. விபச்சாரம், கொலை, வஞ்சகம், பெருமை ஆகிய பாவச்சேற்றுக்குள் புதைந்து கிடந்தேன்… மனம் வருந்திக் கடவுளின் மன்னிப்பை வேண்டினபொழுது கடவுளின் கரம், என்னைத் தூக்கி எடுத்ததே, அழிவுக்குரியவனாகிய என்னை, கடவுள் மன்னித்து அரவணைத்துக் கொண்டாரே… என நினைத்துப் பார்க்கிறான் தாவீது.

அன்பானவர்களே, வாழ்வில் துன்பங்கள் நமக்கு உண்டு. நாம் பாவங்களைச் செய்கிறவர்கள்தான். ஆகையினால் கர்த்தரின் அரவணைப்பு நமக்கு கண்டிப்பாகத் தேவை. தினமும் கடவுளின் மன்னிப்பு நமக்குத் தேவைதானே… இயேசு கிறிஸ்துவின் வழியாக, கடவுள் நம்மை மன்னிக்கிறார். இந்த மன்னிப்பை நாம் மதிக்கிறவர்களானால் கடவுளுக்கு நன்றி செலுத்துவதில் நாம் கருத்தாயிருப்போமே! நமது இழிநிலைகளை, இன்றைக்கும் கடவுள் நமக்கு எடுத்துரைக்கிறார், சுட்டிக்காட்டுகிறார். நம் மனதைக் கடவுள் தம்மிடம் திருப்ப நினைக்கிறார்.

திரும்பி, கடவுளைப் பாருங்கள். பாவங்களை மறக்க மனம் கொள்ளுங்கள். கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார் என்று நம்புங்கள். நம் மனந்திரும்பிய வாழ்வைக் கடவுள் உறுதிப்படுத்துகிறார் என்பது நிச்சயம்.

மன்னிக்கும் இறைவனே, உமது மன்னிக்கும் மாண்பை உணரவும், மனந்திரும்பவும், நன்றியுடன் வாழவும் அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

கருணைக் கடல்2024-09-05T09:49:27+00:00

அருகில் இருக்கும் இறைவன்

எபேசியர் 2 : 13-22                                              30 ஜூலை 2024, செவ்வாய்

“அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல.” – அப்போஸ்தலர் 17 : 27

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பேருந்தில் புறப்படுகிற 50 பேருக்கும் சென்னை ஒரே தூரம்தான். வித்தியாசம் கிடையாது.

கடவுள் நம் யாருக்கும் தூரமானவர் இல்லை. ஒன்று, இரண்டு பேர்கள் என் நாமத்தில் எங்கு கூடுவீர்களோ, அங்கு நான் இருக்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் தகவல் தொடர்பு கடினமானதாக இருந்தது. உறவினர்களை பார்க்க செல்வது என்றால் இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்து பார்க்க செல்ல வேண்டும். ஆனால் அறிவியல் வளர்ச்சியால் செல்போன் மற்றும் ஊடகங்கள் வழியாக ஒரே நிமிடத்தில் பார்த்து விடுகிறோம். உலகத்தை சுருக்கி தூரமானவைகளை அருகில் வர செய்து விட்டோம். இதுவும் கடவுளின் ஆசியே.

நாம் பாவத்தால் கடவுளைப் பிரிந்து தூரத்தில் வாழ்ந்தவர்கள். கடவுளுக்கும் நமக்கும் இடைவெளி காணப்பட்டது. ஆதாம் ஏவாள் பாவத்தில் விழுந்தது முதல் நாம் கடவுளின் மகிமையை விட்டு தூரமாய் போனோம். ஆனால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் நம்மை மீண்டும் கடவுளுடன் இணைத்துவிட்டது.

