லூக்கா 10 : 41-42 03 ஜூன் 2026, புதன்
“தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததி… அவருக்குச் சொந்தமான ஜனம்.” – 1 பேதுரு 2 : 9
இன்றைய உலகத்தில் மனிதர்களின் அடையாளம், சொந்தம் அவர்களின் பதவி, செல்வம், அல்லது பின்னணி மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் கடவுளுடைய வார்த்தை விசுவாசிகளுக்கு ஒர் உயர்ந்த, மாற்றமற்ற அடையாளத்தை அளிக்கிறது. துன்பத்திலும் துரத்தப்படுதலிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதும் பேதுரு, அவர்களின் பலவீனங்களை நினைவூட்டவில்லை. மாறாக, அவர்கள் கிறிஸ்துவில் பெற்றிருக்கும் தெய்வீக அடையாளத்தை, அவர்கள் கடவுளின் சொந்தங்கள் என்பதை நினைவூட்டுகிறார்.
“ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்ததி, அரச குருத்துவம், பரிசுத்த ஜாதி, கடவுளுக்குச் சொந்தமான மக்கள். இருளிலிருந்து தமது அதிசயமான ஒளிக்குள் உங்களை அழைத்தவரின் மகிமைகளை அறிவிக்கும்படியாக.”
இவ்வசனம் விசுவாசியின் உண்மையான அடையாளத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது. உலகம் நம்மை எவ்வாறு பார்க்கிறதோ அதுவே நம்முடைய மதிப்பு அல்ல, கடவுள் நம்மை எப்படி காண்கிறார் என்பதே நம்முடைய உண்மையான அடையாளம். பல சமயங்களில் நாம் நம்மை பலவீனமாகவும் தகுதியற்றவர்களாகவும் எண்ணிக் கொள்கிறோம். ஆனால் கடவுள் நம்மை “தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று அழைக்கிறார். இது நம்முடைய முயற்சியால் கிடைத்ததல்ல, அவருடைய கிருபையால் கிடைத்தது.
நாம் “ராஜரீக ஆசாரியக் கூட்டம்” என்று அழைக்கப்படுகிறோம் என்பதில் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. அதாவது நம்முடைய வாழ்க்கை கடவுளுக்கான ஆராதனையாக இருக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள், செய்கிற செயல்கள், மற்றவர்களுடன் நடக்கும் விதம், இவை அனைத்திலும் கடவுளுடைய சித்தம் வெளிப்பட வேண்டும். மேலும் நாம் “பரிசுத்த ஜாதி” என்று சொல்லப்படுவது, உலகத்தின் வழிகளுக்கு ஒத்துபோகாமல், கடவுளுடைய சித்தத்துக்கு ஏற்ப வாழ அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவூட்டுகிறது.
இன்றைய தியனப்பகுதி, நாம் ஒருகாலத்தில் இருளில் இருந்தோம். பாவம், அறியாமை, நம்பிக்கையின்மை ஆகியவை நம்மை கட்டிப்பிடித்திருந்தது. ஆனால் கடவுள் தனது கிருபையால் நம்மை அந்த இருளிலிருந்து அழைத்து தனது அதிசயமான ஒளிக்குள் கொண்டுவந்தார். அந்த ஒளி நமக்கு புதிய வாழ்க்கையையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது. இதனால் நமது வாழ்க்கையின் நோக்கம் தெளிவாகிறது. நாம் நமக்காக மட்டும் வாழ்வதற்காக அல்ல, கடவுளுடைய மகிமைகளை அறிவிக்கும்படி வாழ அழைக்கப்பட்டவர்கள்.
நமது வாழ்க்கை, மற்றவர்களுக்கு கடவுளுடைய அன்பையும் கிருபையையும் காட்டும் சாட்சியாக இருக்க வேண்டும். இன்று நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து, “நான் கடவுளுடைய ஒளியை வெளிப்படுத்துகிறேனா?” நான் கடவுளின் சொந்த மக்களாய் இருகின்றேனா? என்று நம்மை நாமே ஆராய்ந்துபார்போம்.
அன்பின் பரிசுத்த பிதாவே! எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குணாதிசயங்களை அறிவிக்க ராஜரீக ஆசாரியக் கூட்டமாய் வாழ கிருபை தாரும். ஆமேன்.
