ஏசாயா 43 : 22-26                                  10 ஜூன் 2026, புதன்

“உன் பாவங்களினால் நீயே என்னைத் தொந்தரவுசெய்து, …என்னை வருத்தப் படுத்தினாய்.” – ஏசாயா 43 : 24

ஒரு கிராமத்தில் ஒரு தந்தை மகன் வசித்து வந்தார்கள். அவருடைய மகன் எப்போதும் தந்தையிடமிருந்து பெறுவதற்கே விரும்பினான்-உணவு, ஆடை, பாதுகாப்பு. ஆனால் ஒருநாளும் தந்தைக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்கூட கொண்டு வரவில்லை. ஒருநாள் தந்தை அமைதியாக சொன்னார்: “நான் உனக்கு எல்லாம் கொடுத்தேன். ஆனால் நீ என்னை நினைத்ததே இல்லை.” அந்த வார்த்தை மகனின் இதயத்தை உடைத்தது. அவன் உணர்ந்தான். அன்பைப் பெற்றிருந்தாலும், அன்பை திருப்பிக் கொடுக்கவில்லை, இந்த நவீன வாழ்வில்.
ஏசாயா 43ஆம் அதிகாரம், கடவுள் தமது ஜனங்களிடம் பேசும் அன்பான அழைப்பாகும். இஸ்ரவேல் மக்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர் அவர்களை மீட்டார், பாதுகாத்தார், ஆசீர்வதித்தார். ஆனால் 24வது வசனத்தில், கடவுள் ஒரு வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்: மக்கள் அவருக்குச் சிறந்த பலிகளை கொடுக்கவில்லை, அவரை மகிழ்விக்க முயற்சிக்கவில்லை, மாறாக, தங்கள் பாவங்களால் அவரை சோர்வடையச் செய்தனர்.

கடவுள் நம்மிடம் பெரிய விஷயங்களை கேட்கவில்லை. அவர் விரும்புவது ஒரு உண்மையான இதயம். நாம் தினமும் அவரிடமிருந்து பெறுகிறோம் உயிர், சுவாசம், ஆசீர்வாதங்கள், பாதுகாப்பு. ஆனால் நாம் அவருக்கு என்ன கொடுக்கிறோம்? பல நேரங்களில் இல்லாத நாட்கள், நன்றி இல்லாத மனம், அவரை நினைக்காத வாழ்க்கை. இதுவே கடவுளை “சோர்வடையச் செய்கிறது” என்று வேதாகமம் சொல்கிறது. ஆனால் அதிசயம்? அவர் இன்னும் நம்மை விட்டுவிடவில்லை! அடுத்த வசனங்களில், அவர் சொல்கிறார் “நான் உன் அக்கிரமங்களை மன்னிக்கிறேன்.” இதுதான் கிருபை, ஒரு தந்தையின் முழு அன்பு. நாம் கொடுக்காத போதும், அவர் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

இன்று நாம் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி : நான் கடவுளை என் வாழ்வால் மகிழ்விக்கிறேனா? என் வாழ்க்கை அவருக்கான நன்றி பலியாக இருகின்றதா? அவருக்கு வேண்டியது: பெரிய காணிக்கை அல்ல, சுத்தமான இதயம். ஆகாவே நாம் கடவுளை சோர்வடையச் செய்யும் மக்கள் அல்ல, அவரை மகிழ்விக்கும் ஜனமாக இருப்போம். இன்று முதல் சிறிய ஜெபம், உண்மையான நன்றி, அன்பான கீழ்ப்படிதல்… இதுவே அவருக்கு இனிய வாசனை. அவர் நமக்காக எல்லாம் செய்தார். நாம் அவருக்காக வாழ்வோம்.

அன்பான ஆண்டவரே! வெளிப்புற ஆராதனையில் மட்டும் அல்லாமல், உண்மையான இருதயத்துடன் உம்மை ஆராதிக்க உதவிடும். என் பாவங்கள் உம்மை சுமையாக்காதபடி, என்னை சுத்திகரிக்கவும் மாற்றவும். உம்மோடு சரியான உறவில் வாழ கிருபை தாரும். என் வாழ்க்கை உம்மை மகிழ்விப்பதாக இருக்கட்டும். இயேசுவின் பெயரால், ஆமேன்.