3 யோவான் 1 : 13-14 18 மார்ச் 2026, புதன்
“சகோதரர் மேல் குற்றஞ் சாட்டினவன் எறியுண்டான்… நம் சகோதரர் மேல்… குற்றஞ்சாட்டுகிறவன்…” – தரிசனம் 12 : 10
அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர். உடன் பணியாளர்களை குறித்து மேலாளரிடம் அவதுறாக குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அந்த நபர் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்பதை அறிந்து மேலாளர் அவரை பணியில் இருந்து நீக்கினாரம்.
அதுபோல இந்த தியானப் பகுதியிலும் ஒர் ஆழமான உண்மையை நம்மால் பார்க்க முடிகிறது. அது என்னவென்றால் பிசாசின் முதன்மையான வேலை குற்றம் சாட்டுவதாகும். அவன் தொடர்ந்து நம்முடைய கடந்தகாலப் பாவங்களை உணர்த்துகிறான். நம்முடைய தற்போதைய தோல்விகள் மற்றும் பலவீனங்களை நமக்கு நினைவூட்டுகிறான். நாம் தகுதியற்றவர்கள் என்றும், கடவுள் நம் மீது கோபமாக இருக்கிறார் என்றும், நாம் மீட்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் நம்ப வேண்டும் என்று அவன் விரும்புகிறான். அவன் இடைவிடாது வழக்குரைஞரைப்போல, கடவுளின் சிம்மாசனத்திற்கு முன்பாக “இரவும் பகலும்“ நம் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகிறான்.
ஆனால் இந்த வசனம் சொல்கிறது. குற்றம் சாட்டுபவன் வீழ்த்தப்பட்டான்! அவனுடைய குற்றச்சாட்டுகளுக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. ஏனென்றால் இயேசுவின் இரத்தம் ஏற்கனவே நம்மை பாவத்திலிருந்து மீட்டுவிட்டது. சிலுவையில் கிறிஸ்துவின் வெற்றி, குற்றம் சாட்டுபவனின் அதிகாரத்தை அடக்கிவிட்டது. நாம் கடவுளுக்கு முன்பாக நிற்கும்போது, நம்முடைய சொந்த தகுதியின் பேரில் நிற்கவில்லை. மாறாக கிறிஸ்துவின் நீதியின் பேரில் நிற்கிறோம். நம்முடைய பாவங்களை இயேசு சிலுவையில் சுமந்து நிவர்த்தி செய்தாரே.
நமது இரட்சிப்பு, நமது பரிபூரணத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது கிறிஸ்துவின் பரிபூரண தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது பாதுகாப்பு இயேசு என்பதை அறிந்து, நாம் நம்பிக்கையுடன் வாழ வேண்டும். அவர் குற்றம் சாட்டுபவர்களைவிடப் பெரியவர். அவருடைய வெற்றி நமது வெற்றி. எதிரியின் குற்றச்சாட்டுகள் நம்மை ஒருபோதும் முடக்க அனுமதிக்கக் கூடாது. மாறாக, கிறிஸ்துவின் மூலம் வந்த இரட்சிப்பின் சுதந்திரத்திலும், வல்லமையிலும் நம்பிக்கையோடு வாழ வேண்டும்.
வல்லமையின் கடவுளே! எங்களைக் குறித்து குற்றம் சாட்டின எதிரியை வீழ்த்தியதற்கு நன்றி. இனி பாவத்தை ஒருபோதும் செய்யாமல் இருக்க எங்களைப் பாதுகாத்தருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
