About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 447 blog entries.

காணிக்கை

2 கொரிந்தியர் 9 : 6-8                                     09 ஏப்ரல் 2025, புதன்

“உங்கள் உபகாரம் லோபத்தனமாயல்ல, நன்கொடையாகவே ஆயத்தமாயிருக்க வேண்டுமென்பது என் நோக்கம்.”

– 2 கொரிந்தியர் 9 : 5

நம் நாட்டில் கிராமப் பொருளாதாரம் மிகப் பின்தங்கியுள்ளது. கிராமச் சபைகளின் பொருளாதாரம் இன்னும் பரிதாபம். விவசாயக் கூலிகளாக, சிறு விவசாயிகளாக, தினக்கூலிகளாகக் குறைந்த பொருளாதாரத்தில் வாழ்பவர்கள் கிராமத்தில் அதிகம்.

திருச்சபை வளர்ச்சி குறித்த, கிராம விசுவாசிகளின் உற்சாகம் ஆர்வம் பங்கேற்பு, பட்டணத்துச் சபைகளைவிட சிறப்பாகவே இருக்கும். பொருளாதாரக் குறைவால் கிராமச் சபைகளின் முன்னேற்றம் பாதிக்கப்படும்.

கோழி முட்டையிட்டால் முதல் முட்டை ஆலயத்துக்கே. தோட்டத்தில் விளைகிற முதல் காய் அல்லது கனி எதுவானாலும் அது ஆண்டவருக்கே… என்ற பழைய ஒழுங்கை ஆசரிப்பவர்கள் கிராமக் கிறிஸ்தவர்கள்.

காணிக்கை கொடுப்பதில், நாம் கர்த்தரின் கிருபையை நினைத்து நன்றி சொல்லுகிறோம். கர்த்தரின் திருப்பணியைத் தாங்கும் பொறுப்பில் நமது பங்கும் உள்ளது என்பதையும் காணிக்கையில் உறுதி செய்கிறோம். காணிக்கை படைத்தல் பக்தியோடும், அக்கறையோடும் திட்டமிட்டும் செய்யப்படுதல் நன்று. கஞ்சத்தனமாக அல்ல, ஊழிய நோக்குடன், நன்றியாகக் காணிக்கை படைப்போம்.

கொரிந்து பட்டணத்தில் வாழ்ந்த விசுவாசிகள் செல்வச் செழிப்பில் வாழ்ந்திருக்கலாம். பட்டணங்கள் செல்வச் செழிப்பிற்கு அடையாளம்தானே. பட்டண வாழ்க்கையில் எவ்வளவு வருமானம் வந்தாலும் போதாது. பகட்டு வாழ்க்கை முக்கியமாக மாறும்போது, பக்தி வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

எனவேதான் பவுலடியார் ‘ஆயத்தமுள்ள நன்கொடை’ தான் ஆண்டவருக்கு முன் அழகு என்கிறார். பணம் மட்டுமல்ல, மனமும் ஆண்டவருக்கு முன்பு வந்திட திட்டமிடப்பட்ட ஆயத்தம் அவசியப்படுகிறது.

பல குடும்பங்களில் ‘காணிக்கை’ திட்டமிடப்பட்டு வருவதல்ல குடும்பத்தலைமைகள் காணிக்கை படைத்தலைப்பற்றிப் பெரிதாக நினைப்பதில்லை.

கடவுளின் அன்பைக் கல்வாரி மலையில் கண்டோம். பின்பு கல்லறையில் உயிர்த்த இயேசுவையும் கண்டோம். எல்லாம் திட்டமிட்டு நடந்தன.

தேவ அன்பைத் தெளிவாகக் கண்டவரின் வாழ்வு திட்டமிட்ட பக்தி வாழ்வாக இருக்கும். இந்தப் பக்தி வாழ்வில் திட்டமிட்ட காணிக்கை படைப்பு உயர்வான செயல்முறை கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணருவோமாக.

