எபேசியர் 5 : 22-32                       20 மே 2026, புதன்

“விபசாரம் செய்யவேண்டாம்.” – யாத்திராகமம் 20 : 14

இஸ்ரவேல் மக்கள் விக்கிரக ஆராதனை செய்யும் நாட்டுக்குள்ளே நுழைய இருந்தார்கள். எனவே அவர்கள் பாலின பாவத்துக்குள் விழுந்துவிடும் சோதனைக்குள்ளாவார்கள் என்பதை கடவுள் அறிந்திருந்தார். எனவேதான், “விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளையை கொடுத்தார். இது கடவுள் மனுகுலத்துக்கு தந்தருளிய பத்து கட்டளைகளில் ஏழாவது கட்டளை. ஆண்டவர் திருமணத்தை ஒரு பரிசுத்த உடன்படிக்கையாக நிறுவி கணவன் மனைவி இருவரும் ஒரே மாம்சம் என்று கட்டளை கொடுத்திருக்கிறார். அந்த உடன்படிக்கையை மீறும் பாவமே விபசாரம். உலகம் இவ்வித ஆசைகளை சாதாரணமாகக் கருதினாலும், கடவுள் அதை மிகப் பெரிய பாவமாகக் கருதுகிறார்.

இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தில் இதை மேலும் ஆழமாக எடுத்துக்கூறினார்: “ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்தவனாகிறான். அதாவது, விபசாரம் என்பது வெறும் உடல் பாவமல்ல. அது மனதில் பிறக்கும் ஆசையிலிருந்தே தொடங்கு

கிறது.” புதிய ஏற்பாட்டிலும் எபிரேய புத்தகத்தின் ஆசிரியர், “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்று கூறுகிறார்.
இன்றைய உலகில் குறிப்பாக ஊடகங்களும், சமூகச் சூழலும், இந்தப் பாவத்தை மிகவும் சாதாரணமாகக் காட்டுகின்றன. ஆனால் கர்த்தருடைய வேதம் தெளிவாகச் சொல்கிறது: விபசாரம் இறை சித்தத்திற்கு விரோதமானது; அது குடும்பத்தையும், சமூகத்தையும் சிதைத்து; ஆன்மாவை அழிக்கிறது. இக்கொடிய பாவத்திலிருந்து விலகி வாழ்வதற்கேதுவாக, யோபு தன் கண்களுடன் உடன்படிக்கை செய்ததாக வாசிக்கிறோம்.

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், கிறிஸ்துவில் மன்னிப்பும் புதிய வாழ்க்கையும் இருக்கிறது. யோவான் 8-இல் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணிடம் இயேசு, “நானும் உன்னைத் தண்டிக்கவில்லை; போ, இனிமேல் பாவம் செய்யாதே” என்றார். அது தண்டனையல்ல, கடவுளின் கிருபையுள்ள மன்னிப்பையும், புதுப்பிப்பையும், தூய்மையையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, “விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்கிற கடவுளுடைய கட்டளை நம் வாழ்வில் பரிசுத்தத்தையும், விசுவாசத்தையும், குடும்ப ஒற்றுமையையும் காக்கும் எச்சரிக்கையாகவும், நம் இதயத்தை பரிசுத்தமாக வாழ்விக்கிற அழைப்பாகவும் உள்ளது. பாலுணர்வு தொடர்பான சோதனைகள் நம்மைத் தொந்தரவு செய்தால் கர்த்தரின் துணையை நாடி சோதனையை முளையிலே கிள்ளியெறிந்துவிட வேண்டும். நமது கண்களும் இதயமுமே சோதனை ஆரம்பமாகும் இடமாதலால் அதனை வேத வசனங்களால் நிரப்பி (சங்.119 : 11) சோதனையை ஜெயிப்பதையே கருத்திற்கொள்ள வேண்டும்.

கர்த்தாவே! திருமணத்தைப் பரிசுத்த உடன்படிக்கையாக தந்தமைக்கு உமக்கு நன்றி. என் கண்களையும் என் இதயத்தையும் பரிசுத்தமாகக் காக்கும் கிருபை தாரும். என் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் உம்முடைய பரிசுத்தத்தையும் விசுவாசத்தையும் நிலைநிறுத்துவீராக. இயேசுவில் பிதாவே, ஆமேன்.