எபிரேயர் 13 : 15-17 08 ஜூன் 2026, திங்கள்
“உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடி, …இரவும் பகலும் வேலை செய்து சாப்பிட்டு வந்தோம்.” – 2 தெசலோனிக்கேயர் 3 : 8
ஒரு செயலை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது சோம்பேறித்தனம், ஓய்வு என்பது கடினமாக உழைப்பிற்கு பிறகு வரும் அசதி, ஆனால் இன்றைய வாழ்கை சூழலில் எது சோம்பேறிதனம், எது ஓய்வு என்ற புரிதல் இல்லாமல் வாழ்கின்றனர், உழைப்பு இல்லை என்றால் அங்கு வளர்சி இல்லாமல் போகிறது.
தியானப்பகுதியில் அப்போஸ்தலர் பவுல், தெசலோனிக்கேய திருச்சபையில் சோம்பல் மற்றும் ஒழுங்கின்மை இருப்பதை பார்கிறார். சில உறுப்பினர்கள் வேலை செய்யவில்லை, ஏனென்றால் கடவுளின் வருகை சமீபம் என்று வேலை எதுவும் செய்யாமல் தங்களை தாங்களே கள்ள போதகத்தால் ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். இது பவுலுக்கு கவலையை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, கடின உழைப்பு மற்றும் தன்னிறைவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் தனது இரண்டாவது கடிதத்தை எழுதினார்.
பவுல் தனது ஊழியத்தில் நற்செய்தியை அறிவிப்பது மட்டும் அல்லாது கூடாரம் போட்டு தன்னிறைவாக இருந்தார். தெசலோனிக்கேயர்களுக்கு பொறுப்பான நடத்தையை மாதிரியாகக் காட்டி, உழைக்காமல் இருப்பது தவறு. கிறிஸ்தவர்களாக, நாம் நமது செயல்களில் பொறுப்புடனும் மரியாதையுடனும் வாழ அழைக்கப்படுகிறோம் என்று வலியுறுத்தினார். அப்போஸ்தலர் பவுல் சுவிசேஷத்தை அறிவித்தவர் மட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையாலும் அதை வாழ்ந்து காட்டியவர். பிறருக்கு பாரமாக இல்லாமல், உழைப்பின் மதிப்பை அவர் வாழ்ந்து காட்டினார். “இலவசமாகச் சாப்பிடவில்லை” என்று கூறும்போது, அது அவரது பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. கடவுள் நமக்கு வாழ்க்கையையும் திறமைகளையும் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி உழைப்பது நமது கடமை. சோம்பேறித்தனம் விசுவாச வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.
“இரவும் பகலும் உழைத்து” – இது அர்ப்பணிப்பின் அடையாளம். பவுல் போதனை செய்வது மட்டும் அல்ல, அவர் தியாகத்துடன் உழைத்தார். அவர் செய்த உழைப்பு மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக இருந்தது. நமது வாழ்க்கையும் அப்படியே இருக்க வேண்டும். வார்த்தைகளால் மட்டும் அல்ல, செயல்களாலும் சாட்சி சொல்ல வேண்டும். “யாருக்கும் பாரமாக இருக்காதபடி” இது அன்பின் வெளிப்பாடு. நாம் பிறருக்கு உதவ வேண்டும், ஆனால் தேவையில்லாமல் பிறர் மீது சுமையாக இருக்கக் கூடாது. நமது உழைப்பால் நாமே நின்று, பிறருக்கு உதவும் வாழ்க்கையை வாழ வேண்டும்.
இந்த வசனம் நமக்கு ஒரு சமநிலையை கற்றுக்கொடுக்கிறது. உழைப்பு, பொறுப்பு, அன்பு. கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை வீணாக்காமல், அதை உபயோகித்து உழைத்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும்.
அன்பான ஆண்டவரே! உழைப்பின் மதிப்பை எங்களுக்கு உணர்த்தும். சோம்பேறித் தனத்திலிருந்து எங்களை விலக்கி, பொறுப்புடன் வாழ உதவி செய்யும். என் வாழ்க்கை மற்றவர்களுக்கு பாரமாக அல்ல, ஆசீர்வாதமாக இருக்கட்டும். நான் செய்வதெல்லாம் உம்முடைய மகிமைக்காக இருக்க கிருபை தாரும். இயேசுவின் பெயரால், ஆமேன்.