எல்லா நன்மைகளையும் வழங்கி எம்மை ஆசீர்வதிக்கும் அன்பின் தெய்வமே, உமது அன்புக்கு நன்றியுள்ளவராக வாழ, திட்டமிட்டு காணிக்கை படைத்திட எம்மையும் வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

காணிக்கை2025-04-07T10:10:39+00:00

ஒப்படைப்பு

2 கொரிந்தியர் 12 : 9-10                             10 மார்ச் 2025, திங்கள்

“முதலாவது ஆண்டவருக்கும், பின்பு கடவுளின் சித்தத்தினால் எங்களுக்கும் தங்களைக் கொடுத்தார்கள்.” – 2 கொரிந்தியர் 8 : 5

கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் நாள்கள் இவை. பாவத்தினால் சோர்ந்து, வாழ்விழந்த உலகம் மீண்டும் இறைவனுக்கு ஏற்புடையதாக புது வாழ்வு பெறவே இறைவன் தன் திருமைந்தனாம் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்.

உலகையும், பிற அனைத்தையும் வாயின் வார்த்தையைக் கொண்டே உருவாக்கியவர் சர்வ வல்லவர். உலக மீட்பையும் இவர் ஒரு வார்த்தையைக் கூறி நிறைவேற்றியிருக்கலாமே என்று கேட்பவரும் உண்டு. ‘மீட்பு’ என்ற ஒரு வார்த்தை மட்டுமல்ல! பாவத்தின் அகோரமும் அதன் தண்டனையான மனுக்குலத்தின் நித்திய மரணமும், இதைக் கண்டு பரிதபிக்கும் இறைவனின் கருணையுள்ளமும் மீட்பில் உள்ளடங்கியிருக்கின்றன. குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டியான இறைமகன் இயேசுவின் தியாகம், மீட்பின் வழிமுறை ஆயிற்று. இரட்சிப்பு அல்லது இரட்சிக்கப்பட்டேன் என்று நம்புவதில் அடங்கியுள்ள உண்மைகள் ஏராளம்.

மீட்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் பிறருக்கும் உதவி செய்கிறார்கள் என்ற தகவலைப் பவுல் ஆதார வார்த்தைகளில் விளக்கினார். எருசலேமில் பஞ்சம் உண்டானது. எந்தத் தொடர்பும், உறவும் இல்லாத மக்கேதொனியா பகுதியைச் சேர்ந்த விசுவாசிகள் இவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். வறுமை இருந்த போதும் இவர்கள் வாரி வழங்கினார்கள். இதற்குக் காரணம், கிருபையால் மக்கெதோனியா விசுவாசிகள் பெற்ற இலவச மீட்புதான்.

மக்கெதொனியா சபையார், “ஆண்டவருக்குத் தங்களைக் கொடுத்தார்கள்” என்று பவுல் பாராட்டினார். காணிக்கை, நன்கொடை கொடுப்பதன் கிறிஸ்தவ விளக்கம் இதுதான். ஊழியருக்கு, அல்லது ஊழியத்திற்கு என்னும் உணர்வை விட, ‘ஆண்டவருக்கு நான் என்னைக் கொடுக்கிறேன்’ என்ற உணர்வும் நம்பிக்கையும் முக்கியம்.

புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங் என்பவர், “இன்று 40 வயதைக் கடந்துள்ள ஒவ்வொரு இந்தியனும், ஏதாவது ஒரு வழியில் கிறிஸ்தவ மிஷனெரிகளின் சேவையை ருசித்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது” என்கிறார். ஆம் மிஷனெரிகள் நமக்காகத் ‘தங்களைக் கொடுத்தவர்கள்’.
நீங்களும் ஒரு மிஷனெறிதான்! வான்மலர் செய்வதும் மிஷனெறி ஊழியம்தான்! வாருங்கள். ஒன்றிணைந்து ஊழியத்தில் வளருவோம். ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம். எங்களை உங்களுக்குத் தருகிறோம். உங்களை ஆண்டவருக்குக் கொடுங்கள்.

இரக்கம் உள்ள ஆண்டவரே! இயேசு சம்பாதித்த மீட்பின் நற்செய்தியை எங்களுக்குக் கொண்டு வர ஆயிரமாயிரம் மிஷனெறிமாரை எங்களிடம் அனுப்பினீர். எங்களுக்காக உழைத்த மிஷனெறிமாருக்காக உம்மைப் போற்றுகிறோம். இயேசு வழியே ஆமேன்.