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறார் என்று இயேசு கூறுகிறார். மேய்ப்பன் என்பவன் தன் ஆடுகளை விட்டு தூரமாக போக முடியாது. ஆடுகள் மேயும் எல்லைக்குள் மேய்ப்பன் இருக்கவேண்டும். அதுபோல் நாம் அவரின் பிள்ளையாய் அவரின் கண்களுக்கு அப்பால் போகாமல் அவருடைய மந்தையில் இணைந்திருப்போம்.

நாம் பாவம் செய்யும் போதெல்லாம் கடவுளை விட்டு தூரமாக போகிறோம் என்பதனை உணர்வோம். நம்முடைய செயல்களால், சிந்தனைகளால் கடவுளின் விருப்பதிற்கு மாறாக வாழ்ந்து தூரப்படுகிறோம். ஆனால் கடவுள் நம்முடன் இருந்து நம்மை காக்கிறார் என்பதை அறிவோம். கடவுள் நம்மோடு இருப்பதினால் அவர் கிருபை இருப்பதினால் நாம் திரும்பத் திரும்ப மன்னிக்கப்படுகிறோம். புதுவாழ்வு பெறுகிறோம்.

எங்களை மீட்டு எங்களோடிருக்கும்படி இயேசுவில் எங்களைத் தேடி வந்த கடவுளே! நீர் எங்களோடிருக்கிறீர் என்ற நிச்சயத்தில் வாழ வழிநடத்தும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

அருகில் இருக்கும் இறைவன்2024-07-29T11:12:09+00:00

ஒன்றாய் குடியிருப்போம்

யாக்கோபு 3 : 9-12                                            19 ஜூலை 2024, வெள்ளி

“செல்வனும் ஏழையும் ஒன்றாய் குடியிருப்பார் அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.” – நீதிமொழிகள் 22 : 2

நம் தியான வாக்கியப் பகுதி நாம் வாழும் சமூகத்தை படம்பிடித்து காட்டுகிறது. அதில் செல்வனும் ஏழையும் ஒன்றாய் குடியிருப்பர் என்கிறது.

நம் அனைவரையும் உண்டாக்கினவர் கடவுள். அவருடைய படைப்பில் செல்வந்தன் ஏழை பெரியவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பவர்கள் எவரும் இல்லை. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள்தான் பிரிவுகளை உருவாக்கி, தனித்தனி கூட்டங்களாக வாழுகிறார்கள்.

செல்வந்தன், ஏழை லாசரு வேதபகுதியில் இருவரும் ஒன்றாக வாழந்து வந்ததை இயேசு விளக்குகிறார். செல்வந்தன் தான் பெற்ற செல்வத்தால் சுக போக வாழ்க்கை வாழ்கிறார். ஏழை லாசரு வறுமையில் மிகுந்த வேதனையான வாழ்க்கை வாழ்கிறார்.

செல்வந்தனுக்கு அருளப்பட்ட செல்வம்; அவன் அனுபவிக்க மட்டுமல்ல. அது லாசருக்கும் பகிர்ந்தளிக்க கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் லாசருவை கனிவோடு கவனிக்கவில்லை. எனவே தான் மரணத்திற்கு பின் நரக வேதனைப்படுகிறான். லாசரு ஆபிரகாமின் மடியில் சுகவாழ்வை பெற்றான் என்று வாசிக்கிறோம்.

நம்முடைய வார்த்தைகள் செயல்கள் நடத்தை பேச்சு நமக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் தாலந்துகள் பக்தியுடன் கூடிய விசுவாசம் இவை அனைத்தும் பிறரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போஸ்தலர் வாழ்வில் முதல் நூற்றாண்டில் அனைவரும் தமக்குரியதை பிறர் அனுபவிக்கும்படியாக கொண்டு வந்தார்கள் என் பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட ஆசீர்வாத நன்மைகளுக்கு ஏதுவாக ஒளிவு, மறைவின்றி கொண்டு வந்தார்கள்.அவை அனைவருக்கும் பயன்பட்டது.

