1 கொரிந்தியர் 1 : 26-28 01 ஜூன் 2026, திங்கள்
“பைத்தியமானவைகளைக் கடவுள் தெரிந்தெடுத்தார்… பலவீனமானவைகளைக் கடவுள் தெரிந்தெடுத்தார்.” – 1 கொரிந்தியர் 1 : 27
மனிதர்கள் ஞானத்தை அடைய பல வழிகளை தேடிச் செல்கிறார்கள். ஞானம் என்பதும் அறிவு என்பதும் ஒன்றல்ல, அறிவு என்பது தகவல்களையும் உண்மைகளையும் படித்து, அறிந்துகொள்வது. ஞானம் என்பது கடவுளிடமிருந்து பெறுவது மற்றும் பெற்ற அறிவைப் பயன்படுத்தி சரியான தீர்ப்புகளையும் முடிவுகளையும் எடுப்பதாகும்.
இன்றைய நாளின் தியானத்தில், பவுல் தனது இரண்டாம் பயணத்தின்போது உருவாக்கிய கொரிந்து திருச்சபையில் உலக ஞானிகளுக்கு சிலுவை ஒரு அவமானத்தின் குறி, தோல்வியின் குறி, வேதனை மற்றும் கொலை செய்யப் பயன்படும் கருவி. இது மனித ஞானம். கடவுளின் ஞானம் சிலுவையின் வழி வாழ்வின் உண்மையான வெற்றி, தாழ்மை மற்றும் தியாகத்தில் உள்ளது என்பதை தெளிவாக விளக்கி கூறுகிறார்.
இந்த வசனம் கடவுளுடைய செயல் திட்டத்தின் ஆழ்ந்த இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. உலகம் மதிக்கும் அளவுகோல்கள் கடவுளுடைய அளவுகோல்களல்ல. மனிதர்கள் அறிவையும், அதிகாரத்தையும், பெருமையையும் உயர்வாகக் கருதுகிறார்கள். ஆனால் கடவுள் எளிமையானவற்றையும், பலவீனமானவற்றையும், உலகம் கணக்கில் கொள்ளாதவற்றையும் தேர்ந்தெடுக்கிறார். இதன் மூலம், மனித ஞானம் போதாது என்பதையும், கடவுளின் கிருபை மட்டுமே போதும் என்பதையும் அவர் காட்டுகிறார்.
சிலுவை இந்த உண்மையின் மிகப் பெரிய வெளிப்பாடு. மனித பார்வையில் சிலுவை அவமானத்தின் குறி. ஆனால் கடவுளுடைய திட்டத்தில் அது இரட்சிப்பின் கதவு. இயேசு கிறிஸ்து சிலுவையில் பலவீனமாக தோன்றினாலும், அதே சிலுவையில் அவர் பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்தார். இதுவே தேவ ஞானத்தின் மகத்துவம், பலவீனத்தில் பலம், தோல்வியில் ஜெயம், மரணத்தில் ஜீவன்.
இன்றைய தியானம் நமக்கு தாழ்மையை கற்றுக்கொடுக்கிறது. நாம் நம்முடைய திறமைகளில் பெருமை கொள்ள வேண்டியதில்லை. கடவுள் நம்மை எவ்வளவு பெரியவர்களாக இருக்கிறோம் என்பதற்காக அல்ல, அவருக்குள் ஒப்படைக்கப்பட்டவர்களாக இருப்பதற்காகவே பயன்படுத்துகிறார். நம்முடைய குறைகள்கூட அவருடைய கையில் ஆசீர்வாதமாக மாறலாம்.
நாம் வாழ்க்கையில் தாழ்த்தப்பட்டவர்களாக உணரும்போது, இந்த வசனம் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. கடவுள் நம் வாழ்வில் செயல்படுகிறார். அவர் நம்மை மறக்கவில்லை. அவர் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
ஆகையால் இன்று நாம் நம்முடைய பலவீனங்களையும் கவலைகளையும் கடவுளிடம் ஒப்படைப்போம். அவர் அவற்றின் மூலம் தனது மகிமையை வெளிப்படுத்துவார். கடவுளில் நம்பிக்கை வைத்து வாழ்கையை வாழுவோம், இதுவே உண்மையான ஞானம்.
அன்பின் உருவாய் புவியில் வந்து பாவிகளை மீட்க, சிலுவையில் மரித்து, உயர்த்தெழுந்த அன்பின் கர்த்தரே! உமது மீட்பை பெற தகுதி இல்லாத எங்களை அழைத்து, தகுதிப்படுத்தி உமது மீட்பை பறைசாற்ற கிருபை தந்த ஆண்டவரே, மனுக்கள் யாவரும் அழியாதபடி உமது மீட்பை யாவரும் பெற சிலுவையின் ஞானத்தை யாவருக்கும் தாரும். இயேசுவின் பெயரால், ஆமேன்.