ஒப்படைப்பு2025-03-07T07:45:57+00:00

லாபத்தைத் தேடாத ஊழியம்

1 கொரிந்தியர் 4 : 1-4                       05 பிப்ரவரி 2025, புதன்

“நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடம் லாபத்தைத் தேடியடைந்ததுண்டா?” – 2 கொரிந்தியர் 12 : 17

லாபத்தைக் கருத்தில்கொண்டே இன்று ஊழியங்கள் என்ற பெயரில் வியாபாரங்கள் நடைபெறுவது நாம் அறிந்ததே! பிற நம்பிக்கையுடைய மக்களும் ஊழியர்களை மத வியாபாரிகள் என்று அழைக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் சிலரை சாட்சிகளாகவும் காட்டுகின்றனர். நாம் வாசித்த வசனத்தில் பவுல் தனது ஊழியத்தையும் கொரிந்திய சபை மக்களோடு தனக்குள்ள உறவையும் கூறுகிறார். அவர் அச்சபைக்கு அனுப்பிய ஆட்கள் மூலமாக எந்த இலாபத்தையும் எதிர்பார்த்து உங்களிடம் அவர்களை அனுப்பவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார்.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் தலைமைப் பதவியும், பொறுப்பும், அதிகாரமும், வரும்போது பணிவுடனும், நேர்மையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும். நமக்கு இருக்கிற செல்வாக்கின் மூலம் எளிய மக்களின் நலனுக்காக உதவிபுரிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவர்களை சுரண்டவோ அவர்களிடம் அநியாய லாபத்தை தேடவோ கூடாது. பிலிப்பியர் 2:5 “கிறிஸ்துவின் சிந்தையே உங்களில் இருக்க வேண்டும்” என்று சொல்லுகிறது.

பவுலின் கேள்வியை இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். நாம் நமது அதிகாரம் மற்றும் செல்வாக்கை மற்றவர்களுக்காக சேவை செய்ய பயன்படுத்த உறுதி எடுப்போம். அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி மற்றவர்களை நமக்கு சேவை செய்ய பணிக்காதிருப்போம். நாம் பணிவுடனும், நேர்மையுடனும் அவர்களை நடத்துவோம். அதுவே இறைவழி.

பவுலின் முன்மாதிரியை பின்பற்றி பணிவுடனும், நேர்மையுடனும் ஆண்டவருக்கு சேவை செய்ய முயற்சிப்போம். நம்முடைய சக்தியையும், செல்வாக்கையும் பயன்படுத்தி எளிய மக்களை இயேசுவுக்குள் கூட்டிச் சேர்ப்போம்.

நல்ல கடவுளே! உமக்கு நாங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்து, சுய இலாபத்தைத் தேடாமல், ஊழியஞ் செய்ய அருள் புரியும். இயேசுவில் பிதாவே! ஆமேன்.

லாபத்தைத் தேடாத ஊழியம்2025-02-05T08:34:31+00:00

மாறுபாடு உள்ளவன்

2 சாமுலேல் 15 : 1-14                       21 ஜனவரி 2025, செவ்வாய்

“மாறுபாடுள்ளவன் சண்டை கிளப்பி விடுவான்; கோள் சொல்லுகிறவன் தோழரையும் பிரித்து விடுவான்.”
– நீதிமொழிகள் 16 : 28

மாறுபாடுள்ளவன் சண்டையை கிளப்புகிறான். கோள் சொல்கிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகின்றான் என்பது உண்மை. ஆனால் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது, உண்மை, நேர்மை, பரிசுத்தம், நீதி, நன்னடத்தை. கடவுளுக்கு பயப்படும் பயம் இவை நமது சொத்து சுகம், வளங்கள் இவற்றைவிட முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பெரும்பாலும் சுயநலமானவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு நன்மை வருமெனில் யாரையும் துன்பப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பணம், அதிகாரம் போன்றவற்றுக்காக எப்பேர்ப்பட்ட குற்றங்களையும் இவர்கள் செய்வார்கள். அதை நியாயப்படுத்தவும் செய்வார்கள். எனக்கு சம்பளம் பத்தலை, லஞ்சம் வாங்குகிறேன் என்று சொல்பவரை நான் அறிவேன். நான் சீனியர். ஜீனியர்கள் எனக்கு வேலைக்காரர்கள்தான் என்று சொல்லுகிற அதிகாரிகள் உண்டு. இவை பாவம். இவர்களுடைய பாவ எண்ணங்களை ஆண்டவர் வெறுக்கிறார். ஒரு குழுவோ, குடும்பமோ, அலுவலகமோ, சமூகமோ சமாதானமாக அன்பாக வாழ்ந்திருக்கவே அதில் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டும். மாறாக தனது சுயநலத்திற்காக அவற்றைக் கலைத்து விடுதல் கூடாது. கடவுளின் அன்பைப் பெற்றவர்கள் நாம். அதை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளுவதே சரியான கிறிஸ்தவ வாழ்க்கைமுறை. இயேசுவே நமக்கு வழிகாட்டி.