நம்முடைய ஆசீர்வாதங்கள் பிறருக்கு பயன்பட வேண்டும். ஏனெனில் நாம் ஒரே கடவுளால் படைக்கப்பட்டவர்கள். உறவுகளாய் இணைக்கப்பட்டவர்கள். சமூக வாழ்வில் ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் கடவுளின் பார்வையில் நாம் சமமானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களும் உயர்வடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் நம்மில் காணப்பட வேண்டும், வளர வேண்டும்.

நாம் கடவுளின் பிள்ளைகள் என பிறரும் உணர்வதற்கு கிடைத்திருக்கிற இந்த வாழ்வை கொண்டு கடவுள் நாமம் மகிமை அடைய செய்வோம். அதற்காகவே கடவுள் நம்மை அழைத்திருக்கிறார்.

அன்பு நிறைந்த கடவுளே! எங்களை அழைத்து வளமான வாழ்வுக்கு வழி நடத்தி வருகிறீர் நன்றி. நாங்கள் பெற்ற வளங்களை பிறருக்கும் பகிர்ந்தளிக்கிற மனதை எங்களுக்கு தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

ஒன்றாய் குடியிருப்போம்2024-07-18T07:21:08+00:00

புதிதாக்கப்படுகிறோம்

மத்தேயு 19 : 27-30                            23 ஏப்ரல் 2024, செவ்வாய்

நாம் நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டு…. சுதந்திரமாவதற்கென்று…. பரிசுத்த ஆவியை நம்மேல் நிறைவாய்ப் பொழிந்தருளினார்.” – தீத்து 3 : 6-7

இயேசுவின் கிருபையினால் நீதிமான்களாக மாற்றம் அடைந்துள்ளோம். அவர் பரிசுத்த ஆவியானவரை நிறைவாய் தந்தருளி நீதியுள்ள வாழ்வை வாழ நம்மை அழைக்கிறார்.

அநேக நற்செய்தி கூட்டங்களுக்கு சென்றிருப்போம். நற்செய்தியாளரின் சாட்சிகளை கேட்டிருப்போம். அவர்களது வாழ்வு முதலில் கீழ்படியாத வாழ்க்கையாக, போதை பொருட்களுக்கு அடிமைப்பட்ட, இச்சைகளுக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையாக இருந்து பிறகு கடவுளின் அன்பை உணர்ந்து ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நம் அனைவருக்கும் இத்தகைய அனுபவங்கள் இருக்கும். இயேசுவின் அன்பு ஓர் நாள் நமது பாவங்களை உணரும்படி செய்திருக்கும். அவரின் இரக்கம் கிடைத்ததை பரிசுத்த ஆவியானவர் நம்மை புதிதாக்கினதை உணர்ந்திருப்போம்.

சவுலின் வாழ்வும் அப்படிதான் இருந்தது. இயேசு சவுலை சந்தித்தபோது கடவுளின் கிருபையையும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடந்துதலையும் பெற்றார். அதன்பின் பரிசுத்தமுள்ள நீதியுள்ள வாழ்வு வாழ்ந்தார்.

மக்கள் துன்பங்களிலும், நோய்களிலும் உதவியின்றி வாழும் போது அவர்களுக்கு உதவி செய்யவே நம் வாழ்வை நிறைவாய் கடவுள் வைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்முடன் வாழ்வதால் பிறருக்கு நல்ல சமாரியனாக வாழ அழைக்கப்படுகிறோம். நிறைவு என்பது மனநிலையை பொறுத்தது. நமக்கு கடவுள் தரும் ஆசீர்வாதங்கள் பிறருக்கு நாம் அளிப்பதற்காக என்பதை உணர வேண்டும்.

நாமும் கடவுளின் கிருபையினால் நீதிமான்களாக வாழ்கிறோம். நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெறுவோம். நாம் ஆவியானவரின் மூலம் நடத்தப்படுகிறோம். இது நமது கிரியைகளினால் கிடைப்பது அல்ல கடவுளின் சுத்த கிருபையால் பெறுகிறோம்.

