அப்போஸ்தலர் 8 : 1-3 04 மார்ச் 2026, புதன்
“முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; …அவிசுவாசத்தில் அப்படிச் செய்தபடியினால்…” – 1 திமோத்தேயு 1 : 13
அப்போஸ்தலன் பவுல் ‘தேவதூஷணம் செய்பவன்’ – கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராகப் பேசியவன். அவர் கிறிஸ்தவர்களை வேட்டையாடி, கைது செய்து, துன்புறுத்தி, மரணத்திற்குகூட ஒப்புகொடுத்த மனிதர். தனது கிறிஸ்துவ எதிர்ப்பில் திமிர்பிடித்தவர். பெருமை கொண்டவர் மற்றும் வன்முறையாளர்.
அப்படி இருந்தும் அவர் கடவுளிடம் “கருணையைப் பெற்றேன்” என்று அவர் கூறுகிறார். இதுதான் நற்செய்தியின் மையக்கரு. பவுலின் கடந்த காலம் சிறந்ததாக இருக்கவில்லை. அது வெளிப்படையான கலகம் மற்றும் வெறுப்பின் பாதையாக இருந்தது. அந்தக் கலகத்தின் நடுவே, கடவுளின் கருணை அவரைக் கண்டுபிடித்தது. கடவுள் அவருக்கு இரக்கம் காட்டினார்.
இந்த வசனம் இன்று நம் அனைவருக்கும் நம்பிக்கையான செய்தி. நீங்கள் என்ன செய்திருந்தாலும், நீங்கள் எவ்வளவு தூரம் வழிதவறிச் சென்றிருந்தாலும், கடவுள் இயேசுவின் வழியாய் கருணை காண்பிக்கிறார். அவரது கருணை மிகப் பெரியது.
நாம் அடிக்கடி நம்மையும், மற்றவர்களையும் நமது கடந்த கால செயல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறோம். ஆனால், கடவுள் இதயத்தைப் பார்க்கிறார். கருணையை வழங்குகிறார். பவுலின் அறியாமையையும், அவநம்பிக்கையையும் அவர் கண்டார். பின்பு சத்தியத்தை மட்டுமே நம்பி வைராக்கியத்துடன் அவருக்கு சேவை செய்பவராக கண்டார். கடவுளின் கிருபை நமக்கு மட்டுமல்ல, பவுலைப்போல, அறியாமையில், அவநம்பிக்கையில் செயல்படும் அனைவருக்கும் உள்ளது. அவரது கருணை மிகப்பெரியது.
கருணையின் கடவுளே! உமது கிருபையால் அடியேனை எல்லாவித தீய செயல்களுக்கும் உமது கருணையால் மன்னித்து ஏற்றுக்கொள்ளளும். இயேசுவின் வழியாய் பிதாவே, ஆமேன்.
