சங்கீதம் 90 : 11-14                           23 பிப்ரவரி 2026, திங்கள்

“கர்த்தர் : நீ கோபம் கொள்வது நியாயமோ?” – யோனா 4 : 4

கோபத்தை நியாயமான கோபம் என்றும், நியாயமற்ற கோபம் என்றும் வகைப்படுத்தலாம். நம்மை சூழ்ந்திருக்கும் உலகில் நாம் காண்கிற அநீதிகள், அக்கிரமங்கள் நம்மை நியாயமாக கோபம் கொள்ள செய்கின்றன. அது தேவையான ஒன்று. ஆனால் நியாயமற்ற கோபம் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அது கடவுளோடுள்ள உறவையும் சக மனிதர்களோடுள்ள உறவையும் குலைக்கிறது.

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தில் நடந்த வியாபாரங்களையும், சீர்கேடுகளையும் கண்டு கோபம் கொண்டார். அங்கிருந்தவர்களை வெளியே துரத்தி விட்டார். யோனா ஊழியத்தின் போது கடவுள் தனது வார்த்தையின்படி நினிவேயை அழிக்கவில்லை என கண்டு கோபம் கொண்டார். அந்த கோபத்தை கடவுள் நியாயமற்றதெனக் குறிப்பிட்டார்.
கடவுள் நம்முடைய பாவங்களை கண்டு நியாயமாய் கோபங்கொள்கிறார். ஆனால் நாம் அவரை நாடிவந்து பாவங்களை அறிக்கையிடும்போது தமது மிகுந்த கிருபையினால் நமக்கு இரங்குகிறார். நமது பாவங்களை மன்னிக்கிறார். நினிவே மக்களின் பாவங்களைக் கண்டு கோபம் கொண்ட கடவுள் அவர்கள் மனந்திரும்பினபோது அவர்களை அழிக்காதபடிக்கு அவர்கள்மேல் இரக்கம் கொண்டார்.

அவ்வண்ணமாக நாமும் நியாயமற்ற முறையில் கோபங்கொள்வதை கடவுள் வெறுக்கிறார். எதற்கு கோபப்படுகிறோம் என்றே தெரியாமல் கோபம் கொள்ளுகிற அநேகரை காண்கிறோம். இதனால் அநேக உறவுகளை இழக்கிறோம். பலர் மனதை காயப்படுத்துகிறோம். நியாயமற்ற கோபத்தை தவிர்த்து மன்னிக்கும் பண்புடன் வாழ்வதேயே கடவுள் விரும்புகிறார்.

இரக்கமுள்ள கடவுளே! கோபத்தை களைந்து மன்னிக்கும் மனதுடன் வாழ எங்களுக்கு உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.