அன்புள்ள கடவுளே! உமது கிருபையினால் நீதிமானாக வாழ்வதற்கு ஆவியானவரின் உதவியை தினமும் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

புதிதாக்கப்படுகிறோம்2024-04-22T10:52:22+00:00

கடவுளின் வீட்டார்

எபேசியர் 2 : 19-22                                         15 ஏப்ரல் 2024, திங்கள்

“ஆகையால் நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமல்ல; கடவுளின் வீட்டார்.” – எபேசியர் 2 : 19

நாம் கடவுளின் வீட்டார் என்று சொல்லும்போது எவ்வளவு சந்தோஷம் மனதில் உணர்ந்து இருக்கிறீர்கள்.

இந்திய தேசம் அந்நியருக்கு அடிமைப்பட்டு இருந்த காலத்தில் இந்திய தேச மக்களில் அடிமைப்பட்டு இருந்த மக்கள் ஏராளம். உயர்குடி மக்கள்முன் துண்டு அணிதல் கூடாது, அவர்களை தொடக்கூடாது, அவர்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது. பெண்கள் மார்பகத்தை மூடக்கூடாது என்ற கொடூரமான அடிமைத்தனம் இருந்தது. நம் முன்னோர்கள் இந்த அடிமைத்தன வாழ்வில் இருந்தனர். அநேக மிஷெனரிகள் இந்த அடிமைத்தன வாழ்வில் இருந்து நமக்கு விடுதலை பெற்ற தந்தனர் என்பது உண்மை.

கடவுளின் வீட்டார் என்று அழைக்கப்படும் வாழ்வு முதற்காலத்தில் நமக்கு கிடைக்கவில்லை. அது இஸ்ரவேலருக்கு மட்டுமே உரிமையாக இருந்தது. கடவுளின் சொந்த ஜனமாக அவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகையின் மூலமாக அந்நியர் பரதேசிகள் என அழைக்கப்பட்ட நாம், இயேசுவின் இரத்தத்தினால் மீட்கபட்டோம். கடவுளின் பிள்ளைகளாக மாற்றப்பட்டு வாழ்கிறோம். இன்று நாம் அனைவரும் கடவுளின் வீட்டார்.

கடவுளின் பிள்ளைகளாக மாற்றப்பட்டு வாழ்கிற நமக்கு சில பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நம் நாட்டில் அந்நியரும் பரதேசியுமாக வாழும் மக்கள் கடவுளின் பிள்ளைகளாக மாறுவதற்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டும். அவர்களையும் கடவுளின் வீட்டிற்கு அழைத்து வரும் உன்னதமான பணியை செய்ய வேண்டியது அவசியமாகிறது. கடவுள் அப்பணியை செய்ய நம்மை அழைக்கிறார்.

நம்முடைய கிராமங்களில், பட்டணங்களில் நம் அருகில் வசிக்கும் குடும்பத்தார் நமக்கு உறவினர்கள் என்பதை அறிவோம். கடவுளின் அன்பை அவர்களுக்கு காண்பிப்போம். இயேசு அவர்களையும் நேசிக்கிறார் என்பதை நம்முடைய செய்கைகளின் மூலம் அறியச் செய்வோம். இதுவே கடவுளின் வீட்டாரின் முதன்மைப்பணி.