அவரது அடி சுவடுகளை பின்பற்ற நமக்கு அவரது சிலுவை அன்பை முன்மாதிரியாக வைத்துள்ளார். அந்த அன்பு எல்லோரையும் குறிப்பாக சத்துருவையும் ஏற்றுக்கொள்ளும் அந்த அன்பில் வாழ அழைக்கின்றார்.

கடவுளே! சுத்த இருதயத்தை எண்ணிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

மாறுபாடு உள்ளவன்2025-01-20T10:26:58+00:00

இயேசுவைக் காண விரும்புதல்

அப்போஸ்தலர் 20 : 19-21                          14 ஜனவரி 2025, செவ்வாய்

“இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கேட்டுக்கொண்டார்கள்.” – யோவான் 12 : 21

இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று சிலர் கேட்டுக் கொண்டார்கள். லாசருவை உயிரோடு எழுப்ப நடக்கும் நிகழ்வுக்கு அவர் எருசலேமுக்கு வருகின்றார் என்று கேள்விப்பட்டனர். திரளான ஜனங்கள் குருத்தோலை பிடித்துக் கொண்டு புறப்பட்டு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தில் வருகிற இஸ்ரவேலின் இராஜா துதிக்கப்பட தக்கவர் என்று ஆர்ப்பரித்தார்கள். பண்டிகையை ஆசரிக்க வந்த கிரேக்கர்கள் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடம் ஐயா இயேசுவை காண விரும்புகிறோம் என்றார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் சொல்ல அந்திரேயா இயேசுவிடம் அறிவித்தான். இயேசு தான் மகிமைப்படும்படியான வேளை வந்தது என்று அறிந்து அங்கிருந்து மறைந்து போனார்.

தொடர்ந்து வரும் பகுதியில் ஜனங்களும் அதிகாரிகளும் அவரில் விசுவாசம் வைத்தார்கள் என்பதை வாசிக்க முடிகிறது. இயேசுவை தேட, காண தொடர விசுவாசம் தேவையாக உள்ளது. இந்த விசுவாசமே மானிட மகன் தேவகுமாரன் என்பதை நம்மை ஏற்றுக்கொள்ள செய்கிறது. அவரில் மட்டுமே முழு மானுடத்துக்கும் மீட்பு என்பதை உணரமுடியும்.

இதுவே அவரை தேடுவதின் நோக்கமாய் இருக்க வேண்டும். ஏனெனில் அவரை தேடுகின்ற அனைவரும் கண்டடைவார்கள் என்பதை அவரே தனது மலை பிரசங்கத்தில் விளக்கி காட்டியுள்ளார். அவரை தேடுகின்றவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. பால சிங்கம் குறைவடைந்து பட்டினி கிடக்கும். அவரை தேடுகிறவற்கு ஒரு நன்மையும் குறையாது என்பதையும் தாவீதின் அனுபவத்தில் பார்க்கின்றோம். அவர் சமூகத்தை நித்தமும் தேடி நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம்.

முதலாவது கடவுளின் ராஜ்ஜியத்தையும், நீதியையும் தேடுங்கள். இவை உங்களுக்குகூட கொடுக்கப்படும் என்பதே இயேசு கிறிஸ்து முழு மானுடத்துக்கு கொடுக்கும் அழைப்பு. அந்த அழைப்பை இன்று உனக்கும் எனக்கும் கொடுக்கின்றார்.

