1 யோவான் 3 : 16-18 19 மார்ச் 2026,வியாழன்
“அவர் தமது ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்துகொண்டோம். சகோதரருக்காக நாமும் நமது ஜீவனைக் கொடுப்பது நமது கடமை.” – 1 யோவான் 3 : 16
நாம் அடிக்கடி “அன்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், உண்மையான அன்பு என்றால் என்ன? உலகத்தின் அன்பு நிபந்தனைக்குட்பட்டது. அது “நீ எனக்கு என்ன கொடுக்கிறாய்?” என்று கேட்கிறது. ஆனால், கடவுளுடைய அன்பு அப்படிப்பட்டதல்ல. அது நிபந்தனையற்றது. தியாகம் நிறைந்தது. இந்த வசனம் நமக்கு உண்மையான அன்பின் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
இயேசுவின் உயிர்த்தியாகம் அன்பின் வெளிப்பாடு. ‘அவர் நமக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்.’
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம். அன்பின் உச்சகட்ட வெளிப்பாடு. நாம் பாவிகளாய் இருந்தபோது, நம்மை மீட்க அவர் தன் இன்னுயிரை ஈந்தார். இது வெறும் வார்த்தையல்ல, அது செயலில் காட்டப்பட்ட அன்பு. நமது கடமை அன்பை வெளிப்படுத்த வேண்டும். ‘நாமும் சகோதரருக்காக நம்முடைய ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.’
இயேசு நமக்குக் காட்டிய அன்பின் அடிப்படையில், நாம் மற்றவர்களுக்காக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ‘ஜீவனைக் கொடுத்தல்’ என்பது சிலுவையில் மரிப்பதல்ல. அது நம்முடைய நேரத்தையும், திறமைகளையும், செல்வத்தையும், சுயநலத்தையும் விட்டுக்கொடுத்து மற்றவர்களுக்கு சேவை செய்வது. இது ஒர் ஏழையின் பசியைப் போக்குவதாகவும், ஒரு தனிமையானவருக்குத் துணையாக இருப்பதாவும், அல்லது ஒருவரின் பாரத்தைத் தாங்குவதாகவும்கூட இருக்கலாம்.
உண்மையான அன்பு என்பது இயேசு கிறிஸ்து நமக்காக செய்ததைப் போல, மற்றவர்களுக்காக நம்மையே தியாகம் செய்வது. நம் வாழ்க்கையில் அந்த அன்பை வெளிப்படுத்தும்போது, நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்பதை பிறருக்கு காட்டுகிறோம். இந்த நாளில், நாம் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பைக்காட்ட, கடவுளுடைய உதவியை நாடுவோம்.
அன்பின் கடவுளே! நீர் கிறிஸ்துவின் வழியாய் காட்டின அன்பைப்போல் நாங்களும் பிறருக்கு உமது அன்பை வெளிப்படுத்த துணை புரியும். இயேசுவின் வழியாய் பிதாவே, ஆமேன்.