அன்புள்ள கடவுளே! உமது சொந்த குமாரனாகிய கிறிஸ்துவின் மூலம் நாங்கள் உமது பிள்ளைகளாக மாற்றப்பட்டதற்கு நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

கடவுளின் வீட்டார்2024-04-11T11:36:45+00:00

அருள்தரும் சிலுவை

பிலிப்பியர் 1 : 27-30                          25 மார்ச் 2024, திங்கள்

“கிறிஸ்துவில் விசுவாசம்வைக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தம் பாடுபடுவதற்கும் நீங்கள் அருள் பெற்றீர்கள்.” – பிலிப்பியர் 1 : 29

ஒரு ஊருக்கு ஒரு ஞானி வந்திருந்தார். ஒரு இளைஞன் அவரை தேடி வந்து தயங்கித் தயங்கி நின்றான். அந்த ஞானி அவனை அழைத்து உனக்கு என்ன வேண்டும் என்றார். அவனோ ஐயா, என் வீட்டில் நிம்மதியே இல்லை, தினந்தோறும் சண்டை, இந்த நிலை மாறி என் வீட்டில் அமைதியும் சமாதானமும் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்றான். உடனே ஞானி நீ ஊருக்குள் போய் சந்தோஷமாய் யாராவது இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்டு நாளைக்கு வா என்றார். அவனும் அடுத்த நாள் வந்தான். ‘யாரும் சந்தோஷமாக இல்லை. என்னைவிட பல பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது. யாரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்தேனோ அவர்களெல்லாம் என்னைவிட பல மடங்கு பிரச்சனைகளோடிருக்கிறார்கள். எனவே நீங்களே எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்’ என்றான். அதற்கு ஞானி மெதுவாக, ‘அது தெரிஞ்சா நான் ஏண்டா இப்படி ஊர் ஊரா திரிய போறேன்’ என்றாராம்.

அன்பானவர்களே துன்பம் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால் அந்த துன்பம் எதனால் வந்தது என்பது முக்கியம். பல துன்பங்களுக்கு நாமே காரணமாயிருக்கிறோம். தேவைக்கு மிஞ்சி செலவு செய்து, கடன் வாங்குவது. தீய பழக்க வழக்கங்களுக்குள்ளாகி வாழ்வை கெடுத்துக் கொள்வது. சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டி விபத்துக்களில் சிக்குவது. இதெல்லாம் நாம் செய்யும் தவறுகளால் விளையும் துன்பங்கள். இப்படி இன்னும் பல. ஆனால் நாமோ கடவுள் என்னை சோதிக்கிறார் என்று புலம்புவோம். ஏன்தான் இப்படி கடவுள் எங்கள் வாழ்வில் துன்பங்களை அனுமதிக்கிறாரோ தெரியவில்லை என்று கடவுள் மீது பழி போடுவோம்.

பிலிப்பியருக்கான இந்த நிரூபத்தை பவுல் சிறையிலிருந்து எழுதினார். பவுலின் இந்த நிலைக்கு காரணமென்ன? அவர் என்ன தவறு செய்தார்? அவர் எந்த தவறும் செய்யவில்லை. மாறாக கிறிஸ்துவின் அன்பை உலகெங்கும் சென்று அறிவித்தார். அடிமைத்தன வாழ்விலிருந்த மக்களுக்கு விடுதலையின் வாழ்வை அறிவித்தார். இதற்காகவே சிறையிலடைக்கப்பட்டார். இதுதான் கடவுளின் நிமித்தமாய் பாடனுபவிப்பது. இதையே பவுல் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். கிறிஸ்துவை விசுவாசித்து அவரது அருளாசிகளை அனுபவிக்கிற நாம், அதை பிறருக்கும் அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதனால் வரும் பாடுகளை ஏற்றுக்கொள்ள பவுல் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

அன்பானவர்களே கிறிஸ்துவின் சிலுவை அன்பை அறிவிப்பது நமக்குக் கிடைத்த பாக்கியம். அது இறைவனின் அருள். அதை சந்தோஷமாய் எண்ணி அறிவிப்போம்.

அன்பின் பிதாவே! உமது அன்பை அறிவிக்கும் அருளை பெற்ற நாங்கள் அதற்கான பாடுகளை சகிக்க பெலன் தாரும். இயேசுவின் பெயரில் ஆமேன்.

அருள்தரும் சிலுவை2024-03-22T11:50:24+00:00
Go to Top