அன்புள்ள கடவுளே! கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்று உரைத்த உமது குமாரனிலும் எங்கள் மீட்பரிலும் விசுவாசம் வைக்க கிருபை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

இயேசுவைக் காண விரும்புதல்2025-01-13T08:40:49+00:00

எழும்பி பிரகாசி

ஏசாயா 9 : 5-7                                06 ஜனவரி 2025, திங்கள்

“எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தரின் மகிமை உன் மேல் உதித்தது. இதோ, இருள் பூமியை மூடும்,  ….. ஆனால் கர்த்தர் உன் மீது உதிப்பார்.” – ஏசாயா 60 : 1, 2

இருள் என்று புலம்பிக் கொண்டிருந்த மக்கள்மீது ஒளி வீசுகின்றது. இது சாதாரண ஒளி அல்ல ஆண்டவரின் நித்திய ஒளி, மகிமையின் ஒளி. எனவே சீயோனை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி மண்ணில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றவர்களை பார்த்து எழும்புமாறு அழைப்பு வருகின்றது. கடவுள் அருளும் ஒளியாய் எழுந்து பிரகாசி என்பது கடவுளின் இரட்சிப்பை, மீட்பை விடுதலையைக் குறிக்கும் பொருளாக சொல்லப்படுகின்றது.

ஏசாயா தீர்க்கர் கடவுளின் மகிமையை ஆலய பிரகாரங்களில் கண்டு பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்றும் சேராபீன்கள், கேருபீன்கள் மத்தியில் மகிமையில் வீற்றிருப்பவர் என்பதையும் வெளிப்படுத்தினர். அந்த மெய்யான ஒளி இயேசு கிறிஸ்துவின் மனுஉருவேற்கும் பொழுது வானசேனையின் திரள் ஒன்றாக தோன்றி, உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை, பூமியில் மனுஷனுக்குள் சமாதானம், மனுஷர் மேல் பிரியம் என்று ஆர்ப்பரித்தார்கள். ஆகவே ஒளியாக இறைவன் உங்களையும் என்னையும் முழு உலகையும் எழும்பி பிரகாசிக்க அழைக்கிறார். உன் ஒளி வந்தது, அது உன் மேல் உதித்தது என்று உற்சாகப்படுத்தி நம்மையும் அவருடைய ஒளியில் பிரகாசிக்க செய்கிறார்.

இறைவா! நீங்களும் ஒளியின் பிள்ளைகளாய் நடந்துக் கொள்ளுங்கள் என்ற உமது அழைப்பை ஏற்று வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

எழும்பி பிரகாசி2024-12-20T13:05:45+00:00

நம்மை ஆட்கொண்டவர்

ஆதியாகமம் 15 : 1 – 2                                  01 ஜனவரி 2025, புதன்

“என்னை ஆட்கொண்டவராகிய கர்த்தாவே, அடியேனுக்கு நீர் தரக்கூடியதென்ன?.” – ஆதியாகமம் 15 : 2

தியானமலர் வாசகர்கள் அனைவருக்கும் வான்மலர் நிலையத்தாரின் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம் உள்ளங்களில் ஏக்கமும் எதிர்பார்ப்புகளும் எழுகின்றன. இந்த ஆண்டு எப்படி இருக்கும், எவை சம்பவிக்கும் போன்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

நமது தியானவாக்கியப் பகுதியில் ஆபிரகாம் இத்தகைய கேள்வியையே கடவுளிடம் கேட்டார். மேசியாவை பிறக்கச் செய்ய ஒரு நாடு தேவைப்பட்டது. அந்த நாட்டைக் கண்டுபிடிக்க கடவுள் ஆபிரகாமை அழைத்தார். நான் காண்பிக்கிற நாட்டுக்குப் போ என்றார். ஆபிரகாம் நம்பிக்கையோடு கடவுள் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து போனார். ஒவ்வொரு நாளையும் ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் எதிர்பார்த்து நடந்தார். கானான் நாட்டை வந்தடைந்தபோது இந்த நாடுதான் என்றார். ஆபிரகாம் அங்கு கடவுளைத் தொழுது கொண்டார்.

