மாற்கு 10 : 29-31 17 மார்ச் 2026, செவ்வாய்
“மிகச்சிறியரான என் சகோதரரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்.” – மத்தேயு 25 : 40
எளியவர்களுக்கு உதவி செய்வதால் என்ன நடந்துவிட போகிறது? என்ற கேள்விக்கு சிறந்த உதாரணம் இந்த தியான வசனம்.
இந்த வசனம் இயேசு கிறிஸ்துவின் ஒரு முக்கியமான போதனையின் உச்சக்கட்டமாக விளங்குகிறது. அவர் நியாயத்தீர்ப்பு நாளின் காட்சியைப் பற்றி விளக்குகிறார். அதில் செம்மறி ஆடுகளைப்போல வலதுபுறமும், வெள்ளாடுகளைப்போல இடதுபுறமும் பிரிக்கப்பட்ட மனிதர்களை குறிப்பிடுகிறார்.
இங்கு, இயேசு கிறிஸ்து “மிகச்சிறியரான என் சகோதரர்” என்று குறிப்பிடுகிற இவர்கள் யார் என்றால்… இவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஏழைகள், பசியுள்ளவர்கள், தாகமுள்ளவர்கள், நோயாளிகள், கைதிகள், அன்னியர்கள். உலகத்தின் கண்களுக்கு முக்கியமற்றவர்களாகத் தோன்றும் இந்த மக்களுக்குச் செய்யும் சிறிய உதவிகளும்கூட, இயேசுவின் கண்களுக்கு மிகவும் விலைமதிப்பற்றவை. இந்த உலகத்தில் எந்த மனிதனும் முக்கியமற்றவர்கள் அல்ல என்பதை இயேசு கிறிஸ்து நமக்கு இந்த உவமையின் வழியாய் உணர்த்துகிறார். ஒவ்வொரு மனிதனும் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டவன். ஒவ்வொரு உயிருக்கும் மதிப்பு உண்டு.
நாம் அவர்களுக்கு செய்யும் உதவி வெறும் மனிதநேய செயல் மட்டுமல்ல. அது இயேசு கிறிஸ்துவுக்கு நேரடியாகச் செய்யும் சேவை. நமது சிறிய செயல்கள்கூட, இயேசுவின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடுகளாக மாறுகின்றன.
இந்த வசனத்தின்படி, பசியுள்ளவனுக்கு உணவு கொடுப்பது, தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுப்பது, நோயாளிக்கு ஆறுதல் சொல்வது, கைதிக்கு உதவி செய்வது, இந்த சிறிய செயல்கள்கூட பரலோக ராஜ்யத்தின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்களாக இருக்கின்றன. நாமும் இயேசுவின் பெயரில் உதவி செய்து பரலோக இராஜ்ஜியத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.
கிருபை நிறைந்த நல்ல கடவுளே! மிகச்சிறியருக்கு இரங்கினால் நாங்கள் உமக்கே இரங்குகிறோம் என்று வாக்களித்ததற்கு நன்றி. ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்வித்து வாழ உமது தூய ஆவின் வழியாய் துணை புரியும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