இந்நிலையில் கடவுள் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி இந்த நாட்டை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன் என்றார். அத்துடன் உன்னைப் பெரிய சமூகமாக்குவேன் என்றார். இதுமட்டுமல்ல உன்னை ஆசீர்வதித்து உன் பெயரை மேன்மைப்படுத்துவேன் என்றார்.

ஆபிரகாமுக்கு அருளப்பட்ட வாக்குத்தத்தங்களும் ஆசீர்வாதங்களும் மகப்பேற்றிற்கான வாக்குத் தத்தத்தால் உறுதிப்படுத்தப்படுகின்றன. குழந்தையற்ற ஆபிரகாமுக்கு கடவுள் திருக்காட்சியருளுகிறார். மகப்பேற்றினை வாக்களித்து ஆபிரகாமை தேற்றுகிறார்.

மனித இயல்பின்படி இவ்வாக்குத்தத்தத்தை நம்ப ஆதாரமில்லை. எனினும் கடவுளிடம் ஆபிரகாமுக்கு இருந்த அனுபவமும் அவை நிறைவேறிய விதமும் நம்பினார். கடவுள் அளிக்கும் இந்த உடன்படிக்கையில் பிள்ளைப்பேறும் சுதந்திரக் கானானும் வாக்களிக்கப்படுகின்றன.

அன்பானவர்களே! மக்களை கடவுள் ஆட்கொள்ளுகிறார் என்பது ஆழ்ந்த சமய அனுபவம். ஆட்கொள்ளப்படுகிற நாம் ஆட்கொண்டவருக்கு எந்நிலையிலும் கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப்போல இவ்வுலகில் வாழ்ந்த என்னைப் பின்பற்றி வா என்றார் ஆண்டவர். அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு அவர் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்வோம். கடவுள் நம்முன்னே இருக்கிற 365 நாட்களும் நம்மை பத்திரமாக நடத்துவார்.

Happy and blessed New Year!

வாக்குத்தத்தங்களை அருளி அவற்றை நிறைவேற்றுகிற கடவுளே! உம் வாக்குத்தத்தத்தை நம்பி வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

நம்மை ஆட்கொண்டவர்2024-12-20T06:18:35+00:00

கடவுளுக்குச் சிபாரிசு

லூக்கா 18 : 9-14                                                      27 டிசம்பர் 2024, வெள்ளி

“…இந்த ஆயக்காரனைப் போலவும் நான் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.” – லூக்கா 18 : 11

பிற மனிதனுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்கிறான் மனிதன், பணத்தில், குணத்தில், தரத்தில் இந்த ஒப்பீடுகள் தொடருகின்றன. ஒப்பிட்டு பார்க்கின்றவர்கள் நாமும்தான். உயர்ந்தவனாக, நல்லவனாகவே, நம்மைப்பற்றி நினைத்துக் கொள்கிறோமே உங்கள் அளவுகோல் என்ன? மனிதனா? கடவுளா? தினவாழ்வின் நடைமுறைகளா? தெய்வத்தின் வரைமுறையா?

இன்றை தியானப்பகுதியில் தன்னை உணர்ந்தவனாக எண்ணிய பரிசேயன் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. பரிசேயன் ஆலயத்தில், ஆயக்காரனுடன் தன்னை ஒப்பிட்டு, தன்னைத்தானே கடவுளுக்குச் சிபாரிசு செய்கிறான். கருணைக்கடவுளுக்கு முன்பு, சுயநீதி சுயபுராணம் சிபாரிசு செய்யப்படுகிறது. பரிசேயன் எப்படி வந்தானோ அப்படியே திரும்பினான். தவறாக அளவெடுத்தான் தப்பான அளவுடனே ஆலயத்திலிருந்து திரும்பினான். பரிசேயனோடு ஜெபித்த மற்றொருவன் ஆயக்காரன். தன்னை ஒன்றுமில்லாதவனாக தகுதியற்றவனாக நினைத்தான். இறைவன் முன்னிலையில் தலைகுனிந்து நின்றான். `பாவியாகிய என் மேல் இரங்கும்’ என்று பரிதாபமாகப் பிராத்தனை செய்தான். குனிந்து நின்றவன் இறையருளால் மன்னிப்புப் பெற்று நிமிர்ந்து சென்றான். நம்மை யாருடன் ஒப்பிட்டு பேசிக் கொண்டிருக்கின்றோம்? யாருக்கு முன்பாக நம்மை உயர்த்திக் கொண்டிருக்கின்றோம்? சிந்தித்துப் பாருங்கள். மனிதனுக்கு முன்பாகவே என்னை நல்லவன் என்று சொல்ல முடியாது. என் லட்சணத்தை நான் மறைத்தாலும் உலகத்துக்கு நான் யார் என்று நன்றாகத் தெரியும். நமது லட்சணம் தெய்வத்திற்குத் தெரியாது என நினைக்காதீர்கள்.

அவர் முன்பு தலைகுனிவோம், `நான் பாவி’ எனக் கூறி விம்மி அழுவோம். மன்னிப்புப் பெற வேண்டுமா? தேவ இரக்கம் அனுபவிக்க வேண்டுமா? சாதனைப்பட்டியலைத் தொலைத்துவிடுங்கள் பாவபட்டியலை விரித்துக் காட்டுங்கள்.

பாவிகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் நல்ல ஆண்டவா என்னை நீர் அறிவீர். என் அக்ரமங்களை நான் மறைக்க முடியாது. கிருபையோடு மன்னியும். நல்லதை நினைக்கும் நல்மனதைத் தாரும். ஆமேன்.

கடவுளுக்குச் சிபாரிசு2024-12-20T06:15:01+00:00

கிறிஸ்மஸ்

எபேசியர் 3 : 9-13                           25 டிசம்பர் 2024, புதன்

“கடவுளின் சகல பரிபூரணமும் கொள்ளுமட்டும் நிரப்பப்பட வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.” – எபேசியர் 3 : 19

மெர்ரி கிறிஸ்மஸ்! உங்கள் அனைவருக்கும் வான்மலர் இல்லத்தின் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!

இறைவன் மனிதனாகப் பிறந்தார். இதுவே கிறிஸ்மஸ்! இறைவன் பல்லாண்டுகளுக்கு முன்பே செய்த தீர்மானம். இறைமக்கள் வாயிலாக காலாகாலத்தில் சொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தது. இறைவனின் தீர்மானம் இயேசுவின் பிறப்பில் உண்மையானது. இறைவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. முழுத்தூய்மையும் ஆற்றலும் நிறைந்த இறைவனை, மனிதனாகி வந்த இறைவனாம் இயேசுவே நமக்கு வெளிப்படுத்தினார். வல்லமையுள்ள, தூய்மையுள்ள இறைவன், மனிதனை வாழ்விக்க மனிதனாகப் பிறந்தார். இந்த மகிழ்ச்சிதான் கிறிஸ்மஸ் நாளின் சிறப்பு.

இயேசுவின் பிறப்பு அனைவர் வாழ்விலும் முழுமையைச் சுட்டிக்காட்டுகிறது. எனக்காக ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார். இது நமக்கு புதிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயேசுவின் பிறப்பு சமாதானம், மகிழ்ச்சி, தூய்மை மன்னிப்பு ஆகியவற்றை மனிதருக்கு தருகிறது. சகலமும் இயேசுவில் அடங்கி இருக்கிறது. அவரை ஏற்றுக்கொள்ளும் நமக்கு நிறைவான வாழ்வைத் தருகிறார் இயேசுவே.

நாட்டின் தலைவர்கள் பிறந்தநாளில் அன்னதானமும், வஸ்திரதானமும் செய்கிறோம். ஏன்? மகிழ்ச்சியை பிறருடன் பங்கிட்டுக் கொள்ளவே பரிசுகளைக் கொடுக்கிறோம், பெறுகிறோம். உலகில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர் இயேசு. இல்லாமையால் மகிழ்ச்சியைக் காணமுடியாத பலர் இன்றைக்கும் நம்மோடு வாழ்கின்றனரே. நீங்கள் இப்போது கிறிஸ்மஸ் நாட்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். இல்லாதவர்களைக் குறித்து இன்றைக்கு நினைக்கிறீர்களா? இவர்களுக்கு எதையாபது கொடுக்க விரும்பினால் இப்பொழுதே செய்யுங்கள். தாமதித்தால் நமது மனம் மாறிவிடும்.

கடவுள் சகல நன்மைகளையும் நமக்குப் பூரணமாக அருளுகிறார். குறைவுள்ளவர்களுக்கும் கொடுத்து கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். கொடுங்கள்…. மகிழ்ச்சி இரண்டு மடங்காகும்.

அன்புள்ள கடவுளே! உமது மைந்தன் இயேசுவை எங்களுக்காக உலகத்தில் அனுப்பினதற்காக உமக்கு நன்றி. நீர் எனக்கு அருளும் மகிழ்ச்சியும் சமாதானமும் பிறர் வாழ்விலும் கலந்திட எங்களை செயல்பட வைத்தருளும். ஆமேன்.

கிறிஸ்மஸ்2024-12-20T06:11:29+00:00

கடவுளின் வாரிசுகள்

ரோமர் 8 : 12-17                       21 டிசம்பர் 2024, சனி

“நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, கடவுளின் சுதந்திரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;….” – ரோமர் 8 : 17

பெற்றோர்களின் சொத்துக்களுக்கு வாரிசு, அவர்களின் பிள்ளைகள், வாரிசுகள், தகப்பனின் சொத்துக்களையும், பெருமையையும், மரியாதையையும் நிலைநாட்டுவார்கள், வளர்ப்பவர்கள்.

பவுலடிகளார் நம்மை, கடவுளின் வாரிசுகள் என அழைக்கிறார். இந்த வாரிசுத் தன்மையை, இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் நமக்கு தந்திருக்கிறார். ஆதார வசனப்படி நாம் `கிறிஸ்துவுக்கு இணையான உடன் வாரிசுகள்’ என்றும் அழைக்கப்படுகிறோம். விசுவாசிகளின் `பிறப்புரிமை’ என்பது, `கடவுளின் பிள்ளைகள்’ என்ற உயர்ந்த நிலைமை. நாம் அவரால் படைக்கப்பட்டவர்களாக இருப்பதினால், நாம் அவரின் வாரிசுகளா? நல்ல செயல்களை செய்வதால் நாம் கடவுளின் பிள்ளைகள் ஆக முடியுமா? கிறிஸ்தவ மதச் சடங்குகளை ஒழுங்காக பின்பற்றுவதினால் நாம் கிறிஸ்துவின் வாரிசுகளா? இல்லவே இல்லை! கடவுளின் கிருபையினால் நாம் கடவுளின் பிள்ளைகள், கிறிஸ்துவின் வாரிசுகள், கடவுள் நம்மைத் தத்து எடுத்திருக்கிறார். `நான் கடவுளின் வாரிசு இல்லை’ என யாரும் சொல்லவே முடியாது. உலகோர் ஒவ்வொருவரும் `தனது வாரிசு’ ஆகவேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இதற்காகவே இயேசு பாடுபட்டு, மரித்து, உயிர்த்தார்.

கிறிஸ்துவின் வாரிசுகளாக இருக்கிறவர்கள்; இரட்சிப்பு, விடுதலை நித்ய ஜீவன், பாவ மன்னிப்பு, சமாதானம், கிருபை ஆகிய அனைத்திற்கும் உரிமையாளர்களாகிறோம். அனாதைகள், வாழ்வு பறிக்கப்பட்டோர், சமூகத்தால் துரத்தப்பட்டோர், நலிவுற்றோர் போன்றவரும், `கடவுளின் வாரிசுகள்’ தான்! இந்த உயர்ந்த நிலையை இவர்களுக்கு உணர்த்துவது நமது பொறுப்பல்லவா? கிறிஸ்துவின் வாரிசுகளே நீங்கள் பெற்ற பெரும் பேறை பிறருக்கு அடையாளங்காட்டுங்கள்.

எங்கள் உயிர், உடல் ஆஸ்திகளுக்கு அதிபதியே, தகப்பனே! நீர் எங்களை உமது பிள்ளைகளாக்கி, இயேசுவின் மூலம் வாரிசுகளாக வைத்திருப்பதற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பாக்கியத்திற்குரியவர்களாக நாள்தோறும் வாழ எங்களை ஆண்டு கொள்வீராக. ஆமேன்.

கடவுளின் வாரிசுகள்2024-12-20T06:12:38+00:00
Go to Top